எனது சிந்தனையில் சிக்கிம் - 13
24. Tea Garden:
அடுத்த பத்து நிமிடத்தில் ஏதோ ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு வந்து நின்றது எங்களது வாகனம். இந்த தேயிலைத்தோட்டத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து தேயிலைப் பள்ளத்தாக்கு இறங்குகின்றது. அங்கு நின்று சில புகைப்படங்களெல்லாம் எடுத்துக்கொண்டோம். பின்னர் தேயிலை விற்கும் கடைகள் அங்கு இருந்தன. நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கெல்லாம் டார்ஜிலிங் தேயிலை வாங்கிச் செல்ல வேண்டுமல்லவா? அதனால் ஒரு கடைக்குச் சென்று விலை விசாரித்தோம். நல்ல மனிதர்கள் அருந்தும் நல்லத் தேயிலை நல்ல விலைச் சொன்னார்கள். அப்படியே அதிர்ச்சியாகித் தேயிலைத்தோட்டத்தைப் பார்த்தேன். "பச்சைப் பாயிலே, சிரிக்கும் தேயிலே, பூரிப்புத் தாங்கலே, வாங்கத்தான் காசில்லே, இது அதிகமாகத் தோனலே, காரணந்தான் தெரியலே, எங்க ஊரு தேவலே, ஒரு ரூபாய்க்கு கிடைக்கலே? விரிச்சா போச்சு போயல, நல்லா வருது வாயில, ஆசையும் விட்டுப் போகல, வாங்காம நாங்க நகரல்ல!" என்பது போல, பச்சைநிறப்பாயை காணும் மலையெங்கும் விரித்துப்போட்டாற் போல தேயிலைத்தோட்டங்கள் காணப்பட்டது. டீத்தூள் வாங்கலாம் என்றால், அங்கு விற்கப்படுவதில் முதல் தரமான டீத்தூள் கிலோ 8000 ரூபாய்க்கும் மேல் கூறினார்கள். எங்களால் அதனைப் பார்க்கவும் தொடவும்தான் முடிந்தது. நமக்காக இருக்கவே இருக்கின்றது, டஸ்ட் டீ. ஏற்கனவே நான் சொன்னது போல், இதுதான் நமக்கு பெஸ்ட் டீ. அந்த ரகத்தில் சில கிலோ டீத்தூள் வாங்கிக்கொண்டு மாலை 04.10 மணியளவில் அங்கிருந்து நடையைக்கட்டினோம்.
25. Peace Pagoda:
அடுத்ததாக நாங்கள் இந்த பீஸ் பகோடா (ஜப்பானீஸ் ஆலயம்) என்ற தலத்திற்கு மாலை 04.40 மணியளவில் வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்த நேரத்தில் இந்த புத்தாலயத்தின் முதல் தளத்தில் இருந்த பிரார்த்தனை ஹாலில் ஒரே ஒரு புத்தத்துறவி, மேளம் அடித்துக்கொண்டு (இம்மேளத்தின் பெயர்: Ho-Ko) ஏதோ ஒரு மந்திரத்தை ஒருவித லயத்தில் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். நாங்கள் அங்குச் சென்றவுடன், எங்களை ஜாடையாக அங்கு அமரச்சொன்னார். எங்களுக்கு அருகில் ஒவ்வொருவருக்கும் ஒரு விசிறிமட்டைப் போன்றதொரு மேளமும் அதை அடிக்க ஒரு மூங்கில் குச்சியும் இருந்தது. அதனைக் கையில் எடுத்துக்கொண்டு, அவர் சொல்லும் மந்திரத்தை நாங்களும் அவருடன் ஒத்து ஒருசேரச் சொல்லிக்கொண்டு அவர் வாசிப்பதுபோலவே அந்த மேளங்களையும் வாசித்தோம். ஒரு ஐந்து நிமிடம் வாசித்துவிட்டு கிளம்பும்போது அந்தத்துறவி எங்களிடம் வந்து ஒரு போட்டோவைக்காட்டி, அதில் அந்த மந்திரத்தின் பொருள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி அதனைப்பற்றி ஒரு நிமிடம் எங்களிடம் இனிமையாக விளக்கினார்.
"NA-MU-MYO-HO-REN-GE-KYO"
என்பதே அவர் தொடர்ச்சியாகக் கூறும் மந்திரமாகும். பின்னர், அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் நாங்கள் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இட்டோம். இந்த பிரார்த்தனை கூடத்திற்கு அருகில் சிறிது உயரத்தில் பீஸ் பகோடா அமைக்கப்பட்டுள்ளது.. அதனையும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம்.
இந்த பீஸ் பகோடா 1972-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு 1992-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி இவ்வுலகிற்கு அருளப்பட்டது. இதன் உயரம் 94 அடியாகும். இதன் வேறு பெயர் Nipponzan Myohoji என்பதாகும். இந்த பகோடாவின் உயரத்தில் புத்தரின் நான்கு அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனை ஹாலில் நுழைவாயிலில் இதனை நிறுவிய Nichidatsu Fujii அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. உலக அமைதிக்காக அவர் இதனை நிறுவியுள்ளார். இவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜிக்கு நெருக்கமானவர். 1945-ஆம் ஆண்டு தனது (ஜப்பான்) நாடு அணுகுண்டால் பாதிப்படைந்ததை நேரில் பார்த்து வருத்தமுற்றார். இனி இவ்வுலகில் எங்கும் அணுகுண்டுத் தாக்குதல் இருக்கக்கூடாது என்பதற்காகவே அவர் இந்த அமைதி ஆலயத்தை நிறுவினார்.
இங்கு மரத்தாலான படிக்கட்டில் ஏறி பிரார்த்தனை ஹாலுக்குச் செல்லும் வழியில் 'No Nuclear Weapons in Our Beautiful World' என்று எழுதியத் துணியாலான பேனரை நாம் பார்க்கலாம். இங்கு காலை 04.30 மணியிலிருந்து 06.00 மணி வரையும், மாலையில் 04.30 மணியிலிருந்து 06.30 மணிவரையிலும் மேற்சொன்னபடி பிரார்த்தனை நடைபெறும். குறிப்பிட்ட பிரார்த்தனை நேரத்தில் இங்கு வரும் பயணிகள் இந்த அற்புதமான அமைதி பிரார்த்தனையில் கலந்துக்கொள்ளலாம்.
"NA-MU-MYO-HO-REN-GE-KYO"
என்ற ஜப்பான் மந்திரத்திற்கு யாதொரு பொருளும் இல்லை. இது ஒரு மொழி அல்ல. ஆதலால் இதனை மொழிபெயர்க்க முடியாது. ஆனால் இது நமது மனதிற்கு ஊக்கமும் அமைதியையும் தருகின்ற ஒரு இராகம் போன்றது. அனைத்து பிரார்த்தனைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும், என்கின்றார் Nipponzan Myohoji.
Nipponzan Myohoji அவர்கள் மகாத்மா காந்திஜியை சந்தித்தப்பிறகு, மகாத்மா காந்திஜி தனது ஆஸ்ரமத்தில் இந்த "NA-MU-MYO-HO-REN-GE-KYO" என்கின்ற இராகத்தைப் பாடி பிரார்த்தனை செய்துள்ளார். இந்த மந்திர இராகத்தை, காந்திஜி அவர்கள் 'Nama Saddharam Pundarik Sutraya' என்கின்ற சமஸ்கிருத சூத்திரத்திற்கு இதனை ஒப்பிடுகின்றார். நமக்கெல்லாம் கோடிக்கணக்கில் கோவில்களும் அதற்கேற்ப கோடிக்கணக்கில் பிரார்த்தனைகளும் உண்டு. ஆனால், "பிரார்த்தனை செய்ய உதவும் ஒரு மந்திரத்திற்கு, எந்த ஒரு மொழியும் எந்த ஒரு பொருளும் கொண்டு இருத்தலாகாது" என்கின்ற Nipponzan Myohoji அவர்களின் தத்துவம், என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அவரது பிரார்த்தனைப்படி இவ்வுலகில் என்றும் அமைதி ஓங்கட்டும், என்று நாமும் ஒரு முறை அவரை நினைவு கூர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுவோம், "NA-MU-MYO-HO-REN-GE-KYO".
"ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்" என்கின்ற வள்ளலாரின் உபதேசங்கள் இங்கு நினைவுகூறத்தக்கது. அப்படி உலகமெல்லாம் வாழும்படியான ஒரு பிரார்த்தனை மந்திரமாக, "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்ற வள்ளலாரின் மந்திரத்தையே நாம் பிரார்த்தனை செய்வது போல், இங்கு நாம், "NA-MU-MYO-HO-REN-GE-KYO" என்ற மொழியில்லா மந்திரத்தையும் இதனுடன் ஒப்பிடலாம். இந்த அமைதிக்கான புத்தாலயம் நமது தமிழ்நாட்டிலும் சங்கரன்கோவில் தாலுக்காவில் உள்ள வீரிருப்பு என்னுமூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தாலயத்திலிருந்து 05.40 மணியளவில் கிளம்பினோம். இந்த தலத்தோடு இன்றைக்கு ஆடிய ஆட்டங்கள் அடங்கிவிட்டன. நாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அருகில் ஹோட்டல் லூனார் (Hotel Lunar) சைவ உணவு விடுதியில் நாங்கள் இறங்கிக்கொண்டு, டாட்டா சுமோவிற்கான இன்றைய வாடகையை கொடுத்து அனுப்பிவிட்டோம். ஹோட்டல் லூனாரில், இட்லி, தோசை, பூரி ஆகியவைகளை சாப்பிட்டுவிட்டு 07.15 மணியளவில் வெளியில் வந்தோம். நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் கடைகடையாக ஏறி இறங்கினோம். பின்னர் ஒரு கடையில் அவரவர் நெருங்கிய சொந்தங்களுக்குப் பரிசாக அளிக்க Sweater, Shawl, Cap ஆகியவைகளை வாங்கிக்கொண்டனர். அப்படியே இந்த அடியேனுக்கும் முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் Sweater ஒன்று வாங்கித்தந்தார்.
அதனை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். பின்னர் அப்படியே நடந்துக்கொண்டே எங்களது ஹோட்டலுக்கு 09.30 மணியளவில் சென்று சேர்ந்தோம். நாளை காலை 04.00 மணிக்கெல்லாம் எழுந்திருந்து சூரிய உதயம் பார்க்கச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் கூறினார்கள். அதற்கு தகுந்தவாறு வாகனத்தையும் காலையில் வரச்சொல்லிவிட்டோம். இரவு டி.வி. பார்த்துவிட்டு கண்ணயர்ந்தோம்.
(தொடரும் - 13)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.