எனது சிந்தனையில் சிக்கிம் - 1
முகவுரை:
இறையருள் எந்நிலையுடையது? என்பதற்கு, அது "இயற்கை விளக்கமாகவும், இயற்கை உண்மையாகவும், இயற்கை இன்பமாகவும், விளங்குவதாகக் கூறுவார் நமது வள்ளல் பெருமான். அப்படிப்பட்ட பேருண்மை இயற்கை வடிவைக்காண நமது இந்திய தேசத்தில் வீற்றிருக்கும் 'சிக்கிம்' மாநிலத்திற்கு செல்ல இரண்டு மாதத்திற்கு முன்பே இரயில்வேயில் குளிர்ச்சாதனப்பெட்டியில் முன்பதிவு செய்திருந்தோம். அதன்படி 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 06-ம் தேதி எங்கள் பயணம் கடலூரிலிருந்து புறப்பட்டது. எனது அன்பு சுற்றத்தார்கள் முனைவர் அ.நலங்கிள்ளி, திருமதி ந.சுசீலா, திரு.ஆர்.தண்டபாணி மற்றும் திருமதி.ஆர்.இலட்சுமி ஆகியோர்களுடன் நானும் இப்பயணத்தில் திருவருள் சம்மதத்தாலும் முனைவர் அ.நலங்கிள்ளி மற்றும் திருமதி. ந.சுசீலா அவர்களின் வற்புறுத்தலாலும் இணைந்துக்கொண்டேன். இப்பயணத்தின் பின்ணனியில் திரு.ஆர்.தண்டபாணி அவர்களின் பங்களிப்பு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. அவருக்கு இந்நேரத்தில் நாங்கள் எங்களது அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். திரு.த.இரமேஷ்பாபு அவர்களின் குடும்ப நண்பர் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் தற்போது சிக்கிம் தலைநகரம் கேங்டாக்கில் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்கள் அழைப்பின் மூலம்தான் எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. எனவே பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களுக்கும் இந்நேரத்தில் நாங்கள் எங்களது அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் கொடைக்கானலை தமது சொந்த ஊராகக் கொண்டவர். தமது பணியின் காரணமாக சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் வசித்து வருகின்றார். இவரது வழிகாட்டுதலின்படியே நாங்கள் நான்கு நாட்கள் சிக்கிம் மாநிலத்தையும் இரண்டு நாட்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த மலைகளின் ராணி என்றழைக்கப்படும் 'டார்ஜிலிங்' என்ற சுற்றுலாத்தலத்தினையும் கண்டு களித்தோம். முதல் இரண்டு நாட்கள் 'கேங்டாக்' சுற்றியுள்ள இடங்களையும் சீன தேசத்து எல்லையான 'நாதுலா' என்ற இடத்தினையும் சுற்றிப்பார்த்தோம். இதற்காக எங்கள் ஐவருக்கும் வெள்ளை நிற 'இன்னோவா' காரினை பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நேபாள தேசத்தை தமது வம்சாவழியாகக் கொண்ட திரு.ராஜன் (இது அவருடைய சுருக்கமானப் பெயர். இயற்பெயர் எனது புத்திக்கு எட்டவில்லை, மன்னிக்கவும்.) என்பவர் கார் ஓட்டுனராக இருந்தார். முதல் நான்கு நாட்கள் அவரது காரில்தான் எங்கள் பயணம் அமைந்தது. வளைந்து, நெலிந்து, உயர்ந்து, தாழ்ந்துச் சென்ற சாலைகளில் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்தியதோடு மட்டுமல்லாமல் எங்களை யாதொரு இடத்திலும் கடிந்துக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றி காண்பித்த விதம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கள் குழுவிலுள்ள திருமதி.ந.சுசீலா அவர்களுக்கு ஹிந்தி மொழி, பேசவும் படிக்கவும் எழுதவும் தெரியும். ஆகையால் அவரின் மூலம் கார் ஓட்டனரிடம் உரையாடி எங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டோம். கார் ஓட்டுனரும் சிக்கிம் மொழியினைப் பேசினாலும் ஹிந்தி மொழியிலும் எங்களுக்கு பதிலளித்தார். அவ்வப்போது நாங்கள் பேசும் ஆங்கில மொழியினையும் புரிந்துக்கொண்ட விதத்தை நாங்கள் பாராட்டியே ஆகவேண்டும்.
முதல் இரண்டு நாட்கள் அல்லாது அடுத்த நான்கு நாட்கள் எங்களுடன் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் இணைந்துக்கொண்டார்கள். இவ்வாறு ஆறு நாட்கள் (இரயில் பயணங்களும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு நாட்கள்) நாங்கள் பெற்ற அனைத்து அனுபவங்களையும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் உணரவைக்கும் நோக்கில் எழுதப்பட்டதே இந்த 'எனது சிந்தனையில் சிக்கிம்' என்ற பயண அனுபவ நூலாகும். நமது தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகள் மட்டுமே நமக்கு 'சில்' என்ற அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. ஆனால் நமது 'சிக்கிம்' மாநிலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5500 அடி உயரத்தில் இருப்பதால் அம்மாநிலம் முழுதுமே 'சில்' என்ற அனுபவத்தை நமக்குக் கொடுத்த வண்ணம் உள்ளது. எனவே எனது சிந்தையில் களித்த இந்த பயண அனுபவ நூலிற்கு 'எனது சிந்தனையில் சிக்கிம்' என்ற பெயரே மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் சுற்றுப் பயணம் செய்ய இருப்போர்களுக்கு எங்களது பயண அனுபவம் ஓரளவிற்கேனும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
கடலூரில் இருந்து சென்னை:
இரண்டு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட அந்த இரண்டு வாரக்காலம் சுற்றுலா செல்லும் நாளான 2015 ஏப்ரல் 06-ஆம் தேதியும் (திங்கள் கிழமை) வந்தது. {எங்களது பயணத்தின் முதல் நாள்} நாங்கள் செல்லுமிடம் குளிர் பிரதேசமாக இருப்பதால், எங்களுக்குத் தேவையான ஆடைகளுடன் போர்வைகள் மற்றும் குளிருக்கு அணியக்கூடிய சிறப்பு ஆடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என்னிடம் மட்டும் குளிருக்கு அணியக்கூடிய ஆடை Sweater இல்லாததால், அது எந்தக் குளிராக இருந்தாலும், வழக்கமாக நான் அணியும் ஆடையுடன் சமாளித்துவிட வேண்டுமென தீர்மானித்துவிட்டேன். இரக்கமற்றவன் சன்மார்க்க சங்கத்திற்கு செல்வதைப் போல நானும் செல்லத் தயாரானேன். இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்னர், முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் என்நிலையறிந்து, என்னை அழைத்துக்கொண்டு கடலூர் கே.வி.டெக்ஸ் சென்று அங்கு குளிருக்கு அணியக்கூடிய ஆடை வாங்க முயன்றோம், ஆனால் அங்கு ஒருசில வடிவ ஆடைகளே இருந்ததால் நாங்கள் வாங்கவில்லை. சிக்கிம் சென்று அங்கேயே வாங்கிக்கொள்ளலாம் என வந்துவிட்டோம். மேலும் தற்போது சிக்கிம் மாநிலத்தில் மழை பெய்துவருவதால், எங்களை எல்லாம் ஆளுக்கொரு குடையும் எடுத்து வரும்படி, அங்கு வசிக்கும் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு அறிவுறுத்தி இருந்ததால், நாங்கள் எல்லாம் மறக்காமல் குடையுடன் மழைக்கு அணியக்கூடிய ஆடைகளையும் எடுத்துக்கொண்டோம். மேலும் ஒவ்வொருவரும் தங்களது புகைப்படம் ஒன்றையும், முகவரி சான்றட்டையின் நகல் ஒன்றினையும் தவறாமல் எடுத்துவரும்படி சொன்னதால், அதனையெல்லாம் நாங்கள் தவறாமல் எடுத்துக்கொண்டோம்.
நாங்கள் ஐவரும் சைவ உண்வு பழக்கமுடையவர்களாக இருந்ததால், இரயில் பயணம் செய்யும் மூன்று நாட்களும் வீட்டிலிருந்தே உணவு தயார் செய்து எடுத்துச்சென்றோம். திருமதி.ந.சுசீலா அவர்கள் எங்கள் ஐவருக்கும் சேர்த்து வெறும் சாதம், தயிர் சாதம், புளிசாதம், புளியோதரைக்குழம்பு, தயிர், இட்லி, இட்லிப் பொடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகளை தயார் செய்து எடுத்துக்கொண்டார்கள். இவைகளை எல்லாம் எடுத்துச்செல்ல அவர்களுக்கு நடுத்தர அளவுள்ள ஐந்துப் பைகள் தேவைப்பட்டது. நான் என்னுடைய ஆடைகளை மட்டுமே எடுத்துச்சென்றதால், எனக்கு ஒருப் பையே போதுமானதாக இருந்தது. இதே போன்று திரு.ஆர்.தண்டபாணி மற்றும் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்களும் தங்களது ஆடைகளை ஐந்துப் பைகளில் எடுத்து வந்தனர். இடையில் பாதிரிக்குப்பத்திலிருந்து திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்குச் செல்லும் பொழுது, பசியால் வாடிய வண்டுக்கு மலரின் நினைவு வந்தது போல, சாப்பிடுவதற்கான காகிதத்தட்டினை வாங்கி அதனை அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது, முனைவர் அ.நலங்கிள்ளி அவர்களுக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. உடனே ஆட்டோவை ஆப்பிள் ஸ்டோரில் நிறுத்தி பேப்பர் தட்டுக்களை வாங்கிக்கொண்டார். இப்படியாக நாங்கள் அனைவரும் திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையம் வந்து சேர்வதே ஒரு பரபரப்பான அனுபவமாக இருந்தது.
திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்தில் சென்னை விரைவு இரயில் (இரயில்
எண்:16854) வரவிற்காக, பெட்டி
எண் 'டி2' வந்து
நிற்கும் இடத்திற்கு அருகில் காத்திருந்தோம். அப்பொழுது நான், கேமரா
எடுத்து வந்தீர்களா? என முனைவர் அ.நலங்கிள்ளி
அவர்களைக் கேட்க, அவருக்கு
அப்பொழுதுதான் கேமரா நினைவு வந்தது. வடலூரை
மறந்த வள்ளலாரைப்போல திகைத்தார். என்ன வேடிக்கை என்றால், கேமரா
பேட்டரி சார்ஜரை மட்டுக் எடுத்துவந்து விட்டார். கேமராவை
வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். நீ முன்னதாகவே நினைவுபடுத்தி இருக்கலாமே? என்றார். நானும்
நினைவுப்படுத்தியிருக்கலாம், தவறிவிட்டேன். சுற்றுலா என்றால் கேமரா ஒரு முக்கியமானப் பொருளாகையால், அதனை நீங்கள் எடுத்துவர மறக்கமாட்டீர்கள் என்றே, நான்
உங்களிடம் நினைவுப்படுத்தவில்லை என்றேன். திரும்பவும் ஆட்டோவில் சென்று கேமராவை எடுத்து வந்துவிடவா? என்றார். நாங்கள்
வேண்டாம் என்று கூறிவிட்டோம். என்னிடம் ஒரு கேமராவும், திரு.ஆர்.தண்டபாணி
அவர்களிடம் ஒரு கேமராவும் இருந்தது. எனவே இந்த இரண்டையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறிவிட்டோம். மேலும் நான் ஒரு பென்டிரைவரையும் எடுத்துவந்திருந்தேன். கேமரா மெம்மரி கார்டில் உள்ள புகைப்படங்களை பென்டிரைவில் இறக்கிக்கொண்டால், கேமரா மெம்மரியில் இடம் இருந்துக்கொண்டே இருக்கும் என்பதால்.
பெட்டி எண் 'டி2'
வந்து நிற்குமிடத்தில் பயணிகள் அமர்வதற்கு எந்த வொரு வசதியும் இல்லை. அங்கிருந்து சற்றுத்தள்ளி ஒரு சிறிய நிழற்குடை இருந்தது. அங்குள்ள
நிழலில்தான் காத்திருந்தோம். கடலூர் மாவட்டத் தலைநகர் திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு தேவையான நிழற்குடை வசதிகள் இல்லாதது எங்களைப்போன்ற பயணிகளை வருத்தமடையச் செய்வதுடன் ஆட்சியாளர்கள்மேல் கோபமடையவும் செய்விக்கின்றது. மதியம் 01.00 மணிக்கு
வரவேண்டிய இரயில் (16854-Chennai Express) 01.30 மணிக்குத்தான் திருப்பாதிரிப்புலியூர் வந்தடைந்தது. இரண்டு நிமிட நேரத்திற்குள் நாங்கள் அனைவரும் 'டி2'
பெட்டியில் ஏறிக்கொண்டோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண்கள் 51,52,53,55,56-ல் அமர்ந்தோம். எங்களுடன் எடுத்துவந்த லக்கேஜ் அனைத்தும் பத்திரமாக இருபுறமும் மேலே வைத்தாகிவிட்டது. அப்பாடா....!!! ஒருவழியா இரயில் ஏறியாச்சு, ஒருவிதமான
நிம்மதியான மகிழ்ச்சியான சூழ்நிலை எங்களுக்குள் பரவியதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தோம். இரயில் மெல்ல நகர்ந்தது, அதனுடன்
எங்களது பயணமும் மெல்லத்துவங்கியது.
இரயில் நெல்லிக்குப்பத்தைத் தாண்டியவுடன், தயிர் சாதத்தை எடுத்து முனைவர் அ.நலங்கிள்ளியுடன் நானும் சாப்பிட்டேன். மற்றவர்களெல்லாம் வரும்போது வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டார்கள். இரயில் பெட்டியில் மின்விசிறியானது, காற்றாகி அனலாகி இரண்டும் ஒன்றாகி எங்கள் மீது வீசிக்கொண்டிருந்தது. இடையில் தாம்பரம் நிறுத்தத்தில், திரு.த.இரமேஷ்பாபு அவர்கள் எங்களுக்காக அவரது வீட்டிலிருந்து செய்துவந்திருந்த உருளைக்கிழங்கு பொறியல், எலுமிச்சை
சாதம், சப்பாத்தி, தக்காளி
குருமா போன்றவற்றை எடுத்துவந்து திரு.ஆர்.தண்டபாணி அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். ஐந்து
மணிநேர பயணத்திற்குப் பின்பு மாலை 06.15 மணிக்கு
எங்களது இரயில் சென்னை எழும்பூரைச் சென்றடைந்தது. நாங்கள் ஐவரும் எங்கள் முதல் இரயில் பயணத்திலிருந்து விடுபட்டோம். அனைத்துப் பைகளையும் எண்ணி சரியாக எடுத்துவந்து இரயில்வே நடைமேடையில் வைத்தோம்.
சிறியப் பைகளின்றி எங்களிடம் 11 நடுத்தரமானப் பெரியப்பைகள் இருந்தன. எங்களது
பைகளின் கூட்டத்தைக் கண்டவுடன் அங்கு இரண்டு கூலி ஆட்கள் வந்துவிட்டனர். அவர்களிடம் 'கெளஹாத்தி' விரைவு
இரயில் வரும் நடைமேடை எது? எனவினவினோம்.
ஐந்தாவது நடைமேடை என்றனர். பிறகு
அனைத்துப் பைகளையும் அவ்விருவரும் எடுத்துச்சென்று ஐந்தாவது நடைபாதையில் 'ஏ.சி.கோச்' 'பி1' நிற்குமிடத்தில் வைக்கச்சொன்னோம். நாங்கள் ஐவரும் சேர்ந்து தூக்கி எடுத்துச்செல்ல முடியாதப் பைகளை எல்லாம் அவர்களிருவரும் தூக்கி எடுத்துச் சென்றதைப் பார்க்கும்போது எனக்கு அதிசயமாக இருந்தது. உயிரென்னும் சுமையை உடல் சுமப்பதுபோல, இச்சுமைகள் அவர்களுக்கு இயல்பாகிவிட்டது போலும்! நாம் ஒவ்வொருவரும் நமது குடும்பத்திற்காகவும், நமது கொள்கைகளுக்காகவும் பலவகையான சுமைகளை சுமக்கத்தான் வேண்டியுள்ளது. ஆம், அவைகளெல்லாம் சுகமான சுமைகள் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். பைகளை சுமந்ததற்காக அவர்களிருவரும் தலா நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு சுகமடைந்தனர்.
'கெளஹாத்தி' விரைவு
இரயில் இரவு 10.30 மணிக்குத்தான் தனது பயணத்தை துவங்கும். இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை சிரமப்பட்டு கடக்கவேண்டும், என்பதை நினைக்கும்போது சற்று கடினமாக இருந்தது. பெருவாழ்வை எதிர்நோக்கும் சன்மார்க்கனைப் போல, நாங்கள்
ஒவ்வொருவரும் அந்த இரயிலை எதிர்நோக்கி காத்திருந்தோம்.
(தொடரும் - 1)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.