Sunday, June 14, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 9

எனது சிந்தனையில் சிக்கிம் - 9




நம்சி (Namchi):

தெற்கு சிக்கிம்மின் தலைநகரமாக 'நம்சி' மலைநகரம் விளங்குகின்றது. கேங்டாக்கிலிருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், சிலிகுரியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் இம்மலை நகரம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில், சோலோபாக் கலை உச்சியில் அமைந்துள்ளது. பூட்டியா மொழியில் 'நம்சி' என்பதற்கு தமிழில் 'வானுயரம்' எனப்பொருள். உயர்ந்த மலைச்சிகரங்கள், புத்தாலயங்கள், சார்தாம், புத்தா பார்க், டெமி ஆர்க்கானிக் தேயிலைத் தோட்டம், ரோலாங்க் மடாலயம், சம்த்ருப்சே குன்று எனப்படும் இறந்த ஏரிமலை, டென்டாங்க் குன்று, பாறைத்தோட்டம், டோலிங்க் கோம்பா ஆகியவைகள் இங்கு சுற்றுலாத் தலமாகும். இங்கு பிப்ரவரி மாதத்தில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடைபெறும். சிக்கிம் மாநிலத்தின் புத்தமதத்துக் குருவாகப்போற்றப்படும், குரு பத்மசம்பவா அவர்களின் 118 அடி உயர அமர்ந்த நிலை சிலை இங்குதான் அமைந்துள்ளது.

உலகில் மற்ற நாடுகளிலெல்லாம் மக்கள் வசிக்க மிக உயர்ந்தக் கட்டடங்களை கட்டிவருகின்றார்கள். நாம் மிக உயர்ந்த சிலைகளை கட்டி வருகின்றோம். எப்படியோ வெற்று இடங்களெல்லாம் இச்சிலைகளால், சுற்றுலாத்தலமாகி விடுகின்றது. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்து வியப்பது போன்று நாமும் இதனைப்பார்த்து உண்மையிலேயே வியக்கத்தான் வேண்டியிருக்கின்றது. இந்தியாவில் தற்போதய நிலையில் மிக உயர்ந்தச் சிலையாக இருப்பது 135 அடி உயரமுள்ள 'வீர அபய ஆஞ்சநேய அனுமன் சுவாமி' சிலைதான். இச்சிலை விஜயவாடாவில் உள்ளது. நாம் மட்டும் சிலைகளை எழுப்பவில்லை. தற்போது இவ்வுலகிலேயே மிக உயரியச் சிலை சீனாவில்தான் உள்ளது. 'ஸ்பிரிங் டெம்ப்பிள் புத்தா' சிலைதான் அது. இதன் உயரம் 502 அடியாகும். இன்னும் சில மாதங்களில் சீனாவின் சாதனையை நாம் முறியடிக்கப்போகின்றோம். பொருளாதாரத்தில் அல்ல, மக்கள் தொகையிலும் சிலை அமைப்பதிலும்தான். ஆம், இந்திய அரசால் தற்போது குஜராத்தில் 597 அடி உயரம் கொண்ட 'சர்தார் வல்லபபாய் பட்டேல்' சிலை வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இச்சிலை திறப்புவிழாவிற்குப் பிறகு நாம்தான் உலகில் முதல் இடத்தில் இருக்கப்போகின்றோம். நமக்கெல்லாம் பெருமைதான் போங்க!

15. Siddhesvara Dham - Namchi:

சிக்கிம் முதலமைச்சர் Mr.Pawan Chamling அவர்கள் தனது அரசு நிதியிலிருந்து 99.56 கோடி ஒதுக்கி, 13-02-2005 ஆம் ஆண்டு இக்கோவில் கட்ட அவரே அடிக்கல் நாட்டினார். இதற்காக ஒதுக்கிய நிதியைவிட சற்று குறைவாக 56.51 கோடி ரூபாயில் இக்கோவிலைக்கட்டி, 31-10-2011 ஆம் ஆண்டு முதலமைச்சர் அவர்களாலே திறந்துவைக்கப்பட்டது. சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் 108 அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட சிவபெருமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் கூறியபடி, சிக்கிம்மில் உள்ள வானலாவியச் சிலைகள் அனைத்துமே, நாம் பார்த்தவுடன் நமது சிந்தனையை முடக்கி நம்மை வியப்பில் சிக்கவைத்துவிடும் மந்திரச் சக்தியைக்கொண்டதாக இருக்கின்றது. இந்த சிவன் சிலையும் அப்படித்தான். நம்மைவிட பலமடங்கு பெரிய உருவத்தை நமக்கு அருகாமையில் பார்க்கும்போது, நமக்கெல்லாம் இயல்பாகவே ஒரு பயம்கலந்த உணர்ச்சி ஏற்படுமல்லவா! அந்த உணர்ச்சியை இந்த இயற்கை சூழலுடன் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எகிப்த்தில் உள்ள பிரமிடுகளும், அதச்சார்ந்த மிக உயர்ந்தச் சிலைகளும் தற்போது ஆராயப்படும்போது, அவையெல்லாம் வேற்று கிரக வாசிகளால் கட்டப்பட்டிருக்கக்கூடுமோ? என்று ஐயுறுகின்றனர். அதுபோலவே நம்மால் இப்போது கட்டப்படும் இந்த சிலைகள்கூட இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து, எதிர்கால மக்களால் இச்சிலைகளும் வேற்றுகிரக மக்களால் கட்டப்பட்டதே என்று தீர்மானித்து விடுவார்கள். யாருக்குத்தெரியும், நம்மில் வேற்றுகிரக வாசிகளும் இருக்கக்கூடும், ஜாக்கிரதை.



இந்த சிவன் சிலையைச்சுற்றி வட்ட வடிவில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் நிறுவப்பட்டுள்ளன. (இராமநாதர் - இராமேஸ்வரம், மல்லிகார்ஜூனேஸ்வரர் - ஸ்ரீ சைலம், பீமசங்கரர் - பீமசங்கரம், திரியம்பகேஸ்வரர் - திரியம்பகம், குஸ்ருணேஸ்வரம் - குஸ்ருணேஸ்வரம், சோமநாதர் - ப்ராபாசபட்டினம், நாகநாதர் - ஓனண்டா, ஓம்காரேஸ்வரர் - ஓங்காரம், மஹாகாளர் - உஜ்ஜயினி, வைத்தியநாதர் - சித்தபூமி, விஸ்வநாதர் - காசி, கேதாரேஸ்வரர் - கேதார்நாத்). சிவன் சிலைக்குக் கீழே உள்ள பெரிய ஹாலில் நமது சிதம்பரம் நடராஜர் படத்தை வரைந்து அதனை மூலவராக வைத்துள்ளனர். மேலும், Char Dham என்று அழைக்கக்கூடிய, இந்தியாவில் உள்ள நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு இந்து கோவில்களின் மறு ஆக்கங்களை நாம் இங்கு தரிசிக்கலாம். அதாவது மூன்று வைணவக்கோவில்கள், ஒரு சைவக்கோவில் என இந்நான்கினையும் ஒரே இடத்தில் நாம் தரிசிக்கலாம். (தெற்கு - இராமேஸ்வரம், வடக்கு - பத்ரிநாத், மேற்கு - துவாரகா, கிழக்கு - பூரி) எனவே இக்கோவிலை Char Dham of Sikkim என அழைக்கின்றனர். இவையில்லாமல், தனது கையில் வில் மற்றும் அம்புடன் நின்ற சிலையிலுள்ள 'கிரிடேஸ்வரர் மகதேவ்' (Kirateshvar Mahadev) சிலை, பெரிய நந்திச்சிலை மற்றும் சீரடி சாய்பாபா கோவிலையும் நம் இந்த ஒரே வளாகத்தில் தரிசித்து மகிழலாம், என்பதே இத்தலத்தின் சிறப்பு. ஒரே குடையின்கீழ் இந்தியாவையே கொண்டுவந்து விட்டார்கள். சிக்கிம் முதலமைச்சருக்கு எனது பாராட்டுக்கள்.

அட இது என்னடா சிற்ப்பு, சிக்கிம் மக்களுக்கு நான் இதன்மூலம் அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால், ஒரு சிறிய அறையில் நமது சூரியக் குடும்பத்தையே (நவ கிரகம்) நாங்கள் அடைத்துவைத்து, அதனை சுத்தோ சுத்துன்னு சுத்துவதைப்பார்த்து, நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள். அவ்வளவு சிறப்புடையவர்கள் நாங்கள். முடிந்தால் நீங்களும் வந்து இந்த ஒன்பது கிரகத்தையும் அரை நிமிடத்தில் சுற்றிவிட்டுச் செல்லுங்கள். இராக்கெட் ஏறி இராப்பகலாய் சென்றாலும் உங்களால் காண முடியாத, சுற்ற முடியாத கிரகங்களை எல்லாம், எங்கள் ஊரில் உள்ள கோவில்களில் சர்வசாதாரணமாகக் கண்டு அதனை சுற்றியும் விடலாம். ஆசையிருந்தால் தொட்டும் பார்க்கலாம், குளிப்பாட்டலாம், அன்னம் ஊட்டலாம், அதற்கு ஆடைகூடக் கட்டி அழகு பார்க்கலாம். வாருங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு, வந்து பாருங்கள் நாங்கள் கோவிலில் செய்யும் அட்டக்காசத்தை.

மதியம் 01.45 மணிக்கு நாங்கள் இந்த சிவத்தலத்திற்கு வந்தவுடன் மழை பெய்யத்துவங்கிவிட்டது. நாங்களும் சிறிது நேரம் காரிலேயே அமர்ந்திருந்தோம். ஆனால் மழை விடுவதாகத் தெரியவில்லை. நாங்களும் விடுவதாக இல்லை. அனைவரும் குடைபிடித்துக்கொண்டே சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டோம். இத்தலத்தை சுற்றிப்பார்க்க 25 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டும். மழை பெய்ததால் இத்தலத்தை சுற்றிப்பார்க்க அங்குள்ள சிறியரக மின்சாரக்காரினில் எறிச் சென்றோம். (மின்சாரக்காருக்குத் தனிக்கட்டணம்). நாங்கள் அந்த சிவன் சிலைக்கு அருகில் சென்றவுடன் மழை நின்றுவிட்டது. இந்தச் சிவத்தலம் முழுவதும் வழுவழுப்பான மார்பில் கல்லால் தரை அமைக்கப்பட்டுள்ளதால், மழைநீர்ப்பட்டு நாம் நடக்கும்போது வழுக்கிவிழ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே மிக கவனமாக நடந்துச் சென்றோம். பல இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதே மின்சாரக்காரில் நுழைவாயிலை வந்தடைந்தோம். நுழைவாயிலுக்கு வந்தவுடன் மழை மீண்டும் பெய்யத்தொடங்கிவிட்டது. அதே வளாகத்தில் சிக்கிம் அரசால் நடத்தப்படுகின்ற சைவ உணவு விடுதி இருந்தது. அந்த ஹோட்டலில் 90 நபர்கள்வரை தங்கக்கூடிய அளவிற்கு பயணிகள் அறைகளும் உண்டு. நாங்கள் அவ்வுணவு விடுதிக்குச்சென்று சாப்பிட்டோம். முதலில் சாப்பிட என்ன இருக்கின்றது என விசாரிக்கும்போது, தற்போது இங்கு முழு சாப்பாடுதான் உள்ளது. ஒரு சாப்பாடு விலை 350 ரூபாய் எனச்சொல்லி அதனை எங்கள் தலையில் சுமத்தப்பார்த்தார்கள். நாங்கள் வெரைட்டி ரைஸ் கேட்டும் அவர்கள் இல்லை எனப் பொய் சொன்னார்கள். அதே நேரத்தில் எங்களுக்கு அருகில் அமர்ந்த ஒரு கூட்டம், அங்குள்ள மெனுவைப்பார்த்து வெரைட்டி ரைஸ் ஆர்டர் கொடுத்ததை நாங்கள் பார்த்தோம். உடனே      அந்த ஆர்டரைக்காட்டி நாங்கள் சண்டையிட ஆரம்பித்துவிட்டோம். பிறகு ஒருவழியாக நாங்கள் கேட்ட உணவு எங்களுக்குக் கிடைத்தது. தென்னிந்தியர்கள் என்றால் ஏமாற்றுவார்கள் போலும். இந்த ஹோட்டலில் வெங்காயம் பயன்படுத்த மாட்டார்களாம். ஏன் என்று நான்   அந்த சர்வரைக்கேட்டேன். இது சுத்த சைவஹோட்டல் என்று பதிலுரைத்தார். எனக்கு  வியப்பாக இருந்தது. தயிர்சாதம் இருக்கின்றதா? என்று கேட்டேன். இருக்கின்றது எனத்தலையாட்டினான். தயிர் அசைவம் இல்லையாம்! வெங்காயம் இங்கு அசைவமாம்!      என்ன அறியாமைப் பாருங்கள். வெங்காயம் தாவர வகையைச் சார்ந்ததுதானே! பின் எப்படி அது அசைவமாகும். வெள்ளாட்டின் வயிற்றிலிருந்து வந்ததா வெங்காயம்!. இல்லையே. இந்த வெங்காயத்தைச் சாப்பிடுவதால் நமது மனநிலையில் தவறான இச்சைகள் தோன்றும் என்று ஒருசிலர் கருதுவதால், ஒரு சில சமுதாயத்தினர் இந்த வெங்காயத்தை தங்களது உணவில் சேர்க்க மாட்டார்கள். அதற்காக வெங்காயம் அசைவம் என்பது சரியல்ல. வெங்காயத்தை மறுப்பவர்கள் பால், தயிர், நெய் போன்றவற்றை சாப்பிடுவார்கள். உண்மையில் தாய்ப்பாலைத்தவிர மற்ற பால்வகைகள் அனைத்தும் அசைவமே. சுத்த சைவர்கள் பால் அருந்துவது தவறு. சுத்த சைவர்களுக்கும் வெங்காயம் அசைவம் அல்ல. (இன்னும் ஆழ்ந்துச்சென்றுப் பார்த்தால் நான் உண்ணும் உணவுகள் எதுவுமே சுத்த சைவம் என்று சொல்லிவிட முடியாது.)

மதிய உணவினை முடித்துக்கொண்டு, மாலை 04.45 மணியளவில் அங்கிருந்து அடுத்த இடம் நோக்கிக் கிளம்பினோம்.

16. Buddha Park - Rabongla:

                                                                             (File PIC)
அடுத்த பத்து நிமிடத்தில் 'ரபோங்கலா' என்ற மலை நகரின் அருகிலுள்ள புத்தா பூங்காவிற்கு எங்களது கார் வந்து நின்றது. மழைத்தூறல் லேசாக எங்கள்மீது தூவிக்கொண்டே இருந்தது. மாலை நேரம், மேகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக எங்கோ வேகமாக, எங்களை மோதிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் எங்களால் இந்த புத்தா பூங்காவிற்குள் செல்ல முடியவில்லை. எனினும் நாங்கள் நிற்கும் இடத்திலிருந்துப் பார்த்தால், அந்தப்பூங்கா முழுவதும் புத்தர் சிலை உட்பட பார்க்கும் நிலையில் இருந்தது. ஆனால், கருமேகங்கள் கூட்டம் அப்பூங்கா முழுவதையும் எங்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. இருந்தும் சிலமணித்துளிகள் அங்கேயே நின்று புத்தபிரானை தரிசித்தோம். அந்த மேகமூட்டத்துடன் அவரைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டு உடனே அவ்விடத்தைவிட்டு அகன்றோம். மாலை 05.15 மணியளவில் எங்களது வாகனம் 'பீலிங்' நகரை நோக்கிக் கிளம்பிச் சென்றது.

மலைக்காடுகளால் சூழப்பட்டு, 7000 அடி உயரத்திலுள்ள இந்த புத்தா பார்க் 2006-ஆம் ஆண்டு கட்டத்துவங்கி  23-03-2013 ஆம் ஆண்டு நிறைவுற்றது. இங்குக்காணப்படும் புத்தர் சிலை 130 அடி உயரம் கொண்டது. இந்த புத்தா பார்க்கினை Tathagata Tsal என்றும் அழைக்கின்றனர். இந்த வளாகத்தினுள் Cho Djo ஏரியும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. இச்சிலையை சிக்கிம் அரசு உதவியுடன் 14-வது தலாய்லாமா அவர்களால் கட்டப்பட்டு அவரே திறந்தும் வைத்தார். இவரைப்பற்றி சில வார்த்தைகள்: திபெத்திய புத்தத் துறவிகள் யாவரும் உணவு பழக்கத்தில் அசைவர்கள். தற்போதுள்ள 80 வயதாகும் (பிறப்பு 06-07-1935) இந்த 14-வது தலாய்லாமாவும் புலையர்தான். ஆனால் இவர் இந்தியாவிற்கு வந்தப்பிறகு சைவ உணவிற்கு மாறினார். எனினும் இடையில் உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவ்வப்போது அசைவமும் உட்கொண்டார். பின்னர் மீண்டும் அதனை விடுத்து தற்போது         
சைவ உணவிற்கே மாறிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அமெரிக்கா சென்றிருந்தபோதுக்கூட சைவ உணவுதான் இவருக்கு பரிமாறப்பட்டது. தற்போது இவர் திபெத்திய புத்தத் துறவிகளையும் திபெத்திய மக்களையும் உலக மக்களையும் சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்டளை பிறப்பித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இதுபற்றிய இவருடைய ஆங்கில வாக்கியங்களை அப்படியே நாம் இங்குப்படித்து நாமும் சைவத்திற்கு மாறுவோம், நம்மைச் சார்ந்தவர்களையும் சைவத்திற்கு மாற்றுவோம். "People think of animals as if they were vegetables, and that is not right. We have to change the way people think about animals. I encourage the Tibetan people and all people to move toward a vegetarian diet that doesn't cause suffering." - Dalai Lama. அசைவ உணவை உண்ணும் புலையர்கள் யாவரும் வள்ளலார் எழுதிய 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' என்னும் நூலினைப் படிக்கவேண்டும், என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மேலும் சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் ஏழாம் திருமுறையான, காரணப்பட்டு .மு.கந்தசாமி ஐயா அவர்கள் எழுதிய 'பிரபந்தத்திரட்டு' என்னும் நூலில் 'கொலை மறுத்தல்' என்னும்   பகுதியிலுள்ள 65 பாடல்களும், திருவள்ளுவரின் திருக்குறளும் நம்மை கொல்லா நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய மிகப்புனிதமான நூல்களாகும்.


(தொடரும் - 9)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.