Friday, June 12, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 2

எனது சிந்தனையில் சிக்கிம் - 2


சென்னையில் இருந்து நியூ ஜல்பைங்குரி (NJP):

பைகளை எல்லாம் வட்டவடிவில் வைத்துவிட்டு நாங்கள் மூவர் மட்டும் (நானும் முனைவர் .நலங்கிள்ளி மற்றும் திரு.ஆர்.தண்டபாணி) இரயில் நிலையத்திற்கு எதிர் வீதிக்குச்சென்று திராட்சை, வாழைப்பழம் போன்ற பழ வகைகளை வாங்கிக்கொண்டு இரயில் நிலையத்திற்கு உள்ளே மீண்டும் சென்றோம். சிறிது நேரம் சென்றவுடன், எடுத்துவந்திருந்த இட்லி          வகைகளை சாப்பிட்டோம். இரவு உணவு முடிந்தது. பிறகு வருவோர் போவோரை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததில்     நேரம் போனதே தெரியவில்லை. சரியாக நாங்கள் எதிர்பார்த்திருந்த இரயில் இரவு 10.05 மணிக்கு வந்து சேர்ந்தது. (15629-Guwahati Express) உடனே '.சி.கோச்-பி1' பெட்டியில் ஏறினோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த      படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை எண்கள் 17,18,19,20,23 - இல் அமர்ந்தோம். எங்கள் இருக்கைக்கு கீழே உள்ள இடங்களில் அனைத்துப் பைகளையும் அடைத்து வைத்துவிட்டோம். மொத்தம் ஐந்து இருக்கையில் மூன்று இருக்கைகள் கீழ்தர (Lower' Berth) இருக்கைகளாக எங்களுக்குக் கிடைத்ததால் மிகவும் வசதியாக இருந்தது.


சரியாக 10.30 மணிக்கு எங்களது இரயில் கிளம்பிவிட்டது. சற்று நேரத்தில் இரயில் சிப்பந்தி அவர்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு கம்பளி,         தலையனை, வெள்ளைத்துண்டு, வெள்ளை போர்வை ஆகியன எடுத்துவந்து கொடுத்தார். எங்களது பெட்டி சற்று சுத்தம் குறைவாகவே இருந்தது. சிறிய சிறியப் பூச்சிகள் தாரளமாக உலா வந்துக்கொண்டிருந்தன. இது எங்களுக்கு எரிச்சலைத்தந்தது. தற்போதய மத்திய அரசு, இரயில்வேத்துறைக்கு முக்கியத்துவம் தந்து அதனை நவீனப்படுத்துதலிலும் தூய்மைப்படுத்துதலிலும் முன்னுரிமை வழங்கி செயல்படுவதாக நாம் செய்தித்தாள்களில் படிக்கின்றோம். ஆனால் நடைமுறை மாறியதாகத்தெரியவில்லை. எல்லாம் விளம்பரம்தான் போலும். மேலும் எங்களது பெட்டியில் .சி.காற்றும் மிகவும் மெதுவாகவே வந்ததால் வியர்வை ஓயவில்லை. அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரை இதுபற்றி கேட்டோம். அவர் போகப்போக .சி. காற்று வேகமாக வரும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் .சி.காற்று அதிகரித்ததாகத்தெரியவில்லை. ஒரு மின்விசிறி மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்குத் தூக்கம் வரவே, அந்தக்காற்றின் துணையுடன் அவரவர் படுக்கையில் படுத்து உறங்கினோம். இரயில் ஓட்டத்தில் எங்களது பெட்டியின் இலேசான இடைவிடாத ஆட்டத்தில் நாங்களும் இலேசாக ஆடிக்கொண்டே தூங்கிய அனுபவம், தாயின் அரவணைப்பில் தூங்கும் குழந்தையைப் போல இருந்தது. ஆனால், தேனீர், சிற்றுண்டி விற்பவர்கள் தொல்லை இரவு ஒரு மணிவரை இருந்தது. .சி.பெட்டி என்றுக்கூடப் பார்க்காமல், 'சாயா....சாயா... எனறக் குரலும், அண்டா பிரியானி...  சிக்கன் பிரியானி...' என்றக் குரல்களும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த விற்பணைகளை கட்டுபடுத்த இரயில்வே நிர்வாகம்   எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையிலும் வேதனை.

இன்று 2015, ஏப்ரல் 07-ஆம் தேதி, செவ்வாய் கிழமை. {எங்களது பயணத்தின் இரண்டாம் நாள்} இரயில் பயணத்தில் தூங்கி எழுந்தோம். எனக்கு காலை ஆறு மணிக்கு விழிப்பு வந்தது. உடனே எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்து அமர்ந்தேன். தேனீர் வாங்கி அனைவரும் அருந்தினோம். தற்போது இரயில் எங்கு சென்றுக்கொண்டிருக்கும் என, எடுத்து வந்திருந்த இரயில் நேர அட்டவனையில் பார்த்தோம். இரயில் தற்போது ஆந்திர மாநிலம் 'ஈலூரு' நகரிலிருந்து 'இராஜமுந்திரி' நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. காலை எட்டு மணி கடந்தது. இரயில் இராஜமுந்திரியைக் கடந்துவிட்டது. நாங்களும் காலை சிற்றுண்டியினை முடித்துக்கொண்டோம். எங்களுக்கு அருகில் Side Upper இருக்கையில் ஒரு வாலிபர் எந்நேரமும் தூங்கிக்கொண்டே வந்தார். அவரிடம் அவரைப்பற்றி விசாரிக்க வேண்டுமென திருமதி..சுசீலா அவர்களுக்கு அவா இருந்தது. அனால் அதற்கு அவர் இடம் தரவேயில்லை. மேல் இருக்கையில் படுத்தவர் படுத்தவர்தான். நாங்கள் அனைவரும் பேசும் தமிழ் மொழியின் சப்தங்கள் அவரை அன்னியப்படுத்தி இருக்கக்கூடும்.

இன்று மதியம் இரயில் ஆந்திர மாநிலம் கடந்து ஒரிசா மாநிலத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. நாங்கள் மதிய உணவு சாப்பிடும் போது, அவர் விழித்துக்கொண்டே படுத்திருப்பதை கவனித்தோம். உடனே, எங்களுள்     ஹிந்தி பேசத்தெரிந்த திருமதி..சுசீலா அவர்கள் ஹிந்தி மொழியில் பேச்சு கொடுத்தார்கள். அவரும் பேச ஆரம்பித்துவிட்டார். நாங்கள் எங்கள் பயணத்தை பற்றியும், அவர் அவரது பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துக்கொண்டோம். இடையில் யாரிடமிருந்தோ திருமதி.ஆர்.இலட்சுமி அவர்களுக்கு போன் வந்தது. பேசிமுடித்தவுடன் ஒருவித பதட்டத்துடன், 'செம்மரக்கடத்தலில்      ஈடுபட்ட 20 தமிழர்களை ஆந்திர போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், தமிழகம் கொந்தளிப்பில் உள்ளதாகவும்' அவர்கள் எங்களுக்குச் செய்தியைச் சொன்னார்கள். உடனே வருத்தத்துடன் நாங்கள் ஐவரும் இந்த சம்பவம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டோம். குறைந்த உழைப்பில் அதிகப்பணம் கிடைத்தால், அது தவறானப்பாதை எனத்தெரிந்தும் அவ்வேலையை செய்யத்துணிந்து விடுகின்றனர் சிலர். இச்சமுதாயம் அவ்வேலையைக் கொடுத்தவரைக் காப்பாற்றி விடுகின்றது. செய்தவரைக் கொன்று விடுகின்றது. இதுதான் சமுதாய நீதி. 'இந்நேரம் 20 மாடுகளைச் சுட்டுக் கொன்றிருந்தால், இந்தியா முழுவதும் கொதித்து எழுந்திருக்கும். 20 மனிதர்களைக் கொன்றதர்க்கு இந்தியா மெளனம் காக்கின்றது. அப்படியென்றால் தமிழன் என்ன, மாடுகளைவிடக் கேவலமானவனா?' என்ற திரு.சீமான் (நாம் தமிழர் இயக்கம்) அவர்களின் பேச்சில் உள்ள கொதிப்பு என்னையும் சூடாக்கியது. இதற்கான நியாயம் இந்திய நீதித்துறையிடமிருந்து கிடைக்கும் என நம்புகின்றேன்.


நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவோம். அவரைப்பற்றி சில வரிகளை இங்கே தெரிவித்தே ஆகவேண்டும். அவரது பெயர் Mr.Boruah G, சுமார் 25 வயது இருக்கும். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது கெளஹாத்தி சென்று கொண்டிருக்கின்றார். தன்னுடைய திருமணத்திற்காக விடுமுறையில் செல்வதாகக்கூறினார். எனது திருமணம் ஏப்ரல் 26-ஆம் தேதி என இயல்பாக சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் தனது திருமணத்தேதியை எங்களிடம் சொன்னபோது ஒருவித மகிழ்ச்சியை அவரது முகத்தில் கண்டேன். அந்த மகிழ்ச்சி, அவரது வாழ்க்கையில் பெருகிக்கொண்டே செல்ல வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். எங்களது சுற்றுலா முடிந்து நான் கடலூர் வந்தப் பிறகு, அவரது திருமணநாளன்று தவறாமல் வாழ்த்துச் செய்தியையும் அவரது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன். நம்மில் ஒவ்வொருவரும் நம்முடையத் திருமணத்தேதியை, திருமணம் ஆகும் முன்பு மகிழ்ச்சியுடன் சொல்வது போன்று, நம்முடைய திருமணத்திற்குப் பின்பு அந்தத்தேதியை அதே மகிழ்ச்சியுடன் சொல்லமுடியுமா? என்னால் சொல்லமுடியும்! என இதனைப் படிப்பவர்கள் யாரேனும் நினைத்தால், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு எனது அனுதாபங்களை நான் கூறமாட்டேன். ஏனெனில், மகிழ்ச்சி என்பது தேதியில் இல்லை. நமக்கென்று வந்தப் பாதியில் உள்ளது. அந்தப் பாதி நமக்குத் துயரத்தையே அளித்தால், அதனை மோதி மிதித்துவிட்டு நமக்கு நாமே முழுமையாகி இறை இன்பத்தில் சுகம் காண்பதுதான் அதைவிட பெருமகிழ்ச்சி. 'நான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல' என்பார் வள்ளலார். (நான் பெண் மகளும் அலேன், வரும் ஆண் மகனும் அலேன், அலியும் அலேன், இது குறித்து என்று அறியே - திருவருட்பா-5754) இவை மூன்றும் கடந்த முழுமையில்தான் பேரின்பம் உள்ளது. எனவே மற்றவர்கள், நமக்கு முழுமையாக ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழுங்கள். நம்மில் பெரும்பாலருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புதான் இறைவனால் அருளப்பட்டிருக்கும். சற்று கூர்ந்து கவனித்தால் இதனை நாம் புரிந்துக்கொள்ளலாம். ஆனால், நாம் நம்மால் பிழையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சமுதாயத்திற்கு பயந்துக்கொண்டு துயரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.


Mr.Boruah G அவர்கள் Sriharikota (ஆந்திரா) Satish Dhawan Space Centre (ISRO) - வில் Security Guard - ஆக பணிபுரிந்து வருகின்றார். இதற்கு முன்னர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவித்தார். எதிர் காலத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கும் பணிமாறுதல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். இவ்வாறு பேசிக்கொண்டே தனது மொபைல் போனில் இருந்த ISRO புகைப்படங்களை எல்லாம் எங்களிடம் காண்பித்தார். அவரது புகைப்படத்தையும் காண்பித்தார். மிலிட்டரி ஆடையில் கையில் .கே.47 துப்பாக்கி ஏந்திக்கொண்டு கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தார். அந்தத்துப்பாக்கி இயங்கும் விதம் பற்றியும் சுருக்கமாக எங்களிடம் சொன்னார். கல்லூரி படிக்கும் போது, என்.சி.சி. கேம்ப் பையரில், ரைபில் துப்பாக்கியில் இரண்டு ரெளண்டு பையர் (Shoot) செய்த எனது அனுபவத்தையும் அப்போது நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். மேலும் அவரது மொபைல் போனில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட செயற்கைகோளின் வீடியோ ஒன்றையும் பார்த்தோம். அதனை அவரது அனுமதியுடன் புளூடூத் மூலம் எங்களது மொபைல் போனிற்கு தரவிறக்கம் செய்து கொண்டோம். அதன் பிறகு, அவர் எங்களை ISRO இடத்தினை சுற்றிப்பார்க்க வரும்படி அழைப்பு விடுத்தார். மே மாதம் 05-ஆம் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், வரும்போது முன்கூட்டியே தனக்குத் தெரியப்படுத்தும்படி அறிவுறுத்தினார். அதற்காக தனது கைப்பேசி எண்ணையும் எங்களுக்கு அளித்தார். நாங்களும் மே மாதம் கட்டாயம் வருகின்றோம் என்று வாக்குறுதி அளித்தோம். Sri Harikota என்ற இடம் ஒரு தீவு என்பது அவர் சொல்லித்தான் நான் தெரிந்துக்கொண்டேன். நமக்கு அருகாமையில் உள்ள, அடிக்கடி தொலைக்காட்சியில் காணக்கூடிய,     தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பற்றிகூட     நான் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று, என்னுடைய அறியாமையை எண்ணி வருத்தப்பட்டேன்.

நாங்கள் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் தூங்கி எழுந்தோம்.   சிறிது நேரம் ஜன்னல் ஓரம் அமர்ந்துக்கொண்டு, இரயில் முன்னோக்கிச் செல்ல, பின்னோக்கிச்செல்லும் இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்கள் இரயில் ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் நிலையத்தில் வந்து நின்றது. சென்னையிலிருந்து எங்களது இரயில் 1227 கிலோ மீட்டரை தற்போது கடந்திருந்தது. எங்களது பயணத்தில் பாதிதூரம் இறையருளால் கடந்தாகிவிட்டது. இன்னும் சரியாக 1163 கிலோ மீட்டர் கடந்தாக வேண்டும். புவனேஸ்வரில் இருந்து 07.30 மணிக்கு இரயில் கிளம்பியது. இரவு சிற்றுண்டியும் எட்டு மணியளவில் முடித்துக்கொண்டோம். பிறகென்ன, மீண்டும் படுக்க வேண்டியதுதான்.

இன்று 2015, ஏப்ரல் 08-ஆம் தேதி, புதன் கிழமை. {எங்களது பயணத்தின் மூன்றாம் நாள்} வழக்கம் போல் தூங்கி எழுந்து இரயிலில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டோம். நாங்கள் தூக்கத்தில் இருந்த பொழுதே இரயில் ஒரிசாவைக் கடந்து ஜார்க்கண்ட் மாநிலத்தையும் கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் சென்றுக்கொண்டிருக்கின்றது. காலை ஏழு மணியளவில் ச்சாயா வாங்கிக் குடித்தோம். சுடத்தண்ணி போல இருந்தது. இரயில்வே    கேட்டரிங் தயாரித்த ச்சாயாதான் இது. கொஞ்சம் கூட தரமில்லை. என்ன இரயில்வே நிர்வாகமோ தெரியவில்லை. இதனை இங்கு எழுதும்போதே எனக்குக் கோபக்கனல் மூளுகின்றது. அனால் யாரிடம் இந்தக் கோபத்தை  காட்ட முடியும்? இரயில்வே முழுவதும் தனியாரிடம் செல்வதுதான் சரியானத் தீர்வாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். முடிந்தால் அரசைக்கூட தனியாரிடம் கொடுத்து விடுவது நல்லது. நம் நாட்டில் உள்ள ஜனநாயகம் ஊழலைத்தான் வளர்க்கின்றது.


மாலை 03.00 மணியளவில் இரயில் 'மால்டா டவுன்' வந்து நின்றது.     இங்கு பதினைந்து நிமிடம் இரயில் நிற்கும். நானும், முனைவர் .நலங்கிள்ளி மற்றும் திரு.ஆர்.தண்டபாணி அவர்களும் இரயிலில் இருந்து இறங்கினோம். எங்களைப்போன்று ஒரே மக்கள் கூட்டம் அங்குமிங்கும் எதைஎதையோ வாங்கிக்கொண்டு மீண்டும் இரயில் ஏறினர். நாங்களும் அருகில் இருந்த இனிப்புக்கடையில் சர்க்கரை ஜீராவில் ஊரவைத்த வெள்ளை மற்றும் சிவப்பு உருண்டைகளை (இனிப்பின் பெயர் தெரியவில்லை) வாங்கிக்கொண்டு    இரயில் ஏறினோம். எல்லோரும் அடித்துப் பிடித்து அந்த இனிப்புகளை வாங்கும்போது, எங்களிடம் அந்தக்கடைக்காரர் இரண்டு இனிப்பு உருண்டைகள் அதிகமாகக் கொடுத்துவிட்டார். அதன் விலை பத்து ரூபாய். அதனைத் திருப்பிக்கொடுக்கவோ, அல்லது அதற்கான விலையைக் கொடுக்கவோ எங்களுக்கு மனமில்லை.


அக்கடைக்காரர் ஏமாந்ததை எண்ணி மகிழ்ந்துக்கொண்டே அந்த இனிப்புகளை சாப்பிட்டோம். எங்கள் நேர்மை எல்லாம் சற்று நேரத்தில் காற்றில் பறந்துவிட்டதை அப்போது நான் உணரவில்லை. இந்நிகழ்ச்சியினை எண்ணி எழுதும்போதுதான் எனது மனசாட்சி என்னை உறுத்தியது. ஒருவர் நம்மிடம் வந்து வலிய ஏமாந்தாலும், நாம் ஒருவரையும் ஏமாற்றக்கூடாது, என்ற நீதியை பின்பற்ற மிகுந்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. சென்னையிலிருந்து 2158 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த 'மால்டா   டவுன்' இரயில்வே நிலையத்தில் ஆங்காங்கே சில நபர்கள் சட்னியுடன் கூடிய இட்லியும் விற்றுக்கொண்டிருந்ததைக் கவனித்தோம். நாங்கள் எடுத்துவந்திருந்த சிற்றுண்டிகள் எங்களிடம் இருந்ததால், நாங்கள் இங்கு இட்லி வாங்கவில்லை. மேலும் இந்நிலையத்தில் தென்னிந்திய உணவுக்கூடம் ஒன்றும் இருந்தது. எங்களது பயணம் முடிந்து திரும்பும்போது இந்நிலையத்தில் இட்லி வாங்கிக்கொள்ள வேண்டுமென தீர்மானித்துக்கொண்டு, தொடர்ந்து பயணித்தோம். இடையில் பிகார் மாநிலத்தில் நுழைந்து மீண்டும் மேற்கு வங்கத்தில் பயணித்தது எங்கள்    இரயில்.

மாலை 06.00 மணியாகியது. நாங்கள் இறங்கக்கூடிய நியூ ஜல்பைங்குரி (New Jalpaiguri-NJP) நிலையம் அடுத்த ஒருமணிநேரத்தில் வரவிருக்கின்றது. அதற்குள் நாங்கள் அனைவரும் முகம், கை கால்களை எல்லாம் சுத்தப்படுத்திக்கொண்டு, எங்களது பைகளை எல்லாம் எடுத்து இரயில் பெட்டியின் கதவருகே வைத்துக்கொண்டோம். இரயில் இங்கே இருபது நிமிடம் நிற்கும். எனினும் உடனே இறங்கிவிட எண்ணி ஆயுத்தமானோம். எங்களது இரயில், சரியாக இரவு 07.30 மணிக்கு நியூ ஜல்பைங்குரி வந்தடைந்தது. சென்னையில் இருந்து 2390 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்நிலையத்திற்கு வந்துச்சேர 45 மணிநேரம் ஆகியது. ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 53 கிலோமீட்டர் வேகத்தில்தான் எங்களது இரயில் பயணம் செய்துள்ளது. இந்தியர்களான நாம், இம்மாதிரியான இரயில்களுக்கு    'மிகவேக வண்டி' (Express) என்று பெயர் வைத்துள்ளது பொருத்தமாகத்தான் உள்ளது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றமும் இதேவேகத்தில்தான் செல்கின்றது. தற்போது ஜப்பானில் ஒருமணி நேரத்திற்கு 443 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை புரிந்தது, அந்த தேசத்தின் மிகவேக இரயில். (Class 955 '300X). அதே வேகத்தில் அந்த நாடும் முன்னேறுகின்றதைப் பார்க்கின்றோம். பயணத்தின் வேகத்தில்தான் ஒரு நாட்டின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது.


மிகநீண்ட தூரத்தை மிகக்குறுகியக்கால நேரத்தில், மிகக்குறைந்தச் செலவில் தனது மக்களுக்கு அளிப்பதுதான் இன்றைய அறிவியல். அதனை ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிகச்சரியாகக் கையாளுகின்றன.        இதே 2390 கிலோமீட்டர் தூரத்தினை வெறும் 6 மணித்துளிகளில் கடந்துவிடும் வசதி ஜப்பானில் உள்ளது. மீதி 39 மணிநேர மனித ஆற்றலை அந்நாடு, அந்நாட்டு மக்களுக்கு வழங்குகின்றது. ஒரு இரயிலில் சுமார் 1000 நபர்கள், இந்தப் பயணத்தூரத்தை கடக்கின்றார்கள் என்றால், 39000 மணிநேர மனித மனித ஆற்றலை வீணடிக்கின்றது நமது இந்திய அரசு. இந்த 39000 மணிநேரம் என்பது 1625 நாட்களுக்கு சமம். இதுபோல் தினமும் இந்தியா முழுவதும் ஓடும் இரயில்களில் மனித ஆற்றல்கள் எந்த அளவிற்கு வீணடிக்கப்படுகின்றது என்பதை நினைத்தாலே தலை சுற்றுகின்றது. நமது அரசியல்வாதிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. இரயில் வருவதற்கும் செல்வதற்கும் தனித்தனியாக இரட்டை வீதிக்கூட இந்தியா முழுதும் இன்னும் போடப்படவில்லை. வருவதானாலும் போவதானாலும்    ஒரே வீதியில்தான் இரயிலை இயக்கியாகவேண்டும். இதனால் 'க்ராசிங்' என்று ஒவ்வொரு நிலையத்திலும் நின்றுச் செல்ல வேண்டிய நிலமை இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் எனத்தெரியவில்லை. மின் எஞ்சின்கூட இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. டீசல் எஞ்சினில் இரயில்வேத்துறை காலத்தை கடத்திக்கொண்டுள்ளது வேதனை.

இரயில் நின்றவுடன் எங்களதுப் பைகளை எல்லாம் இறக்கிவைத்தோம். எங்களுடன் பயணம் செய்த அசாம் மாநில நண்பர் Mr.Boruah G அவர்களும் உதவி செய்தார். பிறகு அவர் எங்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். எங்களை இறக்கிவிட்டு இரயில் கெளஹாத்தி நோக்கி புறப்பட்டது. இரண்டு கூலிகள் எங்களதுப் பைகளை எல்லாம் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்திற்கு வெளியில் சென்று வைத்தனர். ரூபாய் 250 கூலியாகப் பெற்றுக்கொண்டனர்.


எங்களுக்காக பேராசிரியர் வெற்றிச்செல்வி அவர்கள் அனுப்பிவைத்த வெள்ளைநிற இன்னோவா கார் முன்னதாகவே அங்குவந்து காத்திருந்தது. இரயில்வே நிலையத்திற்கு வெளியிலுள்ள ஒரு மேடையில் அமர்ந்து,  நாங்கள் எடுத்துவந்திருந்த இட்லியினை சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடும்போது மேடையில் எரிந்துக்கொண்டிருந்த மின்விளக்கினை வேண்டுமென்றே ஒரு இரயில்வே ஊழியர் வந்து நிறுத்திவிட்டார். நாங்கள் உடனே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் ஒன்று சேர்ந்து, விளக்கைப்போடச் சொல்லி கத்தினோம். ஏதோ காக்கா கூட்டம் கத்துகின்றது எனநினைத்தாரோ என்னவோ அவர் விளக்கை போடாமலே சென்றுவிட்டார். நாங்களும் எங்களை நொந்துக்கொண்டே லேசான வெளிச்சத்தில் சாப்பிட்டோம். எங்களுடன் சேர்ந்து கார் ஓட்டுனரும் மூன்று இட்லி சாப்பிட்டார். நாங்கள் எடுத்துவந்திருந்த சிற்றுண்டி உணவெல்லாம் இத்துடன் தீர்ந்துவிட்டது. பிறகு பக்கத்தில் உள்ள கடைக்குச்சென்று வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம், தண்ணீர் பாட்டில் ஆகியவைகளை வாங்கிக்கொண்டு காரில் ஏறிச்செல்லத் தயாரானோம்.

(தொடரும் - 2)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.