Tuesday, August 8, 2017

வெண்ணிலாவே… வெண்ணிலாவே…

வெண்ணிலாவே… வெண்ணிலாவே…
=============================





வானுயர்ந்து போகின்ற வெண்னிலாவே – நான்
வணங்கத் தாழ்வதென்ன வெண்ணிலாவே.

சித்தரெல்லாம் போற்றுகின்ற வெண்ணிலாவே – எனக்கு
முத்திநலம் சொன்னதென்ன வெண்ணிலாவே.

மணவாளன் நானென்றிட வெண்ணிலாவே – நாணி
உன்கன்னமெல்லாம் சிவந்ததென்ன வெண்ணிலாவே.

சிற்றின்பம் காண்பவர்க்கு வெண்ணிலாவே – நீயே
பெண்ணின்பம் ஆவதென்ன வெண்ணிலாவே.

பெண்ணின்பம் ஆண்ணின்பம் வெண்ணிலாவே – அவை
தன்னின்பம் வென்றிடுமோ வெண்ணிலாவே.

பேரின்பம் கண்டிடவே வெண்ணிலாவே – இரு
பாலின்பம் வென்றிடுவாய் வெண்ணிலாவே.

தொட்டுவிட ஆசைவைத்தேன் வெண்ணிலாவே – நீயும்
வெட்டவெளி சென்றதென்ன வெண்ணிலாவே.

துன்பமின்றி வாழ்ந்திடவே வெண்ணிலாவே – இங்கு
அன்பாயொளி வீசிடுவாய் வெண்ணிலாவே.

சுற்றிசுற்றி வருகின்ற வெண்ணிலாவே – என்னை
பற்றிட ஓராசைவையாய் வெண்ணிலாவே.

சன்மார்க்கம் விளங்கிடவே வெண்ணிலாவே – நீயும்
விண்மார்க்கம் வருகின்றாய் வெண்ணிலாவே.

வளமாக வாழ்ந்திடவே வெண்ணிலாவே – இருள்
வறுமைகளை போக்கிடுவாய் வெண்ணிலாவே.

சாதிமதம் ஒழிந்திடவே வெண்ணிலாவே – நீயே
போதிமரம் ஆகிடுவாய் வெண்ணிலாவே.

தீராத நோயெல்லாம் வெண்ணிலாவே – உன்னைப்
பார்த்தாலே ஓடிவிடும் வெண்ணிலாவே.

வள்ளல்துணை யாயிருக்க வெண்ணிலாவே – இனி
யார்துணையும் வேண்டேனென் வெண்ணிலாவே.

தயவுதயவு என்றிடவே வெண்ணிலாவே – பாடை
பயமெல்லாம் போனதென்ன வெண்ணிலாவே.

ஏழுதிரை மாயைகளும் வெண்ணிலாவே – சிற்சபை
வாழுமவன் நீக்கிடுவான் வெண்ணிலாவே.

கொலைபுலையை விடுவதே வெண்ணிலாவே – ஒரு
தலையாய தருமமென்றாய் வெண்ணிலாவே.

பசித்தோர் முகங்கண்டுவிட்டால் வெண்ணிலாவே – நீயும்
புசிக்க உணவுதந்திடுவாய் வெண்ணிலாவே.

நூல்லெல்லாம் பொய்யெனவே வெண்ணிலாவே – அருட்
பாலருந்தி உரைக்கின்றேன் வெண்ணிலாவே.

மதம்பிடித்தே அலைகின்றார் வெண்ணிலாவே – மடிய
விதவிதமாய் சாமிகண்டார் வெண்ணிலாவே.

செத்தாரை எரிக்கின்றார் வெண்ணிலாவே – இவர்
சூடுசுரணை யற்றவரே வெண்ணிலாவே.

உண்டதெல்லாம் மலமென்றாய் வெண்ணிலாவே – அந்த
மலங்காணா உடல்தாராய் வெண்ணிலாவே.

விடமெல்லாம் ஒழிந்ததே வெண்ணிலாவே – என்
உடம்பெல்லாம் சூடுகண்டேன் வெண்ணிலாவே.

பிறவியெல்லாம் கண்டுவந்தேன் வெண்ணிலாவே – இனி
பிறக்காமல் கண்டிருப்பேன் வெண்ணிலாவே.

இறப்பென்னும் பெருங்கடலில் வெண்ணிலாவே – நானும்
இறங்காமல் மேலெழுந்தேன் வெண்ணிலாவே.

நன்றிநன்றி நன்றிசொல்வேன் வெண்ணிலாவே – அந்த
மன்றில் விளையாடுகின்றேன் வெண்ணிலாவே.

சமயக் கடவுளெல்லாம் வெண்ணிலாவே – இங்கே
அபயம் அபயமென்றார் வெண்ணிலாவே.

சரணம் சரணமென்று வெண்ணிலாவே – நானும்
மரணமின்றி வாழுகின்றேன் வெண்ணிலாவே.

ஞானசபைக் குள்ளேசென்று வெண்ணிலாவே – என்
மானம் காத்துக்கொண்டேன்என் வெண்ணிலாவே.

வாழ்க வாழ்கவாழ்கவென்ற வெண்ணிலாவே – எல்லா
உயிருள்ளும் நீவாழுகின்றாய் வெண்ணிலாவே.

சுத்தநடம் கண்டிடவே வெண்ணிலாவே – என்
பித்தமெல்லாம் போனதென்ன வெண்ணிலாவே.

உன்புகழைப் பாடுகையில் வெண்ணிலாவே – பெற்ற
அன்னை மனங்குளிராதோ வெண்ணிலாவே.

விந்துநாதம் வென்றிடவே வெண்ணிலாவே – எனது
தந்தை மகிழ்வாரோசொல்லாய் வெண்ணிலாவே.

இன்பமிது இன்பமிது வெண்ணிலாவே – சுத்த
சன்மார்க்க இன்பமிது வெண்ணிலாவே.

காலமெல்லாம் நானிருப்பேன் வெண்ணிலாவே – அந்த
காலன் என்னடிமையானான் வெண்ணிலாவே.

வேதித்த உடம்பிதுவே வெண்ணிலாவே – எந்த
வேதம் கண்டதிதுசொல்லாய் வெண்ணிலாவே.

மூவுருவம் கொண்டுவிட்டேன் வெண்ணிலாவே – இனி
யாருருவமும் கொண்டிடுவேன் வெண்ணிலாவே.

நித்தமும் நீகண்டிடவே வெண்ணிலாவே – இங்கே
செத்தவரை எழுப்புகின்றேன் வெண்ணிலாவே.

கண்ணிரண்டும் ஒளிவீச வெண்ணிலாவே – மேனிப்
புண்ணும் பொன்னானதென்ன வெண்ணிலாவே.

சாகாக்கலை கற்றுவந்தேன் வெண்ணிலாவே – உனை
நோகாமல் காத்திடுவேன் வெண்ணிலாவே.

வள்ளல்துணை வேண்டிடவே வெண்ணிலாவே – உள்ள
கள்ளமெல்லாம் விட்டுவிட்டேன் வெண்ணிலாவே.

ஏறி விளையாடுகின்றேன் வெண்ணிலாவே – அங்கே
அமுதூற உண்ணுகின்றேன் வெண்ணிலாவே.

பட்டதெல்லாம் போதுமென்றாய் வெண்ணிலாவே – உலகில்
விட்டகுறை ஏதுமில்லை வெண்ணிலாவே.

நாதனிருக்கு மிடத்தினிலே வெண்ணிலாவே – நானும்
போதம்காண செல்லுகின்றேன் வெண்ணிலாவே.

எனக்குநேர் எனநீஇருக்க வெண்ணிலாவே – எங்கும்
ஓர்குறையும் இல்லைஎன் வெண்ணிலாவே.

                                                             --- திருச்சபை.

                                     --- தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.