Monday, August 7, 2017

யாரடி நீ… மோகினி…

யாரடி நீ… மோகினி…

ஒருநாளிரவில் சென்னைவாசியாகிய லசஷ்மணப்பிள்ளையும், திருமழிசை கந்தசாமி முதலியாரும் ஒற்றியூர்க்கு வள்ளலாருடன் செல்ல மோகினிவந்து அவ்விருவரையுந் தாக்க, வள்ளலார் 'பிச்' என்றவுடன் அது மறைந்துவிட்டது. இருவர்க்கும் விபூதி யளித்தனர். (பிரபந்தத்திரட்டு-பக்கம்-66)


          “மோகினி” என்ற ஒரு மாயாஜாலப் பெண் உண்மையில் உண்டா? என்பது எனக்குத் தெரியவில்லை. விஞ்ஞானத்தை மட்டுமே நம்புகின்ற அறிவியலாளர்கள் இதுபோன்ற மோகினி, பேய், ஆவி, பிசாசு என்பவைகளை எல்லாம் நம்பமாட்டார்கள். இவையெல்லாம் மனதில்  ஏற்படும் பயத்தின் வெளிப்பாடே என்பார்கள். “மோகினி” என்கின்ற பெண்பாலை பார்த்தவர்கள், ஏன் இது வரை “மோகன்” என்கின்ற ஆண்பாலை பார்க்கவில்லை? என்ற கேள்வியும் எழுகின்றது.

மோகினி என்பது திருமாலின் பெண் அவதாரம் என்றும் கூறுகின்றார்கள். திருமால் மோகினியாக அவதாரம் எடுத்து பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கும், தனது அழகில் மயங்கிய அசுரர்களுக்கு சாதாரண பாணத்தினையும் கொடுத்ததாக கதை உள்ளது.

யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பஸ்மாசூரனை, திருமால் மோகினி அவதாரம் எடுத்து அழித்து சிவபெருமானையே காப்பாற்றிய்ய கதை நமக்குத் தெரியும்.

தனது அருகில் பார்வதி இருப்பினும், திருமாலின் மோகினி அவதாரத்தில் மயங்கிய சிவன் பார்வதி அருகிலேயே மோகினியைப் புணர்ந்து ஐயப்பனை பெற்றார் என்கின்ற கதையும் நமக்குத் தெரியும்.

அரவானை எந்தப்பெண்ணும் திருமணம் செய்ய விரும்பாததால், கிருஷ்ணன் மோகினி வடிவம் கொண்டு அவனை மணந்து ஒரு நாள் இரவு மட்டும் அவனுடன் வாழ்ததாக கூத்தாண்டவர் மரபு கூறுகின்றது.

இப்படியான புராணக் கதைகளும் மோகினி பற்றி கூறுகின்றன. இதற்கிடையில் மந்திர தந்திரவாதிகளால் மோகினி வசியம் என்கின்ற பூஜை முறைகள் நடந்தேறிவருகின்றன. பிறரை வசப்படுத்தவும் காரிய சித்தியடையவும் இந்த மோகினி பூஜைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் யோகி ஸ்ரீ இராமானந்த குரு (தொலைப்பேசி எண்:9442426434) அவர்கள் தாம் செய்த மந்திர பூஜையினால் மோகினையைக் கண்டேன் என சொல்கின்றார்.

“…1008 முறை மந்திர உச்சாண்டம் செய்த பிறகு கண்களை திறந்த நான் அதிர்ந்து போய்விட்டேன். அந்த அதிர்ச்சியை மீண்டும் இதுவரை எந்த காரணத்திற்காகவும் நான் அடைந்ததே இல்லை. என் முன்னே அழகே வடிவான ஒரு பெண் சலனமற்ற பார்வையால் விழி இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். காற்றில் அவளின் நீண்ட கூந்தல் அசைவதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செரியும். அதுவரை அப்படியொரு அழகிய பெண்ணை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகளில் தான் பார்த்திருக்கின்றேன்.

வெள்ளை வஸ்திரத்தில் அடர்த்தியான கருங்கூந்தலும், சந்தன நிற மேனியும், நீல விழிகளும், நெற்றியில் ஜொலித்த செந்தூரமும், ரோஜாவை போன்ற சிவந்த உதடுகளும், அவளிடமிருந்து வந்த நறுமணமும் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை. அந்த காட்சி இப்போது ரசனை மிக்கதாக தெரிகின்றது. ஆனால் அதை நேருக்கு நேராக சந்திக்கும் போது பயத்தால் நான்பட்ட பாட்டை வார்த்தையில் சொல்ல இயலாது.

நெஞ்சு படபடக்க, உடலெங்கும் நடுங்க, தொப்பலாக வியர்த்து போக, கத்த முடியாமல் வாய் ஒட்டிக்கொள்ள அப்பாடா அதை இன்று நினைத்தாலும் சற்று நடுக்கம் வரத்தான் செய்கின்றது. ஒரு மந்திரத்தை சொன்னால் அந்த மந்திரத்திற்குரிய உருவம் கண் முன்னால் தோன்றும் என்று தெரிந்து இருந்தாலும்கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் போது எந்த சமாதானங்களும் நினைவுக்கு வருவதில்லை…. மந்திரம் சொல்லி மோகினியை வரவழைக்க தெரியுமே தவிர அதை முறைப்படி திருப்பி அனுப்பும் மந்திரம் எனக்கு தெரியாது. அதையும் கற்று கொண்டு செய்ய வேண்டிய வேலையை அவசரப்பட்டு செய்துவிட்டேன். ஆனால் நல்ல வேளை நெஞ்சை நொறுக்கும் அந்த பய நேரத்திலும் என்னையும் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டு ராமா, ராமா என மனதிற்குள் ஓலமிட்டவாறு சொன்னேன். இப்படி நான் சொன்னது நிச்சயம் திட்டமிட்டு அல்ல. பயமும், போக்கிடமில்லாத திக்கற்ற நிலையும் கடவுள் பெயரை என்னை சொல்ல வைத்தது. அதனால் நான் காப்பாற்றப்பட்டேன். வந்த மோகினி சப்தமில்லாமல் போய்விட்டது.”

இவ்வாறு தாம் அடைந்த அனுபவத்தை இராமானந்தர் உரைக்கின்றார். இப்படி பலரக்கு பல அனுபவங்கள் மோகினி உடன் கிடைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. மோகினிகளில் நல்ல தேவதைகளும் உண்டு, கெட்ட தேவதைகளும் உண்டாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அச்சுறுத்தல் வேறு. இந்திரன் சபையில் மோகினிகள் உண்டாம். அதனை வசியம் செய்பவர்களுக்கு பிறரை வசியம், மோகனம் செய்யும் ஆற்றல் வந்துவிடுமாம். கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகுமாம்.

“ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா”

மேற்காணும் மந்திரத்தை தினமும் 1008 முறை ஜெபம் செய்ய வேண்டும். பெளர்ணமியில் ஆரம்பித்து அமாவாசை அன்று முடிக்க வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15-ஆம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும். பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தமாம். இதுபோல மோகினி யந்திரம், மை, மந்திரங்கள் என பல பல உள்ளன.  

புராணங்களில் மோகினியின் தன்மையினையும், மந்திர தந்திரங்களில் மோகினியின் தன்மையினையும் சுருக்கமாகப் பார்த்தோம். சுத்த சன்மார்க்க பாதைக்கு இம்மாதிரியான மோகினி தரிசனங்கள் முற்றிலும் தேவையற்றது. ஆனாலும் இதன் தரிசனம் வேண்டும் என்போர் முயற்சி செய்வதிலும் தவறில்லை. தரிசனத்தில் பல் இளித்து ஏமாந்துவிடக்கூடாது என்பது முக்கியம். 15 நாள் பயிற்சிதானே… இன்றே (07-08-2017) பெளர்ணமி தினம் தான்… தொடங்குங்கள்… பின்விளைவு எதற்கும் நான் பொறுப்பல்ல. மோகத்தை வெல்வதே சன்மார்க்கம்.

   வள்ளற்பெருமான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒற்றியூர் கோயிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் இரவில் நடந்து செல்கின்றார். அவருடன் சென்னையில் வசிக்கக்கூடிய லஷ்மணப்பிள்ளையும், திருமழிசை கந்தசாமி முதலியாரும் நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றார்கள். திடீரென ஒரு துஷ்ட மோகினி தோன்றி அவர்கள் செல்லும் வழியை தடுத்து, வள்ளரை விடுத்து மற்ற இருவரையும் தாக்குகின்றது. இருவரும் குலை நடுங்கிவிட்டார்கள். வள்ளற்பெருமான் அருகில் இருக்கும்போதே அந்த மோகினி தனது வேலையை காட்டுகின்றது என்றால்… மோகினியின் கோபம் எப்படிப்பட்டது என்பதா? அல்லது இரவு நேரத்தில் அவர்களிருவரும் பயந்துக்கொண்டே சென்றிருப் பார்களேயானால், அந்த பயம் கொண்ட மனமே மோகினியை வரவழைத்ததா? என்று சொல்வதற்கில்லை.

உடனே வள்ளற்பெருமான் “பிச்” என்று குரல் கொடுக்க அந்த மோகினி மறைந்துவிட்டது. வள்ளற்பெருமானின் “பிச்” என்ற வார்த்தைக்கு அவ்வளவு மந்திர சக்தி உள்ளது. ஏனெனில் இதுபோன்று சங்கடமான நிகழ்வுகள் தோன்றும்போது வள்ளற்பெருமான் அடிக்கடி இந்த வார்த்தைகளையே உபயோகித்து சங்கடங்களை தீர்த்துக்கொண்டார் என்பதை அறிகிறோம்.

அதன்பிறகு மோகினியிடம் அடிவாங்கிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்த அந்த இருவருக்கும் தம்மிடம் இருந்த விபூதியை அளித்து அவர்களது நடுக்கத்தை தெளிவித்தார். இந்நிகழ்வு காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களால் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. இதுபோல பிரம்மராசஷசி, காளி, சூன்யம் போன்ற நிகழ்வுகளும் வள்ளற்பெருமான் வாழ்வில் குறுக்கிட்டதாக அறிகிறோம். அதனை வேறொரு பதிவில் பார்ப்போம். அன்பர்களுக்கு நன்றி.     

                                           --- தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.