Friday, August 4, 2017

வள்ளற்பெருமானின் நடத்தைகள்

வள்ளற்பெருமானின் நடத்தைகள்



"வள்ளலார் எழுத்தறியும் பெருமானைப் (திருவொற்றியூர் – சென்னை) பாடிக்கொண்டிருக்கு நாளில், உலகபோகங்களில் மனம்படியாமல் திருவருளைவழுத்தும் இன்பவுரையே தமது திருவிளையாடலாகக் கொண்டார். சிறு போதுமுதல் இச்சையாதி விஷயங்களைத் துச்சமாகக் கொண்ட பெரியோர் என்றும், தீவிரமாகவும் செம்பாகமாகவும் பாடும்செந்நாப்புலவர் என்றும், அடக்கமே பொருளெனத்தேர்ந்த அருளாளரென்றும் பலர் பிள்ளையவர்கள்பால் அதிசயித்த உணர்வினராய்ப் பழகி வந்தனர்.

          வெள்ளாடை முழங்காலுக்கு மேல் தரித்து ஞானதீபமொத்திலகும் தேகம் தெரிய வொட்டாது மூடிக்கொண்டு பிறர்க்குத் தன்பால் இச்சைசெல்ல வொட்டாதபடி முக்காடிட்டு மறைத்த மேனியுடையராய் வீதிகளில் ஓரமாய்ச் செல்வர். திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்திலாவது காலின்மேல் கால் போட்டாவது உட்கார்ந்து வீண்வழக்குப் பேச ஒருவருடனும் ஒருப்படார். உயிரிரக்கமும் ஆன்ம வுருக்கமும் கொண்டொழுகுவர்."

          வள்ளற்பெருமானைப் பற்றி அவரது அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் எழுதிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. (பக்கம் – 63)

         வள்ளற்பெருமானின் குணமும் அவரது நடத்தையும் பற்றி சிறு குறிப்பினை படம்பிடித்து காட்டியிருக்கின்றார் ச.மு.க. அவர்கள். அதன் விளக்கத்தை சற்றே பார்ப்போம்.

1.   உலக போகங்களில் மனம் படியாதிருத்தல்:

உலக போகங்கள் யாவும் துன்பம் தரக்கூடியது என்ற உண்மை அறிந்து ஆன்ம போகத்தையே விரும்பினார்.  “சுடுகாட்டுப் பிணங்காள் இச்சுகமனைத்தும் கணச் சுகமே சொல்லக் கேண்மின்” என்று சுடுகாட்டுக்குச் செல்லக்கூடிய பிணங்களே என்று உலகில் வாழுகின்ற நம்மை பார்த்து உண்மையை உரைத்துவிட்டார். உலக சுகங்களை  வேண்டுகின்ற நாம் சுடுகாட்டுப் பிணமாவோம். நமது உடல் புதைக்கக்கூட அருகதையற்றதாம். நாம் துய்க்கின்ற சுகங்களோ கண நேரத்தில் மறையக்கூடியதாம். கனம் நிறைந்த துன்பத்தை அளிக்கக்கூடியது கண நேர சுகமாம் (சிற்றின்பமாம்). இப்படிப்பட்ட மோசமான உலக போகத்தை வள்ளற்பெருமானின் மனமானது விரும்பாமல் இருந்தது. 

2.   திருவருளை போற்றும் இன்ப உரையே தமது திருவிளையாடலாகக்  கொண்டார்:

இறைவனுடைய பேரருளை போற்றிப் பாடக்கூடிய தொழிலையே தமது பொழுதுபோக்காகக் கொண்டார்.  “எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்” என்ற தமது (ஆன்ம) விருப்பத்தையே தலைமேல் கொண்டொழுகினார். மற்றவர்களுடைய விருப்பத்திற்காக ஆடுவது உலகியல். தமது ஆன்ம விருப்பத்திற்காக ஆடுவது அருளியல். இப்படி திருவருட்பா முழுதும் வள்ளற்பெருமானின் ஆன்ம திருவிளையாட்டினை நாம் காணலாம்.   

3.   சிறுபொழுது முதல் இச்சை முதற்கொண்ட விஷயங்களைத் துச்சமாகக் கொண்ட பெரியார்:

வள்ளற்பெருமான் தமது சிறுவயது முதலே ஆசைகளை தூண்டக்கூடிய செயல்களை எல்லாம் இழிவாகக் கொண்டொழுகிய பெரியவர் ஆவார்.
“பான் மறுத்து விளையாடும் சிறு பருவத்திடையே பகரும் உலக இச்சை ஒன்றும் பதியாது என் உள்ளத்தே…” என்று தமது குணத்தின் மூலம் பெரியோரின் இயல்பினை நன்கு எடுத்துரைக்கின்றார். நாம் இவ்வுலகில் பெரியோர் என்று யாரை எல்லாம் அழைக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்டத் துறைகளில் சிறந்தோங்கி இருப்பவரை பெரியார் என்று நாம் அழைப்பதும் பொருத்தமாக இருக்காது. “பெரியார்” என்றாலே அது ஆசைகளை துச்சமென விட்டவர்களையே குறிக்கும். அப்படிப்பட்ட பெரியாராக இருப்பவர் வள்ளற்பெருமான்.

4.   தீவிரமாகவும் செம்பாகமாகவும் பாடும் செந்நாப்புலவர்:

ஒரு செயலை செய்வதில் விரைவு இருக்க வேண்டும். வள்ளற்பெருமான் தாம் பாடுகின்ற பாடல்களை விரைவாகப் பாடிமுடிக்கும் திறமை அவருக்கு இருந்தது. இதற்கு உதாரணமாக  திரு அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள 1596 அடிகளையும் ஒரே இரவில் எழுதி முடித்ததாக செவிவழிச் செய்தி கூறுகின்றது. ஒரு பாடலையோ அல்லது பதிகத்தையோ பாடுவதில் தீவிரம் காட்டினார். விரைவாகப் பாடுவதிலும் உண்மையை உரைப்பதிலும் தீவிரம் காண்பித்தார். அதே நேரம் செம்மையானப் பாடலாகவும் (அருள் நிறைந்த பாடல்கள்) அவையாவும் திகழ்கின்றன. உலகியலில் விரைவாக செய்யக்கூடியதில் நிச்சயம் பிழைகள் இருக்கும். அருளியலில் விரைவாக செய்யும் காரியந்தான் வெற்றியடையும் என்பதற்கு வள்ளற்பெருமான் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். மேலும் நடுநிலமையோடு பாடக்கூடிய நாவினைப் பெற்ற செந்நாப்புலவராகவும் திகழ்வதை நாம் அறிகின்றோம்.

          “நான்முகர்கள், நல் உருத்திரர்கள், நாரணர்கள், இந்திரர்கள், அருகர்கள், புத்தர் முதல் மதத்தலைவர்கள் எல்லாம் வான் முகத்தில் தோன்றி அருள் ஒரு சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே தேன் முகந்துண்டவர்கள், எனவே விளையாடாது நின்ற “சிறு பிள்ளை கூட்டம்” என இவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் நான் மிகக்கண்டு கொண்டேன்” (4178) என்ற உண்மையை வள்ளற்பெருமான் உரைப்பதில் தீவிரத்தையும், உண்மையையும், நடுநிலமையையும் காணலாம். விளையாடக்கூடத் தெரியாத சிறு பிள்ளைகள் கூட்டமாக இருப்பவர்களைத்தான் நாம் கடவுள் என மதித்து வணங்கிக்கொண்டுள்ளோம் என்பதை அறியவேண்டும்.

5.   அடக்கமே பொருளெனத்தேர்ந்த அருளாளர்:

அடக்கமே மெய்ப்பொருளாக விளங்குகின்றது என்பதை அறிந்த அருளாளராக விளங்குபவர் வள்ளற்பெருமான். வெளியில் உள்ள ஐம்பொறிகளை ஆமை எவ்வாறு தமக்குள் அடக்கிக்கொள்கிறதோ, அவ்வாறு ஐம்பொறிகளை அடக்குபவனுக்கே அவனுள் அடக்கமான இறைவன் தெரிவான். “படிப்பு அடக்கி, கேள்வி எல்லாம் பற்று அற விட்டடக்கி, பார்ப்பது அடக்கி, உறும் பரிசம் எல்லாம் அடக்கி, தடிப்புறும் ஊண் சுவை அடக்கி, கந்தம் (நுகரும் வாசனை) எல்லாம் அடக்கி, சாதி மதம் சமயம் என்னும் சழக்கை எல்லாம் விட்டு அடக்கி, மடிகின்ற மரணத்தை அடக்கி, மனக்குரங்கு குதித்த துடிப்பை அடக்கி ஆட்கொண்ட துரையே…” (4764) என்று இத்தனையும் தம்முள் அடக்கி, அடக்கமே மெய்ப்பொருளாய் திகழ்கின்ற அருளாளாராக திகழ்கின்றார் வள்ளற்பெருமான்.

6.   வெள்ளாடை முழங்காலுக்கு மேல் தரித்து ஞானதீபமொத்திலகும் தேகம் தெரிய வொட்டாது மூடிக்கொண்டு பிறர்க்குத் தன்பால் இச்சைசெல்ல வொட்டாதபடி முக்காடிட்டு மறைத்த மேனியுடையராய் வீதிகளில் ஓரமாய்ச் செல்வர்:

ஞானதீபத்தை ஒத்திருக்கும்படியான தமது தேகத்தை மறைக்க ஒரே ஒரு வெள்ளாடையை தமது முகம் மற்றும் முழங்கால் மட்டும் தெரியும்படி சுற்றிக்கொண்டு, பிறர் தன்னைப் பார்த்தால் தம்மீது அவர் ஆசை கொண்டிடாத வண்ணம் தலைக்கு முக்காடிட்டுக்கொண்டு இருப்பார். நாமெல்லாம் பிறர் நம்மைப் பார்த்து, நம் தேகத்தின் மீது ஆசை கொள்ள வேண்டும் என்றே உடை உடுத்துகின்றோம். பிறர் நம்மைப் பார்த்து ஆசை படும்படி தோன்றுவது பாவமாகும். இப்பாவத்தை செய்யாமலிருப்பவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களாகும். இவ்விடயத்தில் வள்ளற்பெருமான் இஸ்லாமியப் பெண்களின் நடைமுறைகளை ஏற்றுக்கொண்டார் என்றே சொல்லலாம். இவ்வாறு முக்காடிட்டு பிறரின் தேக ஆசையை தூண்டிவிடாமல் அடக்க ஒடுக்கமாக சாலைகளின் ஓரமாய் நடந்து செல்லும் ஒழுக்கத்தை உடையவராக வள்ளற்பெருமான் இருக்கின்றார்.

7.   திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்திலாவது காலின்மேல் கால் போட்டாவது உட்கார்ந்து வீண்வழக்குப் பேச ஒருவருடனும் ஒருப்படார். உயிரிரக்கமும் ஆன்ம வுருக்கமும் கொண்டொழுகுவர்.

அன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வெளிப்புறத்தில் திண்ணைகள் இருக்கும். அத்திண்ணைகளில் அமர்ந்துக்கொண்டு வெட்டிக்கதை பேசுவதும் அல்லது உருப்படியான காரியங்களை ஏதேனும் செய்வதும் உண்டு. வள்ளற்பெருமான் அத்திண்ணைகளில் எப்போதும் அமரமாட்டார். அதுபோல உயர்ந்த ஆசனங்களிலும் அமரமாட்டார். அமர வேண்டுமாகில் தரையில் சம்மணமிட்டு அமருவதே வழக்கமாகக் கொண்டிருந்தார். தரையில் அமர்ந்தாலும் காலின் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்த்தார். அவ்வாறு அமர்தல் பிறரை அவமதிக்கும் செயலாகக் கண்டார். அடக்கமே மெய்ப்பொருளாகக் கொண்டவர்கள் உயர்ந்த ஆசனத்தில் அமரமாட்டார்கள், காலின் மீது கால்போட்டு அமரமாட்டார்கள். அது அகங்காரத்தை நம் மீது திணித்துவிடும். உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் தரைமீதுதான் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. அவ்வுயிரனங்களை எல்லாம் மதிக்கும் வகையில், அதற்கு சமமாக நாமும் இருக்க வேண்டும் என்ற வகையிலும், நம்மைவிட எவ்வுயிரும் தாழ்ந்தது அல்ல என்ற தாழ்மை குணத்தாலும், ஆன்ம நேய ஒருமைபாட்டுடனும், உயிரிரக்கத்துடனும் வள்ளற்பெருமான் நடந்துக்கொண்டது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகும். உயர்ந்த ஆசனத்தில் அமர்வதும் ஒழுக்கக்கேடுகளில் ஒன்றாகும்.


          “காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன், காலின்மேல் கால்வைக்கவும் பயந்தேன், அயலான பாடல்களை கேட்கவும் பாடவும் பயந்தேன், பஞ்சணை படுக்கவும் பயந்தேன், நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்றாக மகிழ்ந்து கால் கீழே நீட்டவும் பயந்தேன், நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தேன்” (3476) என்ற வள்ளற்பெருமானின் பாடல் அடக்கத்தின், ஆன்ம நேயத்தின், ஒழுக்கத்தின் உயர்வினை தெரிவிக்கின்றது.  

                                     --- தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.