தவத்திரு சீனிசட்டையப்பர் எழுதிய 'சன்மார்க்க
குரவர் நால்வர்' என்ற வரலாற்று தொகுப்புகள் சன்மார்க்க விவேக விருத்தி மின்னிதழில்
தொடராக எட்டு மாதங்கள் வெளியாகின. அத்தொடர் முழுதும் இங்கே தரப்பட்டுள்ளது.
சன்மார்க்கக்
குரவர் நால்வரின் வரலாற்று அறிமுகம் என்ற நூலின்படி கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத
முதலியார், காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை, பிறையாறு சிதம்பர சுவாமிகள் ஆகியோரின்
வரலாற்று சுருக்கத்தினை கோட்டைக்கரை வள்ளலார் இளைஞர் மன்றம் வெளியிட்டுள்ளனர். அதன்படி
முதலில் நாம் கல்பட்டு ஐயாவின் வரலாற்று சுருக்கத்தினையும் அதனைத் தொடர்ந்து மற்ற சன்மார்க்க
குரவர்களின் வரலாற்றையும் நாம் இங்குக் காண்போம்.
1. கல்பட்டு
இராமலிங்கம் ஐயா
எந்தாய் நின் பண்பு
ஓங்குமன்பர் எல்லாரும் உள்ளே
விழித்துநிற்கத்
தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள்
தூயபொருள்
வாங்குகவென் றென்பால் வலியக்
கொடுத்தமுதும்
பாங்குறநின் றூட்டினையே! எந்தாய்
நின் பண்பிதுவே!
(திருவருட்பா - 5407)
சிவ கனி
திருநறுங் குன்றத் தெழில்மலை
முடிமேல்
குருவருங் காலம் குறித்தினி தமர்ந்தே
ஒருவரும் இல்லா உவமைநம் பெருமான்
திருவருள் பெற்ற சிவகனி தொழுவாம்!
-வானொளி
அமுதக் காவியம்
குருவைத்
தேடியவர்:-
புண்ணியர்கள் வாழும் திருநறுங்குன்றத்துக்கு ஒரு சாது வந்து சேர்ந்தார்.
நாடெல்லாம் சுற்றி சுற்றி நற்றவ சீலர் ஒருவரைத் தேடியும் காண இயலாத ஏக்கம் அவர் நெஞ்சகத்தே
இருந்தது. பிறவி எடுத்ததன் பெரும் பயனைப் பெற்றுவிட வேண்டும் என்னும் துடிப்பு அவரிடம்
இருந்தது. இறைவனின் திருவருளைப் பெற்றுவிட வேண்டும் என்னும் அடங்காத ஆர்வமும் அவரை
ஆட்டிப்படைத்தது. குருவருள் பெற்றுவிட்டால்தான் இறைவனின் திருவருள் சித்திக்கும் என்னும்
அரும்பெரும் உண்மையை உணர்ந்திருந்தார். அந்த மெய்ஞ்ஞான குருவைத் தேடியே நாடெங்கும்
பயணம் செய்தார். எங்கும் அவர் தேடிய ஞானகுரு கிடைக்கவில்லை. எனவே தனது பயணத்திற்கு
ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அவ்வூரில் உள்ள மலையில் சென்று அமர்ந்தார்.
தவயோகம்:-
எனவே தொடர்ந்து தவயோகத்தில் ஈடுபட்டார். அந்த யோகத்தில் ஓர் உண்மை
அவருக்குப் புலனாயிற்று. அவர் உள்ளத்தில் ஞானகுரு தோன்றினார். அவர் அவரை ஆட்கொள்ளும்
நாளும் குறித்தருளினார். வருத்தம் குறைந்தவராகி அந்த நாளை எதிர்பார்த்திருந்தார்.
பசி ஏற்படும்பொழுது மலையை விட்டுக் கீழே இறங்குவார். விரும்பும்
வீடுகளுக்கு முன் நிற்பார். அவர் கருத்தறிந்தவர்கள் உணவு தந்து பசியாற்றுவர். பின்
தொடர்ந்து யோக நிலையிலேயே இருப்பார். அவரைச் சூழ்ந்து அன்பர்கள் நிரம்பினர். அவர்களுக்கும்
வரும் தன் குருநாதர் வருகையை குறிப்பிட்டு மகிழ்ந்திருந்தார்.
ஞானகுரு
ஆட்கொள்ளல்:-
அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்பர் சூழ மலை உச்சியில் அந்த
ஞானகுரு வருகைக்காகக் காத்திருந்தார். உரிய வேளையும் வந்துற்றது. மாட்டு வண்டி ஒன்று
வந்து மலையடிவாரத்தில் நின்றது. அதிலிருந்து வெள்ளாடை அண்ணல் இறங்கினார். மெல்ல அன்பர்கள்
சூழ மலைமேல் ஏறினார். வைத்தக்கண் வைத்தப்படியே பார்த்துக் கொண்டு கை குவித்து நின்றார்.
அந்த சாது! ஞான குருவும் நெருங்கி வந்து கொண்டிருந்தார். அருகில் வந்ததும் திடுமென
அடியற்ற மரம்போல் விழுந்து அவர் திருவடிகளை இருகைகளாலும் பற்றிக்கொண்டார். தன் விழி
நீரால் அவ்வடிகளைக் கழுவினார். குருநாதரோ உடன் குனிந்து அவரைத் தூக்கி நிறுத்தினார்.
"ஏன் காணும் பதற்றம்? அச்சம் விடுவீர்! இனி வரும் நாளெல்லாம்
இனிய நாள்களே! வேண்டுவன பெறுவீர்! ஆட்கொண்டோம்-அனைத்தும் அளிப்போம்!" என்று ஆதரவு
மொழி பேசியருளினார். அடியவர் கண்ணீரைத் துடைத்தருளினார். அவரும் விம்மலை விட்டு விழிநீரை
அகற்றி வந்தவர்க்கெல்லாம் உணவளித்து மகிழ்ந்தார்.
"செய்தி வரும். அப்பொழுது வாருங்காணும். தற்பொழுது விடை தாருங்காணும்."
என்று திருவாய் மலர்ந்தருளி விடைபெற்றார் குருநாதர்.
அடியவரும் ஆசானும்:-
அந்த அடியவர்தான் கல்பட்டு ஐயா. அவர் பெயர் இராமலிங்கம். அவரே
தவயோகம் பயில விரும்பி ஆசான் ஒருவரைத் தேடியவர். அவரின் உள்ளத்துணர்வுகளை உணர்ந்தவராகச்
சென்று ஆட்கொண்டவர் நம் வள்ளல் பெருமான் தான்! இப்படி மாணவரைத் தேடிச் சென்று ஆட்கொள்ளும்
ஆசான் கருணையே கருணை.
திருநறுங்குன்றம் என்ற ஊர் திருநறுங்கொண்டை என்று இன்று வழங்கிவருகின்றது.
விழுப்புரம் உளுந்தூர்ப்பேட்டைக்கு இடையில் உள்ள தொடர்வண்டி சாலையில் இவ்வூர் உள்ளது.
இவ்வூரில் சைனர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெருமான் வருகையை அறிந்து அவ்வூர் மக்கள்
ஒன்று திரண்டு வந்து வணங்கி மகிழ்ந்தனர். அவ்வூர் இராமசாமி நயினார் என்பவர் கடிதத்தொடர்பு
பெருமானோடு வைத்திருந்தார்.
ஒரு கடிதம் வரைந்து நம் பெருமான் "தற்காலம் மழையின்றி வறட்சியாக
உள்ளது. நிலை மாறி வளம் பெருகும் பொழுது சிவஞான விருப்பினராகிய நமது கல்பட்டு இராமலிங்க
மூர்த்தியை அழைத்துக்கொள்வோம். அதுவரையில் காத்திருக்கச் சொல்லுங்கள்" என்றருளினார்.
பின் உரிய காலத்தில் வடலூர் வரும்படி அழைத்தனர். வந்து வணங்கி நின்றவரை சிதம்பரத்திற்குச்
சென்று நடராசரோடு ஆறு திங்கள் இருந்துவரும்படி உத்திரவிட்டருளினார். இணங்கியவராகக்
கல்பட்டு ஐயாவும் கழிபேருவகையோடு விடைபெற்றார்.
அன்று காலையே சொல்லி நம் பெருமான் கூழ் கொண்டு வந்து வைக்கும்படி
சாலை அன்பர்களுக்குக் கட்டளையிட்டு அருளினார். தருமச்சாலையின் முன்புறத்தில் வள்ளல்
அமர்ந்திருந்தார். உச்சி வேளையில் ஆறு மாதம் தில்லை வெளியில் இருந்த நம் கல்பட்டு ஐயா
வந்து, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
போதாதாங்காணும்:-
"பசியாறலாமாங்காணும் என்று பெருமான் திருவாய் மலர்ந்தனர்"
கைகுவித்து தலையாட்டி நின்றார் அடியவர். கரைத்து வைத்திருந்த கூழினைக் குவளையில் எடுத்து
நம் பெருமான் வார்த்தனர். கழுவிய வலக்கையை வாயில் வைத்து ஏற்று விழுங்கி கொண்டிருந்தார்
அடியவர். போதுமான அளவு குடித்து விட்டார். எப்படி நிறுத்துச் செய்வது என எண்ணினார்.
அதே வேளை "போதாதாங்காணும்" என்று மொழிந்தருளினார் நம்பெருமான். போதும் ஐயனே
என்று புன்னகை செய்தார் அடியவர்.
சிலுகிழைக்கா
தீங்காணும்:-
உடன் வாருங்காணும் என்று அழைத்துக்கொண்டு சாலையின் கீழ்ப்புறம்
கிணற்றுக்குத் தென்புறம் அமைந்திருந்த கீற்று வேய்ந்த சிறு குடிலில் அமர்ந்து கொண்டு
யோகம் பயிலும்படி விடுத்தனர் நம்பெருமான். அமர்ந்தவர் பலநாள் அக்குடிலில் அமர்ந்தபடியே
யோகத்தில் இருந்தார். எழவில்லை. படுக்கவும் இல்லை. அமர்ந்தது அமர்ந்தபடியே இருந்தார்.
அந்தக் குடிலில் இருக்கும் அவரைப் பார்க்க பலரும் விரும்பினர். அங்கே சென்று கீற்றுகளை
விலக்கிப் பார்த்தனர். அது கண்டு நம் வள்ளல் "சிலுக்கிழைக்கா தீங்காணும்"
அவரே எழுந்து வருவார். அதுவரையில் அமைதியாக அவரை இருக்க விடுங்கள், என்று எச்சரித்தருளினார்.
தொண்டு
செய்வதுண்டுங் காணும்:-
இயல்பு நிலைக்கு வந்ததும் பெருமான் அவரை அழைத்தருளினார். வேண்டிய
கருத்துரைகளும் வழங்கினார். அவருக்கு வேண்டியது உணர்ந்து பேசும்பொழுது நினைவாக அழைப்பார்.
மீண்டும் உணவுக்குப் பின் அங்கே சென்று யோகம் பயில விடுப்பார். இவ்வாறு தொடர்ந்து யோகம்
பயின்றதால் உடல் சூடு கண்டுவிட்டது. உடலில் எங்கும் கொப்புளங்கள் உண்டாகிவிட்டன. உணவு
எடுத்து உண்ணக்கூட இயலாதபடி உள்ளங்கைகளிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன. அது கண்டு
வள்ளலே சென்று அவருக்கு உணவளித்து வந்தனர். அப்பொழுது வெளியூர் செல்ல நேர்ந்தது. பெருமான்
அன்பர்களிடம் கல்பட்டுக்கு வேளைக்குச் சென்று உணவு கொடுங்கள் என்று அருளியிருந்தனர்.
சில நாள் கழித்து வள்ளல் வந்து சேர்ந்ததும் கல்பட்டுக்கு உணவு விடுத்தீர்களா? என்று
வினவினர். அன்பர்கள் வாய்திறக்கவில்லை, கைகளைப் பிசைந்தனர். மறந்து போனதை எண்ணி வருந்தினர்.
கொண்டு வாருங்காணும் என்று கேட்டு
உணவினை வள்ளலே திருக்கையில் எடுத்தேகினர். கையில் இலை வைத்து உணவை உருட்டி உருட்டி
வைத்தனர். உண்டு அவரும் பசியாறினார். நீரருந்தினார். கைகுவித்து, திருவடிகள் வருந்த
மலையேறி வந்து ஆட்கொண்டது போதாதோ...? இன்னும் அடிகள் வருத்த வருவானேன்? அழைத்தால் வரமாட்டேனா?
இன்னும் வருந்தலாமா? என்று கலங்கினார். அடியவர்க்கு ஆண்டவர் தொண்டு செய்வது உண்டுங்
காணும்., கவலைப்படாதீங்காணும் என்று வாய் மலர்ந்தருளினார்.
பசியாற்றுவிக்கும்
பாங்கு:-
தருமச்சாலைக்கு வருவோரை அழைத்து உணவிடும் பெருவேள்வியில் அன்பர்களோடு
கல்பட்டு ஐயாவும் இருந்தார். தொழுவூராரும் தோளோடு தோள் கொடுத்து தொண்டு செய்து கொண்டிருந்தார்.
வள்ளல் அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். நீ உண்பித்தவர் சென்றபின்
இருவரையும் அருகில் அழைத்தனர்.
"ஏன்காணும்
இந்த வெள்ளை வேட்டிக்காரர் எங்கு வேண்டுமானாலும் உண்டு கொள்வர். அதோ கண்பஞ்சடைந்து
பசியோடிருக்கும் ஏழைகள் எங்கே போவர்? இங்குதான் உண்டாக வேண்டும். அவருக்கு முதலில்
உணவு தந்து உபசரிப்பதே உண்மையான பசியாற்றுவிப்பது ஆகும். வேளைக்கு உணவு கிடைக்குமா
என்ற ஏக்கத்தினரைத்தான் நன்கு கவனிக்க வேண்டும் என்று மொழிந்தருளினார், அன்று முதல்
பிழையுணர்ந்து அற்றார்க்கு அழிபசி தீர்த்தலே அருள்பணி என்பதை உணர்ந்து செய்து வருவாராயினர்.
கிடக்க
விரும்புதுங்காணும்:-
அடிக்கடி வள்ளல் வெளியூர் சென்று வருவது வழக்கம். அன்று ஒரு நாள்
அப்படி வெளியூர் செல்லும் நிலை வள்ளலுக்கு ஏற்பட்டது. உடன் வருமாறு கல்பட்டு ஐயாவையும்
அழைத்தார். அவரும் வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டி கடலூரை நோக்கிச் சென்றது. கொஞ்ச
தூரம் சென்றதும் கல்பட்டு ஐயாவை பார்த்து நம்பெருமான் "கிடக்க விரும்புதுங்காணும்"
என்று மொழிந்தனர். குறிப்பறிந்து கல்பட்டு ஐயா படுக்க விரும்பும் நம் பெருமான் தலை
வைத்து படுத்துக்கொள்ள ஏற்றபடி தன் தொடையை வைத்துக் கொண்டார். பெருமானும் தலைசாய்த்து
வைத்துப் படுத்தார். வண்டி சென்று கொண்டே இருந்தது. சிறிது தொலைவு சென்றதும் அவர் தம்
தொடையில் ஈரம்படுவது தெரிந்தது. பெருமான் கண்களிலிருந்து நீர்த்தாரை தாரையாக வழிந்தது.
அதுதான் அந்த ஈரம் என்பதை அறிந்து கொண்டார்.
உண்மை உணராமல் உலகம் இருக்கின்றதே:-
தொடர்ந்து
வழியும் விழிநீர் தொடை நனைந்தது, துணி நனைந்தது, வண்டியின் சட்டம் நனைந்து கீழேயும்
வழிந்தது. தரையிலும் நனைந்தது. அதுகண்டு திகைத்து அடியவர் சொல்வது அறியாமல் இருந்தார்.
உடன் ஏன் அழ வேண்டும் பெருமான்? பிள்ளையா? குட்டியா? என்ன துன்பம் வந்ததோ? என்று எண்ணினார்.
உடன் எழுந்து நம் பெருமான் அதற்கு இல்லைங்காணும். உண்மை உணராமல் உலகம் அறியாமையால்
இருக்கின்றதே என்று எண்ணியதும் அழுகை வந்துவிட்டது. வேறு எதற்கும் இல்லைங்காணும், என்று
திருவாய் மலர்ந்தருளினார். கல்பட்டு ஐயா அது கேட்டு நம்பெருமான் உள்ளங் கண்டு உருகினார்.
"கள்ளவா
தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா நிந்த
உலகெலாம் களிப்புற்றோங்குதல்"
என்று வந்துறுமோ?
என்ற ஏக்கம்
நம்பெருமான் கொண்டிருந்ததை அன்று அவ்வாறு வெளிப்படுத்தினார் போலும்!
சன்மார்க்கத்தில் ஆர்வம்:-
நம் வள்ளல்
தம் கருத்தினை உலகுக்கு எளிமையாக உணர்த்த விரும்பினார். அதற்காக ஒரு மாத இதழை வெளியிடவும்
திட்டமிட்டனர். அதற்குச் சன்மார்க்க விவேக விருத்தி என்று பெயரிட்டனர். அன்பர்கள் நன்கொடை
அளிக்கச் செய்தனர். பெருமானும் முதற்கன் அளித்து எழுதினார். அவ்வாறு கல்பட்டு ஐயாவும்
நன்கொடை அளித்தனர். இதிலிருந்து சன்மார்க்க விவேகம் உலகம் பெறுதல் வேண்டும் என்னும்
ஆர்வம் அவருக்கு இருந்தது புலப்படும்.
நெருப்புப் போட்டு கொளுத்துங்காணும்:-
ஒருகால் ஆடூர்
சபாபதி சிவாச்சாரியார் கல்பட்டு ஐயாவிடம் ஓர் ஐயம் கேட்டார். பெருமான் பதிப்பித்த ஒழிவிலொடுக்கம்
நூலைப்படிப்பதைக் கேட்டு அறிந்து அதை நெருப்புப் போட்டு கொளுத்துங்காணும் என்று பெருமான்
அருளினார். ஏன் என்பதே அவர் கேள்வி! கல்பட்டு அதனை உணர்ந்து நீர் அதனைப் படிக்கத் தகுதிபெறவில்லை
என்பதையே வள்ளல் அவ்வாறு வாய்மொழிந்தனர் என்றார்.
உம்மைச்சொல்ல வில்லைங்காணும்:-
இப்பிறவியைக்
கடைதேற்றுவதற்கு உரிய வழிகளைத் தொடர்ந்து அன்பர்களுக்கு வள்ளல் திருவாய்மலர்ந்து கொண்டிருந்தார்.
ஆனால் அதனைப்புரிந்து உணர்ந்திருந்தவர் யாருமில்லை. ஒருகால் வள்ளற்பெருமான் உபதேசித்திருந்தபோது,
" நடப்பவர் ஒருவரும் கண்டிலர் எனவே கடைத்தேறுவார் எவரையும் காணோம்" என்றருளினார்.
அதுகேட்டு கல்பட்டு ஐயா மூர்ச்சையாயினார். தரையில் சாய்ந்தார். அதுகண்டு நீர்த்தெளித்து
ஆசுவாசப்படுத்தி, எழுப்பித்தருளி, "உம்மைச் சொல்லவில்லைங்காணும்" என்று அருளினார்.
போதநாசம் செய்த விண்ணப்பம்:-
வள்ளல்
அப்பொழுது சித்திவளாகத்திருமாளிகையில் வீற்றிருந்தருளினார். கல்பட்டு ஐயாவும் கண்டுவரச்
சென்றார். பெருமானார் கைப்பட எழுதிய ஒரு விண்ணப்பத்தில் ஒப்பம் பெற்று வைத்துக்கொண்டனர்.
அது தான் சன்மார்க்க விண்ணப்பம்.
ஸ்ரீ
பார்வதிபுரம் என்னும் உத்தரஞான சிதம்பரத் திருப்பதிக்கண்ணே அகிலாதாரமாய் விளங்கும்
(ஸ்ரீ சமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ்ஜோதியராகிய
எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யான் எனதெனும் போத நாச வந்தனந் செய்த விண்ணப்பம்.
எம்
இறைவரே! இது பரியந்தம் யானாகத் தேடியதோர் பொருளென்ப தில்லை ஆகவே, தேவரீர் பெருங்கருணையால்
என்னை உய்யக்கொள்ள உபகரித்தருளிய உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான்
எனது என்று கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில்
என்னைப்பற்றி இருந்ததொன்றை யான் பெரும் பொருளாக எண்ணி நின்றனன். ஆதலால் அச்சமரச சன்மார்க்க
சங்கத்துச் சாதுக்கள் சமுகத்து நிற்கப்பெற்ற விசேடத்தால் அத்தற்சுதந்தரப் பொருளைத்
தேவரீர் பெருங்கருணைச் சந்நிதி முன்னே அர்ப்பித்தனன். இனி தேவரீர் அதனை அருள்வசமாக்கி
ஏழையாகிய என்னையும் என்னை அடுத்த சுற்றம் என்னோடு பழகிய நட்பினராதியரையும் உய்யக்கொண்டருளுக.
ஆங்கிரவருடம் இங்ஙனம்
வைகாசி 1
அடிமை
மேட்டுக்குப்பம் கல்பட்டு
இராமலிங்கம்
பூட்டிட்டும்
பூட்டினார்:-
இதிலிருந்து சுத்த சன்மார்க்க நிலையை அடைய விரும்புகின்றவர்கள்
தம் சுதந்திரத்தைக் கைவிட வேண்டும் என்பதை நம் வள்ளல் கல்பட்டு ஐயாவுக்கு உணர்த்தி
அருளினார். வள்ளல் தம் பணி நிறைவுற்றதை சுட்டிக் காட்டி திருக்காப்பிட்டுக் கொள்ளும்
நாளையும் குறித்தருளினார். 1874 ஜனவரி 30 அன்று நள்ளிரவில் அன்பர்கள் முன்னர் எழுந்தருளினார்.
அனைவருக்கும் விடை கொடுத்து சித்திவளாகத் திருமாளிகைத் திருவறை புகுந்தனர். அவரை கதவை
சாத்திப் பூட்டிட்டு பூட்டினர் கல்பட்டு ஐயாவும் தொழுவூராரும்.
இவ்வாறு காப்பிட்டுப் பூட்டும் பெரும் பணியை நம்வள்ளல் கல்பட்டு
ஐயாவுக்கு வழங்கி சாலையை நடத்தும்படி கட்டளையிட்டருளினார். அன்பர்களில் ஓர் அன்பராக
இருந்து சாலை நிர்வாகத்தை ஏற்று நடத்தினார். பசித்தவர் முகம் கண்டு, புசித்திடும் இனிய
உணவினை ஏந்தி நின்றனர். தன் பணியைச் சரிவரச் செய்து வந்தார். தனக்கு உதவியாக வந்த சுப்புராய
பரதேசி கட்டமுத்துப் பாளையம் நாராயணர் முதலிய மெய்யன்பர்களிடம் சாலைப்பணியை ஒப்படைத்து,
என்னை வள்ளற்பெருமான் ஆதியில் நேரில் வந்து ஆட்கொண்டு வடலூருக்கு அழைத்து வந்ததுபோல்
மீண்டும் என்னை அழைத்துக்கொள்ள நிச்சயம் வள்ளற்பெருமான் வருவார்கள் என்று பகிரங்கமாகவே
சொல்லி வந்தார்கள்.
அற்ப விசுவாசிகள் எல்லாம் அதிசயிக்க அந்த அற்புதம் 26-04-1902
இல் சித்திரை கேட்டையில் வள்ளர்பெருமான் தருமச்சாலையில் கல்பட்டு ஐயா முன் தோன்றினார்கள்.
வள்ளற்பெருமான் கல்பட்டாரை நோக்க, கல்பட்டு ஐயா நித்திய மெய்வாழ்வு பெற்றார்கள். கல்பட்டு
ஐயாவின் எண்ணம் நிறைவேறியது. ஆம் தன் திருக்கரங்களில் அள்ளி அள்ளிக் கொடுத்து பசியை
நீக்கிய அந்த உத்தமரின் அழியாத நித்திய தேகத்தை தருமச்சாலையின் கீழ்புறத்தில் வள்ளல்
பெருமானே நல்லடக்கம் செய்தார்கள். 25 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக வள்ளற்பெருமான்
தருமச்சாலைக்கு வருகை புரிந்தார்கள். மறைமுகமாக பலமுறை வந்திருக்கலாம்.
இடையில் முண்டு, கையில் ஒரு தண்டு, நீண்டு வளர்ந்த தாடி, நடுத்தர
உயரம், கருணை பொழியும் பார்வை, திடமான கட்டுடல் கொண்ட கல்பட்டு ஐயாவே நம் வடல்பெருவெளிக்குக்
காவல் தெய்வமாக இன்றும் விளங்கி வருகின்றார்கள். வழி வழித் தொண்டர் பெருங் கூட்டத்தையும்
உருவாக்கி தொடர்ந்து சாலையை இலகுவாக நடத்திக் கொண்டு வருகின்றார். உயிர் அடக்கம் ஆகி
ஓய்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து அன்பர்கள் தியானித்து தம் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.