Wednesday, July 27, 2016

சன்மார்க்க குரவர் நால்வர் - 4 (பிறையாறு சிதம்பரம் சுவாமிகள்)




தவத்திரு சீனிசட்டையப்பர் எழுதிய 'சன்மார்க்க குரவர் நால்வர்' என்ற வரலாற்று தொகுப்புகள் சன்மார்க்க விவேக விருத்தி மின்னிதழில் தொடராக எட்டு மாதங்கள் வெளியாகின. அத்தொடர் முழுதும் இங்கே தரப்பட்டுள்ளது.





4. பிறையாறு சிதம்பரம் சுவாமிகள்

நெடும்பேறு

பாதி இரவில் எழுந்தருளிப்
          பாவி யேனை எழுப்பியருள்
சோதி அளித்தென் உள்ளகத்தே
          சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
          நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்
          உலகம் பெறுதல் வேண்டுவனே.
                             -திருவருட்பா-3630

தூய திருவடி

மெழுகென உருசி விழிபுனல் வழிய
அழுதழு திசைத்தே அகங்கனிந் துருகி
பழுதெலாம் தவிர்ந்த சிதம்பர சுவாமி
தொழுதகு தூய திருவடி தொழுவாம்.
                             -வான் ஒளி அமுத காவியம்.

பிறையாறு, அந்த வீட்டுத் திண்ணையில் பதினெட்டு வயது நிரம்பிய அந்த வீட்டு இளைஞர் இரவில் உறங்கிக்கொண்டிருந்தார். ஆழ்ந்த உறக்கம் எங்கிருந்தோ கேட்பதுபோல் ஒரு குரல் ஒலித்தது. சிதம்பரம்... சிதம்பரம்... என்று குரல் கொடுத்து அழைத்தது. மெல்ல உறக்கம் கலைந்து விழிகளை திறந்து பார்த்தார். வெள்ளாடை முக்காட்டு உருவம் தெரிந்தது. யாரோ என்று எண்ணி எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தார் இளைஞர். விழிப்பு நிலைக்கு அவர் வந்ததை அறிந்ததும் மீண்டும் குரல் கணீரென்று ஒலித்தது. "வடலூருக்கு வா" என்று! உற்று கேட்டுக் கொண்டு விழிகளாலும் கூர்ந்து பார்க்கும் பொழுதே அவ்வுருவம் மறைந்து போனது. சிதம்பரத்திற்கு விளங்கியது. "திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் தான்" என்று, தோன்றும் துணையாக இருந்து அன்பு மழை பொழிந்து கொண்டு இருந்த அப்பெருமான் திருவாய், தோன்றாத் துணையாக இருந்து கொண்டும் தக்கவர்பால் தோன்றி திருவருள் மொழி தந்து நல்வழிப்படுத்தும் என்று சொல்ல கேட்டிருந்த சிதம்பரத்துக்குப் பேருணர்வு பெருக்கெடுத்தது.

"வடலூருக்கு வா" என்னும் குரல் இன்னும் செவிப்பறைகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. எனவே படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தார். துண்டை உதறி தோளில் போட்டார். எது பற்றியும் சிந்திக்காமல் வடலூருக்குச் செல்லும் நெடும்பாட்டையில் அந்த நள்ளிரவிலேயே நடந்திட்டார். ஆறு, மேடு, பள்ளம் எல்லாம் கடந்திட்டார். நண்பகல் வேளைக்கு வடலூர் வந்து சேர்ந்து விட்டார்.

காரணப்பட்டு ஐயாவின் கனிவு:-

காரணப்பட்டு ஐயாவின் கண்ணில் பட்டுவிட்டார். "யார் ஐயா? இங்கே வா... எங்கிருந்து வருகின்றாய்? களைத்தும், இளைத்தும் காணப்படுகிறாயே!" என்று கசிந்துருகினார். சிதம்பரம் ஒன்றும் பேசவில்லை. அவரே மீண்டும் பேசினார். "வா அய்யா வா. உணவு கொள், பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று. மறுப்பில்லாமல் கை கழுவி அவர் உடன் சாலைக்குள் நுழைந்தார். அமர்ந்திருந்த பலரோடும் வரிசையில் அமர்ந்து கொண்டார். கல்பட்டு ஐயாவும் அருகில் இருந்தார்.

உண்டு சற்று ஓய்வு கொண்டபின் அவரைப் பற்றிய செய்திகளை கேட்டுக்கொண்டார் காரணப்பட்டு ஐயா. பெருமான் திருவருளை எண்ணி வியந்தார். நல்ல உள்ளம் படைத்தவரை ஆட்கொள்வது பெருமான் தன் திருவருள் செயல் என்று எண்ணி மகிழ்ந்தார். எனினும் அவரை அங்கே இருக்க விடவில்லை.

"சிதம்பரம்... பெற்றோரிடம் சொல்லாமல் வந்தது பெரும் பிழை. உடனே புறப்படு. வீட்டுக்குப்போ... தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர் முன் செல். அவர்களோடு இரு. காலம் வரும். அப்பொழுது அவர்கள் இசைவோடு இங்கே வந்து சேர். உனக்காகக் காத்திருக்கும் பணிகளில் அப்பொழுது ஈடுபடு. அதுதான் உனக்கு நலம் தரும். செல்... செல்... உடனே செல்!" என்று அவரைத் திரும்ப அவர் ஊர் பிறையாருக்கே செல்லும்படி கேட்டுக்கொண்டார் காரணப்பட்டு ச.மு.க.

இவ்விளைஞரும் மறுபேச்சில்லாமல் சாலை, சபை, சித்திவளாகம், கருங்குழி மருதூரைக் கண்டு வள்ளலை எண்ணி வழிபட்டுக் கொண்டே வந்த வழியே சென்று தன் இல்லத்துள் நுழைந்தார். காணாமல் வருந்திய பெற்றவரும், உற்றவரும், மற்றவரும் மகிழ்ந்தனர். அவர் கதை கேட்டு வியந்து நின்றனர்.

அவர்தான் பிற்காலத்தில் சிதம்பர சுவாமிகள் என்று பலரும் அன்போடு அழைக்கப்பெற்றவர். வழி வழித் தொண்டராக இருந்து வழி வழித் தொண்டர்களை உருவாக்கி வள்ளல் திருப்பணிக்கு விட்டவரும் ஆவார்.

சிதம்பரம் பிறப்பும் வளர்ப்பும்:-

தற்பொழுதுள்ள நாகை மாவட்டத்தில் பிறையாறு என்னும் ஊரில் அப்பொழுது வாழ்ந்திருந்த துரைசாமிக்கும் அமிர்தம் அம்மையாருக்கும் மகனாக 13-11-1895-ஆம் ஆண்டு பிறந்தார். இயற்கையிலேயே கேள்வி அறிவில் சிறந்து விளங்கியவர்க்குக் கல்வியறிவும் வாய்க்கப் பெற்றது. எட்டாம் வகுப்பு வரையில் படித்தார். மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு ஏற்படாததால் தந்தையோடு வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்தார்.

பிறையாறு சன்மார்க்கம்:-

ஆன்மீக கருத்துகளைச் சான்றோர்கள் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த மடத்துச் சாதுக்களோடும் பழகினார்.1907-ஆம் ஆண்டு பிறையாற்றில் சன்மார்க்க சங்கம் தொடங்கப்பட்டது. அதில் வந்து பேசியவர்கள் வள்ளற்பெருமான் அருமை பெருமைகளை எடுத்துரைக்கக் கேட்டுக்கொண்டிருந்தார். நெருக்கம் அவர்களோடும் வைத்துக்கொண்டிருந்தார். வள்ளற்பெருமானிடம் தனி ஈடுபாடும் ஏற்பட்டிருந்தது.

திருமணம்:-

அதனால்தான் வள்ளல் அவரை நள்ளிரவில் தோன்றி வடலூர் வரும்படி ஆட்கொண்டார். காரணப்பட்டு ஐயா அதனை அறிந்து கொண்டு ஊருக்கே திரும்பப்போகச் செய்திருந்தார். பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்துத் துறவு எண்ணத்தை அகற்ற எண்ணினர். செல்வம் மிகுந்த குடும்பத்தில் பெண் பார்த்து மணமும் செய்து வைத்தனர்.

செய்த வேலை:-

அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்த பேருந்து குழுமத்தில் அலுவலக கணக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அதனை நன்கு பார்த்துக்கொண்டிருந்தார். அப்பணிக்கு மிதிவண்டியில் செல்லுங்கால் கால் இடறி விழுந்துவிட்டார். காயம் ஏற்பட்டு துன்பம் கொடுத்தது. எனவே அந்த வேலையை வேண்டாம் என்று விட்டுவிட்டார். பின் கிடங்கல் என்னும் ஊரில் இருந்து கொண்டு வணிகம் செய்தார்.

சன்மார்க்க ஈடுபாடு:-

இடை இடையே வடலூருக்கும் வந்து போய் கொண்டிருந்தார். காரணப்பட்டு ஐயா அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார். திருவருட்பாவைப் பாடவும் வழிபடவும் முற்பட்டார். சாலை அன்பர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். மற்ற பணிகளை எல்லாம் விட்டு தொலைத்து மகிழ்வுடன் சன்மார்க்கப் பணிகளில் ஈடுபாடு கொள்வதே அவர் விருப்பமாக இருந்து வந்தது. ஆயினும் குடும்பம் இருப்பதும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. எனவே தங்க முடியாமல் இல்லற கட்டுக்குள் மீண்டும் மீண்டும் நுழைந்து கொண்டிருந்தார்.
  
எதிர்பாராமல் அவர் மனைவியாரும் இறக்க நேர்ந்துவிட்டது. எனவே கட்டுகள் அற்ற பறவைகள் விண்ணில் பறப்பது போல் உணர்ந்தார். பெற்றவர்களும் மறைந்தனர். இருந்த சகோதரரிடம் பங்கு பிரித்துக்  கொண்டார். இனி நிரந்தரமாக வள்ளலோடும் அவர் உறைந்த ஊர்களோடும் இருப்பது என்று முடிவு செய்தார். கையில் இருந்த பணத்தோடு வந்தார். வடலூரில் வழிபாட்டில் கலந்து கொண்டார். எழுத்தெண்ணி முறையாக அருட்பாவை ஓதினார். நுணுக்கங்களையும், வாழ்க்கையையும் அருட்பாவிலிருந்தும் சன்மார்க்க சான்றோர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டார். ஆழம், அகலம் கண்டு வியந்து நின்றார்.

மேட்டுக்குப்பத்தில் தங்கினார்:-

தனக்கென சொந்தமான இருப்பிடம் ஒன்று தேவை என்பதை அறிந்தார். மேட்டுக்குப்பம் சிந்திவளாகத் திருமாளிகைக்குக் கீழ்ப்புறம் ஓர் இடத்தை வாங்கினார். அதில் கெட்டியான ஓர் கட்டடத்தை கட்டிக்கொண்டார். அதில் உணவு சமைத்து உட்கொண்டு தங்கினார். சித்திவளாகத்தைச் சுற்றி சுற்றி வந்து வழிபாடு செய்தார்.

சித்த மருத்துவத்தில் தேர்ச்சி:-

திருவருட்பாக்களையும் உரைநடைகருத்துகளையும் நுணுகி ஆராய்ந்தார். பெருமானின் நிலையை உள்ளபடி உணர்ந்து கொண்டார். சித்த மருத்துவ முறைகளிலும் கவனம் செலுத்தினார். முறைப்படி புடம் போட்டு மருந்துகளைத் தயாரித்தார். பொடிகளை வீரியமுள்ளதாக ஆக்கிக் கொண்டார். எளிமையாக நோய்களுக்கு மருந்து கொடுத்து நோய்களை நீக்கினார்.

வள்ளல் பெருமானாரைத் தேடிக்கொண்டு சித்திவளாகம் வருகின்றவர்களுக்கு முறையான வழிபாட்டு முறைகளை சொல்லிக் கொடுத்தார்.

வள்ளல் பற்றிய உண்மை செய்திகளையும் உரைத்தார். வழிபாடும் ஜீவகாருண்யமும் இருவிழிகளாகக் கொள்ளத் தூண்டினார். உண்மைத் தொண்டு செய்தே உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தினார். கூட்டுவழிபாடு செய்வதன் மேன்மைகளை நேரில் நின்று செய்து காட்டினார்.

பூசந்தோறும் குருவாரந்தோறும் நெகிழ்ச்சியோடு கூடிய கூட்டு வழிபாட்டினை வலியுறுத்தினார். ஆன்மநேயம் உயிராகக் கொள்வதில்தான் வள்ளல் பெருமானை உணர்ந்து கொள்ள முடியும் என்று அறிவுறுத்தினார்.

சன்மார்க்க சங்கத்தினர் அவரை நேரில் கண்டு அளவளாவுவதை விரும்பினர். அருட்பாவில் எல்லா பாக்களையும் மனதில் நிறுத்தி வைத்திருந்தார். வேண்டும் பொழுது நாக்கு நுனியில் வந்து நின்று மகிழ்வு தருவதாக அவைகள் இருந்தன.

அருட்பாவுக்கு விஞ்சிய விளக்க அருள் நூல் வேறில்லை ஆதலின் அருட்பாவுக்கு விளக்கம் அருட்பாவிலிருந்தேதான் காட்ட வேண்டும் என்றார். அவ்வாறே காட்டினார். இதனையெல்லாம் அறிந்துகொள்ள மெய்யன்பர் திருக்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தது. சாலைப் பணிகளிலும் அக்கூட்டம் முதன்மையானதாக இருந்து பணிபுரிந்தது.

பலரோடும் ஏற்பட்ட தொடர்பு:-

அன்பர்கள் பலரும் அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அவர் கூறும் கருத்துகளைப் பின்பற்றி நடந்தனர். மருந்து கொடுக்க வேண்டியும் தம் ஊர்களுக்கு வரும்படி வேண்டியும் நின்றனர். மருந்துகள் செய்வதற்காகவும் அன்பர்களை நாடி அவர் செல்வதுண்டு. மருந்து செய்பவர்கள் அவரை நாடி வருவதும் உண்டு. திருவருட்பாவை முறைப்படி பாடமாகச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொள்ளும் ஆர்வத்தில் அழைப்பவர்கள் ஊர்களுக்கும் சென்று தங்கி வந்தார்.

நெய்வேலி, கடலூர், மயிலாடுதுறை, குடந்தை, நடராசபிள்ளைசாவடி முதலிய இடங்களிலிருந்து அன்பர்கள் அவரை அழைத்து மேற்கண்ட செயல்பாடுகளுக்கு ஈடுபடுத்தியும் ஈடுபட்டும் வந்துள்ளனர்.

அருட்பா பதிப்பு:-

அருட்பா பதிப்பும் அவர் மேற்பார்வையில் ஒன்று வந்தது. வேப்பேரி அச்சகத்தில் தெம்மூர் பிள்ளை ஏற்பாட்டில் அது பதிக்கப்பெற்று இரண்டு புத்தகங்களாக வெளிவந்தது. அதில் திருவருட்பிரகாசரின் திவ்ய சரித்திரம் என்னும் தலைப்பில் பெருமான் வரலாற்றினை நுணுகி ஆராய்ந்து எழுதி முதல் புத்தகத்தோடு இணைத்து வெளியிட்டார். திருவருட்பா ஆயிரம் என்னும் பாராயணத்திரட்டும் அப்பொழுது வெளியிட்டனர். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. இவ்வாறு அருட்பா வெளியீட்டுக்கும் அவர் பணி புரிந்திருக்கின்றார்.

பொன் விளைவு செய்தல்:-

பெருமான் காலத்தில் அவர் முன்னிலையில் பொன் செய்யப் பலரும் முயன்று தோற்றுப்போயினர். ஆனால் நமது பிறையாற்றுச் சுவாமிகள் பொன் செய்வதில் வெற்றிபெற்றிருக்கின்றார். சங்கு இலையைப் புடத்தில் பயன்படுத்தி ஐந்து மாற்றுப்பொன் செய்திருக்கின்றார் சிதம்பர சுவாமிகள்.

அப்படியானால் பற்றற்ற தூய உள்ளத்தினராக அவர் இருந்திருக்கிறார். இச்சையற்றவனுக்குத்தானே இரும்பும் பொன்னாகும்! வள்ளலை நம்பி வழிபாடு செய்து அனைத்தையும் துறந்து இருந்ததால்தான் பொன் விளைவிக்கும் ஆற்றல் அவருக்கு வந்திருந்தது.

புடம்போட்டு பொன்செய்ததோடு அயம், வங்கம், தாமிரபஸ்பம், தங்கபஸ்பம் முதலிய அரிய மருந்துகளைச் செய்வதிலும் சித்திக்கப் பெற்றவராக அவர் விளங்கினார். குடந்தை மருத்துவர் பிச்சைப்பிள்ளை நமது சுவாமிகளிடம் பயின்று மருத்துவ முறைகளில் கைதேர்ந்தவராக விளங்கியிருந்தார்.

வள்ளல் பெருமான் சித்துக்களின் உண்மை விளங்காமல் பலரும் தத்துபித்தென்று உளறுகின்றனர். வரலாறு எழுதியவர்கள் பலரும் அதை நன்கு விளக்கினாரில்லை. நமது சுவாமிகள் அருமையாக பெருமான் தன் சான்று கொண்டே விளக்கியிருக்கிறார்.

மறைமலையடிகள் வரலாற்றில், அவர் மகன் மேட்டுக்குப்பத்திற்கு சென்று ஆய்வு செய்த பொழுது வள்ளற்பெருமான் கல்லறைதான் இருக்கிறது என்று யாரோ கூறினர் என்று எழுதியிருந்தார். அதுகண்டு நம் சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி வினவியபொழுது தமிழண்ணா சீனிசட்டையப்பர்க்கு நீண்டதொரு கடிதம் எழுதினார். பெருமான் நிலையை விளக்கினார். அது விளங்கிக் கொள்ளாத அடிகள் பெருமானின் சித்தியை ஐயுற்றதாலேயே நோயுற்று இறந்தார் என்று ஆற்றாமையோடு வெளிப்படுத்தினார்.

சுவாமிகளிடம் பற்பலர் சூழ்ந்து கொண்டு இருந்தனர். விளக்கம் கேட்டனர். கருத்துரை கேட்டு களித்தனர். ஆயினும் திரு.சீனிசட்டையப்பர்தான் முழுமையாக அவரிடமிருந்து செய்திகளைப் பெற்றவர். பல தடவை முறையாகப் பாடங்கேட்டவர், குறிப்புகள் எடுத்துக்கொண்டு கொண்டாடியவர். அருட்பாக்கடல் என்று உணர்ந்தவர். அவர் வழிகாட்டுதலிலேயே வழிபாடும் ஜீவகாருண்யமும் இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

இச்செய்தியை வடிவேல் பரதேசி தான் எழுதிய 'தமிழர்களின் சாகாக்கலை எங்கே சென்று கொண்டிருக்கிறது' என்ற நூலில் விளக்கியுள்ளார். கருணையே வடிவமாக விளங்கிய காந்தியடிகள் ஏன் சுடப்பட்டார் என்று சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. "கத்தியின்றி இரத்தமின்றி இந்திய விடுதலையை வாங்கித்தந்த காந்தியடிகள் கருணை உள்ளவர் என்று சொல்ல முடியாது! நவகாளியில் நடந்த இனக் கலவரங்களைக் காணச் சென்றவர் நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கண்டு என்ன செய்திருக்க வேண்டும்? நமது அடியார்கள் போல் நோயை நீக்கியிருக்க வேண்டும் அல்லது கடவுளிடம் பிரார்த்தனை செய்து அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்க வேண்டும். சுட்டுக் கொல்லச் சொன்னாரே! அது சரியா? அந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? பிறப்பு பெருமை உணராமலும் இரக்கமும் இல்லாமலும் சுட்டுக்கொல்ல சொல்லியதன் விளைவுதான் அவர் இறப்புக்கு உரிய குண்டாக வந்து நின்றது." என்று கலக்கத்தோடு தழுதழுத்த குரலில் சிதம்பர சுவாமிகள் விளக்கம் அளித்தார். எண்பது அகவை கடந்த நிலையிலும் அவர் தன் வேலைகளை அவரே செய்து கொண்டார். துணி துவைப்பது, நீர் கிணற்றில் இருந்து வாளியால் எடுத்து குளிப்பது, துவைத்த துணிகளை தான் வைத்திருக்கும் கயிறுகளைக் கட்டி அதில் காய வைப்பது முதலிய பணிகளை அவரே செய்து கொண்டார்.

பசி ஏற்படும் பொழுது சத்து மாவினை வெல்லத்தில் கலந்து வைத்துக்கொண்டு உண்பார். மாத்துண்டுகள் எப்பொழுதும் வைத்திருப்பார். உணவில் தூதுவளை, புளியாரை, கரிசாலை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். திருவருட்பாவைப் பிழையில்லாமல் பேச வேண்டும் என்பார். பிழையாகப் படிக்கக் கண்டால் பதறிபோவார். உடனே அவரே பாடத் தொடங்கிவிடுவார். தன்னை நம்பெருமான் ஆட்கொள்வார் என்று நம்பினார். அவர் இறந்து போகாமல் வள்ளல் காப்பாற்றுவார் என்று திடமாகச் சொன்னார். அனுபவ நிலைகள் பலவும் சித்தித்திருப்பதாகவும் சொன்னார். சித்திவளாக திருமாளிகையில் இருந்து கொண்டே,

என்சாமி எனதுதுரை என்னுரிமை நாயகனார்
இன்று வந்து யானிருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகையில் எனது
பேருடம்பில் கலந்து கொண்டு பிரியாமல் இருப்பார்.

என்று ஆண்டவரை வந்து கலந்துகொண்ட நம்பெருமான் தன்னையும் கலந்து கொள்வார் என்று சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார் சிதம்பர சுவாமிகள். வைகாசி 11 விழாக்காலத்தில் முதல் நாளிலிருந்து நல்வாழ்க்கைப் பயிற்சியை அவர் முன்னிலையில் வள்ளலார் இளைஞர் மன்றம் நடத்திக்கொண்டிருந்தது. அவ்வாண்டும் அப்பயிற்சியை அளித்து நிறைவு செய்து அன்பர்களிடம் விடைபெற்று சென்றார் சுவாமிகள். வடலூரிலிருந்து குறுக்கு வழியாக அவரைக் கொண்டுபோய் மேட்டுக்குப்பத்தில் விட்டு வந்தனர். வழக்கம் போல் மருந்து புடம் வைக்க நடராஜபிள்ளை சாவடிக்குச் சென்றவர் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உணவுண்டு படுத்திருக்கிறார். மீண்டும் எழவில்லை. 15-08-1975-ஆம் ஆண்டு ஆடி மாதம் கேட்டை விண்மீனில் நீங்காத துயில் கொண்டார். (குடையுடன் நிற்பவர் பிறையாறு சிதம்பரம் சுவாமிகள்)






ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம், வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், காரணப்பட்டு கந்தசாமி ஐயாவின் சீடரும், சன்மார்க்க வழிகாட்டியுமான "பிறையாறு சிதம்பர சுவாமிகள்" அவர்களின் நினைவிடத்தில் உள்ள தயா நிலையத்தின் புணரமைப்பு பணி நாளை 26 - 04 - 2021 - சித்திரை 13 காலை அன்று வள்ளல் பெருமானின் திருவருளால் சன்மார்க்க வழிப்பாட்டுடன் துவங்க உள்ளது. இப்பணி இனிதே நடைபெற்று நிறைவடைய, அன்பர்கள் தங்களின் பிரார்தனையையும், உதவிகளையும் வழங்கி சிதம்பர சுவாமிகளின் குருவருள் பெற அன்போடு வேண்டுகின்றோம்.


http://vallalarr.blogspot.com/2022/05/blog-post_68.html?m=0

http://vallalarr.blogspot.com/2022/05/blog-post_8.html?m=0
 
http://piraiyaaruswamigal.blogspot.com/ https://vadalursattaiyappar.blogspot.com/2018/11/blog-post_17.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.