01-07-2016
- சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த "புத்தம்" என்ற தலைப்பில்...
பௌத்த சமயம்
அறிவியல் பூர்வமானதா?
இவ்வினாவுக்கு விடை அளிக்குமுன் அறிவியல் என்னும் பொருள்படும் 'science' என்னும் ஆங்கிலச் சொல்லை விவரிப்போம். மேற்படி சொல் ஆங்கில அகராதியின்படி 'ஒரு முறைப்படுத்தப்படும் அறிவு; அவ்வறிவு பார்த்து, ஆய்ந்து அதன் உண்மைகளை இயற்கை நியதிகளுக்கு ஏற்ப விவரித்தல். அந்த அறிவின் கிளை. எப்பொருளையும் சரியான முறையில் படித்தறிந்து கொள்ளல்'.
ஒரு சில பௌத்தக் கோட்பாடுகள் இவற்றில் அடங்கா. ஆனால், பௌத்தப் போதனையின் மையமான நான்கு பேருண்மைகள் இவற்றில் நிச்சயமாக அடங்கும். முதல் பேருண்மையான துக்க அனுபவத்தை ஆய்ந்து, அளந்து அனுபவித்து விவரிக்கலாம். இரண்டாவது பேருண்மையான துக்க உற்பவம், அந்த உற்பவத்துக்குக் காரணமான பேராசை, அதுவந்த விதம் முதலியவற்றையும் அளந்து அனுபவித்து விவரிக்கலாம். அதனைச் சித்தாந்தக் கோட்பாடுகளாகவோ, புராணிகமுறையிலோ விவரிக்க முயலவில்லை. மூன்றாவது பேருண்மை துக்க நிவாரணம். துக்கத்தை ஒரு பராசக்தியாலோ அல்லது நம்பிக்கையாலோ நீக்கி விட முடியாது. துக்கம் தோன்றுவதற்கான காரணத்தை நீக்கினாலே போதும். இது வெளிப்படை யான உண்மை.
நான்காவது பேருண்மையான துக்க நிவாரண மார்க்கம். இதிலும் சித்தாந்தக் கோட்பாடுகள் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட வழிகளிலே நடந்தால் துக்கத்தை ஒழிக்கலாம். இந்த நடத்தையை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யலாம். பௌத்தம் மேன்மையான நிலைகளை அறிவியல் முறையில் விவரிக்கிறது. இயற்கை விதிகளுக்கேற்ப, துக்கம் எப்படி ஏற்படுகிறது, அதனை எப்படி ஒழிப்பது, போன்றவற்றை விவரிக்கின்றது. இவையனைத்தும் அறிவியல் பூர்வமானவையே! மேலும், புத்த பெருமான் நம்மை எதையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமென்கிறார். கேள்வி கேட்டு, ஆராய்ந்து, விசாரித்து, நமது சொந்த அனுபவத்தைக் கொண்டே ஒரு முடிவெடுக்கச் சொல்கிறார். புத்தபெருமான் கூறுவதாவது:
"ஒரு பழக்கத்தைப் பார்ப்பதாலோ, வழக்கமாக நடந்து வருகிறது என்பதாலோ, வதந்திகளாலோ, புனிதநூல்களில் குறிப்பிட்டிருக்கிறது என்பதாலோ, செவிவழிக் கதைகளாலோ, தர்க்க வாதங்களாலோ, ஓரஞ்சேர்ந்த வாதத்தாலோ, அல்லது மற்றவர் பார்த்துச் சொன்னார் என்பதற்காகவோ, அதைக் கூறியவர் நமது ஆசிரியர் என்பதாலோ பின்பற்றாமல், உனக்கு அது நன்மை பயக்கும் என்று தெரிந்து, மற்றவர்களால் குறைகூற முடியாதென்பதையறிந்து, அறிஞர்களால், அது போற்றக்கூடியது, அதை அனுபவிக்கும் போது அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது தெரிந்தால், அதனைப் பின்பற்று!" என்கிறார்.
இதிலிருந்து பௌத்தம் அறிவியலையே அடிப்படையாகக் கொண்டது இல்லையென்றாலும், பௌத்தச் சமயத்துக்குப் பலமான அறிவியல் தாக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். மற்றச் சமயங்களை விடப் பௌத்தத்தில் அறிவியல் தாக்கம் அதிகமிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பௌத்தம் பற்றிக் கூறியதாவது:
"எதிர்காலச் சமயம் அண்டங்களுக்கெல்லாம் பொதுவான ஒரு சமயமாக இருக்கும். எது மனித அறிவுக்கு அப்பாற்பட்டதை ஒழித்து, மறுக்க முடியாத சித்தாத்தங்களை ஏற்று, கடவுள், மதம் பற்றிய ஆராய்ச்சியைச் சரிவரச் செய்து, இயற்கை நியதிகளையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கி, எல்லாவற்றையும் ஆய்ந்து அனுபவித்து, இயற்கை, சமயம் இரண்டையும் ஒருங்கிணைத்து, அர்த்தமுள்ள ஒற்றுமையை உண்டாக்குகிறதோ அதுவே, அப்படிப்பட்ட சமயமே, எதிர்காலத்துக்கேற்ற சமயமாகும். இப்படிப்பட்ட விளக்கத்துக்குப் பௌத்த சமயமே பதிலளிக்கிறது. நவீன கால அறிவியல் தேவைக்கு அப்படி ஒத்துவரும் சமயம் பௌத்த சமயமேயாம்."
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.