Wednesday, July 27, 2016

விளக்கமும் பொருளும்



01-07-2016 - சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த     கெளரவ ஆசிரியரின் திருமுகம்:

விளக்கமும் பொருளும்

 

கற்பபேத மென்பது கடவுள் இடபவாகனா ரூபராய் உலகத்திலெழுந்தருளிக் காட்சி கொடுத்தருளுங் காலம். இடப மென்பதற்குப் பொருள் தர்மசுவரூபம். தர்மம் என்பது காருண்யம், தயவு, அருள். ஆதலால், அருள் வடிவமான ஆன்மாலய உலகமான தேகத்தின் அனுபவ ஞானம் தோன்றுதல்.

 

                                                                                 சிதம்பரம் இராமலிங்கம் 



இடபாந்திக மூர்த்தி




சதுர்யுகங்கள் இரண்டாயிரம் வருடமும் பிரமனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது பிரமனுக்கு ஆயுட்காலமாகும். பிரமனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது கணக்கு. அழியும் ஊழி காலத்தில் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான்.

 

இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டிவருமே என்ன செய்வது? சிவபெருமானிடம் சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. தர்மதேவதை இடபமாக (எருது/காளை மாடு) மாறி சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது. கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் கை வைத்து தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 

தருமத்தை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய். எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார். தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின் இடப வாகன தரிசன ரகசியம் இதுவேயாகும்.

 

மயிலாடுதுறையருகே உள்ள திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள மாசிலாமணிஸ்வரர் கோயிலில் நாம் இடபாந்திக மூர்த்தியை கண்டு வணங்கலாம். நிற்க.

 

அன்பர்களே! புராணக்கதைகளின்படி கோயில்கள் ஆங்காங்கு நமது முன்னோர்களால் எழுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு எழுப்பட்டுள்ள கோயில்களுக்கு நாம் சென்றால், அப்புராணத்தின் விளக்கங்களை சிலை வடிவில் அமைத்து அதனையே தெய்வம் என்று வழிபாட்டில் கொண்டுவந்திருப்பார்கள். நாமும் அவ்விளக்கங்களே உண்மை என்று நம்பி அதனை கடவுளாய் எண்ணி வழிபடுவோம். புராணக்கதைகளின் விளக்கங்களை அறிந்த நாம் அதன் பொருளை அறிந்தோமில்லை.

 

இதோ... நமது வள்ளற்பெருமான் அந்த இடப வாகன மூர்த்திக்கான பொருளை வழங்கியுள்ளதை படித்து அதனை நமது அனுபவத்தில் கொண்டுவாருங்கள்.

 

"கற்பபேத மென்பது கடவுள் இடபவாகனா ரூபராய் உலகத்திலெழுந்தருளிக் காட்சி கொடுத்தருளுங் காலம்."

 

'கற்பபேதம்' என்பதின் விளக்கம் உலக அழிவாகும். ஆனால் 'கற்பபேதம்' என்பதன் பொருள் நம்மிடையே உள்ள மல அழிவைக்குறிக்கும்.

 

'கடவுள்' என்பதின் விளக்கம் சிவபெருமான். ஆனால் 'கடவுள்' என்பதன் பொருள் நம்மிடையே எழுகின்ற அனுபவ ஞானத்தை குறிக்கும்.

 

'இடப வாகனம்' என்பதின் விளக்கம் தர்மதேவதை. ஆனால் 'இடப வாகனம்' என்பதின் பொருள் தயவு குணத்தைக் குறிக்கும்.

 

'உலகம்' என்பதின் விளக்கம் புற உலகம். ஆனால் 'உலகம்' என்பதின் பொருள் நமது உடலினைக் குறிக்கும். அருள் வடிவமானதாகவும் நமது ஆன்மா குடி கொண்டிருக்கும் உலகமாகவும் இருப்பது நமது உடல் ஆகும்.

 

'எழுந்தருளி காட்சி கொடுத்தல்' என்பதின் விளக்கம் கடவுள் புறவுலகில் காட்சி கொடுத்தல் என்பதாகும். ஆனால் 'எழுந்தருளி காட்சி கொடுத்தல்' என்பதின் பொருள் ஞானம் தோன்றுதல் என்பதைக் குறிக்கும்.

 

இடப வாகனத்தில் கடவுள் காட்சி கொடுப்பது என்பதன் பொருள்: ஆன்மா வசிக்கக்கூடிய தயவே வடிவான நமது உடலில் அனுபவ ஞானம் தோன்றுதல்.

அனுபவ ஞானம் என்பது ஆன்ம அறிவினைக்குறிக்கும்.

 

எனவே நாம் புராணக்கதைகளின் விளக்கமாக அமைந்திருக்கும் புற உலக ஜோடனைகளை முற்றிலும் தவிர்த்து அதன் பொருளை உணர்ந்து நமக்குள்ளே அதன் தத்துவத்தை உணர்வதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.

 

ஏற்கனவே இங்கு புழக்கத்தில் இருக்கும் புராண விளக்கத்திற்கு பொருள் சொல்லவே வள்ளற்பெருமான் முயன்றுள்ளார். அனுபவ ஞானம் எழுவதற்கு புராணக்கதைகளோ அதன் விளக்கமாக அமைந்திருக்கும் கோயில்களோ முற்றிலும் தேவையில்லை. நாம் அருள் வடிவமாக மாற தயவு வேண்டும் என்பதை சுத்த சன்மார்க்கிகள் ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடிப்பதின் மூலம் வெகு சீக்கிரம் அந்த ஆன்ம அறிவினை அடைய முடியும். ஆகவே நாம் புராணக்கதைகளையும் அதன் விளக்கமாக அமைந்துள்ள கோயில்களையும் பற்றற விடுவோம். சுத்த சன்மார்க்கிகளாக அருள் உடம்பினை பெறுவோம்.   

 

          சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்…


                                                                                          தி.ம.இராமலிங்கம் 




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.