Wednesday, July 27, 2016

கிறுஸ்து - வெறுப்பவனே சீடன்



01-07-2016 - சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த "கிறுஸ்து" என்ற தலைப்பில்...

வெறுப்பவனே சீடன்!

"தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான்."

உன்னுடைய பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் வெறுத்துவிட்டு யார் ஒருவர் எனது அன்பு ஒன்றினையே ஏற்கின்றனரோ அவரே எனது சீடர் என்று இயேசு கூறுகிறார்.

"பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள். (யோவான் 15:9)"

"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (யோவான் 15:12)"

மேற்காணும் இரண்டு வசனங்களிலும் நம்மையெல்லாம் பிறரிடம் அன்பாய் இருக்கத்தான் சொல்கிறார் இயேசு பெருமான். ஆனால் மேற்காணும் முதல் வசனத்தில் மட்டும் ஏன் பிறரை வெறுக்க சொல்கிறார்?

ஏனெனில் சீடன் என்கிற தகுதி நமக்கு வேண்டுமெனில் நாம் பாச பந்தங்களை புறந்தள்ள வேண்டும் என்பதே காரணம். பிறரிடம் அன்பாய் இருப்பது வேறு. பாச பந்தத்துடன் இருப்பது வேறு. அன்பு நம்மை உலக அளவில் யோசிக்க வைக்கும். பாச பந்தம் நம்மை ஒரு வீட்டுக்குள் யோசிக்க வைக்கும். அன்பு – பாச பந்தத்தைவிட கோடிப் பங்கு பெரிது. இப்படிப்பட்ட நீசமான பந்த பாசத்தை விடுத்தலையே வெறுத்தல் என்கிறார் இயேசு பெருமான்.

அவர் சொல்லை தலைமேல் கொண்டதால் தான் அவர்களுடைய சீடர்கள் உலக அளவில் சென்று இயேசு என்கிற அன்பினை விதைத்தார்கள். சீடர்களின் அன்பெல்லாம் இயேசு என்கிற ஒருவரிடமே குவிந்திருந்தது. எனவே சீடர்கள் இவ்வுலகில் எங்கு செல்லினும் அங்கு அவர்களின் குடும்பத்தை விதைக்காமல் இயேசுவினை விதைத்தார்கள்.

இதனையே வள்ளற்பெருமான் தமது அனைத்து உறவுகளையும் வெறுக்காமல் மிகத் தந்திரமாக என்னுடைய எல்லா உறவுகளும் நீ தான் என்று இறைவனையே அனைத்து உறவுமாக பற்றிக்கொள்கிறார்.

"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்..." (3906)

"தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
          சபையிலே தனிநடம் புரியும்
 தூயநின் பாதத் துணையெனப் பிடித்தேன்..." (3750)

தாயே, தந்தையே, துணையே, நட்பே, குருவே என்றெல்லாம் தமது திரு அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் இறைவனை உறவு பெயர் வைத்து அழைப்பார்.

இறுதியாக தமது பேருபதேசத்தில், "எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இஃது ஆண்டவர் கட்டளை." என்று தாம் அடைந்த சித்தி வளாகப் பெருமையினை எடுத்துரைப்பார். பந்த பாச உறவுகளால் அடையும் நன்மையினைவிட கோடிப் பங்கு நன்மை கொடுக்கும் இடம், நான் இருக்கும் இவ்விடம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கின்றார்.

"ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
 நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
 சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
 கென்மார்க்க மும்ஒன்றா மே." (5527)

என்கிற திருப்பாடலின்படி நாம் இறைவனுக்கு அடிமை ஆகவேண்டுமெனில், அவனைத்தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். இயேசு பெருமான் சொல்வதைப் போல பந்த பாசங்களை வெறுத்துவிட்டு உலகெங்கிலும் நமது அன்பினை பெருகச்செய்ய வேண்டும்.  




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.