01-07-2016 - சன்மார்க்க
விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த "சுத்த சன்மார்க்க நீதி" என்ற தலைப்பில்...
அசலும் நகலும்
நாம்
தற்போது 1940-ஆம் ஆண்டில் மதுரையில் இருக்கிறோம். அங்கு பொன்னரங்க திறப்புவிழாவில்
'மெய்வழி ஜனக ஜனா அனந்தர்' அவர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறார்...
மெய்: நீங்கள் எல்லோரும் இங்கு ஏன் கூடியிருக்கிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
மக்கள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்கின்றனர்.
மெய்: நான் சொல்லுகிறேன் கேளுங்கள். பேரின்பம்
அடையவே இங்கே வந்திருக்கிறீர்கள். அது சரி, பேரின்பம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?
மக்கள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்கின்றனர்.
மெய்: சரி, பேரின்பம் தெரியவில்லை. அது போகட்டும்.
உங்களுக்கு வெகு அனுபவமான சிற்றின்பத்தின் ஆரம்பம் என்ன? அதன் முடிவு என்ன? சொல்லுங்கள்
பார்க்கலாம்.
மக்கள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்கின்றனர்.
மெய்: அதுவும் தெரியவில்லையா? அதையும் நான்தான்
சொல்ல வேண்டுமா? சொல்கிறேன் கேளுங்கள். ஒரு ஊரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அது பிறந்ததுமே
தாயின் பாலை ருசித்து சப்புக்கொட்டிக் குடிக்க ஆரம்பிக்கிறது. அந்த காலத்திலிருந்தே
அது சிற்றின்பத்தை நுகர ஆரம்பிக்கிறது. அதுதான் சிற்றின்பத்தின் ஆரம்பம். அதற்கு பின்
அது அனுபவிக்கும் எல்லா இன்ப உணர்ச்சிகளும் சிற்றின்பமே. பெண் புஷ்பவதியாகி திருமணமான
இரவு தனது கணவனை சந்திக்கிறாள். என்றும் காணாத ஒரு இன்ப நிலையை அடைகிறாள். அதுவே சிற்றின்பத்தின்
முடிவு. அந்த இரவுதான் சிற்றின்பத்தின் உச்ச கட்டம். அதற்கு மேல் பட்ட இன்பம் மனித
வர்க்கத்திற்கு தெரியாது. நான் தரும் பேரின்பம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த இன்பத்தை தேடியே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.
நம் நாட்டில் படித்து பட்டம் பெற்ற பெரியோர்கள்
என்று பாராட்டப்படுபவர்கள் பல இருக்கிறார்கள். அவர்களை ஞானிகள் என்று எண்ணி வணங்கி,
பாத பூஜை செய்து அவரிடம் பாடம் கேட்பவர்களும் உண்டு. அவர் ஏதாவது ஒரு செய்யுளை படித்து
அதற்கு பொருள் தருகிறேன் என்று சொல்வார். ஆனால் பொருள் ஒன்றும் கொடுக்கமாட்டார். அதைப்பற்றி
விளக்க உரைதான் கொடுப்பார். நமக்கு இது விளங்கவில்லை அல்லவா? இதோ எனது கழுத்தில் உள்ள
கஷாயத்தை கழற்றி எனது கையில் பிடித்துக்கொண்டேன். இப்போது இந்த கஷாயத்தை பற்றி விளக்கம்
சொல்கிறேன் கேளுங்கள். இது ஒரு சதுரமான துணி. இதன் நிறம் ஆரஞ்சு, இதனை குறுக்கு வாட்டில்
மடித்தால் முக்கோணமாகும். அதனை கழுத்தை சுற்றி முடிச்சு போட்டால் கஷாயமாகிறது. இது
இதன் விளக்கம். ஆனால் நான் அதன் பொருளைத் தரவில்லை.
இப்போது அருகிலிருந்த பச்சையப்பரை மெய் அருகில்
அழைத்தார். இதோ நான் இதன் பொருளைத் தருகிறேன் பாருங்கள் என்று சொல்லி, அந்த கஷாயத்தை
எதிரில் உள்ள பச்சையப்பரின் கையில் தினித்தார். உங்களுக்கு அந்த பொருளைத் தந்துவிட்டேன்.
இனி நீங்களே அதைப்பற்றி விமர்சிக்கலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.
இப்படி யாராவது வேதபொருளை உங்கள் கையில்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் கொடுத்திருக்கிறார்களா? வள்ளலாரை தவிர. என்று பேசி முடித்தார்.
இந்த விளக்கம் எங்குமே இதுவரை கேட்காத புது சொல் விளக்கமாக அச்சபையினருக்கு தோன்றியது.
மெய்: நீ எதுவரை படித்திருக்கிறாய்? என்று
பச்சையப்பரை நோக்கி கேட்டார். நான் B.Sc., வரையில் படித்திருக்கிறேன் என்றார் பச்சையப்பர்.
மெய்: அப்போ ரொம்ப ரொம்ப பெரிய படிப்பெல்லாம்
படிச்சிருக்கே. உனக்கு ரொம்ப தெரிந்திருக்கும். உனக்கு இது தெரியாமல் இருக்காது. கட்டாயம்
தெரியும், சரியான பதிலை சொல்வாய்! (என்று சொல்லிக்கொண்டே தரையில் 'அ' என்று பெரிதாக
எழுதினார்.)இது என்ன?
பச்சை: 'அ' என்ற எழுத்து.
மெய்: இது என்ன எழுத்து? உயிர் எழுத்தா?
மெய் எழுத்தா?
பச்சை: அது உயிர் எழுத்து.
மெய்: சரியாகச் சொன்னாய். உயிர் எழுத்துதான்.
இதற்கு உயிர் இருக்கிறதா என்று பார்ப்போமா? (தனது கையில் இருந்த குச்சியால் அந்த எழுத்தை
ஓங்கி அடித்தார்)என்ன... உயிர் எழுத்து என்று சொன்னாய். நான் அதனை அடித்தேன். உசும்பவில்லையே.
அதற்கு உயிர் இருந்தால் உசும்பி இருக்குமே! நெளிந்திருக்குமே! உயிருள்ள பாம்பை அடித்தால்
சும்மா இருக்குமா? நெளியுமே. இதனை உயிரெழுத்து என்று சொன்னாய் - ஆனால் உயிர் இருப்பதற்கு
அடையாளமாகிய அசைதல் இல்லையே! (என்று சிரித்தார்)
பச்சையப்பருக்கு தூக்கி வாரி போட்டது. உயிர்
எழுத்திற்கு உயிர் இருக்க வேண்டுமே என்ற எண்ணமே இதுவரை அவருக்கு எழவில்லை.
மெய்: இது உயிரெழுத்தின் வடிவம். ஒரு நகல்.
அசலான உயிரெழுத்து துடிப்புடன் நம் உடம்பினுள் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த உயிரெழுத்தை
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் காணவேண்டும். அதனை காட்டுவிக்கும் ஒரு அரிய செயலுக்காகவே
வடலூர் ஞான சபை போன்று இந்த சபையும் தோன்றியுள்ளது.
அன்பர்களே! 'அ' என்ற உயிரெழுத்து போன்றதே
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும். அச்சிலை நடனமாடியோ அசைவுற்றோ நாம் காண்பதில்லை.
அச்சிலையை நாம் எது செய்யினும் அதாவது அலங்கரித்தாலும் அடித்தாலும் எந்த உசும்புதலும்
இருக்கப்போவதில்லை. ஏனெனில் அது ஒரு சடம். அது ஒரு நகல்.
அசலான நடராஜர் நமது சிரத்தில் உள்ள ஆன்ம
பிரகாசத்திற்குள் ஒரு பிரகாசமாக இருந்து அசைவுற்றுக்கொண்டே உள்ளது. அந்த அசைவை பாக்கவே
இவ்வுலகில் ஞானசபையை தோற்றுவித்தார் வள்ளலார். ஞானசபை ஜோதியை காண்பவர்கள் அந்த அசைவையும்
காண்பார்கள். அந்த ஜோதியின் அசைவுதான் நடனம். அதுதான் இறைவனின் கூத்து. உண்மையான கூத்தனை
பார்க்க வேண்டுமாகில் நாம் செல்ல வேண்டியது சிதம்பரம் அல்ல, வடலூர் என்கிற உத்தரஞான
சிதம்பரம்தான். தூக்கிய திருவடி, ஆடிய பாதம், குஞ்சிதபாதம், நடராஜர், கூத்தன், திருச்சிற்றம்பலம்,
சிற்சபை, பொற்சபை, ஆகாயம் என்றெல்லாம் வள்ளலார் புகழ்வது அந்த சிதம்பர நகலை அல்ல. உத்தரஞான
சிதம்பர சத்தியத்தைத்தான் புகழ்ந்துரைக்கிறார். இவ்வுலகில் பிறந்த மானிடர்கள் அனைவரும்
தங்கள் வாழ்நாளில் இறைவனின் அசைவினை தங்களுக்குள்ளே பார்த்துவிட வேண்டும் என்பதில்
நம்மை விட பேரவா கொண்டுள்ளார் நமது வள்ளலார். அவ்வாறு நமது ஊழ்வினையால் பார்க்க முடியாமல்
போனால், உத்தரஞான சிதம்பரம் வந்து புற உலகிலாவது அந்த இறைவனின் அசைவினை கண்டு களியுங்கள்
என்ற நல் நோக்கத்தோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கட்டளைக்கு இணங்க தோற்றுவிக்கப்பட்டது
தான் சத்திய ஞானசபை.
உத்தரஞான சிதம்பரம் வாருங்கள், உயிரான அசைவினைப்
பாருங்கள். சுத்த சன்மார்க்க நீதி பேணுங்கள், சுத்த சத்தியன் ஆகுங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.