Wednesday, July 27, 2016

கொலை என்னும் கொடுந்தொழில்01-07-2016 - சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த

கொலை என்னும் கொடுந்தொழில்

கொலையும் புலையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் உடையது. புலையர்கள் யாவரும் கொலையர்களே ஆவர். நான் கொலை செய்யவில்லை. யாரோ ஒருவர் கொலை செய்த விலங்கினை அல்லது பறவையினை அல்லது நீந்துவனவற்றைத்தான் நான் உண்டேன் என்று சொல்வது அறியாமை. இவ்வாறு புலைக்காக கொலை செய்யும் பழக்கந்தான் இச்சமுதாயத்தில் மனிதர்களான நம்மை நாமே கொலை செய்யும் துணிச்சலைத் தருகின்றது.

"சீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன் தேகத்தில் சீவகாருண்யம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கப்படி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும் சிலர் காக்கை, கழுகு முதலிய பட்சி சண்டாளங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய துர்ச் செந்துக்களாகவும், சிலர் முதலை, சுறா முதலிய கடின செந்துக்களாகவும், சிலர் எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்று அறிய வேண்டும்."

"கொலை என்பது... தேகத்தின் அகத்தும் புறத்து முள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலகஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவி த்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூத காரியக் கொடுந்தொழில்."

என்று சீவகாருண்ய ஒழுக்கத்தில் நமது வள்ளற்பெருமான் நம் போன்ற உலகியர்களுக்கு உண்மை உரைத்திருப்பார். பசி நீக்குதலையும், கொலை நீக்குதலையும் சீவகாருண்யத்தின் முக்கியப் பணியாக கூறுவார் வள்ளலார். பசி நீக்குதலை ஒருவரோ பலரோ சேர்ந்து ஒரு சமுதயாத்தில் தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் கொலை நீக்குதலை ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து அனுபவச்செயலாக இச்சமுதாயத்தில் தொடர்ந்து செய்ய முடியாது. உபதேசந்தான் செய்யலாமே தவிர கொலை நடக்கும் இடங்களுக்குச் சென்று தடுத்துவிட முடியாது. அது சட்டப்படி தவறு என்றாகிறது. உணவிற்காக பிற உயிர்களை கொலை செய்வதை சட்டம் தடுக்கவில்லை.

ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்தல் என்பதை சட்டம் தடுக்கிறது. இருந்தும் கொலை நடந்தேறிக்கொண்டேதான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீவகாருண்ய ஒழுக்கம் மக்களிடையே இல்லாமைதான். இப்பொழுது தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இங்குள்ள நகரகங்களில் முக்கிய வீதிகளில் எல்லாம் ஆடு, கோழி, மீன் போன்ற விலங்குகளையும், பறவைகளையும், நீந்துவனங்களையும் கொலை செய்து விற்கிறார்கள். வீதிகளில் செல்லும் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரையிலும் அந்த ஆட்டினை துடிக்க துடிக்க, அபயக்குரல் ஓசையுடன், இரத்தம் சிந்த சிந்த வெட்டுவதையும் அதன் தோலினை உரிப்பதையும் அதன் புலையை தொங்கவிடுதலையும் காண்கிறார்கள். இப்படி ஒரு உயிர் துடிப்பதையும் அது இரத்தம் சிந்துவதையும் தம் வீதிகளில் அடிக்கடி பார்க்கும் மக்களின் மனத்தில் எப்படி இரக்கம் வெளிப்படும்?

மனிதக் கொலைகள் நடக்கும் போது கூட, மக்களுக்கு தாம் பார்த்து பழகிய அந்த ஆட்டு ஞாபகந்தான் வரும். ஐயோ... நம்மைப் போன்ற ஒரு உயிர் கொலையுறுகிறதே! என்ற துடிப்பு வராது. அதைத்தான் இன்றைய உலக சமூகம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றது.

உயிர்க்கொலைகள் நடவாமல் இருக்க வள்ளலாரின் சீவகாருண்ய ஒழுக்கத்தை பள்ளி மாணவர்கள் முதல் கொண்டு கல்லூரி மாணவர்கள் வரை மிக விரிவான முறையில் அதனை பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும். ஒரு உயிரை கொலைசெய்வது என்பது கொடுமையான தொழில் என்பதை குழந்தைகள் வளரும் பொழுதிலிருந்து வளர்ந்துவிட்ட பருவம் வரை அறிவுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக தமிழகம் முழுதும் தெரு ஓரங்களில் நடத்தப்படும் கொலை செய்யும் கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கென அரசு ஒதுக்கிய மறைவான இடங்களில் மட்டுமே அப்படிப்பட்ட கொலை செய்யும் கடைகள் இயங்க வேண்டும். இரத்தம் குடிக்கும் விலங்குகளாக மனிதர்களாகிய நாம் இருக்க வேண்டுமா? என்பதை நமக்கு நாமே விசாரனை செய்ய முன்வரவேண்டும். புலை உண்பதை விடுவோம். கொலை செய்வதை தவிர்ப்போம்.

சென்ற ஜூன் மாதம் மட்டும் நமது தமிழகத்தில் எண்ணற்ற மனித கொலைகள் நடந்தேறி உள்ளதை நினைக்கும் போது, மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அதற்காக வெட்கப்பட வேண்டும்.

நகை பறித்த கொள்ளையனை பிடிக்கச்சென்ற தலைமைக் காவலர் ஓசூரில் அதே கொள்ளையனால் கொலை செய்யப்பட்டார். அதே நிகழ்வில் ஒரு கொள்ளையனும் இறந்தான். கொள்ளையர்களிடம் கத்தி போன்ற ஆயுதம் இருக்குமே, நாம் எந்த ஆயுதமும் இன்றி அவர்களை பிடிக்கச் செல்கிறோமே! என்ற தற்காப்பு எண்ணம் கூட இல்லாமல் காவலர்கள் பணிபுரிவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. காவலர்களுக்கு பயிற்சி கொடுத்ததில் தவறா? அல்லது பணி செய்வதில் அறியாமையா? அலட்சியமா? தாமே சென்று ஆபத்தில் சிக்கிக்கொண்ட அந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து பத்து கோடி ரூபாய் கொடுத்திருக்கலாம். ஒரு கோடி என்பது மிகவும் குறைவு.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சின்னராசு. இவர் தனது மனைவி இறந்துவிடவே இரண்டாவதாக சந்தன வீனா என்பவரை திருமணம் செய்கிறார். சந்தன வீனாவிற்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளன. அதில் மூத்த பெண்ணையும் நானே திருமணம் செய்துகொள்கிறேன் என்று சின்னராசு விருப்பம் தெரிவிக்க, குடும்பத்தில் எழுந்தது சர்ச்சை. அதற்கு சந்தன வீனா மறுப்பு தெரிவிக்க தனது மனைவி உட்பட அவர்களது மூன்று பெண் பிள்ளைகளையும் கொலை செய்து அப்பிணங்களை நிர்வாணமாக்கி நான்கு நாட்களாக மோசம் செய்துள்ளான் சின்னராசு. இப்படிப்பட்ட காமக்கொடூரனை நாம் என்ன செய்வது?

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த இருபது வயதான பட்டதாரி பெண் வினுப்ரியா. இவரது படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளான் ஒருவன். இது அவள் குடும்பத்திற்கு தெரியவர, உடனே சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர் அக்குடும்பத்தார். ஆனால் அந்த எஸ்.பி. அவர்கள் அப்புகாரை ஏற்காமல் அதனை சங்ககிரி டி.எஸ்.பி. யிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அவரிடம் சென்றால், அவர் மகுடஞ்சாவடி ஆய்வாளரிடம் அப்புகாரை கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். அவரிடம் சென்றால், அவர் சேலம் சைபர் க்ரைமில் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். அங்குச் சென்றால், இப்படத்தினை உடனடியாக நீக்கமுடியாது 15 நாள்வரை ஆகும் என்று பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் இரண்டாயிரம் லஞ்சமும் ஒரு செல்போனும் வாங்கிக்கொண்டு அனுப்பி இருக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னதமான சட்ட நடைமுறைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட வினுப்ரியா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எஸ்.பி. யிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்தால் அதனைப் பெற்று அவரே அல்லவா சம்பந்தப்பட்ட துறைக்கு அப்புகாரை விசாரனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேல் அதிகாரி சரியில்லை என்று சொன்னால் அவருக்கு கீழ் பணியுரியும் யாவரும் அவ்வாறே தங்களது பொறுப்பினை தட்டி கழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக செயல்பட்டுள்ளனர். பெற்றோர்களும் பொதுமக்களும் கொடுத்த அழுத்தத்தினால் எப்படியோ மூன்றே நாட்களில் அந்த ஆபாச புகைப்படத்தை முகநூலிலிருந்து நீக்கியுள்ளனர். இதனை முன்னரே செய்திருக்க வேண்டியதுதானே! பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இலஞ்சமாக கொடுக்க வேண்டும் அல்லது போராட்டம் நடத்த வேண்டும் அல்லது பாதிக்கப்பட்டவர் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும், அதன் பிறகு வேறு வழியில்லாமல் தங்கள் கடமையினை செய்ய முற்படுகிறது அரசு இயந்திரம். என்ன ஒரு மிக மோசமான மக்களாட்சியில் நாம் வாழ்கிறோம் பாருங்கள்! முகநூலில் அப்படத்தை நீக்கவே உயிரை விட்டு நாம் இவ்வளவு போராட்டம் நடத்தவேண்டியிருக்கிறது. 

ஒரு வழியாக குற்றவாளி சுரேஷ் என்பவனை காவல் துறை கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டது. இலஞ்சம் வாங்கிய காவலரையும் பணியிடை நீக்கம் செய்துவிட்டனர். சம்பந்தப்பட்ட எஸ்.பி. அவர்களும் அக்குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இவையெல்லாம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் இந்த நடைமுறைகள் காவல் துறையில் இயல்பாக நடக்க வேண்டும். அவர்கள் முறையாக பணி செய்ய அரசின் ஊதியம் அல்லாது வேறு ஏதாவது ஒரு உந்துதல் தேவைப்படுவதுதான் வேதனையளிக்கிறது.  மேலும் முகநூல் மோகத்தால் பல இளைய தலைமுறையினர் இப்படிப்பட்ட இன்னலுக்கு ஆளாவதால், அந்த முகநூலின் சர்வர் இந்தியாவில் இருந்தும் இயங்கும்படி மத்திய அரசு சட்டம் இயற்றி அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வழிவகை செய்யவேண்டும். இச்சட்டத்திற்கு அமெரிக்க முகநூல் மறுத்தால், இந்தியாவில் இந்த முகநூலுக்கு தடை விதிக்கவும் இந்திய அரசு தயங்கக்கூடாது. மக்களின் மானம், உயிரைவிட முகநூல் விளையாட்டு ஒன்றும் பெரிதல்ல. 

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதி என்கிற 24 வயதுடைய பெண். பரனூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணி புரிந்து வந்தார். பணிக்கு செல்ல நுங்கம்பாக்கம் இரயில்வே நிலையத்திற்கு வந்திருந்தபோது அங்கு மர்ம நபர் ஒருவரால் மிகக்கொடூரமாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கான காரணம் என்ன? கொலைகாரன் யார்? என்றெல்லாம் இதுவரை எந்தத் தகவலும் அதிகார பூர்வமாக தெரியவில்லை. கொலை நடந்த இடமோ பொதுமக்கள் பலர் கூடுகின்ற இரயில்வே நிலையம். அங்கே பலரது முன்னிலையில் அக்கொடூரன் அக்கொடியச் செயலை செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடியிருக்கிறான். ஆனால் அந்தக்கொலையினை பொதுமக்களில் யாரும் தடுக்கவில்லை. அந்த கொலையாளியை யாரும் படம் பிடிக்கக்கூட இல்லை. மேலும் அந்த இரயில்வே நிலையத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. அதனால் அக்கொலைகாரன் இதுவரை காவல்துறையால் தேடப்பட்டு வருகிறான். இக்கொலைக்காக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அரசு நிர்வாகத்தை கடிந்துக்கொண்டுள்ளது. நீதித்துறையின் இந்த செயல் நமக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. பட்டப்பகலில் பொது இடத்தில் ஒரு இளம் பெண் கொலையுறுகிறாள். அதனைக் கண்டு எனக்கும் அந்தக்கொலைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோல நமது அரசு நடந்துக்கொள்கிறது. முதலமைச்சர் முதற்கொண்டு அத்தனை அமைச்சர்களும் மக்கள் நலனுக்காக இருக்கிறார்கள். காவல்துறை முழுதும் மக்கள் பாதுகாப்பிற்காக செயல்படுகின்றது. 

ஆனால் நுங்கம்பாக்கம் இரயில்வே நிலையத்தில் இரண்டு மனிநேரமாக கேட்பார் அற்று கொலையுண்ட அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளாள். கொலையாளியோ நிதானமாக ஓடியும் நடந்தும் தப்பியுள்ளான். அரசினை நம்பித்தானே பொதுமக்கள் வெளியில் நடமாடுகிறார்கள். வெளியில் செல்லும் பெண்கள் வீடு திரும்புவது நிச்சயமில்லை என்ற போக்கு தொடரும் சூழ்நிலையினை அரசு உண்டாக்கி வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட போக்கினை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்க வேண்டும். மாநகர மற்றும் நகர வீதிகளில் காவலுக்கு நிற்கும் காவல் துறையினர் அனைவருக்கும் கைத்துப்பாக்கிகளை வழங்க வேண்டும்.  பெண்களும் தங்களுடன் எப்போதும் மிளகாய் ஸ்பிரேயரை தற்காப்பிற்காக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் என்னவெல்லாம் தற்பாதுகாப்பு இருக்கிறதோ அதனை பெண்கள் நடைமுறையில் கைகொள்ள வேண்டும்.    

இவ்வாறு நாட்டுப்பற்று என்ற காரணத்திற்காக இந்த ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீரில் சில இந்திய வீரர்களும் பாகிஸ்தானிய வீரர்களும் கொலையுண்டனர். உலகளவில் தீவிரவாதத்தாலும் துருக்கி விமான நிலையத்தில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலிலும் இதே மாதத்தில் கொலையுண்ட ஆத்மாக்கள் எண்ணற்றவை. இப்படிப்பட்ட கொலைகளுக்கு எல்லாம் காரணம் இவ்வுலகில் சீவகாருண்யம் இல்லாமையே. இதனால் தீய ஒழுக்கங்களே மிகுதியாக நடந்தேறுகின்றன. நாம் புலால் உண்பதை நிறுத்தினால்தான் கொலை என்னும் கொடுந்தொழில் இவ்வுலகைவிட்டு நீங்கும். இரக்கத்தோடு வாழ்வோம். பிற உயிர்களிடத்து அன்போடு இருப்போம்.

நம்முடன் பிறந்து நமது சமுதாயத்தில் வாழ்ந்து நம் கண்ணெதிரே கொலை செய்யப்பட்டு அநீதியாக இறந்த தலைமைக் காவலர் திரு.முனுசாமி, செல்வி.வினுப்ரியா, செல்வி.சுவாதி போன்றோர்களின் ஆன்மாக்கள் அமைதியடைய சன்மார்க்க விவேக விருத்தி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனை வேண்டுகிறது. 

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.