01-07-2016 - சன்மார்க்க விவேக
விருத்தி - மின்னிதழில் வெளிவந்த "மாதம் ஒரு மஹான்" என்ற தலைப்பில்...
பாம்பன்
சுவாமிகள்
ஸ்ரீமத்
குமரகுருநாதர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவர் இராமேஸ்வரத்திற்குப் பக்கத்தில்
பாம்பன் என்கிற சிவாலயம் பதியில் 1852-ஆம் வருடம் ஒரு வெள்ளிக் கிழமையன்று காலையில்
பிறந்தார்.
சிறுவயது
முதலே முருகப் பெருமானிடம் எல்லையற்ற பக்தி கொண்டு அவரை கனவிலும், நனவிலும் கண்டவர்.
இறையருளால் தமிழ்ப் புலமை பெற்றவர். அருணகிரி நாதரைத் தம் குருவாகக் கொண்டவர். கல்லூரி
நாட்களில் தம் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, அந்தப்
புலமை ஆன்மிகம் சார்ந்ததாக சைவ சமய நெறி பொதிந்தாக அமைந்திருந்தது.
குமரகுரு
தாசருக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பமில்லை. மனம் அதை நாடவில்லை என்றாலும் தம் குருவின்
அறிவுரையின்படி காளிமுத்தம்மை என்னும் மங்கையை மணம் புரிந்து கொண்டிருந்தார். இரண்டு
பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் இவருக்கு உண்டு.
ஒருநாள்
இவரது மனைவி இவரிடம்வந்து, ஏனோ தெரியவில்லை, குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருக்கிறாள்,
திருநீறு கொடுங்கள் என்று கேட்டார். அதை மறுத்து குமரகுருநாதர், நம்பிக்கையுடன் நீயே
திருநீறு இடு என்று சொன்னார். அதே போல மனைவியார் திருநீறு இட, குழந்தை அழுகையை உடனே
நிறுத்தியது. நம்பிக்கை தான் முக்கியம். திருநீறு அந்த நம்பிக்கைக்கான ஒரு கருவி மட்டுமே
என்றார் அவர்.
ஒரு
நாள் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் குமரகுருநாதர். 'நான் பழநிக்குப் போவதாக
இருக்கிறேன். ஆனால் எப்போது திரும்ப வருவேன் என்பதைச் சொல்ல முடியாது' என்று நண்பரிடம்
குறிப்பிட்டார். 'திரும்ப வருவது நிச்சயமில்லை என்று கருதும் பட்சத்தில் போவானேன்?'
என்று கேட்டார் நண்பர். 'இல்லை. இது கந்தவேலின் கட்டளை. நான் போகத்தான் வேண்டும்' என்று
பதிலுரைத்தார் குமரகுருநாதர்.
அன்றிரவு
கனவில் ஓர் உருவம் தோன்றியது. கோபமாக இருந்தது. வலது கை சுட்டு விரலை நிமிர்த்தி மிரட்டியபடி
பற்களை நறநறவென்று கடித்தது. பழநிக்கு நான் வரச்சொன்னதாகப் பொய் சொல்லியிருக்கிறாயே,
இது சரியா? நான் எங்கே உனக்குக் கட்டளையிட்டேன்? அவ்வாறு வருவது உன்னுடைய ஆவல் என்று
சொல்லியிருந்தாயானால் பொருத்தமாக இருந்திருக்கும். இனி நீ பழநிக்கே வர முடியாமல் போகட்டும்
என்று சபித்துவிட்டுப் போய்விட்டது அந்த உருவம்.
திடுக்கிட்டு
விழித்த குமரகுருநாதர், முருகன் படத்திற்கு முன்னே சென்று வணங்கி அழுதார். 'என் அகம்பாவத்துக்கு
உரிய தண்டனை அளித்தீர். நன்றி' என்று மனமுருகத் தொழுதார். ஆனால், தன்னுடைய இறுதி நாள்வரை,
அவர் எவ்வளவு முயன்றும் பழநி முருகன் தரிசனம் கிடைக்காமலேயே போய்விட்டது தான் அவருடைய
துரதிருஷடம். ஆனால் இறைவன் அவருக்கு பழநி முருகனாகவே பலமுறை காட்சிதந்து அருள் புரிந்திருக்கிறார்.
சுவாமிகள்
தலயாத்திரை மேற்கொண்டு பல முருக ஸ்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சி வந்து அங்குள்ள
சில விஷ்ணு தலங்களைத் தரிசித்துவிட்டு திரும்புகையில், எதிரே வந்த இளைஞர் ஒருவர் 'கந்தகோட்டம்
தரிசிக்க வில்லையா?' என்று கேட்டு கோயிலுக்குப் போகும் வழியைக் காட்டி மறைந்தார். முருகனே
வந்ததைப் புரிந்து கொண்ட சுவாமிகள் கந்தகோட்டம் சென்று முருகனை தரிசித்து, வள்ளற்பெருமானின்
'தெய்வமணி மாலை' பதிகங்களை படித்து அகமகிழ்ந்து நெகிழ்ந்தார்.
வேறொரு
சமயம் காலில் முள் குத்தியது. அதனைப் பற்றி இழுத்து வெளியே போட்டார். ரத்தம் கசிந்தது.
சிறு முள்ளே இத்தகைய துன்பம் தருமென்றால், உயிர் பிரியும் வேதனை எத்தனை கொடியதாக இருக்கும்!
என்று சிந்தித்தார் குமரகுருநாதர். ஓரிருநாளில் ஒரு தச்சர் அவரிடம் வந்து, 'கனவில்
ஒரு அழகன் தோன்றி, தங்களுக்கு ஒரு பாதக்குறடு செய்து தரச் சொல்லி உத்தரவிட்டார், இந்தாருங்கள்'
என்று கூறி, மரச்செருப்பினைக் கொடுத்தார். இறைவன் கருணையை எண்ணி நெகிழ்ந்தார் குமரகுருநாதர்.
ஒரு
சமயம் சுவாமிகள் சென்னை தம்புச்செட்டி தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது, ஒரு குதிரை
வண்டியின் சக்கரம் அவரது இடது கணுக்காலின் மீது ஏற, அதனால் கால் முறிந்து அவர் பொது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவர்
காலை எடுத்துவிட வேண்டும் என்று கூறிவிட்டனர்.
படுக்கையில்
இருந்த சுவாமிகள் மனம் வருந்தி முருகனை நினைத்து வேண்டினார். அழுதார். அப்பொழுது மயில்கள்
கூட்டம் கூட்டமாக வடதிசையில் இருந்து நடனமாடிக் கொண்டு வருவதைக் கண்டு அதிசயித்தார்.
மறுநாள் காலை --
சுவாமிகளின்
படுக்கையில் ஒரு அழகிய குழந்தை படுத்திருப்பதைக் கண்டு, 'முருகா' என்று அழைத்தார்.
குழந்தை மறைந்தது. பின்பு சுவாமிகள் முருகனுடைய திருநாமத்தை 12 முறை உச்சரித்து பகவானை
வணங்கவே, என்ன விந்தை! முறிந்த கால் எலும்பு தானாகவே கூடியது.
மறுநாள்
சுவாமியை பரிசோதித்த மருத்துவர்கள் வியப்பில் விழி பிதுங்கிப்போயினர். இந்த அதிசயத்தை
அவர்களால் நம்பவே முடியவில்லை. 15 நாட்களில் ரணம் ஆறிவிடும். பின்பு நீ வீடு செல்லலாம்'
என்று அசரீரியாக ஒரு குரல் விண்ணில் ஒலித்தது.
சமாதியடைவதற்கு
சில நாட்களுக்கு முன்பாகவே சுவாமிகள் அமைதியாக காட்சி தந்தார். தன் சீடர் சின்னசாமியை
அழைத்து, திருவான்மியூரில் ஒரு நிலம் பார். விரைவில் இது முடிய வேண்டும்' என்று கூறி
திருநீறு கொடுத்து அனுப்பினார்.
சுவாமிகள்
விருப்பப்படியே திருவான்மியூரில் நிலம் வாங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டது. அன்று
இரவு நெடுநேரம் சுவாமிகள் தூங்கவில்லை. தன் பக்தர்களை அழைத்து 'மயூர வாகன சேவை விழாவினை
தொடர்ந்து நடத்தி வாருங்கள். என் உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்' என்று
கட்டளையிட்டார்கள்.
மறுநாள்
புதன்கிழமை - சுவாமிகள் மிகவும் களைத்துப்போய் காணப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை
30-05-1929 அன்று காலை 07.15 மணிக்கு சுவாமிகள் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடாமல் உந்தியிலேயே
எழுப்பி தங்க வைத்துக்கொண்டார்.
சுவாமிகள்
மஹா துரிய சமாதியில் அமர்ந்தார். அதன் பின் சுவாமிகளின் பக்தர்கள் திருவான்மியூரில்
31-05-1929 வெள்ளிக்கிழமை காலை 08.15 மணிக்கு அவருக்கு சமாதி எழுப்பி எழுந்தருளச் செய்தார்கள்.
இன்றும்
சென்னை-திருவான்மியூரில் அமைந்துள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி பல திசைகளிலும்
புகழ் பரப்பிக் கொண்டு வருகிறது. பெளர்ணமி தினத்தன்று பக்தர்கள் இங்கு வந்து இரவு தங்கி,
இங்கு நடைபெறும் இரவு பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.