Friday, May 20, 2016

ஞானசபையும் நடராஜரும்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்த தலையங்கம்.

ஞானசபையும் நடராஜரும்

ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு. ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.

-       திருவருட்பிரகாச வள்ளலார்


மனித உயிர்க்கு நான்கு அறிவுகள் இருக்கும் என வள்ளற்பெருமான் பறைசாற்றுகிறார். அவை, 1.இந்திரிய அறிவு, 2.மன அறிவு, 3.ஜீவ அறிவு, 4.ஆன்ம அறிவு என்பதாகும்.  முதல் மூன்று அறிவையும் கடந்து நான்காவது அறிவான ஆன்ம அறிவைக்கொண்டவன் சுத்த சன்மார்க்கி.

1. இந்திரிய அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் பெயர் என்ன? அப்பொருளின் வடிவம் என்ன? அப்பொருளின் குணம் என்ன? அப்பொருளின் குற்றம் என்ன? என்று விசாரிக்காமலும், தெரியாமலும் - அப்பொருள் எப்படி இருக்கிறதோ அதுவே உண்மை என்று அறிதல் இந்திரிய அறிவு.

2. மன அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் பெயரினை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளின் வடிவத்தை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளின் குணத்தை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளால் வரும் குற்றத்தை தெரிந்துக்கொள்ளுதல் - இவ்வாறு அப்பொருளின் பெயர், வடிவம், குணம், குற்றம் இவைகளை தெரிந்துக்கொண்டு அவையே உண்மை என அறிதல் மன அறிவு.

3.ஜீவ அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளினால் நமக்கு என்ன உபயோகம் என்று, அப்பொருளை நாம் நமக்கு சாதகமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது, பாதகம் என்றால் அதனை விட்டு விலகுவது என்ற அறிவை அறிவது ஜீவ அறிவு.

4.ஆன்ம அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் உண்மை என்ன? என்பதை அறிவது ஆன்ம அறிவு.

இந்த நான்கு அறிவினையும் ஒரு சினிமாப் பாடல் மூலம் விளக்கலாம்.

"நீயும் பொம்மை... நானும் பொம்மை... நினைத்துப்பார்த்தால் எல்லாம் பொம்மை..." என்ற பாடல் வரிகளை பாடியவர், மேற்கண்ட நான்கு அறிவில் எந்த அறிவு கொண்டு இந்தப் பாடலை அவர் இயற்றியிருப்பார் என்று சிந்தித்தால்..., அது இந்திரிய அறிவு கொண்டு இப்பாடலை இயற்றியிருப்பார் எனத் தோன்றுகிறது.

ஏனென்றால், அவர் மனிதர்களாகிய நம்மையும், மற்ற உயிர்களையும், இறைவனையும் பொம்மையாகவே பார்க்கிறார். இவருக்கு உயிரற்ற பொம்மையே இவ்வுலகில் உண்மை எனத் தோன்றுகிறது. அதற்கு மேற்பட்டு இவ்வுலகில் ஏதுமில்லை என்கிறது இவரது இந்திரிய அறிவு. பொம்மைகளே உண்மை என்று அதனை வைத்து விளையாடுகின்ற குழந்தைகளின் அறிவினை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், மன அறிவுக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது.  அதாவது அந்த பொம்மையின் பெயர் மனித பொம்மை, அதன் வடிவம் மனித வடிவம், அதன் குணம் மனித குணம், அதன் குற்றம் மனித குற்றம் என்பதனை அறிந்து, மனிதனானவன் யாரோ ஒருவர் ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மையே என்பதனை புரிந்துக்கொண்டு அவ்வாறு பாடல் இயற்றியிருக்கலாம். அவ்வாறு அந்த பொம்மையின் குணத்தையும் குற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இப்பாடல் இருப்பதால், இப்பாடலாசிரியர் மன அறிவு உடையவர் என்று அறிந்துக்கொள்ளலாம். பொம்மைகளின் வடிவம் அறிந்து அது ஆணா, பெண்ணா, அதன் ரூபம் மனித ரூபமா? விலங்கு ரூபமா? என்றெல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்க விளையாடும் இளைஞனின் அறிவினை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், ஜீவ அறிவைக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது. மனிதனின் நிலையினை பாடுவதற்கு உவமையாக நாம் எதனை தேர்ந்தெடுக்கலாம்? என்று நினைக்கையில், அப்பாடலாசிரியருக்கு 'பொம்மை' என்கிற பொருள் தம் அறிவுக்கு தோன்றுகிறது. இப்படி அந்த பொம்மையின் உபயோகம் என்ன? அதன் இயல்பு என்ன? என்று தெரிந்துக்கொண்டு அப்பொம்மை போல் மனிதனும் உபயோகமற்றவன் என்கிறார். அதேசமயம் இறைவனும் பொம்மை என்ற வடிவிலே வழிபடப்படுகிறான். எனவே இவ்வுலகில் எல்லாம் பொம்மைதான், என்று பொம்மையின் உபயோகத்தை தெரிவிப்பதனால், அப்பாடலாசிரியர் ஜீவ அறிவை பெற்றிருக்கிறார். பொம்மையின் உபயோகம் தெரிந்துக்கொண்டு அதனை வழிபாட்டுக்கு கொண்டுவந்த கலைஞர்களின் அறிவை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், ஆன்ம அறிவுக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது. ஒரு பொம்மையின் உண்மை என்ன? அது வெறும் சடப் பொருளாக, வடிவமாக உள்ளது. அதன் உண்மைப் பொருள் உயிரோடு வேறு எங்கோ உள்ளது? அந்த உண்மைப் பொருளை தேடுங்கள். வெறும் பொம்மையோடு விளையாடுவதை நிறுத்துங்கள். நிறுத்தாவிடில் நாமெல்லாம் பொம்மைகளே! என்று எச்சரிக்கை விடுவதாகவும் இப்பாடல் பொருள் கொள்கிறது. அதாவது குரங்கு வடிவ பொம்மையை கண்டு அதனை மரத்தில் வைத்து விளையாடுவதைவிட, அதன் உண்மை என்கிற 'குரங்கு' என்ற உயிரினம் இவ்வுலகில் உயிருடன் உள்ளது. அது உண்மையிலேயே மரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனைக் காணவேண்டும் என்பதனை அப்பொம்மை நமக்கு உணர்த்துவதாக  உள்ளது. பொம்மையின் உண்மை தெரிந்துக்கொண்டு அதன் உண்மையினை, அந்த பொம்மையைவிட்டு வேறுஇடத்தில் தேடிகண்டுபிடிக்கும் சித்த அறிஞர்களின் அறிவை ஒத்தது இவ்வறிவு.

            ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது. இவ்வுலகில் ஞானசபை அல்லது சிற்சபை என்பது ஒரு பொம்மை. அதன் உண்மை ஆன்ம பிரகாசமாக நம்முள்ளே உள்ளது.

இவ்வுலகில் நடராஜர் மற்றும் நடனம் என்பது பொம்மைகள். அதன் உண்மை, நமக்குள் உள்ள ஆன்ம பிரகாசகத்திற்குள் உள் உள்ள பிரகாசமே நடராஜர் என்கிற கடவுள். அந்த உள் பிரகாசத்தின் அசைவே நடனம். 

நமக்குள்ளே உள் பிரகாசத்தையும், அதன் அசைவையும் காண்பவன் ஆன்ம அறிவு கொண்டவன். இந்த உண்மை தெரியாது புறத்தில் உள்ள நடராஜரையும் நடனத்தையும் கண்டு அதுவே உண்மை என சொல்பவன் மற்ற மூன்று அறிவுகளையும் ஒருங்கே கொண்டுள்ளார்கள் எனப்பொருள் கொள்கிறார் வள்ளற்பெருமான்.

இதனை படிக்கும் நாம், எந்த அறிவினை கொண்டுள்ளோம் என்பது இப்போது நமக்குத் தெரிந்திருக்கும்.

ஞானசபையும், சிற்சபையும் எங்கே உள்ளது?

வடலூர் மற்றும் சிதம்பரம் என்று சொன்னால், நீங்கள் இன்னும் பொம்மை வழிபாட்டை விட்டு உண்மையினை காணவில்லை எனப்பொருள். மாறாக, அவையிரண்டும் எனது ஆன்ம பிரகாசத்தில் உள்ளது என்று சொன்னால் நீங்கள் ஆன்ம அறிவினைக்கொண்டு உண்மை கண்டுள்ளீர்கள் எனப்பொருள்.

நடராஜரும், நடனமும் எங்கே உள்ளது?

சிதம்பரத்தில் உள்ளது என்று சொன்னால், நீங்கள் இன்னும் பொம்மை விழிபாட்டை விட்டு உண்மையினை காணவில்லை எனப்பொருள்.
மாறாக, அவையிரண்டும் எனது ஆன்மபிரகாசத்திற்குள் உள் பிரகாசமாகவும், அதன் அசைவாகவும் இருக்கிறது என்று சொன்னால், நீங்கள் ஆன்ம அறிவினைக் கொண்டு உண்மை கண்டுள்ளீர்கள் எனப்பொருள்.

'சிதம்பரம் இராமலிங்கம்' என்று வள்ளற்பெருமான் கையொப்பம் இடுவதையும் நாம் ஆன்ம அறிவினைக்கொண்டு நோக்கினால், அதன் உண்மை என்ன? என்பது புரியவரும். 

 மக்கள் எல்லோரும் ஆன்ம அறிவினை பெறவேண்டும் என்பதே இந்த சன்மார்க்க விவேக விருத்தியின் குறிக்கோளாக உள்ளது.
-       தி.ம.இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.