Friday, May 20, 2016

தேர்தல் அவசரம்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

தேர்தல் அவசரம்

என் இனிய அன்பர்களே! வந்தனம்!

வருகின்ற 16-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒருவிதமாக அனைத்துக் கட்சிகளும் தனியாகவோ அல்லது ஏதோ சில பிரதான கட்சிகளுடன் இணைந்தோ மக்களாகிய நம்மை நோக்கி ஓட்டு கேட்டு வந்தவண்ணம் உள்ளன. சென்ற தேர்தல் போல இந்தத் தேர்தலில் இலவசங்கள் என்கிற கவர்ச்சித் திட்டங்கள் எக்கட்சியிலும் காணப்படவில்லை. (நான் இப்பகுதியினை எழுதும்வரை ஒரு பிரதானக் கட்சி மட்டும் இன்னும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. அத்தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் எனத்தெரியாது.)
அனைத்துக் கட்சிகளுமே மதுவினை ஏதோ ஒரு வகையில் ஒழிக்க முன்வந்துள்ளன என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால் ஊழல் இலஞ்சங்களை ஒழிப்பதாகவும் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே முழங்குகின்றன. முழக்கத்தின் இடையில் கோடி கோடியாக ஊழல் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிபட்டுக்கொண்டே உள்ளது. யாருடைய பேச்சிலும் வாய்மை என்பதில்லை. "வாய்மையே வெல்லும்" என்ற நமது அரசின் அதிகார வாசகம் பொய்த்துப்போய் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தத் தேர்தலிலும் வாய்மை வெல்வதற்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.
சாதி, மதங்களை ஒழிப்பதற்காக எண்ணத்தின் அளவில் கூட எந்த கட்சியும் நினைத்துப் பார்க்கவில்லை. சாதியும் மதமும் அரசு ஏட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என்பது சுத்த சன்மார்க்கிகளின் கொள்கை. ஆண், பெண் என்று மட்டுமே மக்களை பிரிக்க வேண்டுமே தவிர சாதிகளாலும் மதங்களாலும் மக்களை பிரிப்பதை நம்மை ஆளும் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இதற்கான சட்டத்தை இயற்றும் கட்சிகளை இதுவரை நம்மால் பார்க்க முடியவில்லை.
இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!
                                    - பாண்டியன் பரிசு-56; 17-18

என்று பாரதியாரும் பாடிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பல விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்பும் இன்னும் இந்த சாதி இருக்கின்றது என்பது, கேலிக்கு உரியவையாக தென்படவில்லை. 

சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை!
                                    -பன்மணித்திரள்.

என்று பாரதிதாசனும் பாடிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இன்றும் அந்த சாதி மதத்தை தமிழன் கொண்டுள்ளானே! இதனை அவன் அசிங்கமாகப் பார்க்கவில்லை.

சுத்த சன்மார்க்கிகள் என்று ஆட்சியை ஆளுகின்றனரோ... அன்றுதான் சட்ட புத்தகத்திலிருந்து சாதிகளும் மதங்களும் தூக்கி எரியப்படும். கருணையுள்ள ஆட்சி அன்றுதான் இவ்வுலகில் தொடங்கும். அதுவரை அன்பர்களே... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது நமக்கு சிக்கலாகவே இருக்கும். குறைந்த பட்சம் அக இனத்தாருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவ்வாறு வேட்பாளர்கள் பெரும்பாலும் யாரும் இல்லை. புற இனத்தார்க்கு வாக்களிப்பதைவிட நாம் "நோட்டா"வுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று நினைக்கத் தோன்றுகிறது.

அன்பர்களே! உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதனை செய்யுங்கள். நான் ஓட்டுக்கு பணம்  வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஓட்டு போடாமல் இருக்கமாட்டேன் என்றும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு எதிரியாக இருந்தாலும், இச்சமுதாயத்திற்காக நான் அந்த நல்ல வேட்பாளரையே தேர்ந்தெடுப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் ஒரு நல்ல ஆட்சி இம்மாதத்தில் தமிழகம் உட்பட மற்றுமுள்ள மாநிலங்களில் அமையட்டும்.

தமிழகத்திலும் மற்றுமுள்ள மாநிலங்களிலும் புதிய ஆட்சியினை கொடுக்க இருக்கும் கட்சிகளுக்கு சன்மார்க்க விவேக விருத்தி தமது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறது. 
-       தி..இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.