Friday, May 20, 2016

ஜைனமத நூல்கள்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

ஜைனமத நூல்கள்

புத்தருக்குச் சில ஆண்டுகளுக்கு முந்திய சமகாலத்தவராகிய மஹாவீரரே இந்த மதத்தின் தீர்க்கதரிசியாவார். ஜைன மத மரபுப்படி மஹாவீரர் அதன் ஸ்தாபகர் அல்ல. தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படும் தீர்க்கதரிசிகளின் வழியில் கடைசியாகத் தோன்றியவர் மஹாவீரர். மஹாவீரருக்கு முந்தியவர் பார்சுவநாதர். இவர் மஹாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என ஜகோபி கருதுகிறார். பார்சுவருக்கு முந்திய தீர்த்தங்கரர் அரிஷ்டநேமி என்பவர். அவர் மஹாவீரர் மறைவுக்கு 34000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர் என ஜைனர்கள் கூறுகிறார்கள். அவருக்கு முந்தியவர் நாமி என்பவர். இவர் அரிஷ்டநேமிக்கு 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இப்பட்டியல் பின்நோக்கி நீண்டுகொண்டே போகிறது. இவ்வாறு அம்மதத்தின் ஆச்சாரியர்களுக்கு இடையிலான இடைவெளி பெருகிக்கொண்டே போய் அவர்களாலேயே கணக்கிட முடியாத நிலையை அடைந்துவிட்டது. தங்களுடைய மதம் காலத்தை வென்றது என்று சொல்வதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியதாக உள்ளது.

இத்தீர்த்தங்கரர்கள் எல்லாருமே ஏதோ ஒரு இனச் சின்னத்தை (Totemic emblem) இணைத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காளை, யானை, குதிரை, வாலில்லாக் குரங்கு போன்ற சின்னங்கள் அவர்களோடு தொடர்புடையவை.

ஜைனர்களின் நம்பிக்கையின்படி அவர்களது சாஸ்திர நூல்கள் 14 பூர்வங்கள் மற்றும் 11 அங்கங்கள் எனக் கூறப்படுகின்றன. இவற்றில் 14 பூர்வங்கள், ஏற்கனவே தொலைந்துபோய் விட்டன. 11 அங்கங்கள்கூடத் தொலைந்துபோய் விட்டன என்றே திகம்பரர்கள் கருதுகிறார்கள். 11 அங்கங்கள் என்று இன்று நமக்குக் கிடைப்பவையும், ஸ்வேதாம்பரர்களால் உண்மையான நூல்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் திகம்பரர்களைப் பொறுத்த மட்டில் போலியான நூல்கள்.

எவ்வாறாயினும் இன்றைக்கு நம்முன் உள்ள ஜைன நூல்களில் இவையே காலத்தால் முந்தியவை. நெடுங்காலமாக இந்நூல்கள் செவிவழியாகத் தொடர்ந்து வந்தன. கி.பி.454 ஆம் ஆண்டுதான் இந்நூல்கள் எழுத்துருவம் பெற்றன. ஆனால் ஜைனத் தத்துவத்தின் முறையான பதிவாக உள்ள நூல் 'தத்துவார்த்த ஆதிகம சூத்திரம்' என்பதே ஆகும். இது உமாஸ்வாதி என்பவரால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் எழுந்த ஜைன நூல்களுக்கு எல்லாம் இந்நூல் ஒன்றே ஆதாரம்.

மோட்சத்திற்கு உரிய வழியாக நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்றவைகளையே ஜைனமும் வழிமொழிகிறது. பண்டைய யோகப் பயிற்சிக்கு ஜைனம் பெருமளவில் முக்கியத்துவம் அளித்தது. சொல்லப் போனால் யோகப் பயிற்சிகளுக்கென்றே விரிந்த அளவில் நூல்கள் அவர்களால் எழுதப்பட்டன. ஜைன அறிவியலின் சிறப்பான அம்சமே அஹிம்சையைக் கடைபிடிக்குமாறு அது வலியுறுத்தியது என்பதுதான். உண்மையில் அஹிம்சையை ஒரு முழுமையான வழிமுறையாகவே ஜைனர்கள் ஆக்கிவிட்டார்கள். 

எப்பொருள் குறித்தும் ஒரு தீர்ப்பை வழங்க ஏழு வழிகள் உண்டு என்பது ஜைனர்களின் தத்துவம். அவை,
1. அது உள்ளது (அஸ்தி)
2. அது இருக்கவில்லை (நாஸ்தி)
3. அது இருக்கிறது, இருக்கவுமில்லை
4. அது வருணிக்க இயலாது (அவ்யக்தவ்யம்)
5. அது இருக்கிறது, வருணிக்க இயலாது.
6. அது இருக்கவில்லை, வருணிக்க இயலாததும்கூட
7. அது இருக்கிறது, வருணிக்கலாம்.

இந்த எல்லா முடிவுகளும் ஏதோ ஒருவகையில் உண்மையானவையே. சங்யஞபேலத்திபுத்தன் என்ற அறியொணாவாதக் கொள்கையாளரை (அஞ்ஞான வாதம்) வாயடைக்கச் செய்வதற்காகவே இக்கொள்கையினை பண்டைய ஜைனர்கள் உருவாக்கினார்கள். 

இவர்களின் மோட்சம் என்பது, ஆன்ம வினைகள் விலகியதும், ஆன்மா மேலெழுந்து பிரபஞ்சத்தின் உச்சிக்குச் சென்று, விடுதலை பெற்ற ஆன்மாக்கள் வாழும் உலகை அடைகிறது. இதுவே 'நிர்ஜரம்' என்று அழைக்கப்படும் முடிவான இலக்காகும்.



or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.