01-05-2016
: 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:
சாது தரிசனம்
எனது தாயார்
திருமதி.மல்லிகா திருநாவுக்கரசு அவர்களின் கட்டளைக்கிணங்க இன்று நாங்கள்
(24.04.2016) சென்னை நகருக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர்
சென்றோம். அங்குள்ள ஒரு சிறிய மலைக்குன்றின் மேல் வசித்துவருகின்ற மூத்த சன்மார்க்க
அன்பரை சந்தித்து ஆசிபெறுவதே எங்களது நோக்கம். அந்த நோக்கமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
கருணையால் இன்று நிறைவேறியது. அந்த அன்பரின் பெயர் திரு.சி.கே.பி. என்கிற திரு.சி.கே.பாலசுப்ரமணி
என்பவராவார். "திருப்போரூர் ஐயா" என்றே இவரை சன்மார்க்கிகள் அழைப்பர்.
வள்ளலார் போன்றே
உருவத்தில் வெள்ளை முக்காடு போட்டுக்கொண்ட சாது இவர். இவருக்கு குடும்பம் உண்டு. எனினும்
தற்போது திருப்போரூரில் தனிமையில் சன்மார்க்கத் தொண்டு புரிந்து வருகிறார். இவரின்
பூர்வீகம் வள்ளலாரின் அன்னை பிறந்த சின்னகாவனம் கிராமம். நாங்கள் அவர் இருக்கும் குடிலுக்கு
செல்லுகையில், அவர் அங்குள்ள உள்ளூர்வாசிகள் இருவரிடம் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
எங்களைக் கண்டதும் அன்புடன் வரவேற்று குடிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று பேசினார்.
தனது 72-ஆவது வயதில் இங்கே ஒரு குடிலை அமைத்துக்கொண்டு அங்கே ஒரு அனையா தீபமும் அமைத்துக்கொண்டு
தினமும் அன்னதானமும் வழங்கி வருகிறார். இவருக்கு அவ்வூரில் உள்ள இரண்டு ரிக்க்ஷா காரர்களான
திரு.செல்வராஜ் மற்றும் திரு.முருகன் ஆகியோர்கள் சேர்ந்து மாதாமாதம் 12 மூட்டை அரிசி
தானமாக வழங்குவதாகவும், அதனைக்கொண்டு இங்கே வருபவர்களுக்கு சிறிய அளவில் அன்னதானமும்
மற்றதை திருப்போரூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அன்னதானம் செய்து வருவதாகவும்
கூறினார். இதனால் அங்கு பிறக்கும் குழந்தைகள் சன்மார்க்க குழந்தைகளாக வளரும் என்பது
இவரது நம்பிக்கை. அதுபோலவே இதுவரை அந்த மகப்பேறு மருத்துவமனையில் குறை பிரசவம் ஏதும்
நடக்கமால் எல்லாம் சுகப்பிரசவமாகவே நடப்பதாகவும் எங்களிடம் சொல்லி வியந்தார்.
இதுவல்லாமல்
லதா என்ற பெயரையுடைய மூன்று பெண்கள் தங்களுடைய வருமானத்தில் ஒருபகுதியினை எனது சன்மார்க்க
பணிக்காக, எனது வங்கிக்கணக்கில் மாதாமாதம் வரவு வைத்துவிடுவர். அந்தப் பணத்தைக்கொண்டும்
அன்னதானம் நடத்திவருவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
இவர் தண்ணீரைத்
தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. இவர் தியானித்து கொடுக்கும் தீர்த்தம் பல்வேறு நோய்களை
தீர்க்கும் சக்தியுடையது என்கிறார் இவர். அந்தத் தீர்த்தத்தினை இலவசமாகவே வழங்குவதாகக்
கூறினார். பணம் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அந்த தீர்த்தத்திற்கு பலன் இல்லை என்றும்
கூறினார். மருத்துவரால் கைவிடப்பட்ட யாரேனும் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு
அவர்களது நோயினைப் பற்றி என்னிடம் தெரிவித்தால், நான் இங்கிருந்தே தியானித்து அந்நோயை
அகற்றுவேன் என்றும் சொல்லி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இறுதியாக நாங்கள்
வெளியிட்ட "பிரபந்தத்திரட்டு" நூலினை எங்களிடம் கேட்டு பெற்றார். எனது தந்தையார்
திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் அந்நூலினை பரிசாக அவருக்கு அளித்தார். எங்கள் அழைப்பு
இன்றியே "பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழாவிற்கு வடலூர் வந்து வாழ்த்து
தெரிவித்துவிட்டு சென்றவர் இவர். இவரது சன்மார்க்க தொண்டுகள் சிறக்கவும், மரணமிலா பெருவாழ்வு
அடையவும் வள்ளற்பெருமான் இவரை வழிநடத்துவார் என்கிற நம்பிக்கையில் அவரின் அடி வணங்கி
நாங்கள் விடைபெற்றோம்.
சன்மார்க்க
சாதுக்களின் தரிசனம் கிட்டுவது அரிது. எனவே அன்பர்கள் திருப்போரூர் சென்று இவரது தரிசனம்
காண்பது புண்ணியம். இவரை அன்பர்கள் தங்களது இல்லத்திலிருந்தே தொலைப்பேசியில் தொடர்பு
கொண்டு, தங்களது குறைகளை பற்றி பேசலாம். இவரின் தொடர்பு எண்: 9940346522 மற்றும்
9710463300.
- தி.ம.இராமலிங்கம்.
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing
சன்மார்க்க மணி:
(தி.ம.இராமலிங்கம்)
நீல வானில் நிறைந்த திருப்போரூர்
நீள்புகழ்
மலையில் நீர்சிறி தருந்தி
கூலமற்ற உணவும் மலமற்ற உடலும்
கூடப் பெற்று
கருணையே கண்ணாகி
காலன் கூடும்போதும் காதலாய்க் கசிந்து
கூடுவிட்டு
போனதோ காடுஇட்டுச் சென்றதோ
பால சுப்ரமணி யடித்த சன்மார்க்கப்
பாத மணியொலி வள்ளல் செவியுறுமே.
(14-05-2024 - பாலசுப்ரமணி ஐயா காலமானார்கள்)
ஆசீர்வதிக்கும் குணமோ மனமோ இவரிடமில்லை ; வள்ளல்பெருமான் பெயரால் பிழைக்கத்தெரிந்த முதியவர்; சாதுவோ சித்தரோ அல்ல என்பதே என் புரிதல்.
ReplyDeleteநன்று...
Delete