01-05-2016
: 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:
அதிர்ந்தது
ஆலயம்
கேரளா - இறைவனின்
சொந்த தேசம் என்றழைக்கப்படுகிறது. அதற்க்கேற்ப இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள
மாநிலம் இது. இயற்கை என்னும் பேரழகி கொஞ்சி விளையாடும் மாநிலம் இது. தென்னை மரங்கள் சூழ்ந்த நீர் நிலைகள்,
நீர்நிலைகளைச் சூழ்ந்த பறவை இனங்கள், பறவை இனங்களைச் சூழ்ந்த பசுமை நிலங்கள், பசுமை
நிலங்களைச் சூழ்ந்த நீல வான மேகங்கள், நீல வான மேகங்களுக்கிடையே இறைவனின் ஆலயங்கள்
என்று இன்னும் வர்ணிக்க முடியாத பல கண்கொள்ளாக் காட்சியை கொண்டு விளங்குவது கேரளா.
சென்ற
10-04-2016 அன்று அதிகாலை 03.30 மணியளவில் ஒரு கோர விபத்தும் அங்கே நடந்தேறியது உலகையே
உலுக்கியது. கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் அன்றைய தினம் திருவிழா
நடந்துக்கொண்டிருந்தது. அத்திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கமாக
இருந்து வந்துள்ளது. அதுவும் இரு வேறு பிரிவினர்
போட்டியிட்டுக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வைப்பதே இக்கோயிலின் சிறப்பு. இதனை அறிந்த
அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த நிகழ்ச்சிக்கு தடையும் விதித்திருந்தார்.
அதையும் மீறி
பட்டாசு வெடி நிகழ்ச்சி அக்கோயிலில் இரவு 03.30 மணியளவில் நடைபெற்றது. அவ்வமயம் ஒரு
தீப்பொறி அங்குள்ள பட்டாசு கிடங்கில் பட்டு அவ்விடமே ஒரு சில மணித்துளிகளில் வெடித்து
சிதறியது. புட்டிங்கல் தேவி ஆலயம் அலங்கோலமானது. அப்போது அங்குள்ள மக்களின் மனநிலை
எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த
விபத்தில் இறந்தனர். 350-க்கும் மேற்பட்டவர்கள் காயத்தால் பாதிப்படைந்தனர் என்கிறது
செய்தி.
தீவிரவாதிகளால்
மக்கள் அழிவதைவிட இப்படிப்பட்ட கோயில் விழாக்களினால் மக்கள் அழிவது பெருகிவிட்டதாகத்
தோன்றுகிறது. எதற்காக கோயில் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு அங்கு ஆடம்பரங்களும்,
ஆணவப்போக்கும் அதிகரித்துவிட்டன. கோயில்களில் அமைதியான வழிபாடுகள் காணப்படுவதில்லை.
திருவிழா என்றாலே ஒலி பெருக்கி மூலம் கண்ட பாடல்களைப் போட்டு உரக்க கத்த விடுகிறார்கள்.
இதனிடையில் பெரும் வெடி சத்தங்களும் காதை பிளக்கும். ஆராவாரமும் ஆர்ப்பாட்டமும் நிறைந்ததே
கோயில் திருவிழா என்று ஆகிவிட்டது.
மனிதன் சம்பாதித்த
பணம், முறைகேடான வழியில் இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்களில் செலவிடப்படுகிறது. இப்படிப்பட்ட
கோயில் திருவிழாக்கள் ஒரு ஏழை மக்களின் பசியினைக்கூட தீர்க்க முன்வராது. சமுதய நலனுக்கு
என்று எதையும் செய்யாது. கோயிலின் பொது சொத்தும் அதன்மூலம் வருகின்ற பணமும் இப்படிப்பட்ட
ஆடம்பரத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது.
நாங்கள் செத்தாலும்
பரவாயில்லை! வெடி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டாம்! என்கிறார்கள் மக்கள். ஏனெனில்
அது பாரம்பரியமாக கொண்டாடப்படுவதாம்! மக்கள் நல அரசும் அவ்வாறே நடந்துக்கொள்கிறது.
கோயில் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் அக்கிரமங்கள் தவறு என்று தெரிந்தும் அதன் பாரம்பரியத்திற்காக
அதனை தொடர்ந்து அனுமதிப்பது கல்வியில் சிறந்த மக்களுக்கு அழகாகுமா? நீங்கள் கற்ற கல்வி
தவறுகளை திருத்த சொல்லவில்லையா? மூட வழக்கங்களை மூடசொல்ல வில்லையா? கடவுள் வழிபாடு
எது என்று சொல்லிக் கொடுக்கவில்லையா? ஒரு மனிதக் கருவை உருவாக்க அந்தக் கடவுள் எவ்வளவு
சக்தியினை வெளிப்படுத்துகிறார் என்று தெரியவில்லையா?
எனதருமை மக்களே,
கோயில் திருவிழாக்களை மிக அமைதியாகவும் மிக எளிமையாகவும் நடத்துவோம். பட்டாசு வெடிப்பதை
முற்றிலுமாக தவிர்ப்போம். ஒலிப்பான்களை தேவைக்கு ஏற்ப மெதுஒலியாக வைத்து பயன்படுத்துவோம். கோயில் நிதி மிக அதிகம் இருப்பின், அதனை அன்னதானத்திற்கும்
சமுதாய நலனுக்கும் செலவழிப்போம். ஆலயங்களில் அமைதி உண்டாகட்டும். மக்களின் மனதில் அன்பு
நிறையட்டும்.
- தி.ம.இராமலிங்கம்.
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.