Friday, May 20, 2016

குலதெய்வ வழிபாடு



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

குலதெய்வ வழிபாடு

இந்து மதத்தை பின்பற்றும் தமிழ்நாட்டில், சைவ மற்றும் வைணவ சமயத்தார்களுக்கு என்று ஒரு தலையாய தெய்வங்களாக சிவன் மற்றும் விஷ்ணு என்ற தெய்வங்கள் இருந்தும் அவர்கள் அத்தெய்வங்களை வணங்கிக்கொண்டே, தங்கள் குடும்பக் குழுக்களுக்கு என தனியாக ஒரு தெய்வத்தையும் தொன்றுதொட்டு வணங்கி வருவார்கள். இத்தெய்வத்தை குலதெய்வம் என்பர். இத்தெய்வங்கள் பெரும்பாலும் கிராம தேவதைகள், கிராம காவலர்கள் என்ற வகையில் தமிழகம் முழுதும் மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த குலதெய்வங்களின் பட்டியலை எடுத்தால் ஆயிரங்கணக்கில் அப்பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின்போது முதலில் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டுதான் மற்ற நடவடிக்கையில் மக்கள் ஈடுபடுவர்.

குழந்தைகளுக்கு காது குத்தல், மொட்டை அடித்தல், பெயர் சூட்டுதல், வருடாந்திர வழிபாடுகள், உயிர்பலி இடுதல் மற்றும் சிறப்பு வேண்டுதல்கள் போன்றவைகள் இந்த குலதெய்வ கோவிலில் நடந்தேறுகின்றன. குடும்ப விழா அழைப்பிதழ்களில், முதலில் குலதெய்வத்தை துணையாக நிறுத்தி, அந்த தெய்வத்தின் பெயரையே முதலில் அச்சடிப்பர். தந்தை வழி சமூகத்தினர்களால் பரம்பரையாக சங்கிலித் தொடர் போன்று இந்தப் பழக்கம் ஒரு குடும்பத்தை வந்தடைகிறது. யாரேனும் குலதெய்வ வழிபாடு செய்யவில்லை எனில் அக்குடும்பத்தில் சோதனைகள் நேரிடும் என்ற பயமுறுத்தலுடன் இப்படிப்பட்ட வழிபாடுகள் இன்றும் நம்சமூகத்தினரிடையே காணப்படுகிறது.

குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமானது என்று மக்களிடையே சொல்லக்கூடிய பெரியவர்கள் மற்றும் பழமை விரும்பிகளால் மக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். சென்ற ஆண்டு (ஜூலை-2015 என நினைக்கிறேன்) புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் குலதெய்வ வழிபாடு பற்றின கூட்டம் நடைபெற்றது. அதில் எனது தாய், தந்தை, சகோதரியுடன் நானும் கலந்துக்கொண்டேன். இப்படிப்பட்ட கூட்டத்திற்கு நான் செல்லமாட்டேன். இதைத்தெரிந்து எனது வீட்டில் எங்கு செல்கிறோம் என்றே என்னிடம் கூறாமல் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். மகிழுந்தை (Car) நான்தான் ஓட்டிச்செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் சொன்ன இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றேன். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள நான் கட்டாயப்படுத்தப் பட்டேன்.


அந்நிகழ்ச்சியை நடத்தியவர் திரு.ஏ.பி.முகன் (Mr.A.B.Mughan-Film Director/Writer-Mobile No.8680896275) என்பவராவார். இவர் கும்பகோணம் வள்ளலார் பள்ளியில் படித்தவர். சென்னையில் வாழ்பவர். முதலில் திராவிட கழகத்தில் இணைந்து கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்தவர். பிறகு தெய்வ வழிபாட்டில் ஈர்க்கப்பட்டவர். சினிமா துறையில் இயக்குனாராகவும் பல நூல்களை எழுதியவராகவும் திகழ்கிறவர். இவரது நிகழ்ச்சியில்  'குலதெய்வம் உண்டு' என்பதையும் 'இறந்தவர்களின் ஆவிகள் நடமாட்டமும் உண்டு' என்பதனையும் மக்களிடம் நிரூபிப்பதே தலையாய நிகழ்வு. அதனை ஒட்டி காசு பார்க்கும் வேலையும் உண்டு. இந்நிகழ்ச்சிகள் சங்கரா தொலைக்காட்சியில் இடம்பெறும். திங்கள் கிழமை மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகும். தற்போது ஒளிபரப்பு ஆகிறதா எனத் தெரியவில்லை.

அன்றைய கூட்டத்தில் பங்குபெற்றவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து மக்களின் முன் நிற்க வைத்து, சில நொடிகள் தியானித்து அவரின் குலதெய்வம் எது? என்பதனை சரியாக சொல்லிவிடுவார் அவர்.


அப்படித்தான் அன்றைய கூட்டத்தில் குலுக்கலில் எனது பெயர் இடம்பெற்றுவிட்டது. நானும் ஒருவித தயக்கத்துடன் மேடைமீது ஏறி அவரது முன்னிலையில் நின்றேன். உடனே என் முகத்தில் கொஞ்சம் நீரை தெளித்துவிட்டு, கண்ணை மூடி தியானித்தார். ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. சட்டென கண்களைத்திறந்து, உங்கள் குலதெய்வம் என்னுள் வந்தார்கள். இவர்கள்தான் உங்கள் குலதெய்வம் என்று கூறினார். அது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. அவர் சொன்னது மிகச்சரியாக இருந்தது. எங்களுக்கு இரண்டு குலதெய்வங்கள் உண்டு. அந்த இரண்டையும் மிகச்சரியாக சொன்னதால் நாங்கள் அவரிடம் கட்டுண்டோம். எங்கள் குடும்பத்தில் உள்ள சில சிக்கல்கள் தீர அவரிடம் ரூபாய் முப்பதாயிரம் இழந்தோம். ஆனால் இதுவரை அச்சிக்கல்கள் தீரவில்லை. தீர்ந்திருந்தாலும் நம்புவதற்கில்லை.

இதே கூட்டத்தில் புதுச்சேரிக்கு அருகில் உள்ள மடுகரை கிராமத்திலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வள்ளலார் பக்தர், தனது மனைவியின் வற்புறுத்தலால் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்து, அக இனத்தார்கள் என்ற முறையில் அவர்களே வந்து எங்களிடம் பேசினார்கள். அவர் வாழப்பட்டு சுவாமிகளால் மெருகூட்டப்பட்டவர். எனவே வள்ளற்பெருமானைத் தவிர நான் யாரையும் வணங்குவதில்லை. நான் குலதெய்வ வழிபாடெல்லாம் விட்டு வருடக்கணக்கில் ஆகிறது. அவ்வழிபாடு நமக்குத் தேவையில்லை. நீங்கள் அவரிடம் ஏமாந்துவிடாதீர்கள். என்று எங்களை எச்சரித்தார். (எச்சரிக்கையையும் மீறி ஏமாந்தோம்) இருப்பினும் அவருடைய மனைவி, எங்களிடம் 'குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு வந்தால் எங்கள் பிரச்சனை தீரும், என நினைக்கிறேன். ஆனால் இவர் வர மறுக்கிறார்' என்று அவரின் கொள்கையை பற்றி, அவர் முன்னிலையிலேயே எங்களிடம் கொட்டித் தீர்த்தார். உங்கள் மனைவியின் வேண்டுதலை ஏற்று நீங்கள் ஒருமுறை உங்கள் குலதெய்வத்திற்கு சென்றுவிட்டு வாருங்கள், என்று நானும் அவருக்கு எடுத்துரைத்தேன். சென்றார்களா எனத் தெரியவில்லை. சென்றிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் 'எங்கள் குடும்பத்தில் எது நேரிடினும் அது வள்ளற்பெருமானின் ஆசியால்தான்!' என்ற நம்பிக்கையில் உறுதியோடு மிகத்தெளிவாக இருந்தார். அவர் பெயர் தவத்திரு.வீரப்பன் என்பவராவார்.

இதை எல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், இந்த குலதெய்வ வழிபாடு சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டவே எழுதுகிறேன். குலதெய்வம் உண்மையில் உண்டா? என்றால் உண்டு. அது பொய்யில்லை. ஆனால் அவைகளால் நமக்கு ஆவது ஒன்றுமில்லை. இவ்வழிபாட்டால் பல தீமைகள் ஏற்பட்டு, அதனால் நமக்கும், நம்மால் பிறர்க்கும் பாவங்கள்தான் பற்றுகின்றன.

"எனக்கு பெண்களின் குறிகள்தான் இன்பத்தை வாரி வழங்குகின்றன. இவ்வுலகில் மற்ற எதனாலும் எனக்கு இன்பம் ஏற்படுவதில்லை. எனவே கடவுள் என்பது பொய். பெண்கள் குறிதான் நான் கண்ட கடவுள். அதுதான் எனக்கு குலதெய்வம்" என்ற கொள்கையுடையோர்களும் இப்பூமியில் மறைமுகமாக வாழ்கின்றனர். இவர்களை திருத்தவே முடியாது. நமக்கு எளிதில் இன்பம் தருகிறது என்பதற்காக, நாம் அதனை தெய்வமாகக் கருதுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோன்றதே குலதெய்வ வழிபாடும். இவ்வழிபாட்டால் சில பிரச்சனைகள் தீர்வதுபோல தோன்றினாலும், உண்மையில் அது நமது ஆன்மீக இலக்கை அடைய தடையாய் இருக்கின்றது. இவ்வழிபாட்டை வள்ளலார் 'சிறுநெறி' என்று கூறுகிறார்.   

"இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
              ஈகின்ற பெண்கள்குறியே
    எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
              எத்துணையும் அரிதரிதுகாண்..."   2421
  
வள்ளர்பெருமான் தனது குலதெய்வத்தை வணங்கினாரா? என்றால். இல்லை. வள்ளற்பெருமானுக்கு ஏற்படாத இன்னல்களா நமக்கு ஏற்பட்டுவிட்டது? எவ்வகையிலும் (பெருவாழ்வைத் தவிர) நாம் அவரைவிட இவ்வுலகில் சுகமாகத்தான் வாழ்கிறோம். ஆனால் நாம் இன்னும் சுகமாய் வாழவேண்டும் என்ற அவாவினால், நமக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய துன்பங்களுக்காக வருந்தி, துக்கம் என்னும் மாயையால் குலதெய்வங்களை நாடிச் செல்கிறோம். நம்முடன் பிறந்த உயிர்களை பலியிடுகிறோம். இன்னும் பல சடங்குகளை செய்கிறோம். ஆனால் மாயை என்னும் வினைகளால் கலக்கம் ஏற்பட்டபோது, வள்ளற்பெருமான் நம்மைப் போன்று குலதெய்வ வழிபாட்டில் (சிறுநெறி) ஈடுபடவில்லை என்பதை,

"இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
            எய்திய தென்செய்வேன் எந்தாய்
 தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
            சிறுநெறி பிடித்ததொன் றிலையே." - 3503

"சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
            தீமன மாயையைக் கணத்தே
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட... - 5422

"செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
            செலுத்தாமல் பெருநெறியில் செலுத்திய..." - 4165

"சிறுநெறிகள் அடையாது என்னைத்
            தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானை..." - 3944

"சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
 துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து..." அ.அகவல்-1565

என்றெல்லாம் பாடுகிறார். 'ஒன்றுதான் தெய்வம்' என்று உணர்ந்த அறிவுடைய நமக்கு 'குலதெய்வம்' என்பது எப்படி உருவாகமுடியும்? நாம் செய்யும் குற்றத்தை தன்மேல் சாற்றி பாடுவதையும் பாருங்கள்,

"செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்
            தெய்வம் ஒன் றெனும்அறி வறியேன்..." - 3284

"சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே
            சிலுகுக் குரங்கெனப் பிடித்தேன்..." - 3288

இவ்வாறு குரங்குப்பிடியாக சிறுநெறி என்னும் குலதெய்வ வழிபாட்டைப் பிடித்தொழிகினால், ஒரே இறைவனான அருட்பெருஞ்ஜோதியாண்டவர் நம்மை கைவிட்டு சென்றுவிடுவார் என்பதனையும் வள்ளற்பெருமான் இங்கே குறிப்பிடத் தவறவில்லை,

"சிறுநெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தானை..." - 3934

எனினும் வள்ளற்பெருமான், சிறுதெய்வங்களை வணங்காது பெருந்தெய்வங்களான சிவனையும், விஷ்ணுவின் அவதாரமான ராமனையும் தனது குலதெய்வமாக கொண்டாடுகிறார்.

"என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்"
                                                                        -- திருவடிப் புகழ்ச்சி

"எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
    எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்... - 3909

"புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
    அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்...  - 5738

"தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
    சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
 வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம..."     - 1942
                                   
என்று சிவபெருமானையும் ராமனையும் தனது குலதெய்வமாகக் காண்கிறார். முதலில் நாம் 'குலதெய்வம்' என்றாலே அது 'சிறிநெறி', "சிறிய தெய்வங்கள்" என்று கண்டோம். ஆனால் சிவன், விஷ்ணு ஆகிய பெரிய தெய்வங்களை மட்டும் நாம் நமது குலதெய்வமாக வழிபடலாமா? என்றால், அதுவும் கூடாது. வள்ளற்பெருமான் அவ்வாறுதானே வழிபடுகிறார்! என்று கேட்கலாம்.

வள்ளற்பெருமான் இவற்றையெல்லாம் பாடிவிட்டு, ஒரு பொதுமையை நோக்கி முன்னேறுகிறார். மதங்கள், சமயங்கள் என்ற வட்டத்தைவிட்டு வெளிப்படுகிறார். அப்பொழுது அவருக்காகவே, இதுவரை இவ்வுலகில் எழுந்தருளாத தனித்தந்தை வருகின்றார். அவரது வருகையாலே, சிறிய தெய்வங்களை குலதெய்வமாகக் கொள்ளும் தாழ்குலமும், பெருந்தெய்வங்களை குலதெய்வமாகக் கொள்ளும் உயர்குலமும் - அதாவது அந்த சிறுதெய்வமும், பெருந்தெய்வமும் ஒன்றெனவே காட்சியளிக்கின்றன. இந்த இரண்டுவகை தெய்வங்களும் மரணமுறுவதை உணர்கிறார். இவர்களை வணங்கும் இருகுலமும் மரணம் உறுவதைக் காண்கிறார்.

இந்த இரண்டுவகை தெய்வங்களுமே, மனிதர்களைப் போன்றே தத்தம் கைகளால் 96 அங்குலமே (எட்டு சாண்) என்பதை அறிகிறார். இப்படிப்பட்ட மண்ணில் நான் ஏன் பிறந்தேன்? சாவதற்காகவா பிறந்தேன்? என்று தன்னுள் குலாவுகின்ற தனித்தந்தையிடம் முறையிடுகிறார். அப்போது அவருக்கு கிடைக்கிறது சாகாவரம்.  ஆகவே இனிமேல் மனிதர்களுக்கு குலதெய்வம் என்பது எவ்வகையிலும் தேவையில்லை. 'குலவு' தெய்வம் வேண்டும் என்கிறார். நம்முடன் குலவுகின்ற தெய்வத்தால்தான் நமது மரணத்தை நாம் வெல்லமுடியும் என்கிற உண்மையினை புரட்சியினை வெளிப்படுத்துகிறார்.

'குலவு' என்றால் ஒருமையுடன் கூடுதல். இப்படி நம்மிடம் ஒருமையுடன் கூடும் அருட்பெருஞ்ஜோதி தெய்வமே உலக ('உலகு' - திருப்பிப் படித்தால் 'குலவு') உயிர்களுக்கெல்லாம் தனித்தந்தை ஆகும். இப்படிப்பட்ட தெய்வமே / குலவு தெய்வமே நமது வழிபாட்டில் இருக்க வேண்டும் என்பதை வள்ளற்பெருமான், எச்சமயத்தார்க்கும், எம்மதத்தார்க்கும் பொதுமையாகக் கண்டார். கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று முழங்கினார். எச்சமயத்தார்களும் எம்மதத்தார்களும் வணங்கும் தெய்வங்களில் எல்லாம் தனித்தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் லேசங்கள் உள்ளன என்ற உண்மையினை கண்டறிந்து அதனை உலகிற்கு வெளியிட்டார்.

"நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
            நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
            வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
            புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
            உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே." - 5572

"எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
    றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" -அ.அகவர்-219

"கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
            குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே." - 3302

"ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
 கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே" - அ.அகவல்-911

"கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
 குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே" - அ.அகவல்-1043

சுத்த சன்மார்க்க ஒழுக்கத்திற்கு குலதெய்வ வழிபாடு தடையாக இருப்பதால் அதனை நாம் விடுத்து, ஓர் இறைவனாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி அவனுடன் குலாவுவோம். ஓர் இறைவனை வணங்க ஓர் குறையும் இல்லை. மூட நம்பிக்கையாம் குலதெய்வ வழிபாட்டை மூடுவோம். கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ஆடுவோம். இனி நம் குலதெய்வம் அருள். இனி நம் இனதெய்வம் அருள். இனி நாம் அறியும்தெய்வம் அருள். இனி நமக்கு அருளும்தெய்வம் அருள்.

அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாமறி வாயென்ற சிவமே - அ.அகவல்-1011


                                                                                                    தி.ம.இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குலதெய்வ வழிபாடு குறித்து தாங்கள் 20-03-2016-ல் எழுதியுள்ளீர்கள். தற்போதைய அது பற்றிய தகவல்கள் விளக்கங்கள் என்ன?
திண்டிவனம் பாண்டுரங்கன்.
மேற்காணும் கேள்வியினை 20-07-2024-ம் தேதி திரு.பாண்டுரங்கன் ஐயா அவர்கள் கேட்டுள்ளார்கள்.
இதற்கு நான் கூறும் பதில், நான் எனது 42-ஆம் வயதில் எழுதிய “குலதெய்வ வழிபாடு” கருத்துக்கள் இன்றைய எனது 50-ஆம் வயதில் இக்கருத்துக்கள் இன்னும் தீவிரத்தரத்தில் உள்ளன. 
சென்ற 4 மாதத்திற்கு முன்பு எனது தம்பி திரு.ம.உமாபதி (சிறிய தந்தை மகன்) அவரின் மகள்களுக்கு காது குத்தும் நிகழ்வு எங்கள் குல தெய்வக் கோயிலில் (புதுச்சேரி - செங்கழுநீர் அம்மன் கோயில் - முத்திரையர் பாளையம்) நடைபெற்றது. அண்ணன் என்கின்ற முறையில் நான் அந்நிகழ்விற்கு செல்லவில்லை. வள்ளலார் காது குத்தல் சடங்கு கூடாது என்கின்றார். மேலும் குலதெய்வ வழிபாடும் தேவையற்றது என்கின்றார். இந்த இரண்டு தடைச்செயல்களும் நிகழும் இடத்திற்கு, எனது தம்பியே அழைத்தாலும், நான் செல்லக்கூடாது என, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் மீறக்கூடாது என செல்லவில்லை. இதனால் சொந்தங்களுக்குள் புகைச்சல் ஏற்பட்டது. அந்த புகைச்சல் முக்கியமில்லை, சுத்த சன்மார்க்கம்தான் முக்கியம் என்பது எனது கருத்தாகவும் செயலாகவும் உள்ளது.
நான் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இறையருளால் பாடியுள்ளேன். அனைத்து பாடல்களிலும் - பாடுபொருளாக, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளற்பெருமானாரும் மட்டுமே இருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு பதிகம் மட்டும் எனது குலதெய்வமான “அருள்மிகு செங்கழுநீர் அம்மன் துதி” என இயற்றியுள்ளேன். இப்பதிகம் இயற்றியது 18-02-2016 ஆகும். 
விட்டகுறை எதுவோ வள்ளற் பெருமானை
    விழைந்த நான்இனி விடுவேன் உனையே - 9
சுத்த சன்மார்க்கம் விரைந்து சார்வாய்நீயே
தக்கநேரம் இதுவே முத்திரையர் பாளையம்
    தாண்டி செங்கழுநீர் அம்மனே வருவாயே. - 10
https://vallalarr.blogspot.com/2016/02/blog-post_18.html
என செங்கழுநீர் அம்மன் துதியை கைவிடுவேன் என 9-ஆவது பாடலிலும், அந்த அம்மனை சுத்த சன்மார்க்கம் சார்ந்து வடலூர் வரும்படி 10-ஆவது பாடலிலும் பாடியிருப்பேன். இப்படி பாடியப்பிந்தான் இந்த “குலதெய்வ வழிபாடு” என்ற கருத்தினை இங்கே எழுதினேன்.  
திரு.பாண்டுரங்கன் ஐயாவிற்கு நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475 / 22-07-22024   


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.