Friday, May 20, 2016

நீறு கூடாது



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

நீறு கூடாது

வள்ளற்பெருமான் ஏற்படுத்திய சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் திருநீறு அணியக்கூடாது. ஏனென்றால், சுத்த சன்மார்க்கிகள் திருநீறு அணிதல் வேண்டும் என்று வள்ளற்பெருமான் சொல்லவில்லை. வள்ளற்பெருமான் சொல்லாத ஒன்றை சுத்த சன்மார்க்கிகள் செய்யக்கூடாது.

நீற்றின் உண்மை:

நாம் இந்த திருநீற்றின் உண்மை என்ன என்பதை முதலில் அறிந்தால், இதனை நாம் தொடவே மாட்டோம். சிவபெருமான் சுடுகாட்டில் தலைமாலைப் பூண்டு தாண்டவம் ஆடுகிறார். அப்போது அங்கு பிணங்களை எரித்ததால் உருவான சாம்பலை எடுத்து தனது மேனி முழுதும் பூசிக்கொண்டு ஆடுகிறார். இந்த பிணங்களின் சாம்பலே சைவ சமயத்தில் திருநீறு என்று வழங்கப்பட்டது. இதனை அடலை பூசிக்கொண்டு சுடலை ஆடுதல் என்பர். இறுதியில் நமது தேகங்கள் ஒருபிடி சாம்பல் ஆகும் என்பதே உண்மை. நாம் இந்த உண்மையை அறிந்து நமது ஆணவத்தை விடுக்கவேண்டும் என்பது சைவ சமயத் தத்துவம். சுடுகாட்டு சாம்பலை பூசுவது நாகரிகமாக இருக்காது என்று கருதி, பிற்பாடு பசுவின் சாணத்தை எரித்து அந்த சாம்பலை சைவர்கள் பூசிக்கொண்டனர். இதுதான் திருநீற்றின் உண்மை. இதனை மறைத்து திருநீறு மற்றும் விபூதி என்ற சொற்களின் பொருள் என்ன என்று தேடி, அச்சொற்களின் பொருள் மகிமையை வெளிப்படுத்துவது தவறு.

இறந்த பிணங்களை எரிக்கக்கூடாது, இடுகாட்டில் புதைக்க வேண்டும் என்பது வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கக் கட்டளை. எனவே இங்கு சாம்பலுக்கு வேலையில்லை. சுடுகாடு என்பதே இவ்வுலகில் இருக்கக்கூடாது என்பது வள்ளற்பெருமானின் லட்சியம். சாம்பல் மரணத்தின் அறிகுறி. அதனை சுத்த சன்மார்க்கிகள் அணிந்தால், வள்ளற்பெருமான் கூறிய மரணமிலா பெருவாழ்வு என்ற அவரது முக்கிய கொள்கையினையே எதிர்ப்பதாக அமைந்துவிடும். எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு சுடுகாட்டு சாம்பல் கூடவே கூடாது.             

நீற்றின் வல்லமை:

பிணம் சுட்ட சாம்பலுக்கு என்று எந்த வல்லமையும் இல்லை. அச்சாம்பலை புன்செய் நிலத்திற்கு உபயோகப்படும் எருவாகக்கூட பயன்படுத்தமுடியாது என்கிறார் வள்ளலார். (திருவருட்பா-5609). ஆனால் சாணம் சுட்ட சாம்பலுக்கு அறிவியல் பூர்வமாகவே வல்லமை உண்டு. காரணம் பசுவின் சாணம் நோய் கொல்லியாக இருக்கிறது. அந்த வகையில் வள்ளற்பெருமான் உட்பட பல மதத்தை சேர்ந்தவர்களும் இந்த விபூதியினை இன்றும் பயன்படுத்துகின்றனர். சுத்த சன்மார்க்கிகளும் இதனை ஒரு மருந்தாக ஏகதேசமாய் பயன்படுத்தலாம். ஆனால் அதனை ஒரு சடங்காக மேனியில் பூசுவது அறவே கூடாது.

வள்ளற்பெருமானின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள், "அருட்பிரகாச வள்ளலார் விபூதிப்பிரசாத மகிமை" என்ற தலைப்பில் 44 பாடல்கள் அருளியுள்ளார்கள். (பிரபந்தத்திரட்டு - 3402-ல் இருந்து 3445 வரை) வள்ளற்பெருமான் வழங்கிய விபூதியால் ச.மு.க. உட்பட பலர் தங்களது நோய்களை தீர்த்துக்கொண்டது வரலாறு.

பன்மார்க்க சமயம்யாவும் பாறுமிந்தப் பாரினில்
நன்மார்க்க மதியின்வாத நாளுமெங்கு நடைபெறும்
துன்மார்க்கந் தொலையுமென்ற தூய்மையோன் விபூதியாற்
சன்மார்க்க சங்கமெங்குந் தழையுந்தழையுந் தழையுமே. - 3444

என்று, தனது பிரபந்தத்திரட்டில் வள்ளலாரின் விபூதியால் சன்மார்க்க சங்கங்கள் தழைக்குமென காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் பாடியருளியுள்ளார்கள். வள்ளற்பெருமான் உபயோகித்த விபூதி போன்று தற்போது சுத்தமான விபூதிகள் கிடைப்பதில்லை. அதில் கலப்படம் உள்ளது. பசுவின் சாணம் தற்போது சக்கையாகவே உள்ளது. அதில் உயிர்ப்பு சக்திகள் இல்லை. பசுவின் ஆகாரம் செயற்கை ஆகாரமாக மாறிவிட்டதுதான் இதற்கு காரணம். நாட்டுப் பசுக்களும் மிக அதிகளவில் குறைந்துவிட்டன. ஆகையால் கலப்பின பசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் விபூதியில் தற்போது எந்தவகையான அறிவியல் மகத்துவமும் இன்றி காணப்படுகிறது.

மேலும் விபூதி கொடுப்பவர் ஆன்மிக சக்தி உடையவராக இருந்தால்தான், அவர் கொடுக்கும் விபூதிக்கு சக்தி உண்டாகிறது. சாதாரணமானவர்கள் கொடுக்கும் விபூதிக்கு சக்திகள் கிடையாது. எனவேதான் ச.மு.க. அவர்கள் "விபூதிபிரசாத மகிமை" என்று பொதுவாகப் பாடாமல் "அருட்பிரகாச வள்ளலார் விபூதிப்பிரசாத மகிமை" என்று அந்த விபூதியை ஒரு ஆன்மிக சக்தி படைத்த ஒருவருடன் இணைத்துப் பாடுகிறார். ஆகவே விபூதிக்கென்று தனிப்பட்ட சக்திகள் கிடையாது என்பது தெளிவாகிறது. ஆன்மிக சக்தி படைத்தவர்கள் கைப்பிடி மண்ணை அள்ளிக் கொடுத்தாலும் அந்த மண் அவரின் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும்.

சுத்த சன்மார்க்கிகள் தங்களுடைய மலங்களை எரிந்து அதன்மூலம் சக்திகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புற விபூதி தேவையில்லை. எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு சுடுகாட்டு சாம்பல் கூடவே கூடாது.           

இடுநீறே:

நாம் இறைவனை வணங்கிவிட்டோம் என்று மனதிருப்தி கொள்ளும் ஒரு மூடப்பழக்கம்தான் விபூதி அணிதல். மற்றும் சிலர் நான் நேர்மையானவன், கடவுள் பக்தி உள்ளவன் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கவே விபூதி அணிகின்றனர். ஆனால் இவர்களின் செய்கைகள் அதற்கு மாறாக இருக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக சிலர் விபூதி அணிகின்றனர். மற்றும் சிலர் விபூதி அணிந்துக்கொண்டு உயிர்பலி கொடுத்து இறைவனை வணங்குவார்கள். இன்னும் சிலர் விபூதி அணிந்துக்கொண்டு உண்மையிலேயே நல்லவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் சிலர், முடிவில் நான் சாம்பலாகப் போகிறேன். அதனை நினைவில் நிறுத்தவே விபூதி இடுகிறேன் என்பர். சிலர் நான் சைவ சமயத்தினன், ஆகவே விபூதி பூசுகிறேன் என்பர். 

இவ்வாறு நல்லது முதல் தீயகாரியங்கள் வரை இந்த விபூதி மக்களால் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. "சிவாயநம என்று இடுநீறே" என்று 11 பாடல்களை வள்ளற்பெருமானும் பாடியிருக்கிறார். சிவபெருமானே... நான் உன்னை வணங்குகிறேன்... என்று சொல்லிக்கொண்டு நாம் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்று வள்ளற்பெருமான் பாடியிருக்கிறார். சிவபெருமானை வணங்குபவர்கள் வள்ளற்பெருமான் காலத்திற்கு முன்பிருந்தே அச்செயலை அவர் குறிப்பிட்டபடி செய்துதான் வருகின்றனர். வள்ளற்பெருமான் சொல்லித்தான் சைவர்கள் விபூதி அணிகின்றனர் என்று சொல்வதற்கில்லை. அது சைவ சமயம் சார்ந்த வழக்கு.

நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கும் சுத்த சன்மார்க்கிகள். நமக்கு ஏன் அந்த விபூதி என்னும் சுடுகாட்டு சாம்பல்.

சமய சின்னங்கள்:

சைவ சமயத்தில் விபூதி அணிதல் ஒரு சின்னமாகக் கருதப்படுகிறது. அதேபோல் வைணவ சமயத்தில் திருமண் (நாமம்) அணிதல் ஒரு சின்னமாகக் கருதப்படுகிறது. சைவ சமயக்கோயில் யானைகள், மாடுகள் விபூதி அணிந்திருக்கும். வைணவ சமயக்கோயில் யானைகள், மாடுகள் நாமம் அணிந்திருக்கும். விபூதியைக்கண்டால் நாமத்திற்கு பிடிக்காது. நாமத்தைக் கண்டால் விபூதிக்கு பிடிக்காது. விபூதி அணிபவர்கள் நாமத்தை அணியமாட்டார்கள். நாமம் அணிபவர்கள் விபூதி அணியமாட்டார்கள். (விதிவிலக்காக இரண்டையும் அணிபவர்கள் சிலர் உண்டு). விபூதி பூசிய எனது கடவுளே பெரிய கடவுள் என்றும் நாமம் அணிந்த எனது கடவுளே பெரிய கடவுள் என்று கடவுளுக்குள்ளேயே போட்டி. சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் பட்ட பாட்டையும் அதனால் வைணவர்கள் பலர் உயிரிழந்தையும் நாம் அறிவோம் இல்லையா.

வள்ளற்பெருமானும் விபூதி பூசாத மக்களை கடுமையாக விமர்சித்து பத்து பாடல்களை இயற்றியுள்ளார். (திருவருட்பா-997-ல் இருந்து 1006 வரை) இவையெல்லாம் அச்சமய நெறிக்குள் இருப்பவர்கள் படிக்கும் போது அவர்கள் மனம் குதூகுலம் அடையும். இதனையே மற்ற சமயத்தார்கள் படிக்கும்போது அவர்களது மனம் வெறுப்படையும். இவ்வாறு சமயம் சார்ந்த சின்னங்களால் மக்களுள் பிரிவினையையும் எதிர்ப்பையும் ஒருவருக்கொருவர் ஈட்டிக்கொள்ளவே இச்சின்னங்கள் இன்றும் பயன்படுகின்றன. வள்ளற்பெருமான் பாடிய பாடல்களே இந்த வெறுப்பிற்கும் பிரிவினைக்கும் சாட்சியாக இருப்பதை பார்க்கலாம்.

ஆகவே சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்வகையிலும் திருநீறு உபயோகப்படாது. இந்த மார்க்கம் யாவருக்கும் எல்லா உயிர்க்கும் பொதுவான மார்க்கம். இதற்கு முக்கியத்தடைகளாக இருப்பது சமயங்களும் மதங்களுமே ஆகும். எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு சுடுகாட்டு சாம்பலைக் குறிக்கும் பசுமாட்டு சாண சாம்பல் கூடவே கூடாது.              

திருநிலை யறிந்தே திருநீறு அளித்தும்விடுத்த
இரு நிலை இனியன் இராமலிங்கம்

நடுநெற்றியில் நீரிருக்க நல்லநீறெ தற்கென
விடுத்த எனையும் விடாத இராமலிங்கம் - (இராமலிங்க அகவல்-800, 984)

விடுநீறே:

வள்ளற்பெருமானின் உருவத்தை மண்ணினால் செய்துவந்து அவரிடம் கொடுத்தபோது, "பொன்னான மேனி மண்ணானதே" என்று வருந்தி துயருற்று கோபப்பட்டு அந்த மண்சிலையினை கீழே போட்டு உடைத்தவர் வள்ளற்பெருமான். தனது மேனி புகைப்படத்தில்கூட விழக்கூடாது என்று தன் பொன்மேனியினை மறைத்துக்கொண்டவர் வள்ளற்பெருமான். அப்படிப்பட்ட திருத்தேகத்தில் சுடுகாட்டு சாம்பலை சுமந்திருப்பாரா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

வள்ளற்பெருமானின் திருவருட்பாவினை நோக்கும்போது, மரணமிலா பெருவாழ்விற்கும் திருநீறுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. திருநீறினை பூசிக்கொள்பவர்கள் பூசிக்கொள்ளுங்கள். ஆனால் சுத்த சன்மார்க்கம் பேசிக்கொண்டு அதனை செய்யாதீர்கள். அதைவிட அறியாமை ஏதுமில்லை. சுத்த சன்மார்க்கிகள் நீறினை விடவே வேண்டும்.

"ஆசாரங்களை விட்டு ஒழித்தவர்கள் மட்டுமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேரமுடியும். இது எமது கட்டுப்பாட்டு விதியாகும்". (பக்கம்-411) என்ற வள்ளற்பெருமானின் கட்டுப்பாட்டை மதித்து, விபூதி பூசும் ஆசாரத்தை விட்டவர்களே சன்மார்க்க சங்கத்தில் இணைய வேண்டும்.

என்னை மதிக்கும் உங்களிடம், நான் பால் அருந்தாதீர்கள் என்று கட்டளை இடுகிறேன். நீங்களும் என்சொல் கேட்டு பாலை அருந்தவில்லை. ஆனால் மோர் அருந்துகிறீர்கள். நான் உங்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்க, நீங்கள் பாலைத்தானே அருந்தவேண்டாம் என்று சொன்னீர்கள். மோர் அருந்தவேண்டாம் என்று சொல்லவில்லையே! என்று புத்திசாலித்தனமாக பதிலுரைத்து என்னிடமிருந்து தப்பிக்க முயலுகின்றீர். இது எவ்வளவு பெரிய அறிவீனம்.

பால் கூடாது, என்றால் அதிலிருந்து வருகின்ற மோர், தயிர், வெண்ணை, நெய் போன்ற அனைத்தும் அல்லவா தடைசெய்யப்பட்டுள்ளது என்று பொருள். அதுபோலவே சாதிகள், சமயங்கள், மதங்கள் பொய் என்றால் அதில் வழங்கப்படும் திருநீறு உட்பட யாவும் பொய்யே என்பதை அறிவதுதானே சுத்த சன்மார்க்கம். ஆகவே அன்பர்களே திருநீற்றுடன் இருக்கும் வள்ளற்பெருமானின் படத்தை இனி அச்சடிக்காதீர்கள். நல்லோர் (வள்ளலார்) மனதை நடுங்கச் செய்யும் செயலுக்கு அது ஒப்பாகும்.

விபூதி அணிவதை பல தத்துவங்களைக்கொண்டு விளக்க முற்படுவதும் தவறு. ஏனெனில் தத்துவங்களை எல்லாம் தனித்தனிக் கடந்து... தத்துவாதீத மேல் நிலையில் விளங்குவதுதான் சுத்த சன்மார்க்கம். பக்தி மார்க்கத்திற்கு விபூதி தேவை. சித்த மார்க்கத்திற்கு விபூதி தேவையில்லை. ஞான மார்க்கத்திற்கு விபூதி கூடவே கூடாது. எனவே சுத்த சன்மார்க்க கடவுளான அருட்பெருஞ்ஜோதியை வணங்கும் யாவரும் விடுநீறே.

   விடு நீறே
(தி.ம.இராமலிங்கம்)

கலி விருத்தம்

அருட் பெருஞ்ஜோதி அருள் செய்கையில்
குருவருள் எல்லாம் கூடி வருகையில்
மருள்நெறி எல்லாம் மருண் டோடுகையில்
திருநெறி மார்க்கத்தில் தீதாம் விடுநீறே.                           1

சுத்த சன்மார்க்கம் சுகந் தருகையில்
நித்தம் நினைக்கும் நெஞ்சம் வருகையில்
சித்த மார்க்கமெலாம் சுருண்டோ டுகையில்
பித்த னெனப்படும் பதரை விடுநீறே.                                  2

ஞான சபையுள் ஞானம் வருகையில்
வானத்தின் மீதுமயில் வந்தா டுகையில்
கான மதமெல்லாம் குதித்தோ டுகையில்
ஈன சாம்பலை இகழ்ந்து விடுநீறே.                         3

வடலூர் பூசம் வந்து பார்க்கையில்
மட மாதர் மயக்கம் தீர்கையில்
இடர் உலக இச்சை விடுகையில்
சுடலை மறக்க சினந்து விடுநீறே.                                        4

எமபயம் கடந்து எல்லாந் தானாகையில்
நமசிவாய மந்திர நிலை கடக்கையில்
சமயமத வழக்கெலாம் சட மாகையில்
கமலம் மலர்ந்து கூடவே விடுநீறே.                         5

ஜீவ காருண்யம் ஜீவனில் இருக்கையில்
ஈவதெனும் மூன்றும் அவனுக்கு அளிக்கையில்
பாவமெனும் மரணம் படுகுழி வீழ்கையில்
சாவதெனும் பழி சாராது விடுநீறே.                         6

சாகாக் கல்வியைசுத்த சன்மார்க்கம் அளிக்கையில்
வேகாக்காலை சன்மார்க்க விவேகம் தருகையில்
போகாப்புனலை சன்மார்க்க போகம் விழைகையில்
ஏகாதிபதி அப்பனை இசைந்து விடுநீறே.                          7

எல்லா உயிரும் இன்புற்று இருக்கையில்
நல்லான் நடுவில் நெற்றிக்கண் திறக்கையில்
வல்லான் பூட்டை வள்ளல் திறக்கையில்
பொல்லான் பூசும் பூதியாம் விடுநீறே.                                8

மாட விளக்கு மாண்புற எரிகையில்
நாட அதனையே நடனம் காணுகையில்
வேடம் போடும் வித்தை மறைகையில்
கூட வருவாரவர் கூடவே விடுநீறே.                                   9

பொது மார்க்கம் பாரினில் பரவுகையில்
இதுஅது எனஉரைப்பது அரிதா கையில்
மது மயக்கமாம் மதம் ஒழிகையில்
சது மறைகளும் சாய்ந்திட விடுநீறே.                                  10

-       தி.ம.இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.