Tuesday, June 21, 2016

முக்கிய தடைகள்



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியான கெளரவ ஆசிரியரின் தலையங்கம்

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.

                                                          - திருவருட்பிரகாச வள்ளலார்.


மேற்காணும் வள்ளற்பெருமானின் உபதேசங்களை நாம் இங்கே விளக்கம் கொடுக்கும் அளவிற்குதான் இன்னும் இவ்வுலகில் சுத்த சன்மார்க்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது என்பது வெட்கக்கேடாக உள்ளது. சன்மார்க்கம் பேசிக்கொண்டு வடலூர் என்னும் புனித மண்ணில் திரிபவர்களில் பலர் இன்னும் தங்களது பிறப்புரிமை என்று தவறுதலாக பின்பற்றும் சமய மதங்களை முற்றிலும் விட்டபாடில்லை. சமய மத பெரியவர்கள் போல் வள்ளலாரும் ஒருவர் என்றே அவர்கள் கருதிக்கொண்டு சுற்றித்திரிகிறார்கள். வள்ளற்பெருமானும் அவர்களை மன்னித்து அருள்புரிகிறார். ஏனென்றால் இவர்களில் பலரும் அக இனத்தவர்களாக இருக்கிறார்கள். அக இனத்தார்கள் எங்கு எப்படி இருந்தாலும் அவர்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் இவர்கள் புனிதர்களாக இருந்தாலும் சமயம் மதம் மார்க்கங்கள் என்கிற திரைகள் இன்னும் இவர்களை விட்டு நீங்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகவே உள்ளது. சுத்த சன்மார்க்கத்திற்கு இவைகள் தடைகளாக இருக்கின்றன என்பதை அறிந்தாலும், அதனை செயல்படுத்த இவர்களது மூடிய திரைகள் விடமறுக்கின்றன. இவர்களைப் போன்றவர்கள் அத்திரைகளை விலக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். வடலூர் மண் நமக்கு அதைத்தானே கற்பிக்கின்றது.

அடுத்ததாக, சுத்த சன்மார்க்கிகளுக்கு காமக் குரோதம் இருக்கக்கூடாது என்கிறார். காமக் குரோதம் என்றால் உடல் இச்சையால் எழுகின்ற இயற்கைக்கு முரண்பாடான செய்கைகளை குறிக்கும். இதனை காமம் மற்றும் குரோதம் என்று பிரித்தும் அறியலாம். உடல் இச்சை மற்றும் சினம் இவைகளை சுத்த சன்மார்க்கிகள் அண்டக்கூடாது. இவை இரண்டை பொறுத்தவரையில் நாம் அனைவரும் நமக்கு நாமே சுய பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும்.


கொலை புலையும் சன்மார்க்க அன்பர்களிடம் கிடையாது. அவைகள் நம்மிடமிருந்து குடிகெட்டுப் போய்விட்டன. ஆனாலும் வடலூர் மாதப்பூசம் மற்றும் தைப்பூசத்திற்கு வருகின்ற சாதாரண மக்களிடமிருந்து இன்னும் இக்கொடிய பழக்கங்கள் அவர்களை விட்டு விலகவில்லை. இவர்கள் எல்லாம் மற்ற வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதுபோல எவ்வித குறிக்கோளுமின்றி இங்கேயும் வந்து செல்கின்றனர். இவர்களையும் சுத்த சன்மார்க்கிகளாக மாற்றும் பொறுப்பு வள்ளற்பெருமான் உட்பட நம் அனைத்து சன்மார்க்கிகளுக்கும் உள்ளன.  இச்சாதாரண மக்கள் எல்லாம் ஒன்று கூடுமிடம் எது வென்றால், அது வடலூரில் உள்ள அன்னதான கூடங்கள்தான். எனவே வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய தருமச்சாலை முதல் அனைத்து அன்னதான இடங்களிலும் மக்கள் உணவு உண்ணும் முன்னர் அவர்களை, "வள்ளலாரின் ஆணைபடி நாங்கள் அசைவம் உண்பதை தவிர்ப்போம்" என்று உறுதிமொழி எடுக்க வைக்கவேண்டும். மேலும் அதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய காகிதச் சிற்றேடுகளை பொதுமக்களுக்கு வழங்கலாம் மற்றும் ஆங்காங்கு பதாகைகளும் மக்களின் பார்வையில் படும்படி வைக்கலாம்.

சில சன்மார்க்க சங்களில் புலையர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. அடிப்படை விதிகளே அங்கு மீறப்படுகின்றன. இப்படிப்பட்ட சன்மார்க்க புலையர்களையும், சன்மார்க்க சங்கங்களையும் நாம் என்னென்பது? வடலூர் தெய்வ நிலையத்தில் ஊழியம் செய்யும் அரசு ஊழியர்கள் எல்லாம் அக இனத்தார்கள்தானா? என்பதிலும் சந்தேகம் உள்ளதல்லவா? சந்தேகத்தின் படி, வள்ளலாரின் தலைமை இடத்திலேயே புலையர்கள் நிர்வகிக்கின்றார்கள் என்றால் அக்கொடுமையை நாம் எங்குச் சென்று முறையிடுவது?

துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் இவைகள் ஐந்தையும் தவிர்க்க வேண்டுமானால் நாம் புலை, கொலை, காமக் குரோதம், மதம், சமயம் ஆகிய ஐந்தையும் தவிர்க்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. இவற்றை தவிர்த்து சுத்த சன்மார்க்கியாகாமல் நாம் சித்திவளாகம், வடலூர், திருமருதூர், கருங்குழி, சின்ன காவணம் போன்ற புனித இடங்களுக்கு செல்லுததால் யாதொரு பயனும் இல்லை.

நாம் விடவேண்டிய ஐந்தில் யாதேனும் ஒன்றினை பற்றியிருந்தாலும், அருளாளர் வருகின்ற தருணத்தில் நமக்கு உலகியல் அனுபவ பாக்கியம் மட்டும் நமது தரத்திற்கு தகுந்தவாறு வழங்குவாரே அன்றி இறையுலக அனுபவத்தை நமக்கு வழங்கமாட்டார். எனவே நாம் இப்போதே அதிதீவிர எண்ணங்கொண்டு இவை ஐந்தினையும் விட்டுவிடுவோம். சுத்த சன்மார்க்க பாதையில் நடை பயில்வோம்.

                                                                   - தி.ம.இராமலிங்கம்.
 


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.