Tuesday, June 21, 2016

கிறுஸ்து - June-16



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

கிறுஸ்து

நீதிமொழிகள் 28:13,9

13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
          தான் செய்த பாவங்களையும், தன்னுடைய சிறுமைகளையும், தன்னுடைய தவறுகளையும் பிறர் அறியா வண்ணம் மறைக்கும் முயற்சியில் ஈடுபவர்கள் யாரும், மீண்டும் மீண்டும் அதே பாவங்களை செய்ய விரும்புகிறார்கள் அல்லது தனது மனதால் மீண்டும் அதே தீய காரியங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இவர்களைப் போன்றோர் யாரும் சிறந்ததொரு இறை வாழ்வை அடைய முடியாமல் உலகியலில் சிக்கி பல்வேறுவகைப்பட்ட புகழ்ச்சிகளுக்கும் இகழ்ச்சிகளுக்கும் ஆளாகி முடிவில் நிம்மதியின்றி இருப்பார்கள்.
          நான் இன்ன பாவத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்டேன். மறுபடியும் இந்தப் பாவங்களை செய்ய முற்படமாட்டேன். என்னை மன்னியுங்கள்! என்னால் பாதிக்கப்பட்டவர்களை அந்த பாதிப்பிலிருந்து விடுவிக்கும்படி தங்களிடம் வேண்டுகிறேன்! என்று இறைவனிடம் சரணாகதி அடைபவர்களால் மட்டுமே, அவனது அருள் கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு தான் செய்த பாவங்களை எண்ணி வருந்துபவர்களிடம் நெஞ்சில் இரக்கம் குடிகொள்கிறது. எவரிடத்தில் இரக்கம் இருக்கிறதோ அவரிடத்தில்தான் இறைவன் ஆட்சி நடைபெறும். அந்த இரக்கம் வரவேண்டுமானால் யாவரும் தங்களுடைய சிறுமைகளை எண்ணி வருந்த வேண்டும். அச்சிறுமைகளை தொடர்ச்சியாக செய்யாத வண்ணம் மனதிடம் பெறவேண்டும்.
          வள்ளற்பெருமான் எழுதிய மனுமுறை கண்ட வாசகம் என்னும் நூலில் என்னென்ன பாவங்களை மக்களாகிய நாம் செய்கின்றோம் என்று பட்டியல் இட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த பாவப்பட்டியலில் உள்ளனவற்றில் அநேகப் பாவங்களை நாமும் தற்போது  செய்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்காக வருந்துகிறோமா என்றால் இல்லை! நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோமா என்றால் இல்லை! இறைவனிடத்திலாவது அதற்காக மன்றாடி அழுகிறோமா என்றால் அதுவும் இல்லை! இந்த பாவங்களெல்லாம் தற்போது வாழும் மக்களில் பெரும்பாலர்க்கு அன்றாட வாழ்க்கை முறையாகிவிட்டது. அதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. பாவச்செயல்கள் செய்வதின் மூலமே உலகியல்/அரசியல் அதிகாரங்கள் அவர்களை வந்தடைகின்றன. மக்களாகிய நாமும் அவர்களை பார்த்து மகிழ்கிறோம், பெருமையடைகிறோம், அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். இந்நிலையில் தாம் செய்கிற பாவங்களை மறைக்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. அதனை வெளிப்படுத்தினால்தான் மக்களிடையே மரியாதை கிடைக்கிறது. அதனால் இவ்வகை வெளிப்படுத்துதல் அவர்களிடையே இரக்கம் தோன்றுவதற்கு மாறாக, நான் என்ற ஆணவம் அவர்களிடையே தலையெடுக்கிறது. இதற்கு உண்மையான பிரதிபலனாக அவர்கள் அடைய இருப்பது இறை தண்டனை ஒன்றே.     

          இங்கு, நமது பாவங்களை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பது எதற்காக எனில் அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு சுகம் அடையவேண்டும் என்பதே.  கடவுளுடைய பெருமைகளையும் தரத்தையும், நமது சிறுமைகளையும், குறைகளையும், தரத்தையும் ஊன்றி விசாரித்து வருதல் வேண்டும் என்பார் வள்ளற்பெருமான். நமது பாவங்களையும், சிறுமைகளையும் நமக்கு நாமே ஊன்றி விசாரித்து வருகையில் அவையெல்லாம் நமது இரக்கத்தால் விலகி, மெல்ல மெல்ல கடவுளுடைய பெருமைகளை நாமும் அடைந்து பெருவாழ்வு பெறலாம்.  


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.