Tuesday, June 21, 2016

கபீர் தாசர்



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை


கபீர் தாசர்

          இந்துக்களின் புனித நகரான வாராணாசியில் வாழ்ந்தவர் இவர். ஆனால் பிராமணர் அல்லாத பிரிவைச் சேர்ந்தவர். அவர் நாலாவது வர்ணமாகிய சூத்திரர். எனவே தீண்டத் தகாதவர். பிறப்பால் அவரின் மதம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆம் அவர் முறை தவறி பிறந்த குழந்தை .

          முறைகேடாக பிறந்த குழந்தை கிடையாது. முறை கேடான பெற்றோர்தான் உண்டு. கங்கைக் கரையில் விட்டு சென்ற அக்குழந்தை, மிகச் சிறந்த குரு ராமனந்தரின் கையில் கிடைத்தது. அதி காலையில் குளிக்கச் சென்ற குருவின் பாதத்தை குழந்தையின் கைகள் பற்றிக் கொள்ள, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆசிரமம் சென்றார்.

          அங்கு அவருக்கு ஆயிரக் கணக்கான சீடர்கள். குழந்தையை எங்காவது அனாதை இல்லத்தில் சேருங்கள் அல்லது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என பெரும் பிரச்சனை. ஆனால் ராமனந்தரோ "என் பாதத்தை பற்றி சரணடைந்த குழந்தையை
மறுத்து உதறவே முடியாது" என மறுத்து விட்டார்.


          பலமான வாக்கு வாதம். குழந்தையின் கையில் 'கபீர்' என எழுதி இருந்தது. அது ஒரு இஸ்லாமிய பெயர். கடவுளின் நூறு நாமங்களில் ஒன்றுதான் அது. அக் குழந்தை தன் பாதத்தைப் பிடித்ததால் அதைத் தனது சீடனாகவே நினைக்க ஆரம்பித்தார்.

இவரைப்பற்றி ற்றொரு வரலாறும் இவ்வாறு கூறுகின்றது,

          தினைந்தாம் நூற்றாண்டில் வாரணாசியில் தோன்றிய ஞானி கபீர் தாசர். இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. நெசவுத் தொழில் செய்யும் ஒரு முகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரார் கூறுகின்றனர். ஒரு பார்ப்பன விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் பிறகு "நீரு" என்ற பெயருடைய ஒரு முகமதிய நெசவுக்காரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டார் என்றும் மற்றொரு சாரார் கூறுகின்றனர். ஆனால் வளர்க்கப்பட்டது ஏழை முகமதிய நெசவுக் குடும்பத்தில்தான் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகின்றது.

          சிறுவனாக இருக்கையிலேயே ராமானந்தர் என்ற துறவியின் போதனைகளால் கபீர் ஈர்க்கப்பட்டார். (முதல் வரலாற்றில் ராமானந்தர்தான் கபீரை வளர்த்ததாக கூறப்பட்டுள்ளதையும் கவனிக்கவும்) திருமணம் செய்து கொண்டு ஏழை நெசவாளியாகவே வாழ்ந்த போதும் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை இளமையிலேயே கபீர் எட்டி இருந்தார். அவரது ஆன்மீக தத்துவக் கருத்துக்கள் அதிகமாக தோஹா (கண்ணி) என்ற ஈரடிக் கவிதை வடிவில் இருந்தன.

          கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத்தெளிவாகச் சொன்னார், "நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின் விளைவுகளை அவர்களே சந்திப்பர்."

          மிக எளிமையாக வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இருபாலரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார். அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்தபோதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் சென்ற வண்ணம் இருந்தனர்.

          அவர் குடிசைக்குச் செல்ல கசாப்புக் கடைத்தெரு வழியாகப் போக வேண்டும் என்பதால் அக்காலத்தில் சில உயர்ஜாதி இந்துக்களுக்குத் தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் ஒரு மகானிடம் இருந்து ஞான வாக்கியங்களைக் கேட்டறியவும் அவர்களுக்கு பேரார்வம் இருந்தது. தங்கள் தயக்கத்தை அவர்கள் கபீரிடம் வெளிப்படையாகவே சொன்னபோது கபீர் பாடினார்,

"மனையொட்டி மாமிசக் கடை என வருந்துவது எதற்கு?
வினையொட்டி வருவதே வாழ்வு. அவரவர் வினை அவரவர்க்கு!"

          வெளியுலக அடையாளங்களைவிட உள்மனம் செயல் ஒட்டியதே ஆன்மீக வாழ்க்கை என்பதில் அவர் தெளிவாக இருந்தார். "இவ்வுலகில் மிகக்கொடியவன் யார் என தேடிக்கொண்டே இருந்தேன், இறுதியில் அது என்னைத்தவிற வேறு யாருமில்லை என்பதைக் கண்டு கொண்டேன்" என்று கபீர் தாசர் தனது தோஹாவில் பாடுவதன் மூலம், நாம் நம்மை அறிவதுதான் ஆன்மீகம் என்பதை எடுத்துரைத்தார்.

          கபீரின் பக்தி இயக்கம் "கபீர் பந்த்" என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், அவரைப் பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்புகிறார்கள். அண்ணல் அம்பேத்கரும் கபீர் தாசரின் பக்தரே. அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியப்பின்னும், அவரது மரணத்திற்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர் கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார்.

          வர்ணாசிரம கோட்பாட்டுக்கு எதிரானவராகவே இருந்தார். பல பாடல்களில் பார்ப்பணீயத்தை கண்டித்திருக்கிறார். மனிதர்களிடையேயான சமத்துவத்தை வலியுறுத்தினார். மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை வந்தது. அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து இஸ்லாம் மக்களிடம் ஏற்பட்டதுதான் வேடிக்கை. கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்தபோது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்தப்பூக்களை எரித்தும், அடக்கம் செய்தும் இறுதி மரியாதை செலுத்தியதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இன்றும் காசியில் அவருடைய கோவிலும், அவரது சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன.

'கடைவீதி வியாபாரி,
வாடிக்கையாளர் முன்னால்
சரக்கனைத்தையும் விரிப்பது போல
பிரபஞ்சம் முழுவதிலும்
இறைவன் படர்ந்து நிரம்புகிறார்.
ஆனால்,
ஒரு கூட்டம் எரிக்கிறது,
ஒரு கூட்டம் புதைக்கிறது,
எனக்குப் பிடிக்கவில்லை,
நான் என் இரு வீடுகளையும் துறந்தேன்.'

          அவரின் கவித்துவம் பலராலும் இன்றுவரை வியந்து போற்றும் விஷயமாக இருக்கிறது. எளிமையான ஹிந்தியில் உயரிய கருத்துக்கள்.

ஒ சீடனே, எங்கே என்னை தேடுகிறாய்?
பார்! அதை எல்லாம் தாண்டி நான் இருக்கிறேன்.

நான் கோவிலிலும் இல்லை! மசூதியிலும் இல்லை!
காபாவிலும் இல்லை! கைலஷிலும் இல்லை!
கொண்டாட்டங்களிலும் இல்லை! யோகாவிலும் இல்லை!
உண்மையைத் தேடும் கலையை கொண்டவர்களே
கண நேரத்தில் காணலாம் என்னை!
....சாதுவே !
கடவுள் ஒவ்வொரு சுவாசத்தின் சுவாசத்திலும் இருக்கிறான்!

          எளிமையாக விளக்கும் அவரின் கவிதைகள் இன்றுவரை மிகப் பிரபலம். பலர் ராம நாமத்தை அடிக்கடி உச்சரிப்பார்கள். பலர் இஸ்லாமிய கடவுளின் நாமத்தை உச்சரிப்பார்கள். எல்லாமே உலகைப் படைத்தக் கடவுளின் ஒரே நாமம்தான் எனப் பொருள் படும் "கோயி போலே ராம் ராம் கோயி........"எனும் பாடல்.

          அவர் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில், இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே நிலவி வந்த பூசல்களைக் கண்டு வெதும்பி,  'இறைவன் பெயரைச் சொல்லி இரண்டுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தை ' மாற்றியமைக்கத் தன் சொல்லம்புகளை எய்தார். அது மட்டுமின்றி, போலியான மதச்சடங்குகளையும் தேவையற்ற நம்பிக்கைகளையும் களைந்து, ஆன்மீகம் என்பதை இறைவனை நாடிச் செல்லும் தூய பாதையாக அமைக்கவும் முற்பட்டார். தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் காசி மாநகரில் கழித்த கபீர், தன் இறுதிக் காலத்தில் காசியை விட்டு மஹாகர் என்ற இடத்திற்குச் சென்று விடுகிறார். 'காசியில் இறந்தால் தான் மோட்சம்' என்ற அக்கலத்து (இக்காலத்தும்) நம்பிக்கையைத் தான் நம்பவில்லை என்ற பிரகடனமே அவனது அந்தப் பயணம். அதைப் பற்றி எழுதிய ஒரு பாடலில்,
'ஞானிகளே கேளுங்கள்,
கபீர் சொல்கிறான்,
வறண்ட மஹாகரும்
காசிக்கு இணைதான்,
இதயத்தில் இறைவனை
நிரப்பிக் கொண்டோருக்கு'

என்று உறுதியாக அறிவித்து விடுகிறான் கபீர்.


          'கபீர் சொல்கிறான்' என்று தன் பாடல்களில் அவ்வப்போது கூறிச் செல்வது கபீரின் தனிப்பட்ட ஒரு பாணியாகும். திருக்குறளைப் போல் இரண்டு வரிகளாலான 'தோஹா' என்ற இலக்கிய வடிவத்தைவிட அவரது நீளமான பாடல்களும் நம்மை கவரும். அவற்றில்தான் 'கபீர் சொல்கிறான்' என்ற பிரயோகமும் மிகுதியாக இருக்கும். இந்த இரு வார்த்தைகளை மிக இயல்பாகத் தன் பாடல்களில் அமைத்துப் பாடும்போது, கவிதையிலிருந்து வாசகனை அந்நியப்படுத்தி விடாமல் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும், 'கபீர் சொல்கிறான்' என்பதில் தான் எத்தனை எத்தனை சுவையான மாற்றங்கள்?! சில நேரம் அது நம் காதுகளில் ஆசானின் அறிவுரையாகக் கேட்கிறது. சில நேரம், ஆசை மிக்க காதலியின் கெஞ்சலாக. சில நேரம், சமூகப் பொறுப்பும் கோபமும் கலந்த தலைவனின் கட்டளையாக. இப்படி வாசகனைக் கவிதைக்குள் இழுத்து நனைய வைத்துப் பரவசப்படுத்துவதில் கபீர் திறமைசாலி.
          கடவுள் = உள் + கட. தனக்கு உள்ளெ கடந்து சென்று ஆன்மாவின் மூலத்தில் இறைத்தன்மையைக் கண்டறிவதே ஆன்மீகத்தின் உண்மைத் தத்துவம் என்பதில் கபீருக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. கவிஞர் சேவியர், ஒரு கவிதையில்,

'புனிதப் பயணம் என்பது
நாம் செல்வதல்ல,
நமக்குள் செல்வது'

என்று அழகாகக் குறிப்பிடுவார். கபீரும் இத்தகைய சிந்தனையைத் தன் பாடல்களில் அங்கங்கே தூவிச் செல்கிறான். ஒரு பாடலில்,

'இந்துக்களுக்குக் கோவிலிலும்
இஸ்லாமியர்களுக்கு மசூதியிலும்
இறைவன் உறைகிறார்,
ஆட்சி புரிகிறார்.

கபீர் கேட்கிறான்,
எங்கு கோவில் இல்லையோ,
எங்கு மசூதி இல்லையோ,
அங்கு இறைவனே இருப்பதில்லையோ?'

என்று கேள்வி எழுப்புகிறார். இறைவனுக்கான இல்லத்தைத் தத்தம் இதயத்தில் காணச் சொல்லி அறிவுறுத்துகிறார். தனக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களை ஆணித்தரமாகக் கண்டிக்கவும் கபீர் தயங்குவதே இல்லை. தயவு தாட்சண்யம் பார்ப்பது இல்லை.
'பண்டிதரே!
நீர் சொல்வது
எத்தனை பெரிய புளுகு?
இராமநாமத்தை
ஜெபிப்பதால் மட்டுமே
சுவர்க்கம் கிட்டி விடுமோ?
கபீர் சொல்கிறான்,
சர்க்கரை என்று சொல்வதால் மட்டுமே
வாய் இனித்து விடுமோ?'

இதயத்தில் அமைதி இல்லாமல், கஜ் ஏன் செல்வீர் ஷேக்காரே,
இதயத்தில் நிறைவு மிக்காமல், குதாவைக் காண்பது எப்படியோ?
என்று இந்துவையும், இஸ்லாமையும் கேட்கும் அவரது பாடலே இதற்கு நல்லதொரு சான்று.  
'நான்
காகிதமும் மையும் தொட்டதில்லை.
என் கரங்கள்
பேனாவைப் பிடித்ததில்லை'
என்று கபீர் ஒரு பாடலில் கூறுவதை, 'அவர் எழுதப்படிக்கத் தெரியாதவன்' என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்வதுண்டு. உண்மையில் இறைவனின் உண்மைப் பொருளை அறியாமல் புனித சாத்திரங்களைப் படித்தும் எழுதியும் பிரசங்கம் செய்தும் வாழ்பவர்களுக்கு எதிரான குரலே அது.

'கபீர் சொல்கிறான்,
நாடியில் உணரப்படாத எதுவும்
நம்பத்தக்கது அல்ல.'

என்பது கபீரின் அறைகூவல். அதுவே அவர் இறுதி வரை கடைப்பிடித்த கொள்கை.

'மாலையின் நிழல்
இருளாக நீள்கிறது,
உடலையும் மனதையும்
அன்பு மட்டுமே வெல்கிறது.

நீங்கள் உங்கள் ஜன்னல்களைத் திறவுங்கள்.
அன்பின்
எல்லையற்ற வெளிக்குள் குதியுங்கள்.

ஞானமென்ற தாமரையின்
தேனைக் குடித்து
காதலின் அலைகளை அரவனைத்துக் கொள்ளுங்கள்.

சாது சகோதரர்களே கேளுங்கள்,
கபீர் சொல்கிறான்,
நான் பரம்பொருளை
எனக்குள்ளே கண்டறிந்தேன்.'
கபீரைப் படிக்கப் படிக்க எளிமையும் இனிமையும் வாழ்வினில் பெருகும்.

http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.