Tuesday, June 21, 2016

புத்தம் தழுவிய பேரரசன்



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

புத்தம் தழுவிய பேரரசன்

          கி.மு. 260. மேற்கில் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களையும், கிழக்கில் வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளையும், வடக்கில் பூடான், நேபாளம் போன்ற இமாலய நிலங்களையும், தெற்கே தமிழகம் தவிர்த்த பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாபெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன்.  தன் பதவியை நிலைநாட்ட போர் தொடுக்கத் தயங்காதவன். அரியணையைக் கைப்பற்ற உடன்பிறந்த அண்ணன்களையே காவு வாங்கியவன். தன் மீதுள்ள விசுவாசத்தை நிரூபிக்க தன் கீழ் இருந்த ஊழியர்களின் உயிரைக் பிடுங்கியவன். தன்னை எதிர்க்க நினைத்தவனை விரைந்து அழித்தவன். மொத்தத்தில் கொலை வெறிபிடித்தவன். செங்கிஸ்கானுடனும் ஹிட்லருடனும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவனை மஹா அலெக்ஸாண்டருடனும் அக்பருடனும் சேர்த்தது வைத்த நிகழ்வு, கலிங்கப் போர். அவன் என்று குறிப்பிடப்படவேண்டியவன் மரியாதைக்குரியவராக மாறியதற்குக் காரணம் இந்த இறுதிப் போர். அவர், சாம்ராட் அசோக கக்கரவர்த்தி.


          திரும்பும் இடம் எங்கும் ஓலக்குரல். கண்ணுக்கெட்டிய தூரம்வரை குருதி வெள்ளம். தீப் பற்றி எரியும் கட்டடங்கள். செத்து மடிந்து கிடக்கும் யானைகள், குதிரைகள், மனிதர்கள். இறந்த போர்வீரர்களைச் சுற்றி நின்று கதறும் உறவுகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை பலி வாங்கிக்கொண்டு அசோகருக்கு வாகை சூட்டியது கலிங்கத்துப் போர்க்களம்.

          பார்ப்போர் மனதை பதைபதைக்கச் செய்யும் இக்காட்சிகளுக்கிடையே மன்னன் அசோகன் அமர்ந்திருந்தான். வல்லூறுகளும் பிணவாடையும் வெற்றி முழக்கங்களும் எதிரொலித்த சூழலில் அவனிடம் ஒரே ஒரு சிந்தனை! `வெற்றி யாருக்கு? எனக்கா இல்லை காலனுக்கா? வெற்றி எனக்குத்தான் என்றால் இத்தனை உயிர்களை இழந்தது எப்படி வெற்றியாகும்? ஒரு சாராரின் கண்ணீரும் ரத்தமும்தான் மற்றொரு சாரரின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா? ஒருவன்  மடிந்தால்  தான் மற்றொருவன் தழைக்க முடியுமா?' இது போன்ற கேள்விகள் அசோகனைச் சல்லடையாகத் துளைத்தெடுத்தன. `மனத்தில் ஏன் இந்த அமைதியற்ற நிலை? இத்தனை பெரிய வெற்றி பெற்றும் துளியும் சந்தோஷமில்லையே. குற்ற உணர்வு பாடாகப் படுத்துகிறதே. இதையெல்லாம் அறிந்துதான் நம் பாட்டனார் சந்திரகுப்த மௌரியர் சமணராக துறவு மேற்கொண்டாரா?'

          அப்போதுதான் ஞானோதயம் பிறந்தது. `ஆம், உலகை வெல்லத் தேவை அமைதி, போர் அல்ல!' தெளிவடைந்தார் அசோக மாமன்னர். அமைதி வேண்டி புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார் அசோகர். பௌத்தத்துக்கு ஆற்றும் முதல் தொண்டாக புத்த பிக்குக்கள் சங்கத்தைக் கூட்டினார். வாய் மொழியில் இருந்த புத்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. காலம் காலமாக மனப்பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த கருத்துகள் ஏட்டில் பொறிக்கப்பட்டன. பின்னர், மக்களிடத்தில் புத்தரின் கருத்துகளைக் கொண்டு செல்லும் பொருட்டு உலகின் நாலாப்புறமும் புத்தபிக்குகளை அனுப்பி வைத்தார். தவிர தனது மகன் மஹிந்தரையும், மகள் சங்கமித்திரையையும்கூட பௌத்தமதத் தொண்டுக்கு அர்ப்பணித்தார். இவ்வாறு தென்திசை நோக்கி வந்த மஹிந்தராலேயே தமிழ் நாட்டுக்கு பௌத்தம் அறிமுகமானது. பெரும்பான்மை வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து இது.

          அசோகர் பயன்படுத்திய நான்குமுக சிங்கம் சின்னத்தையே இன்றைய இந்திய அரசு தனது சின்னமாகக்கொண்டுள்ளதை நாம் அறிவோம்.


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.