Tuesday, June 21, 2016

பல்லி சொல்லுமா பலன்?



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

பல்லி சொல்லுமா பலன்?

           கெத்கெத்கெத்…” என்று கத்திடும் பல்லி சொல்லுக்குப் பலன் என்ன? கட்டாயம் உண்டு.  பல்லிசொல்வது’, அதான் ஆண் பல்லி கத்துவது, ஒருகல்யாண மாலைவிளம்பரமே. தான் இருப்பதை அறிவிக்கவும், “நான் தயார். நீங்கள் தயாரா?” என்று கேட்டிடவும்.  துணை சேர்க்கத் தான் பல்லி கத்துகிறது, மன்னிக்கவும், ‘சொல்கிறது’,.  நமக்குப் பலன்களை வாரி வழங்குவதற்காக அல்ல.

          பல்லி விழுதலுக்குப் பலன்?  பல்லி சாதாரணமாக விழாது.  வயது முதிர்ந்தாலோ, வியாதி வந்தாலோ தான் விழும்.  நமக்குப் பலன்களை அளிப்பதற்காக அல்ல அவை விழுவது.  மரணம் அவற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாகத் தான்.

இலக்கியங்களில் நம்பிக்கை!

விஞ்ஞானத்துக்கோ, தர்க்கத்துக்கோ அப்பாற்பட்ட பல நம்பிக்கைகள் - சகுனம் பார்த்தல், குறிகேட்டல், இடதுகண் துடித்தல், பல்லி சப்தம் போன்றவை மக்களை இயக்குகின்றன என்பது மறுக்க இயலாத உண்மை. வீட்டில் பல்லியின் சப்தம் கேட்டாலே அது ஏதோ செய்தியை அல்லது வருங்கால நிகழ்வை உணர்த்துகிறது என்பது மற்றொரு நம்பிக்கை.

தலைவனைப் பிரிந்த தலைவி, மாலை நேரத்தில் வீட்டில் சோர்ந்து கிடக்கையில் எங்கோ ஒரு பல்லியின் சப்தம் ஒலிக்கிறது. தலைவி திடுக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கித் தொழுகிறாள். "என் தலைவன் குறித்து நல்ல செய்தியாகச் சொல்" என நடுங்கி வேண்டுகிறாள்.

அகநானூற்றுப் பாடல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது.

                   மையல் கொண்ட மதனழி இருக்கையள்
                   பகுவாய்ப் பல்லி படுதோறும் பரவி,
                   நல்ல கூறு என நடுங்கிப்
                   புல்லென் மாலையொடு பெருங்கால் தானே.

பல்லி சத்தமிடுவதை “கௌளி” என்பர். பல்லி “கௌளி” சொன்னால் தரையில் மூன்று முறை விரல்களால் தட்டுவது, இன்றும் பலரிடம் உள்ள பழக்கம். இதனைக் கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழர்கள் பல்லி சொல்லும் பலனை நம்பிவந்தனர்.

இதனை அகநானூற்றுப் பாடல்கள் நிரூபிக்கின்றன. “முதைச்சுவல் கலித்த.... பல்லிப் பாடுஒர்த்துக் குறுகும் புருவைப் பன்றி”  ..... பல்லியின் சொல்லை அறிந்து, நல்ல நிமித்தம் என்று எண்ணி இளம் பன்றி வருகின்றது. (அகநானூறு 88)

        “மையல் கொண்ட... பல்லிப் படுதொறும் பரவி நல்ல கூறு என நடுங்கி” .... பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும்போதெல்லாம் வணங்கினாள் நல்லது சொல் என்று நடுங்கி வேண்டினாள். (அகநானூறு)

        பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன... ஆடுமால் இடனே” (கலித்தொகை பாடல் 10-21,22). பல்லி இந்தத் திசையில் ஒலித்தால், நன்மை என்றும், வேறுதிசையில் வேறு விதமாக ஒலி எழுப்பினால் தீமை என்றும் பழந்தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

          இராமாயணக்கதையில்கூட அனுமன் காசிக்குச்சென்று ஆத்ம லிங்கத்தைத் தேடும்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின்மீது கருடன் வட்டமிடவே, அந்த லிங்கம்தான் ஆத்மலிங்கமாக இருக்குமோ? என நினைக்கையில் அப்போது அங்கே ஒரு பல்லி கத்துகிறது, உடனே பல்லியே கூறிவிட்டது, இதுதான் ஆத்மலிங்கம் எனத்தீர்மானித்து, அதனை எடுத்துச்செல்கிறான் அனுமன். பிறகு காலபைரவர் ஆத்மலிங்கத்தை அனுமனுக்குக் காட்டிக்கொடுத்த கருடன் இனிமேல் காசிக்குள் நுழையத் தடைவிதித்தார். பல்லியைப்பார்த்து நீ காசியில் வசிக்கலாம், ஆனால் கத்தக்கூடாது, என ஆணையிட்டாராம். அதனால், இன்றும் காசியில் கருடன் பறக்காது என்றும், பல்லி கத்தாது என்றும் கூறப்படுகின்றது.

          இவ்வாறு, பல்லிச்சொன்னால் பலிக்கும் என இலக்கியங்கள் பல எடுத்துரைக்கின்றன. பல்லிசொல்லின் பலன் எனச் சொல்லப்படுவதையும் பார்ப்போம்,

          பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தைப் பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம்.

          இதே கிழக்குத் திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம்.

          தென்கிழக்குத் திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாகக் கலகம் வரும்.

          தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய்க் கிரகத்தின் சாரம் சத்தைப் பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும்.

          இந்தத் தெற்கு திசை அடுத்த வீட்டு, அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்கச் செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும்.

          தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்குப் புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்மப் பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.

          இதே நிருதி திசை அடுத்த வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் எதிர்பாராத விருந்து வரும் அல்லது சுபச்செய்திகள் வந்துசேரும்.

          மேற்குத் திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும்.

          இதே மேற்குத் திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாகக் கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.

          வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

          15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் என்ற அத்வைத ஞானி பல நூல்களை இயற்றியுள்ளார். ஆண்டாளின் பாடலை அடியொற்றிப் (கனாக் கண்டேன் தோழி) "பல்லிப் பாட்டு" கண்ணிகள் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாடல்,

                   ஓடும்மனம் நம்மினுடன் உறவு செய்யுமாகில்
                             உள்ளநிலை மெல்ல உணர்வாகி வருமாகில்
                   நாடும்இடம் எங்கும் அறிவாகி விடுமாகில்,
                             நல்லகுரல் நல்லதிசை சொல்லு சிறுபல்லி.

          தத்துவராயரைப் பின்பற்றித் திருஅருட்பிரகாசரின் மாணவர் ச.மு.. அவர்களும் வள்ளலார் வருவாரா? என நல்ல நிமித்தம் கூறுவேண்டும் பல்லியே, என "நன்னிமித்தம் பராவல்" என்று 96 கண்ணிகள் இயற்றியுள்ளார்.  (நன்றி-பிரபந்தத்திரட்டு-அ.திருநாவுக்கரசு பதிப்பு)

          இவ்வாறு தமிழ் மக்களின் மூட வழக்கங்களை தமிழ் இலக்கியங்கள் உண்மை என்றும் கற்பனை என்றும் இரு நிலைகளிலும் பாடி வந்துள்ளன. பல்லி கத்துதலும், கருடன் வானில் பறத்தலை பார்ப்பதும், பூனை குறுக்கில் போவதும் போன்ற இயற்கையான நிகழ்வுகளை எல்லாம் ஆறறிவுடைய மனிதன் தனக்கான பலனாக அதனை எடுத்துக்கொள்வது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத கண்மூடி வழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்பது வள்ளற்பெருமானின் கனவு. அக்கனவினை நாம் நிறைவேற்றுவோம். 'எல்லாம் சொல்லுமாம் பல்லி, கழனிப் பானையில் விழுமாம் துள்ளி'.  


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.