Tuesday, June 21, 2016

விருப்பத்தின் சக்தி



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

விருப்பத்தின் சக்தி

          ஒரு ஊரில் சுத்த சன்மார்க்க பெரியார் ஒருவர் இருந்தார். அவர்களிடம் பல மாணவர்கள் சன்மார்க்கம் பயின்றுக்கொண்டிருந்தார்கள். சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், அதிகாரிகளின் பிள்ளைகள் கூட அவரிடம் மாணவர்களாக இருந்தனர்.

          அப்பெரியார் தச்சுப் பணி செய்வதில் கைதேர்ந்தவராகவும் இருந்தார். அவர் காட்டிற்குச் சென்று மரங்களை வெட்டி வந்து நாற்காலிகள் உள்ளிட்ட மரச்சாமான்கள் செய்வார்.

          சுத்த சன்மார்க்கரான அவர் செய்யும் நாற்காலிகள் ஏனைய தச்சர்கள் செய்யும் நாற்காலிகளைவிட மிகவும் கலைநயத்தோடு இருக்கும். அவரது நாற்காலிகள் ஒவ்வொரு பகுதியிலும் அழகும் நேர்த்தியும் நடனம் புரியும். தேவலோகத்தில் கூட இத்தனை அழகுள்ள நாற்காலிகள் இருக்காது! என்று பார்ப்பவரை வியக்க வைக்கும்.

          ன்மார்க்கப் பெரியாரை பற்றி அறிந்த அந்நாட்டு முதலமைச்சர் ஒருநாள் அவரைத் தேடி வந்தார். அப்பெரியாரிடம் தனக்கு ஒரு சிம்மாசனம் செய்து தரும்படி கேட்டார்.

          அப்பெரியாரும், முதலமைச்சரிடம் செய்து தருவதாக வாக்களித்தார்.

          மறுநாளே அவர் வழக்கம்போல காட்டிற்குச் சென்றார். சில நாட்கள் கடந்தன. அப்பெரியாரை காணவில்லை.

          காட்டில் மரம் அறுக்கச் சென்ற அவருக்கு என்ன ஆனதோ? என்று முதலமைச்சருக்கு கவலை தோன்றியது.

          நல்ல வேளை, முதலமைச்சர் கவலைப்படும்படியாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் ஓரிரு நாட்களில் திரும்பி வந்தார். ஆனால் அவர் கைகளில் மரம் ஏதுவும் இல்லை.

          வெறுங்கையாக வந்த அவர் முதலமைச்சரிடம், "ஐயா! என்னை மன்னிக்க வேண்டும். காட்டிலுள்ள எந்த மரமும் உங்களுக்கான சிம்மாசனமாக மாற விரும்பவில்லை! என்றார்.

          அப்பெரியவர் கூறியதைக் கேட்ட முதலமைச்சருக்கு ஒருபுறம் வியப்பு. மறுபுறம் லேசான கோபம்.

          "என்ன சொல்கிறீர்கள்? மரத்திற்கு ஏது விருப்பம்? நல்ல மரமாகப் பார்த்து வெட்டி வரவேண்டியதுதானே?" என்று கேட்டார் முதலமைச்சர்.

          முதலமைச்சர் சொன்னதைக் கேட்ட அப்பெரியவர் புன்னகைத்தபடி சொன்னார்:

          "அப்படியெல்லாம் ஏதேனும் ஒரு மரத்தை வெட்டிவந்து நாற்காலியாகச் செய்துவிட முடியாது!"

          "ஏன் முடியாது? எந்த மரத்தையும் சிறந்த நாற்காலியாக மாற்றும் கலைத்திறமை உங்களிடம் உண்டல்லவா?" என்றார் முதலமைச்சர்.

          "இல்லையில்லை...... என்னிடம் எந்தத் திறமையும் இல்லை...." என்றார் அப்பெரியவர்.

          "என்ன சொல்கிறீர்கள் குருவே?" என்றனர் மாணவர்கள்.

          "ஆமாம். நான் சொல்வது உண்மைதான். நான் ஒவ்வொரு முறை நாற்காலி செய்ய மரம் தேடிப் போகும்போதும், காட்டிற்குள் சென்ற நான் மரங்களிடம் பேசுவேன். நான் யாருக்காக நாற்காலி செய்யப் போகிறேன் என்றும், அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்றும் மரங்களிடம் விளக்கிச் சொல்வேன். பிறகு மரங்களிடம் நாற்காலியாக மாறுவதற்கு உங்களுக்குச் சம்மதமா என்றும் கேட்பேன். எந்த மரம் சம்மதம் தெரிவிக்கிறதோ, அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வருவேன்!"

          "குருவே!, நீங்கள் சொல்வது உண்மைதானா?" என்றனர் மாணவர்கள்.

          "உண்மைதான்! நாற்காலியாக மாறுவதற்குச் சம்மதிக்கும் மரத்தை நான் கண்டுபிடித்து விட்டால் போதும். அதற்குப் பிறகு நான் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அந்த மரமே தன்னை நாற்காலியாக உருமாற்றிக் கொள்ளும்!" என்றார் அப்பெரியவர்.

          சன்மார்க்க நீதி: ஒவ்வொரு பொருளுக்குள்ளும் இருக்கின்ற உயிர் உணர்வைக் கண்டுபிடிப்பதே கலை. உயிர் உணர்வு எழும்போது அப்பொருளே தன்னைக் கலையாக உருமாற்றிக் கொள்கிறது; கலைஞன் அங்கே தேவையில்லாது போகிறான்.

          ஒரு கலைஞன் கலையைப் பற்றிக் கொள்வதில்லை. கலை ஒரு மனிதனைப் பற்றி கலைஞனாக மிளிரச் செய்கிறது.

          மரணமிலா பெருவாழ்வில் வாழவேண்டும் என்கிற 'விருப்பம்' உள்ளவரைத்தான் வள்ளற்பெருமான் தேடிக்கொண்டே இருக்கிறார். 'விருப்பம்' இல்லாதவரிடம் வள்ளற்பெருமான் காரியபடமுடியாது. 'விரும்பியதை அடையவைப்பதே விருப்பத்தின் சக்தியாகும்'. எனவே நம்மிடம் 'விருப்பம்' இருந்துவிட்டால், நாமும் மரணமிலா பெருவாழ்வு பெற்றிடலாம். 'விருப்பம்' என்பதுதான் மரணமிலா பெருவாழ்வின் ஆணிவேர். விரும்புங்கள் வெற்றி பெறுங்கள்.

          என் நினைவு ஒவ்வொன்றிலும் மரணமிலா பெருவாழ்வின் விருப்பத்தைக் காண்கின்றேன். வள்ளற்பெருமான் கூறும் சொற்கள் என் நினைவில் நிற்கின்றன.

          24 மணி நேரங்களில் ஒவ்வொரு கணத்திலும் நான் மரணமிலா பெருவாழ்வு என்ற அந்த விருப்பத்தின் ஊடே ஏதோ ஒரு அம்சத்தைக் கண்டுகொண்டுதான் இருக்கின்றேன்.

          நான் காணும் உயிர்கள் மற்றும் பொருட்களில் எல்லாம் நானே நிறைந்திருக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறேன். ஆகையால் அவைகளில் நானே இருக்கிறேன். ஏன்?, கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் பொழுதும் அம்முகத்தில் மரணமிலா பெருவாழ்வின் விருப்பத்தைக் காண்கின்றேன்.

          வள்ளற்பெருமான் எழுதிய திருவருட்பாக்கள் யாவும் நான் நடக்கும் தெருவில் பல்வேறு காட்சியாகக் காண்கின்றேன். அக்காட்சிகள் ஒவ்வொன்றிலும் அவருடைய கையெழுத்தைக் காண்கின்றேன். இதன் மூலம் நான் நடக்கும் பாதைகள், மரணமிலாப் பெருவாழ்வை நோக்கியதாக இருக்கவேண்டும் என விருப்பம் கொள்கிறேன்.

          வள்ளற்பெருமானைத் தொடர்ந்து நானும் மரணமிலா பெருவாழ்வின் மேல் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளேன். அவ்விருப்பமே என்னை வழிநடத்துகின்றது. அவ்விருப்பம் என்னை இரக்கம் கொள்ள வைக்கிறது. அவ்விருப்பமே என்னை அருட்பெருஞ்ஜோதியாக எனது சுயத்தை மீட்டெடுக்கிறது.

வேண்டிய வேண்டிய
          விருப்பமெலாம் எனக்கே
யீண்டிருந் தருள்புரியும்
          என்னுயிர்த் துணையே.
               (அருட்பெருஞ்ஜோதி அகவல்-1173)


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.