Tuesday, June 21, 2016

சமண அவதூறுகள்



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

சமண அவதூறுகள் - இரா.பானுகுமார்-சென்னை

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுப் பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம் மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள் அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

          அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை! எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும், ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல் இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்? நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!-(நன்னூல்).

          இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர். அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ் நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தைகூறுவோம்!
         
          அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான். வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால் அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்  மிருகங்கள்
 பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.
இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)

          சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.

"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)
 என்றும்,
"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" -
                                         அருங்கலச் செப்பு (37)

என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில் இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.

          சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது! வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை மக்களும் நம்பலானார்கள்
                                                                                    -- தொடரும் --


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.