Sunday, February 26, 2017

வாஸ்து

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

வாஸ்து
=========

வீட்டை கட்டிப்பார்! கல்யாணம் செய்து பார்! என்ற பழமொழிக்கேற்ப இவை இரண்டு செயல்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பெருஞ்சாதனைகளாக கருதப்படும். அந்த அளவிற்கு இவை இரண்டும் நன்கு ஆராயப்பட்டு திட்டமிட்டு தங்களது பொருளாதார எல்லைக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டியதாக உள்ளது. நன்கு ஆராயாமல், நன்கு திட்டமிடாமல், தங்களது பொருளாதார எல்லைக்குள் அடக்காமல் செய்யக்கூடிய மேற்காணும் இரண்டு செயல்களும் பாழாகிவிடும்.

        அதற்காக வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பதும், திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதும் சுத்த சன்மார்க்கப் பாதைக்கு முரணானதாகும். சாஸ்திரங்கள் எல்லாம் குப்பைகள் என்று சாடியவர் வள்ளலார். அதனால் நாமெல்லாம் வீடுகட்டும்போது மனையடி சாஸ்திரம் பார்ப்பது மூடபழக்கமாகும். நமக்கு எவ்வளவு இடம் உள்ளது, அதில் எவ்வளவு இடம் கட்டடம் அமைய வேண்டும். அக்கட்டடத்தில் எத்தனை அரைகள் இருக்க வேண்டும். இதுபோன்ற நமது வசதிகளை நாமே அவ்விடத்திற்கேற்ப தீர்மானம் செய்வதே அறிவு மார்க்கமாகும். அல்லது கட்டட வல்லுநரைக் கொண்டோ, அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ தீர்மானிக்கலாம். இதைத் தவிர சுத்த சன்மார்க்கத்திற்கு ஒவ்வாத எவ்வித செயலிலும் சன்மார்க்கிகள் ஈடுபடுவது கூடாது.  

        வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் போன்ற குப்பைகளிலிருந்து  சன்மார்க்க அறிஞர்கள் விலகிவிடவேண்டும். வீட்டில் என்னென்ன வசதிகள் எங்கெங்கு அமைக்க வேண்டும் என்பதனை நாமே சொந்த புத்தியைக்கொண்டு தீர்மானிக்கலாம். தீர்மானித்து கட்டி முடித்துவிட்டு, அதன் பிறகு நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இந்த வீட்டினால்தான் வருகின்றது என்று முடிவு செய்வதும் அறியாமையே. இந்த அறியாமையால், கட்டிய வீட்டை இடித்து பகுதி பகுதியாக இடித்து மாற்றி கட்டும் மூட வழக்கம் மக்களிடையே பெரும்பாலும் இருந்து வருகின்றது. வீட்டினை மாற்றி அமைப்பதினால் செலவுகள் கூடுமே தவிர வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் நேர்ந்திடாது.

        எந்த சாஸ்திரங்களும் இன்றி மேலை நாடுகளிள் கட்டப்படும் வீடுகளில் வசிக்கும் மக்கள் நம்மைவிட மிகவும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து ஓங்குவதை கவனியுங்கள். இதன் பிறகும் சிலர் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சாத்திரக்குப்பைகளை நம்பித்தான் வாழவேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சன்மார்க்கிகளுக்கு தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. ஏனெனில் அவர்கள் சாஸ்திரத்தைவிட்டு சன்மார்க்கம் தொட்டவர்கள். எனினும் நம்மிடையே பழகும் உறவினர்களின் கட்டாயத்தால் நாம் தவறுதல் இயல்பு. அந்த தவறுதலை விழிப்புணர்வுடன் தவிர்ப்பவனே சன்மார்க்கி. எனவே சாஸ்திர சந்தடிகளில் மாட்டிக்கொள்ளாமல் எதிலும் தனித்திருப்போம். சன்மார்க்கிகளாக வாழ்வோம்.


--தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.