Sunday, February 26, 2017

பெண்ணரசி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

பெண்ணரசி
==========

      

      இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்த பெண் என்கின்ற சாதனை படைத்த நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த மாதம் டிசம்பர் மாதம் 05-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

        செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் டிசம்பர் 05-ஆம் தேதி இரவு வரை அவரை யாராலும் சந்திக்கமுடியாத நிலையில், அவரது மரணம் ஒரு மர்மமாகவே மக்களிடையே பேச வைத்துவிட்டது.

        அவரது மறைவால், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியும், முதலமைச்சர் பதவியும் வெறுமையானதைவிட, அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கின்ற பதவி அவரைவிட்டு நிரந்தரமாக பிரிந்ததைத்தான் அவரது கட்சித் தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனிடையில் 06-ஆம் தேதி திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் புதிய முதல்வராக பதவியேற்றார். அதே நாளில் மறைந்த முதல்வரின் உடல், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அவர்களின் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 280 கட்சித்தொண்டரகள் அவரது மறைவை எண்ணி மாண்டு போனார்கள்.

        மறைந்த முதல்வர் அவர்கள் கடந்த 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கடலூரை தலைநகராக்கொண்டு “தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்” என்று பெயர் சூட்டி, வள்ளலார் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதையும், வள்ளலார் ஏற்படுத்திய அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்தி அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தியதையும், கோயில்களில் உயிர்பலி இடக்கூடாது என்ற தடைசட்டத்தை அமல்படுத்தியதையும் சன்மார்க்கிகள் யாரும் மறந்துவிடமுடியாது. 

        மக்களாட்சி முறையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி புரிந்தாலும், மன்னராட்சி முறையிலேயே மறைந்த முதல்வர் அவர்கள் தமது ஆட்சி நிர்வாகத்தை அமைத்துக்கொண்டார். அவரது தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை எல்லோரையும் தமது காலடியில் விழச்செய்தார். அவ்வகையில் அவர் ஒரு மகாராணியாகவே ‘நான்’ என்கிற தனி அடையாளத்துடன் ஆட்சிபுரிந்து அவ்வாறே அவரது மரணத்திலும் ‘நான்’ என்பது செயல்பட்டு, தனிமையில் என்ன நடந்தது என்று உலகிற்கு தெரியாமலேயே மர்மமான முறையில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.  அவரின் ஆன்மா இறைவனடியில் அமைதியடைய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இந்த சன்மார்க்க விவேக விருத்தி மூலம் வேண்டுகின்றேன்.
       
          இதற்கிடையில் அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் திருமதி.வி.கே.சசிகாலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.


               

--தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.