Sunday, February 26, 2017

மும்மல பேதமும் சிருஷ்டியும்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

மும்மல பேதமும் சிருஷ்டியும்
======================

      ஆணவம் மாயை கன்மம் என மலம் மூன்று. இதில் பக்குவம் 3. அபக்குவம் 3. ஆக 6. இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் 18 ஆம். இந்தக் கன்ம பேதத்தால் அருட்சத்தியின் சமுகத்தில் எழுவகைத் தோற்ற முண்டானது. மேற்படி கன்ம மல்த்தால் சிருட்டி உண்டாகும் விவரம் வருமாறு:- பக்குவ ஆணவம், பக்குவமாயை. இவ் இரண்டினாலும் விஞ்ஞானகலர்பேதம். அபக்குவமாயை, அபக்குவகன்மம், அபக்குவஆணவம் கூடியது. தேவ நரக பைசாசங்கள். பக்குவமாயை, அபக்குவ கன்மம் கூடியது ஜீவர்கள். அபக்குவகன்மம், அபக்குவகன்ம ஆணவம், அபக்குவகன்ம மாயை, இவை கூடியது தாவர உயிர்கள். இதை விரிக்கில் பெருகும்.

                              ---திருவருட்பிரகாச வள்ளலார்.

        மலம் உள்ளது ஆன்மா, மலமற்றது பரமான்மா என்று நமக்கெல்லாம் தெரியும். மலம் மூன்று வகையானது என்பதும் நமக்குத் தெரியும். அவை ஆணவம், மாயை, கன்மம் என்று மூன்று. இந்த மூன்று மலங்களால்தான் ஆன்மாக்கள் இவ்வுலகம் மட்டுமன்றி இது போன்ற பல உலகங்களில் உடம்பினை எடுத்து பிறப்பினை எய்துகின்றன. இவ்வுலகிடையே தன்னை இழக்காமல் இருத்தல் ஆணவம், இவ்வுலகிடையே தன்னை இழத்தல் மாயை, இவ்வுலகிடையே தான் செயல்படுதல் கன்மம் ஆகும். இந்த மூன்று மலங்கள் இருக்கும்வரை ஒவ்வொரு ஆன்மாக்களும் ஏதேனும் ஒரு உலக வாழ்வினை விரும்பிக்கொண்டே இருக்கும்.

       ஆன்மாவின் உலக விருப்பத்திற்கிணங்க, அதனதன் கன்ம பேதத்தால் இறைவனிடம் உள்ள அருட்சத்தியின் இடையே ஏழுவிதமான தோற்றங்கள் இயற்கையாகவே உருவாகின. வெளியில் எப்படி காற்று அனாதியாய் தோன்றியதோ அவ்வாறு இறைவனிடத்தில் அருட்சத்தி அனாதியாய உருவாயிற்று. அந்த அருட்சத்தியின் இடையே ஆன்மாக்களின் கன்ம பேதத்தால் தோன்றிய ஏழுவகையான தோற்றங்களே சிருஷ்டிகளாக உலகங்களில் பிறக்கின்றன.

      ஏழு வகையான உடல் தோற்றங்கள்:- தேவன், மனிதன், நரகன், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் ஆகியவனவாகும். இதில் தேவன், மனிதன், நரகன் இவை மூன்றும் மனித தேகத்தையே குறிக்கும். மனிதர்களில் குணங்களின் அடிப்படையில் இவை மூன்றும் வழங்கப்படுகின்றன. மிருகம், பறவை, ஊர்வன, தாவரங்கள் இவைகளில் அவ்வவ்குணங்களுக்கு ஏற்ப அதன் உடல்கள் பலவகையாக ஆக்கப்பட்டுள்ளன. மனித உடலுக்கு மட்டும் குணங்களுக்கு ஏற்ப உடல்கள் வகைபடுத்தப்படவில்லை. வகைப்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் ஏன் நரகனுக்கு ஒருவகையான உடல், மனிதனுக்கு ஒருவகையான உடல், தேவனுக்கு ஒருவகையான உடல் என்று வகைப்படுத்தப்படவில்லை என்றால், இந்த மனித உடல்கள் கொண்டு இதே ஜென்மத்தில் நரகன் தேவனாகலாம், தேவன் நரகனாகலாம் என்கின்ற வாய்ப்பை இந்த மனித உடலுக்கு இறைவன் வழங்கியப்படியால், மனித தேகத்திற்கு மட்டும் ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு அடையாளமுடைய தேகத்தை அருட்சத்தி வழங்கவில்லை.

        பக்குவ ஆணவமும் பக்குவ மாயையும் சேர்ந்து விஞ்ஞான கலாபேதம் ஏற்படுகின்றது. விஞ்ஞான கலாபேதம் என்பது சுத்தமாயா உலகில் பிறப்பெடுக்கக்கூடிய ஆன்மாக்கள். இவர்கள் மொத்தம் 66 வகையினர். 

        பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர், திரிகலர், அரர், பசுமர், விபு, கோபதி, அம்பிகை, சருவருத்திரர், பிரசேசர், சிவர், அச்சுதர், திரிமூர்த்தி, உதாசனர், வைச்சிரவனர், பிரபஞ்சனர், வீமர், தருமர், உக்கிரர், ஆதித்தர், விக்கினேசர், சசி, உருத்திரர்கள், அனாதிருத்திரர், தசாருணர், நிதனேசர், வியோமர், தேசர், பிரமெசர், சருவோத்தமர், அனந்தர், பிரசாந்தர், சூலி, ஆலயேசர், விந்து, சிவநிட்டர், சோமதேவர், சீதேவி, தேவவிபு, சிவர், பரமேசர், பார்ப்பதி, பதுமபூ, உதாசனர், பிரசாபதி, நந்திகேசர், மகாதேவர், வீரபத்திரர், பிருகற்பதி, தசீசி, கவசர், இலளிதர், சண்டேசர், அசம்பாதர், நிருசிங்கர், உசனர், சம்வர்த்தர், மகாகாளர் என 66 விஞ்ஞான கலாபேத தேகத்தை பக்குவ ஆணவமும், பக்குவ மாயையும் உடைய ஆன்மாக்கள் அடைகின்றன.

        அபக்குவ மாயை, அபக்குவ கன்மம், அபக்குவ ஆணவம் இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் தேவர்கள் மற்றும் நரகர்களாக (பைசாகங்கள் – பேயின் குணத்தை பெற்ற நரகர்கள்) இப்பூவுலகில் மனித உடல் எடுத்து பிறக்கின்றனர்.

        பக்குவ மாயை, அபக்குவ கன்மம் இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் மனித ஜீவர்களாக மனித உடலெடுத்து இப்பூவுலகில் பிறக்கின்றனர்.

        அபக்குவ கன்மம், அபக்குவ கன்மத்தில் ஆணவம், அபக்குவ கன்மத்தில் மாயை இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் இப்பூவுலகில் தாவர வர்க்கங்களாக பிறப்பெடுக்கின்றன.

        இவ்வாறு இந்த பிறப்பின் சூத்திரம் விரிந்துக்கொண்டே செல்கின்றது.

        மும்மல பேதமும் சிருஷ்டி வகைகளையும் இங்கே உள்ள வரைபடம் மூலம் கண்டு தெளியவும்.

தி.ம.இராமலிங்கம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.