Sunday, February 26, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை
==============================
தி.ம.இராமலிங்கம்

அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி – 4

அருட்சிவ நெறி:

அருள் என்பது தயவு.தயவு என்பது கடவுள் தயவு மற்றும் ஜீவ தயவு என இருவகைப்படும்.இங்கு ஜீவ தயவு என்பதே அருள் என்பதற்கு பொருளாக இருக்கின்றது.“தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அந்நிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் போன்றவை ஜீவதயவாகும்.(திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-416).

நம்மை சுற்றியுள்ள பிற உயிர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்.அதாவது அவைகளுக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுகின்றது என்ற நிலையில் மட்டும் அவைகளின் தேவையறிந்து உதவி செய்யவேண்டும்.மனித ஜீவனைத் தவிர மற்ற ஜீவன்கள் அனைத்தும் கடவுள் தயவில் வாழ்கின்றன.எனினும் நமது முன்னிலையில் அவைகள் துன்பப்படுவதை பார்க்கும்போது அவைகளுக்கு நம்மால் முடிந்த உதவியினை செய்யவேண்டும்.

ஆன்ம நேய தயா விசாரணை என்பது ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்’ என்ற சிந்தனையில் நமது சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அந்நிய  ஜீவ தோஷம் கனவில்கூட விசாரிக்க நினைக்கக்கூடாது. மனித ஜீவன்களைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் நமக்கு அந்நிய ஜீவன்களாகும்.அந்த அந்நிய ஜீவன்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று நாம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையால் இறைவனிடம் வேண்டுதல் மட்டுமே வைக்கமுடியும்.அதனை நடைமுறையில் நாமே மேற்கொள்ளக்கூடாது.அப்படிமேற்கொண்டால் முடியவும் முடியாது.ஏனெனில் நமக்கு அந்நிய ஜீவன்கள் எல்லாம் கடவுள் தயவில் மட்டுமே இவ்வுலகில் வாழ்கின்றன.(நாம் நமது வீடுகளில் நமது உணவிற்காக / சுய நலத்திற்காக வளர்க்கும் மிருகங்கள், பறவைகள் ஆகியவை இதில் அடங்காது. மனிதன் தமது உணவிற்காக இவைகளை வளர்ப்பது கொடிய பாவச்செயலாகும்.)

மனிதனது முயற்சிகள் இன்றி தங்களுடைய முழு சுதந்தரத்துடன் இவ்வுலகில் வாழுகின்ற உயிரினங்களே நமது அந்நிய ஜீவன்களாகும்.இதற்கு உதாரணமாக காட்டிலே வாழக்கூடிய விலங்குகள், ஊர்வனங்கள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் இவைகளை சொல்லலாம்.இவைகளுக்கு ஏற்படுகின்ற வாழ்வாதாரத் தடைகள் மற்றும் இன்னல்கள் இவைகளை நினைத்து நாம் விசாரணை மேற்கொள்ளத் தேவையில்லை.நாம் அவைகளின் சுதந்தரத்தில் எவ்விதத்திலும் குறுக்கிடவும் கூடாது.கடவுளின் தயவுப்படி அவைகளின் சுக துக்கங்கள் இவ்வுலகில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.ஒரு புலியானது தமது பசிக்காக அங்குள்ள ஒரு மானை அடித்து தின்கின்றது.இது எவ்வகையில் நியாயம் அல்லது அநியாயம் என்று நாம் விவாதிக்கக்கூடாது.

‘சிவ’ என்பதற்குப்பொருள் – அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லமையுடையது.(திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-385).

தோற்றமும் முடிவும் இல்லாத, ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்களும் இல்லாத, எல்லா செயல்களும் செய்யவல்லதாய் உள்ளது ‘சிவ’ என்பதாகும்.

இப்படிப்பட்ட எல்லாமுடைய ‘சிவ’த்தை சிந்தையில் வைத்து ஜீவ தயவான அருளுடன் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ‘அருட்சிவ நெறி’ எனப்பெயர்.

அருட்பெருநிலை:-

        ‘ஆண்டவரின் சோதனை’ என்பது நம்மை மரணமடையச் செய்விப்பதுதான்.அதுபோல் ஆண்டவரிடமிருந்து பெருகின்ற அருள் எப்படிப்பட்டது என்றால், மரணத்திற்கு மாறாக மரணமிலா பெருவாழ்வை அளிப்பதுதான்.இறைவனின் அருளால் நாம் பெருகின்ற நிலை என்பது, ‘கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்’ ஆகும்.அதற்குதான் ‘அருட்பெருநிலை’ எனப்பெயர்.

அருட்சிவபதி:-

தோற்றமும் மறைவுமற்ற, மலங்கள் முற்றிலும் அற்ற, எல்லாமுடைய ‘சிவ’ என்பதே பதியாக/கடவுளாக உள்ளது.ஆகவே அதற்கு ‘சிவபதி’ எனப்பெயர்.மேற்காணும் மரணமிலா பெருவாழ்வை நமக்கு அருளுகின்றமையால் ‘அருட்சிவபதி’ எனப்பெயர்.

உலக மக்களாகிய நம்மில் யார் ஒருவர் மேற்குறித்த அருட்சிவ நெறியைச் சார்ந்து அதன் மூலம் அருட்பெரும் வாழ்வை அடைகின்றார்களோ அவர்களுக்கு அருட்சிவபதிதான் அருட்பெருஞ்ஜோதியாகும்.

ஒரு மனித தேகத்தை கற்பனையாக உருவகம் செய்து அதற்கு ‘சிவா’ என்று பெயர் வைத்து, அதனை ஒரு கற்பனைக் கடவுளாக ஏற்பாடும் செய்து, அக்கடவுளுக்கு ‘சிவ’ என்கின்ற மந்திரத்தைக் கூறி, அவ்வுருவம் உண்மையாக இருப்பதுபோல் காண்பிப்பது சைவ சமய மரபு.
சைவ சமய ‘சிவபதி’க்கும் இங்கு வள்ளற்பெருமான் கூறும் ‘சிவபதி’க்கும் விக்தியாசங்கள் உண்டு.சமயத்தில் உள்ள ‘சிவா’ என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். சமயங்கள் மதங்கள் அனைத்தும் பொய்! என்று கூறும் சுத்த சன்மார்க்கம் எடுத்தியம்பும் ‘சிவபதி’ என்பது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியைக் குறிக்கும்.

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி – 6

ஆகமம்:-

 ஆ+கமம்=ஆகமம். ‘ஆ’ என்பது ‘ஆன்மா’ அல்லது ‘பசு’ என்று சைவ சமயம் கூறும்.‘கமம்’ என்பது ‘நிறைவு’ என்று பொருள்படும்.ஆன்மா நிறைவடைவதை அதாவது இறையுடன் கூடுதலைக் குறிக்கும் சொல் ஆகமம் என்பதாகும்.இறைவனை சென்றடைய உதவும் நூலுக்கு ஆகமம் எனப்பெயர்.

சைவம், வைணவ சமயத்தில் ஆகமங்கள் உண்டு.சைவத்தில் 28 ஆகமங்கள் உள்ளன.வைணவத்தில் 2 ஆகமங்கள் உள்ளன.தென்னிந்தியாவில் மட்டுமே இவ்வகை ஆகமங்கள் புழக்கத்தில் உள்ளன.இவைகள் மதத்தின் கோட்பாடுகள், கோயில் அமைப்பு, கோயில் வழிபாடுகள், மந்திர மொழிகள் ஆகியவைகளை எடுத்தியம்புகின்றன.சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கு வகையான வழிபாட்டு முறைகளை சைவ ஆகமங்கள் கூறுகின்றன.

சைவ ஆகமங்கள் 28: இதில் முதல் பத்து ஆகமங்கள் சிவபேத ஆகமங்கள் என்றும் மற்றவை ருத்திரபேத ஆகமங்கள் என்றும் கூறுகின்றோம். இவ்வாகமங்கள் அனைத்தும் நமது உடல் உறுப்புகளையே பெயர்களாகக் கொண்டுள்ளன.

1.காமிக ஆகமம் (திருவடிகள்), 2.யோகஜ ஆகமம் (கணைக்கால்கள்), 3.சிந்திய ஆகமம் (கால் விரல்கள்), 4.காரண ஆகமம் (கெண்டைக்கால்கள்), 5.அஜித ஆகமம் (முழந்தாள்), 6.தீப்த ஆகமம் (தொடைகள்), 7.சூக்சும ஆகமம் (அபான வாயில்), 8.சகஸ்கர ஆகமம் (இடுப்பு), 9.அம்சுமத ஆகமம் (முதுகு), 10.சுப்ரபேத ஆகமம் (தொப்புள்), 11.விஜய ஆகமம் (வயிறு), 12.நிஷ்வாச ஆகமம் (நாசி), 13.ஸ்வயம்புவ ஆகமம் (முலை மார்பு), 14.அனல ஆகமம் (கண்கள்), 15.வீரபத்ர ஆகமம் (கழுத்து), 16.ரெளரவ ஆகமம் (செவிகள்), 17.மகுட ஆகமம் (திருமுடி), 18.விமல ஆகமம் (கைகள்), 19.சந்திரஞான ஆகமம் (மார்பு), 20.பிம்ப ஆகமம் (முகம்), 21.புரோத்கீத ஆகமம் (நாக்கு), 22.லளித ஆகமம் (கன்னங்கள்), 23.சித்த ஆகமம் (நெற்றி), 24.சந்தான ஆகமம் (குண்டலம்), 25.சர்வோக்த ஆகமம் (உபவீதம்), 26.பரமேஸ்வர ஆகமம் (மாலை), 27.கிரண ஆகமம் (இரத்தினா பரணம்), 28.வாதுள ஆகமம் (ஆடை).

வைணவ ஆகமங்கள்: 1.பாஞ்சராத்திரம், 2.வைகானசம் ஆகியவையாகும்.

ஆரணங்கள்:-

அரண்போல நின்று நம்மை காப்பாற்றும் வழிகளைக் கூறும் நூல்களுக்கு ஆரணம் எனப்பெயர்.நமது உயிருக்கு அரண்போல நின்று, நமதுவுயிரைக் காப்பது நமது உடல் ஆகும்.நமது உடல் நீளும்போது நமது உயிரும் நீளும்.அவ்வாறு நமது உடலினை நீட்டிக்கக்கூடிய மார்க்கத்தை கூறுவது ஆரணம் ஆகும்.இது நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு, ரிக், யசூர், சாமம், அதர்வணம் என வழங்கப்படுகின்றன.

ஆரணங்கள் என்ற சொல்லுக்கு உள்ள பொருள் போல உண்மையில் மேற்கண்ட நான்கு ஆரணங்களும் நமது உயிருக்கு அரணாக இல்லை.ஆரணங்கள் எல்லாம் இறைவனை போற்றுகின்றன, துதிக்கின்றன.ஆனால் இறைவனை அவைகள் அடையவில்லை.அவைகளின் பின் தொடர்ந்தால் நாமும் அதன்இயல்பு போலவே இறைவனை கற்பனையாக போற்றமுடியும், துதிக்கமுடியும் ஆனால் அவனை அடைய முடியாது.

ஆகமங்கள் போலவே ஆரணங்களும்ஓர் எல்லைக்குள் முடிவை  எய்தும். மேலும் ஆகமங்கள் ஆரணங்களிலிருந்து வேறுபட்டவை.இவை இரண்டும் வெவ்வேறு முடிவினை கொண்டுள்ளன.ஆரணங்களைவிட ஆகமங்களின் முடிபு உயர்வானது.

இங்கு ஒரு சந்தேகம் நமக்கு இயல்பாகவே எழுகின்றது.சமயங்களும் மதங்களும் பொய் என்று சொல்லிவிட்டு, ஆகமங்களையும் ஆரணங்களையும் ஏன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் ஒப்பிடவேண்டும்?அதாவது அந்த பொய்யுடன் மெய்யினை ஏன் ஒப்பிட்டுக்கூற வேண்டும்?என்கிற கேள்விதான் அது.

சமயமும் மதமமும் பொய் என்றால், அவைகள் முழுவதும் பொய் என்று சொல்லிவிடவில்லை வள்ளலார்.சமயங்களிலும் மதங்களிலும் சில உண்மைகளும் கலந்துள்ளன.அவைகளில் பெரும்பாண்மையாக பொய்யினை கூறியிருப்பதால் அவைகள் ‘பொய்’ என்று கூறியிருக்கின்றார்.

சமயங்களிலும் மதங்களிலும் கூறப்பட்டுள்ள சில உண்மைகளை சில சீர்திருத்தங்களுடன் எடுத்துக்கொண்டது சுத்த சன்மார்க்கம்.இந்த சில உண்மைகளுடன் பயணப்பட்டு முழுமையடைவதே சுத்த சன்மார்க்கம். அப்படிப்பட்ட சில உண்மைகளில்,மேலே உள்ள ஆகமங்களின் வழியான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற வழிமுறைகளில் ‘ஞானம்’ என்கின்ற படிநிலையினை சுத்தப்படுத்தி அதிலிருந்து துவங்குவதுதான் சுத்த சன்மார்க்கம். மற்ற மூன்று வழிமுறைகள் (சரியை, கிரியை, யோகம்) இறைவனை அடைய தடையாக உள்ளதால் அவைகள் ‘பொய்’ என்றாகின்றது.

மேலும் நமது உடலானது 96 தத்துவங்களை உடையது.அதில் 64 தத்துவங்கள் சைவ சமயத்தில் உள்ளன.12 தத்துவங்கள் வைணவ சமயத்தில் உள்ளன.மற்ற 20 தத்துவங்களும் கெளமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், செளரம், இஸ்லாம், பெளத்தம், கிறுஸ்துவம் முதலிய சமயங்களில் காணப்படுவதாக வள்ளலார் கூறுவார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-351)

சைவ சமய ஆகமங்கள் நமது உடல் கூறுகளையே பெயர்களாக உள்ளதை நாம் மேலே பார்த்தோம்.எனினும் அவைகள் நமது உடல் தத்துவங்களில் 64 வைகைகளை மட்டுமே கொண்டுள்ளன.இவ்வாறு இவ்வுலகில் வழங்கிவரும் எந்த ஒரு சமயமும் 96 தத்துவங்களை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை.எனவே அவைகள் அனைத்தும் பொய் என்று முழங்கினார் வள்ளலார்.

எனினும் அந்த 64 தத்துவங்களும் உண்மைதானே.அந்த 64 தத்துவத்தை அனுபவிக்கும் ஆகம மார்க்கத்திற்கும் மேலான நிலையில் அருட்பெருஞ்ஜோதி அனுபவம் உள்ளதாக வள்ளலார் கூறுகின்றார்.நமது உடலானது மெய்யாகவே இருக்கின்றது.நாம் அவ்வுடல் மூலம் ஆண்டு அணுபவித்து இவ்வுலகில் வாழ்கின்றோம்.ஒரு கட்டத்தில் இந்த மெய்யாக இருந்த நமது உடல் பொய்யாகிவிடுகின்றது.இப்படித்தான் எல்லா சமயத்தின் ஆகம, ஆரண அணுபவங்களும் உண்மையாக இருப்பதுபோல் இருந்தாலும் முடிவில் பொய்யாகிவிடுகின்றன.அந்த ‘பொய்’ என்னும் முடிவிற்கு மேல் ‘மெய்’ என்னும் அனுபவம் கொடுப்பது சுத்த சன்மார்க்கக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி மட்டுமே.

சைவ சமயம் கூறும் 64 தத்துவங்களில் சில தத்துவங்களைக் கடந்தாலே நமது உடல் மறைந்துவிடும்.அவ்வாறு மறைந்த சைவ, வைணவ மற்ற சமய மதப் பெரியவர்கள் அநேகம்.ஆனால் அம்மறைவு என்பது முடிவல்ல. அதாவது மரணமிலா பெருவாழ்வு அல்ல. ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு மரணம் என்றோ ஒரு நாள் நிகழும்.மீண்டும் பிறவி ஏற்படும்.எனவே இப்படிப்பட்ட நிலையில்லா முடிவுகளுக்கும் மேலாக அதாவது ஆகம முடிவுகளுக்கும் ஆரண முடிவுகளுக்கும் மேலாக நின்று ஓங்கிக்கொண்டிருப்பது எதுவென்றால்?அது நமது அருட்பெருஞ்ஜோதி அனுபவமே ஆகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.