Sunday, February 26, 2017

தேவராசு சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

தேவராசு சுவாமிகள்
===============



புண்டரீ கத்தன் படைத்த படைப்பெலாம் போற்றி நலம்
கண்டுயக் கந்தன் கழல் போற்றிக் கந்தர் சஷ்டிக் கவசம்
விண்டவன் தாள்நீழல் மேவிய தேவரா யப்பெரியார்
முண்டகம் அன்னதாள் போற்றுவேன் இன்னருள் முன்னிற்கவே.

உலகம் முழுதும் தமிழ் அறிந்த இந்து மக்கள் இல்லங்களில் எல்லாம் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் பாடலான,

‘சஷ்டியை நோக்க சரவண பவனார்
 சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
 பாதம் இரண்டில் பன்மணிச்சதங்கை
 கீதம் பாடக் கிண்கிணி ஆட..’

என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்க வைக்கும் உள்ளத்திலும் உடலிலும் அதிர்வுதரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அறந்தமிழ்ப் பாமாலை இதுவாகும்.

     இப்பாடலைப் பாடியவர் தேவராசு சுவாமிகள் ஆவார். 19-ஆம் நூற்றாண்டில், தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரில் கணக்கு வேலை பார்த்து வந்த கருணீக மரபைச் சார்ந்த திரு.வீராசாமிப்பிள்ளை அவர்களுக்கு 1837-ஆம் ஆண்டு மகனாக அவதரித்தார் தேவராய சுவாமிகள். வீராசாமிப்பிள்ளைக்கு நீண்ட நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமலிருந்தது. பிறகு முருகன் அருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபாரம் செய்யத் துவங்கினார். வியாபாரம் நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தனது வணிகத் தொழிலை மேற்கொண்டார். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல் நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். ஆறு நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி (ஆறு) கவசம் ஆகும். சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம் ஆயிற்று. கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகின்றது. அதுமட்டுமன்றி படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரில்லா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை  எனத் தோன்றுகின்றது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய், கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமன்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது.

திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பேங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொண்டார். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேடமலை மாலை முதலிய நூல்களை தேவராசர் இயற்றினார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சீடர்களில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயார், பூவாளூர் தியாகராகச் செட்டியார், சவுரிராயலு பிள்ளை, வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் பெயர் சொல்லக்கூடிய பலரில் சிலராவர்.

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகங்களும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார். தற்போது அனைவரும் பாராயாணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று சொன்னாலும், சிலர் இக்கவசம் பழநியில் பாடப்பட்டது என்றும் சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்றும் சொல்வர்.

சரவணபவ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1,16,162,237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார்.

இறைவனை வேண்டி தேவராசரால் பாடப்பட்ட கவசங்கள் – சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், சத்தி கவசம், விநாயகர் அகவல், நாராயண கவசம் என்ற ஆறாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.