Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 10

இந்துமதம் எங்கே போகிறது? - 10
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
           செட்டிநாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகா பெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள். போயிருக்கிறார்கள்…

          இது ஒருபக்கம் இருக்க… பாவை மாநாடு சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது. ‘சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை / பொதுக்கடவுளை (Common God) கண்டுபிடிக்கணும் தாத்தாச்சாரீ…’ என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகா பெரியவர் பிராமண-பிராமணர் அல்லாதவர். சைவ-வைணவ துவேஷங்களை தீர்த்துவைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அரசியல் கட்சி மாநாடு அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தை கூட்டியது.

          மார்கழி மாதம் முழுதும்… தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை-திருவெம்பாவை உபன்யாஸங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களை தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.  பின் விஷேஷ மேடை தயார் செய்து அதில் ஆண்டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை-திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.

          எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக் கொள்வோம். கிடைக்காதபோது படங்களை பயன்படுத்துவோம். கோவில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது… நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக் கொண்டுவர முடியும்? ஆண்டாளையும், மாணிக்க வாசகரையும் கையைப்பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?...

          என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம். பாவை மாநாடு… வெற்றிகரமாக… விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்… இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார். மகாபெரியவரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு… அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரமாண்டம் பெற்றது. இதனால் மகா பெரியவருக்கு அரசியல் முக்யத்துவமும் ஏற்பட்டு விட்டது.

          பாவை மாநாடா?... நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே… என பிராமணர்கள் பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள். நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ?... தமிழ்நாடு முழுதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக்களிலும் மார்கழி மாதம் முழுதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக…

          மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம். இந்தப்பக்கம் ஆண்டாள்… பக்கத்தில் மாணிக்கவாசகர். வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர்.

          ‘ஸ்வாமி… என்ன இப்படி பண்ணிட்டேன்?... என மொட்டையாக ஆரம்பித்தார். ‘எதை எப்படி பண்ணிட்டேன்… விவரமா சொல்லுங்கோ…’ என நான் பதிலுரைத்தேன். ‘தெரிஞ்சுண்டே கேக்கறீளே?... மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

          ‘தீட்சிதரே… என்ன சொல்றீர்…? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?...’

          மறுபடியும் உரைத்தேன்.

          தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக்கிடக்கையை உடைத்தார்.

          ‘பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே… ஆண்டாள் யாரு?... மாணிக்கவாசகர் யாரு?... ஆண்டாள் பிராட்டி பக்கத்துல ஆதிசைவர் மாணிக்க வாசகர் இருக்கலாமா?... இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?...’

          ...மன்னார்குடி வாழ் சில கண்களில் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.

          இதுக்குதான் இவ்ளோ நேரம் இழுத்தேளோ?... இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ… சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல… இப்ப இது அரசாங்கம் நடத்துறா… அவாள்ட்ட போய் கேளும்…’ என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன். தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.

          மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால்… இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு…

          சைவ-வைணவ, பிராமணர் – பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும்… சூத்ரர்கள் பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையை கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.

          ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.

          ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?...

          ‘த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே…’என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்…

          பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ... பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட… அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்… அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’ டென ஓடிப்போய்விடுவார்.

          அதனால்… சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்… விக்ரகம் வெறும் கல்லாகி விடும். பகவான் அதில் ஷணம் கூட தங்கமாட்டார். எனவே அவர்களை கோயிலுக்குள் விடாதே… என்கிறது ஆகமம். ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்?...

          அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்ஷணம் அதாவது கும்பாபிஷேகம் அதாவது குடமுழுக்கு… என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம். ஆகம உத்தரவு இருந்தாலும் ஆலய நுழைவு போராட்டங்கள் சூடுபிடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ஒரு தடவை மகாபெரியவர் என்னை அழைத்தார். சில நிமிடங்களில் அழுதே விட்டார்… துறவி அழலாமா?...

          அனைத்தையும் துறந்த சங்கராச்சாரியாரின் கண்களில் வழிந்த கண்ணீர் என் கண்களையும் உறுத்தியது. என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆறுதலும், ஆசியும் சொல்லவேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்யமுடியும்…? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்புநீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.

          பின்… அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். ‘கஷ்டமாயிருக்கு…’ என்றபடியே மெளனமானார். அவர் அழுவதற்கு காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.

          அது… ஸ்ரீரங்கத்து சம்பவம்.

          ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று… தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக்கொண்டிருந்தனர் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

          அப்படித்தான், ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும்… ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன. காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.

          அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக்கொண்டிருக்கும்போதே… இந்த ஆலய நுழைவு போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே! எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.

          நாமெல்லாம் போகலாம் கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடலாம்… என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர். ஒர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து… “அபிஷ்டு… அவாமேல நம் கைபடாம வெரட்டணும்டா…” என ஆச்சாரமான யோசனையை அவேசமாக எடுத்துரைத்தார்.

கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஓர் முடிவெடுக்கப்பட்டது.

          “இப்ப ஆம்பளைகள் நாம ரொம்பபேர் போகவேண்டாம். நம்மாத்து பொம்மனாட்டிகளை அனுப்புவோம். கோயிலுக்கு போறாமாதிரி இவா போகட்டும். அங்க… கோயிலுக்குள்ள போறதுக்காக போராடிண்டிருக்காளே… அவா பக்கத்துல போயி… அர்ச்சனை தட்டுல மறைச்சி எடுத்துண்டு போன மிளகாய்ப் பொடியை தூவிட்டு கூட்டத்தை கலைச்சிடனும்..”

          ‘இதுதான் முடிவு இம்முடிவு ஒவ்வொரு ‘ஆத்து’க்கும் சென்று சொல்லப்பட்டது. அதேபோல் மடிசார் கட்டிக்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட அக்ரஹார மாமிகள் கோயிலுக்கு அர்ச்சனை தட்டுகளோடு கிளம்பினார்கள். அவர்கள் தட்டில் இருந்தது சுத்தமான மிளகாய்ப் பொடி.

          ரங்கநாதன் சந்நிதியை நோக்கி கூட்டமாக போய்க்கொண்டே இருந்தார்கள்… திடீரென்று ‘ஹரிஜன்கள்’பக்கம் சட்டென திரும்பி தாங்கள் கொண்டு வந்த மிளகாய்ப் பொடியை எல்லாம் விசிறி அடிக்க… ஒரே தும்மல் சத்தம். இருமல் சத்தம். பல ஹரிஜன்கள் அவசர அவசரமாய் பதறியபடி ஓடினார்கள். அவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்து கதறி அழுதபடி கலையப் பார்த்தார்கள்.

          ‘கோயிலுக்குள்ள போய் சாமிய பாக்கணும்னு நெனச்சேன்… இனி கண்ணே தெரியாது போலிருக்கே…’என அந்த நெடியிலும் சிலர் சொல்லியபடி ஓடினார்கள்.

          இப்போராட்டத்தை அறிந்து அங்கு வந்திருந்த போலீஸ் காரர்கள் இதைப்பார்த்துவிட்டு… ‘அந்த பொம்மனாட்டிகளை அப்புறப்படுத்தனும்ப்பா…’ என சொல்லிக்கொண்டே லத்திகளை ஓங்கிக்கொண்டு வர… சில ‘மிளகாய்ப்பொடி’ மாமிகளுக்கு போலீஸ் அடி விழுந்துவிட்டது.

          இதுதான் ஸ்ரீரங்கத்து சம்பளம். இதனை நான் சங்கராச்சாரியிடம் சொன்னபோதுதான்… ‘அய்யய்யோ அபச்சாரம், பொம்மனாட்டிகளை போலீஸ்காரா அடிச்சுட்டாளா… கஷ்டகாலமே’ சட்டென அழுதுவிட்டார். அவர் அழுது நான் அதுவரை பார்த்ததில்லை.

          இந்த சம்பவத்தை அவரிடத்திலே தெரியப்படுத்தியிருக்க வேண்டாமோ… என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்து அடங்கியது. ஆனாலும்… இதுபோன்ற ஆலய நுழைவுப் போராட்டங்கள் மற்றும் சமய சம்பந்தம் உடைய காரியங்களை பற்றி தெரிந்து கொள்வதில் மகாபெரியவருக்கு ஓர் இஷ்டம். ஏனென்றால் சிருங்கேரி மடத்துக்காரர்கள் பல விஷயங்களில் சமய சம்ப்ரதாய விஷயங்களோடு சமுதாய விஷயங்களிலும் தலையிடுவார்கள்.

          அவர்களுக்கு அவ்வப்போது பதில் தர மகாபெரியவரும் இதுபோன்ற சமுதாய விஷயங்களில் தலையிடுவது அவசியமாய் இருந்தது. இது ஒரு சிறிய காரணம் என்றாலும்… அனைத்து வர்க்க மக்களிடத்திலும் அவர் வைத்திருந்த அக்கறைதான் பெரிய காரணம்.

          இந்த நிலைமையில்தான்… பண்டித ஜவகர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’கொண்டு வருவது பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள். ஸ்மிருதியில் பெண்களுக்கு சொத்து பாத்யம் கிடையாது என கண்டிப்பாய் கூறப்பட்டிருக்கிறது. பாரத தேசத்துக்குள் பிராமணர்கள் வரும்போது அவர்களுடன் வந்த ஸ்தீரீகள் மிகக் குறைவானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் தொடக்க அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

          இங்குவந்த பிராமணர்கள் இங்குள்ள பெண்களோடு கூடிவாழ ஆரம்பித்தாலும்… பெண்களை சூத்ரர்களுக்கு சமமாகவே வைத்தனர். அதனால்தான் பெண்களுக்கு எவ்வித சமய சமஸ்காரங்களும் சடங்குகளும் கிடையாது. இதோடு கூட பெண்களுக்கு வித்யா அதாவது கல்வி தேவையில்லை என்றும் ஸ்மிருதியில் விதித்தனர்.

          இதன் ஒருபகுதியாகத்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்றும்… அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது. இந்த ஸ்மிருதியின் பிடியிலே பெண்கள் இருந்த சமயத்திலேதான்… நேருஜி அறிவித்தார். எல்லோர்க்கும் சொத்துரிமை உண்டு. அதாவது பெண்களுக்கும்.

          இவ்விஷயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் எட்டியது. பெண்களை போலீஸார் தாக்கியதற்காக கண்ணீர் விட்ட சங்கராச்சாரியார், பெண்களுக்கு சொத்து பாத்யம் உண்டு என கேட்டதும் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?...
         
          டெல்லியில் நேரு ஹிந்து கோடு பில்லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது. அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ – இதுதான் வாசகம். கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

          நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம்… காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது குடும்ப சொத்துக்களை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

          என்ன ஸ்வாமி? என்றேன் நான். அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகாபெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய்… அழியப்போறது…’ என படபடப்பாக பேசினார்.

          ‘இதப்பார்த்திரா… ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்திரீகள் ஓடிப்போயிடுவா… அபாண்டமா, அபச்சாரமா போயிடும்’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர்.

          நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான் ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்…’

          இந்த பதிலைக் கேட்டதும்…
         
          ‘அசட்டுத்தனமா பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்த்ரீ தர்மமே பாழாயிடும். ஸ்திரீகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

          இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடனும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்.

          என்றெல்லாம் அவசர ஆணைகளை பிறப்பித்தார் மகாபெரியவர்.

          வேத தர்ம சாஸ்திர பரிபாலனசபை கூட்டங்களின்போதே ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றியும் நான் நிறைய பேசியிருப்பதால் இந்த கூட்டம் நடத்துவது கஷ்டமாக தெரியவில்லை எனக்கும் எங்கள் சகாக்களுக்கும்.

          மகா பெரியவர் சொன்னதன்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கல்லிடைக் குறிச்சிக்கு போனோம். அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய், ‘இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகா பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும், ஸ்த்ரீகளை கூட்டி வரணும்’ என்றேன்.

          அந்த தேவிஉபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து…

          ‘எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படனும். சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

          இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டெல்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம். இது மட்டுமா?

          திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது. என்ன ஏதென்று தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்துபாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.

          கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள். கிட்டதட்ட ஒருமாதம்… தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டெல்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.

          இந்த கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். “இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிபட்டு வராது போலிருக்கிறது. டெல்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும். அதுக்கு நீர் டெல்லி கிளம்பணும்”என்றார்.

          டெல்லியில் Constituition Club-ல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக்கொண்டு போனோம்.
         
          அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர். நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள் நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால்… பயன் இல்லாமல் போய்விட்டது.

          சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாட்கள் பில்லை தள்ளிவைத்த நேரு… பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார். ‘டெல்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியலையே’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் பில் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக்கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார்…

          ‘அவாளுக்குதான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்குறாளே… அப்புறம் எதுக்கு சொத்து பாத்யம். இனிமே, பெண்கள் சொத்து இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா…’

          வர்ணாஸ்ரம தர்மத்துக்குட்பட்டு ஜனங்களை ஒற்றுமையாக(!) வாழ வைக்கவேண்டும் என மடாதிபதி என்ற முறையில் பல காரியங்களை செய்தார் சங்கராச்சாரியார். ஆனால், மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய மடங்களே சண்டையிட்டுக் கொண்டு… ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.

          வைஷ்ணவ மடங்கள் – சைவ மடங்கள், பிராமண மடங்கள், பிராமணர் அல்லாத மடங்கள் இப்படி மடங்களுக்கிடையே முட்டல், மோதல்கள் மூண்டபடி இருந்தன. ‘கும்பகோண’ மடத்துக்கும், சிருங்கேரி மடத்துக்கும் சகோதரச்சண்டை என்று ஆன்மிக வட்டாரத்திலேயே அழுத்தமான பெயர் உண்டு.

        இங்கே இப்படியென்றால்… நம்மூர் மடங்களை ஏதோ புழுப்பூச்சி போல பார்த்து வந்தார்கள் வடஇந்திய மடக்காரர்கள். காரணம், தமிழ்நாடு திராவிட தேசம், சூத்திரதேசம் என்பது அவர்கள் வாதம். இன்னொன்றாக… கும்பகோண மடம் உண்மையான சங்கரமடம் இல்லை என வட இந்தியாவிலுள்ள சங்கர மடாதிபதிகளே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

        மகாபெரியவர் சங்கராச்சாரியார் காசிக்கு யாத்திரை மேற்கொண்டபோது… “அவர் காசிக்குள்ளேயே வரக்கூடாது” என்றெல்லாம் அவர்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்தனர். சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என அழைக்கக்கூடாது. அவர் ஜெகத்குரு அல்ல… இன்னும் சொல்லப்போனால் அவர் குருவே அல்ல. பின் எப்படி ஜெகத்குரு ஆகமுடியும்?... என்றெல்லாம் வடஇந்தியாவிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் ஏகத்துக்கும் கிளம்பின. இதுபற்றி சங்கராச்சாரியாரிடமே கேட்டபோது அவர் சொன்னார்…

        “என்னை ஜெகத்குரு என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. சொல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டதில்லை. ஜெகத்குரு என்றால் என்ன அர்த்தம் தெரியுமோ? ஜெகம்தான் எனக்கு குரு அதாவது லோகம்தான்… உலகம்தான் எனக்கு குரு. நான் குருவல்ல…”என பதில் சொன்னார் மகாபெரியவர்.

        இப்படியாக உள்ளூரிலிருந்து… தேச அளவில் மடங்கள் முஷ்டி உயர்த்திக் கொண்டு நின்ற சூழலில்… எந்த மடாதிபதிக்கும் வராத யோசனை மகாபெரியவருக்கு வந்தது. “மடங்கள் மடத்தனமா சண்டை போட்டுண்டிருக்கா… தேசத்துல இருக்குற எல்லா மடங்களும் ஒரே அமைப்பா வரணும். அது மூலமா… மதவிஷயங்களை மனு தர்மத்தை இன்னும் வேகமா கொண்டுபோகனும்” என என்னிடம் கூறிய மகாபெரியவர்…
       
        நான் அடிக்கடி வடஇந்தியாவில் யாகங்கள்… மதப் பிரச்சாரக் கூட்டங்கள் என சென்று வந்து கொண்டிருந்ததால்… வடஇந்திய மடங்களிடம் பேசி மடங்களுக்கான அமைப்பை உருவாக்க என்னை அங்கே போகச்சொன்னார்.

        அயோத்தியில் எக்கச்சக்க மடங்கள் இருக்கின்றன. இதுதவிர… பூரி, துவாரகா, பத்ரி போன்ற சங்கரமடங்களுடனும் பேசினோம். சின்னச்சின்ன மடங்களைகூட விட்டுவைக்காமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினோம்.

        “Association of Mutts”என்ற பெயரில் மடங்களுக்கான அமைப்பை சங்கராச்சாரியார் உருவாக்க முனைவதையும்… இதற்கான காரியங்கள் நடைபெற்று வருவதையும் கேள்விப்பட்ட குல்ஸாரிலாஸ் நந்தா குறுக்கே வந்தார்.

        குல்ஸாரிலால் நந்தா… வட இந்திய காங்கிரஸ் தலைவரான இவர், நேருஜி காலமானபோதும், லால்பகதூர் சாஸ்திரிஜி காலமானபோதும் இரண்டு முறை பாரதத்தின் இடைக்கால பிரதம மந்திரியாக இருந்தவர். அவ்வளவு பெரியவரான அவர்… ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை இணைக்க முயற்சிப்பதை விரும்பவில்லை.

        நாங்கள் வக்கீல்களை வைத்து… மடங்களை ஒரு குடையில் ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை தனது அரசியல் செல்வாக்கால் முடக்கிப் போட்டுவிட்டார் குல்ஸ்ஸாரிலால் நந்தா.

        எந்த மடக்காரர்களும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை காரணம்… ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை ஒருங்கிணைத்து ‘சாது சம்மேளன்’ என்றொரு அமைப்பை தோற்றுவித்து விட்டார்.

        சங்கராச்சாரியாருக்கு இத்தகவலை தெரிவித்தேன். பாரதம் பூரா ஒண்ணு சேக்கலாம்னு நெனைச்சேன். அவா பேதம் பார்க்குறாளா? சரி… நாம இங்கேயே இருக்கிற மடங்களை சேத்து அஸோஸியேஷன் ஆரம்பிச்சிடலாம். தென்னாட்டு மடங்களை சேர்த்து அமைப்பை ஆரம்பிச்சிடலாம்” என சொல்லி விட… தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மடங்களை ஒரே குடையில் திரட்டும் முயற்சியை தொடங்கினோம்.

        உடுப்பியில் 8 மடங்கள் இருந்தன. அவர்களிடம் பேசிப் பார்த்தோம். சங்கராச்சாரியார் எடுக்கும் எந்த முயற்சிக்கும், செய்யும் எந்த காரியத்துக்கும் சிருங்கேரி மடத்துக்காரர்கள் எதிராகத்தானே இருப்பார்கள். அவர்களை தவிர பல மடங்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால்… வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களும் பின்வாங்கிவிட்டார்கள்.

        கடைசியில்… தமிழ்நாட்டு அளவில் இருக்கிற அத்தனை மடங்களையும் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார் சங்கராச்சாரியார். மதுரை ஆதீனம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தர்மபுரம் என மற்ற மடத்தின் ஆதீனங்களோடு பேசி அனைவரையும் ஒன்று சேர்த்தார்.

        இந்திய அளவில் முயற்சித்து… அது குல்ஸாரிலால் நந்தாவால் தடுக்கப்பட்டுவிட்டது. சரி… தென்னிந்திய அளவில் மடங்களை இணைக்கலாம் என்ற மகாபெரியவரின் முயற்சி… சிருங்கேரி கைங்கரியத்தாலோ என்னமோ முடங்கிப் போனது.

        கடைசியில் தமிழ்நாட்டில் உள்ள மடங்களை மட்டும் இணைத்த சங்கராச்சாரியார் Association of Mutts ஆரம்பித்தார். நான் செகரட்டரி ஆனேன். சங்கராச்சாரியார் மடங்களுக்கான அமைப்பின் தலைவரானார்.


        ஜலம் நிறைந்திருக்கிற குளத்துக்குள்ளிருந்து சேற்றின் சிக்கல்களை கால்களால் மீறி… தாமரைப் பூவை பறித்து… பாசிபடிந்த படிகளில் மீது பதமாக லாவகமாக ஏறி வழுக்கி விழாமல் பூவுக்கும் சேதாரம் ஏற்படாமல் மேலே வந்த ஒருவன்… அத்தாமரை மலரை தெய்வத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறானே.
                                        to be continue... 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.