Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 3

இந்துமதம் எங்கே போகிறது? - 3
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
.... எனவே, சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத்தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்... கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்... "கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்."

வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னால் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.

தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... "தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா" தொடங்கியது படையல் பண்பாடு.

நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருட்களுக்கான பட்டியலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருட்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.

வழிபாட்டு முறையில் மாற்றம் அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி? உண்டானது.

கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும்.

இலக்கியங்கள் சித்தரிப்பது போல "களவியல்" என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை. அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள். உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்துவீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்.

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.

ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாயமாய்போன பின்னே... தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணுஅணுவாய் அலசுகிறது.

கடைசியில் அந்த ஜோடி கொலித்துக்கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுகிறது கூட்டம்.

பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்த பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

"இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்..." என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.

இஃது களவியல்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு.

சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.

"யாயும் ஞாயும் யாராகியரோ
 எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
 யானும் நீயும் எவ்வழி அறிதும்
 செம்புலப் பேயல் நீர் போல
 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே..."

நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும் நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்... எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்து விடுகிறதே. அதுபோல அன்புகொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்து விட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள். இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் "தாலி" வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில்... ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில், "இந்த பெண் இந்த ஆணுக்கு உரியவள்" என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டிவிடுவார்கள்.

பனைமரத்துக்கு "தால்" என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்த தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே?... இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?"

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களை கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா இரண்டா? எக்கச்சக்க சடங்குகள், என்னென்ன... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருட்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்க வேண்டும். இதற்கு பெயர் நிச்சய தாம்பூலம்.

2. கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
          முதலில் காசியாத்திரை.
          சன்னியாசம் வாங்க வேண்டுமென்றால்... மகனே கல்யாணதுக்கு முன்னரே நீ சன்னியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்திற்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே... என சூத்ரங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

          அதனால் கல்யாணத்துக்கு முன் "காசியாத்திரை" என்றொரு சடங்கு. அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவது போல "பாவ்லா" செய்ய வேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்து போவார்கள்.

3. ஊஞ்சலாட்டுதல்:
          குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக. என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம். இதற்காகத்தான் ஊஞ்சல்.

4. மாலை மாற்றுவது:
          இது சஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுகதுக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டு விடக்கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7. இது முக்கியமானது. பெண்ணும் பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள வேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க.... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும். பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடவை உடுத்திவிட வேண்டும். அவளது நனைந்த புடவையை களைந்து விட்டு... புதுப் புடவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி வந்தது. சந்ததியெல்லாம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் இப்புடவை சடங்கு.

8. பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு "கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி" என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் "கை" பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு. மணமகள்... மணமகனை கைப்பிடிப்பது இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

9. கைத்தலம் பற்றிப் பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது எதற்காக தெரியுமா...? முதல் அடி அன்னம் பெருக வேண்டும் என்பதற்காக, இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும். மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக... நான்காவது குடும்பம் சந்தோஷமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக... ஐந்தாவது அடி வீட்டில் மாடுகள் பெருக வேண்டும் என்ற வேண்டுதலுக்காக... ஆறாவது அடி குடும்பத்தில் செல்வம் கொழிப்பதற்கு.. ஏழாவது அடி இந்த சகல செளபாக்யங்களும் சேர்ந்து கிடைக்க... அதாவது 'நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ, என் அப்பா யாரோ... ஆனால் இன்று முதல் நாம் ஒன்று' என சங்கப் பாடல் படித்தோமே அதே பொருளுக்காக... யாகத்தை நெருங்குவதுதான் ஏழாவது அடி.

          இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாக தூக்கிப்போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்து கொண்டன. இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழாவானது.

          "மேலோர்க்கு யாத்த கரணமும்
           கீழோர்க்கு ஆன காலமும் உண்டே..." என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது... மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்... மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால்... தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

          மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் தாலிக்கு இடமில்லை. ஆனால்... தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது... அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை.... பனை ஓலை கயிறை... மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

          மேற்குறிய தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்க வேண்டிய பதம் ஒன்று உண்டு. "மேலோர்க்கு யாத்த கரணம், கீழோர்க்கு ஆன காலம் உண்டே..." என்பதில் கோழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். 'பிற்பாடு... இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்து விட்டது. ஒன்றாக இருந்த காலம் உண்டு' என்று தெரிய வரும்.

          ஏன் மாறிப் போனது?... முதல் காரணம்... தன் சடங்குகளும் தனக்கு கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா?... அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களை கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.

          இரண்டாவது காரணம்... இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாட்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக் கொண்ட 'களவியல்' மரபுக்காரர்களாயிற்றே.

          அவனது கண்களும் அவனது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்.. மெளனப் புன்னகையே மந்திரமாக.... கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே. அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக்கிடையில் 'விவாகரத்து' ஏற்பட்டு விட்டது. இத்தகைய காரணங்களால்... சூத்திரர்களை தனியாக பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள். இப்படி செய்வதற்கு... அவர்களின் கையில் கசங்காமல் இருந்த 'மநு ஸ்மிருதி' தான் ரொம்ப உதவியாக இருந்தது.

          மநு மூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்... இந்த கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்கு செய்தார்கள். யாருக்கு சத்திரியர்களுக்கா...? வைசியர்களுக்கா...? இல்லை, இல்லை... சண்டாளர்களுக்கு...

          சண்டாளர்களா...? யாரவர்கள்?

          மநு கூற்றுப்படி 'சண்டாளர்கள்' யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.

யார் அந்த சண்டாளர்கள்?...

          துரோகம் செய்தவனை, கொலைபாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால் மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டவர்கள், எல்லாவிதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்... வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கட்டத்தினர். இப்படியாக 'அருவருப்புடன் வர்ணிக்கபடும்' தலித்துகளைதான் மநு தனது அகராதியில் பஞசமர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

          ஏன் அவர்களை சண்டாளர்கள் என குறிப்பிட வேண்டும்?.. அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்...? இதற்கான பதிலைத்தான் நானே எழுதிட முன்வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்கு தருகிறேன் என குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாக சொல்கிறேன்.

இந்திய தேசத்தின் விடுதலைக்கு முந்தைய காலம்... சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்துக்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.


அப்படி ஒரு தடவை வந்தபோது, ஊரில் உள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்க வேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
                                     to be continue.....


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.