Monday, July 17, 2017

“திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை”.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூன்-2017’ அன்று வெளியான திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை”.

பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி – 40

யோகத்தின் பயனாய் விளைவதே அந்தங்கள் ஆறும். இங்கே நாதாந்தம் பேசப்பட்டாலும், அவை சமயங்களில் கூறப்பட்டுள்ள நாதாந்த அனுபவத்தையும் கடந்து பெரிய நாதாந்தமாக குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட பெரிய நாதாந்த அனுபவத்தை நமக்கு யோக அனுபவங்கள் கொடுக்காது. ஆன்ம தயவினை பெருக்கவித்து அதன் மூலம் நாம் ஈட்டும் சாதனையே இந்த பெரிய நாதாந்தமாகும். வள்ளற்பெருமான் கூறும் ஆறு அந்தங்களுமே யோக நெறியால் வரத்தக்கது அல்ல. ஆன்ம தயவினால் வரக்கூடியது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். ஆனாலும் யோக நெறியில் நாம் அடையும் அனுபவத்தையே இன்னும் முழுமையாக தயவு வழியில் காண்கின்றோம்.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுத டி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி.                        -4947

தமது ஆன்ம தயவினால் தாம் அனுபவித்ததை பாடலாக தெரிவித்துள்ளார் நம்பெருமானார்.  இங்கே ‘வானம்’ என்றதை ‘பெருநிலை வெளி’யாக அகவலில் குறிப்பிட்டுள்ளார். ‘குயில்’ என்பதே ஒலி என்கின்ற நாதத்தை குறிக்கின்றது. ‘மயில்’ என்பது ஒளி என்கின்ற விந்துவைக் குறிக்கின்றது.  
         
          நமக்கு ‘ஒளி’ அனுபவம் கிடைத்தப் பிறகே ‘ஒலி’ அனுபவம் கிட்டும். ஒளி என்பது காட்சி பொருள். ஒலி என்பது கேள்வி பொருள். முதலில் கண் அனுபவம். அதன் பிறகு காது அனுபவம். கண் காது இவை இரண்டுமே புற இந்திரியங்கள் அல்ல. அகக்கண், அகக்காது கொண்டு பார்த்தும் கேட்டும் மகிழ்பவையாகும். அகத்திலே நாம் காணும் ஒளிக்காட்சி மறைவை நாம் கலாந்தம் என்றும் ஒளிப்பாழ் என்றும் கூறுவோம். கலாந்த நிலைக்கு அடுத்து யோகாந்த நிலையும் போகாந்த நிலையும் கடந்துதான் நாதாந்த நிலைக்கு வரவேண்டும். நாதாந்த நிலை என்பது ஒலி பாழாக வேண்டும். மேற்காணும் பாடலில் ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பது நாத நிலையினைக் குறிக்கும். அதற்கும் மேற்பட்டு மயிலும் குயிலும் இல்லாத நிலையே நாதாந்த நிலையாகும். இதனை ‘வெளிப்பாழ்’ என்பர்.

          இப்படிப்பட்ட பெரிய நாதாந்த அனுபவத்தை பெருநிலை வெளியாகக் காண்கின்றார் வள்ளற்பெருமான். யார்க்கும் எளிதில் கிடைக்காத அரிய சிற்றம்பலத்திலே பெரிய நாதாந்த அனுபவத்தை கொடுத்த அருட்பெருஞ்ஜோதி இறைவனே.

          சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
          அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி      -        42       
          சமயத்தில் கூறுகின்ற போதாந்தம், யோகாந்தம் மற்றும் வேதாந்தம் இவைகளின் மொத்த அனுபவமே ‘சுத்த வேதாந்தம்’ என்கின்றார் வள்ளற்பெருமான். “வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-401)
          போதாந்தம் – அறிவின் முதிர்ச்சி
          யோகாந்தம் – யோகத்தின் முதிர்ச்சி
          வேதாந்தம் – வேதத்தின் முதிர்ச்சி
இவை மூன்று முதிர்ச்சியின் முதிர்ச்சி எதுவோ அதுவே சுத்த வேதாந்தம் ஆகும்.  அது எது என்றால்? துரிய மேல் வெளியே சுத்த வேதாந்த அனுபவமாக உள்ளது. துரிய நிலை அனுபவமானது ஆன்ம ஆனந்தத்தை கொடுக்கும். எல்லா சித்துக்களும் இந்நிலையில் கைகூடும். அப்படிப்பட்ட துரிய நிலைக்கும் மேற்பட்ட நிலையான துரியாதீத நிலையே சுத்த வேதாந்த அனுபவமாக உள்ளது.
          துரியாதீத நிலையினை, சுத்த வேதாந்த அனுபவத்தை தருகின்ற சிற்சபை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
          சுத்த சித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
          அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 44

சமயத்தில் கூறுகின்ற கலாந்தம், நாதாந்தம் மற்றும் சித்தாந்தம் இவைகளின் மொத்த அனுபவமே ‘சுத்த சித்தாந்தம்’ என்கின்றார் வள்ளற்பெருமான்.

கலாந்தம் – ஒளியின் முதிர்ச்சி
          நாதாந்தம் – ஒலியின் முதிர்ச்சி
          சித்தாந்தம் – சிந்தனையின் முதிர்ச்சி

இவை மூன்று முதிர்ச்சியின் முதிர்ச்சி எதுவோ அதுவே சுத்த சித்தாந்தம் ஆகும்.  அது எது என்றால்? சுகப்பெரு வெளியே சுத்த சித்தாந்த அனுபவமாக உள்ளது. நாம் இதற்கு முன்னர் சுகோதய வெளி(32) மற்றும் சுகந்தரு வெளி(34) ஆகியவைகளை கண்டோம். ஒன்று சுகம் உதயமாகின்ற வெளி மற்றது சுகத்தை தருகின்ற வெளி. நாம் இப்போது காண்பது சுகமே பெருவெளியாக இருப்பது. சுத்த சித்தாந்தத்தின் அனுபவமாக சுகப்பெரு வெளியினை நாம் அடையலாம்.
           சுகப்பெரு வெளியினை, சுத்த சித்தாந்த அனுபவத்தை தருகின்ற சிற்சபை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
          நாம் இதுவரை ஆறு அந்தங்கள் பற்றி பார்த்தோம். இவை யாவும் சமயங்களில் கூறப்பட்டுள்ள அனுபவங்களை உள்ளடக்கியும் அதனையும் கடந்த பேரனுபவமாக இருப்பதையும் அறிந்தோம். சமயங்களில் உள்ள ஆறு அந்தங்களையும் வள்ளற்பெருமான் மறுப்பதால், அதன் வழிமுறையான யோக பயிற்சியினையும் மறுப்பதாகவே கொள்ள வேண்டும்.
“வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்” என்று வள்ளற்பெருமான் தமது சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் உரைத்திருக்கின்றார்.

யோகத்தின் வழி இவ்வனுபங்களை பெறாமல் அதற்கும் மேற்பட்ட அனுபவங்களை ஆன்ம தயவினால் பெறலாம் என்கின்ற புரட்சிகரமான வழியினையும் காட்டியிருக்கின்றார். சிறிய தயவினைக் கொண்டு பெரிய தயவினை அடைதல். ஜீவகாருண்யம் என்கின்ற சிறிய தயவினைக் கொண்டு ஆன்ம தயவு என்னும் பெரிய நிலையினை அடைதல். இவர்களே சன்மார்க்க யோகம் செய்யும் ‘யோக மாந்தர்கள்’ ஆவார்கள். அதாவது நமது ஆன்மாவினை ஏழு திரைகளுக்கும் மேற்பட்ட திரைகள் மறைத்துள்ளன. நம்மை மறைத்துள்ள இத்திரைகளை நாம் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமே நாம் இதுவரை பேசிவந்த ஆறு அந்தங்களாகும். இந்த ஆறு அந்தங்களின் அந்தங்களை அடைந்தால் நாம் நம்மைக் காணலாம். அதாவது ஆன்ம தரிசனம் கிட்டும்.    

  


        தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
          அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி – 46

          தகரம் என்பதை வெள்ளீயம் என்றும் அழைப்பர். இது தனிம வகையைச் சார்ந்தது. இதன் படிக அல்லது அணு அமைப்பானது செவ்வகப் பட்டகமாக இருக்கும். இதன் தோற்றம் பளபளப்பாக வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். தகரம் என்கிற வெள்ளீயம் இயற்கையில் தனித்து கிடைக்காது. பெரும்பாலும் ‘கேசிட்டரைட்டு’ என்கிற தாதுவிலிருந்து வெள்ளீயம் பிரித்து எடுக்கப்படுகின்றது. இதன் ஆங்கிலத்தில் ‘Tin’ என்று வழங்குகின்றோம். வேதியியல் பாடத்தில் தகரத்தை பற்றி இன்னும் விரிவாக நாம் படித்திருப்போம்.  இப்படிப்பட்ட தகரத்திற்கும் மெய்ஞ் ஞானத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

          தகரக்கொட்டகையில் நீங்கள் சினிமா பார்த்த காலத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். தகரக்கொட்டகையில் நீங்கள் வசித்திருந்தால் அதனையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இதே போன்ற தகரக்கொட்டகையில்தான் சிதம்பரத்தில் பொற்சபை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தகரக்கொட்டகையில்தான் வடலூரில் ஞானசபையும் அமைக்கப்பட்டுள்ளது. சினிமா கொட்டகையும் நமது வசிப்பிடங்களும் தகரத்தால் மூடுவது என்பது பொருளாதாரம் கருதி எனலாம். ஆனால் சிதம்பரம் கோயிலில் எவ்வளவோ பிரமாண்டங்கள் இருந்தாலும் அதன் இதயம் போன்று அமைந்துள்ள பொற்சபையை மிகச்சாதாரண தகரத்தால்தான் வேய்ந்தார்கள். அதுபோல வள்ளற்பெருமானும் அதே தகரத்தால் தமது ஞானசபையையும் வேய்ந்திருக்கின்றார்.

          சைவ சமயத்தில் ‘தகர’ என்பது இதயத்தைக் குறிக்கும். ஏனெனில் சிதம்பரத்தில் அமைந்துள்ள பொற்சபையானது மனித இதயத்தின் குறியீடாகும். சுத்த சன்மார்க்கத்தில் ‘தகர’ என்பது மனிதத் தலையினைக் குறிக்கும். ஏனெனில் ஞானசபை மனிதத் தலையின் குறியீடாகும். ஞானசபையில் வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு “தகர விளக்கு” (சாகா விளக்கு – அணையா விளக்கு) எனப்பெயர். தகர விளக்கு எரிவதால் வடலூரில் உள்ள ஞானசபையை ‘தகராலயம்’ மற்றும் ‘தகராகாசம்’ என வழங்கலாம்.  

          நமது சன்மார்க்க அன்பர்கள் தகரத்தால் செய்யப்பட்ட கண்ணாடி கூண்டில் விளக்கை ஏற்றிவைத்து, இதுதான் ‘தகர விளக்கு’ என்றால் அது தவறு. இருப்பினும் தத்துவப்பெயரை அது அறிவிப்பதனால் அவ்வழக்கத்தை பின்பற்றலாம். ஞானசபையின் மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டிருப்பினும், அதன் பொருட்டு ‘தகர விளக்கு’ என பெயர் தோன்றிவிட்டது என்பதும் தவறு. நிற்க.

          நாம் பெரும் புருஷார்த்தம் நான்கில் முதல் இரண்டு என்னவெனில், ஏம சித்தி மற்றும் சாகாக்கல்வியாகும். இந்த ஏம சித்தியையே (தங்கம் செய்யும் திறன்) வகர வித்தை எனவும், சாகாக் கல்வியினை தகர வித்தை எனவும் பரிபாஷையாக (இரகசிய குறியீடாக) தொன்று தொட்டு வழங்கி வருகின்றோம். எனவே வகரம் மற்றும் தகரம் என்பதற்கு நேரடியான பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது.  

          பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம் முதலியவைகளைக் கொண்டு தங்கமும் செய்யலாம், தேகத்தையும் நீடிக்கச் செய்யலாம். இவைகளைக் கொண்டு தேகத்தை நீடிக்கச் செய்பவர்கள் சமய வாதிகள். இவர்கள் செய்யும் தகர வித்தையானது தேகத்தை நீட்டிக்கச் செய்யுமே தவிர மரணத்தை ஒழிக்க வல்லது அல்ல.

மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.” (திருவருட்பா-உரை நடை நூல்- பக்கம்-402)

எனவே சுத்த சன்மார்க்கத்தில் தகர வித்தை (சாகாக் கல்வி) பயின்றால் மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும். சுத்த சன்மார்க்கத்தில் தகர வித்தை எவ்வாறு செய்வது என்பதை அருட்பெருஞ்ஜோதி இறைவனிடமே கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். எனினும் வள்ளற்பெருமான் தமது உரைநடை நூலில் சாகாக் கல்விக்கு ஏதுவாக இரண்டு குறிப்புகளை மட்டும் கொடுத்துள்ளார். அதில் முதல் குறிப்பு ஆயுசு விருத்திக்கும், அடுத்த குறிப்பு சாகாக்கல்விக்கு வழியாகவும் அருளியுள்ளார்.  
“தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-411)
ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்து கொண்டிருக்கும் வழியில் சென்றால் சாகாக் கல்வியான தகர வித்தையினை இறைவனே நமக்கு சொல்லித் தருவான். அது அல்லாமல் யோக நிலையிலும் சாகாக் கல்வியினை அனுபவிக்கலாம்.
“சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம். போகாப்புனல் என்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு…. இவ்வாறு 43 நிலைகளும் ஏறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன்….” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-440)

யோக நிலையில் சாகாக் கல்வியினை கற்பது, சுத்த சன்மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. “யோகம் செய்தல் வேண்டுவதில்லை. அதில் அழுந்திவிட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை. மூடம் உண்டாகும் உண்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-388) என்று அறிவித்திருப்பதால் சிவக்கலப்பான திருவடியை ஞாபகஞ் செய்துக்கொண்டிருப்பதே சன்மார்க்க தகர வித்தையின் தொடக்கமாகும். ஞான சபையில் உள்ள தகர விளக்கு போல, தகர மெய்யில் (உடம்பில்) தகர விளக்கை அடைவதே “தகர மெய் ஞானம்” ஆகும்.    

          ‘அகர’ என்றால் ‘8’ என்கின்ற எண்ணைக் குறிக்கும். நமது எண் சாண் உடம்பிற்கு ‘அகரம்’ எனப்பெயர். ‘எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே” என்று ஒளவையார் கூறுவார். எனவே உயிர் கொண்ட உடல்கள் எல்லாம் “அகரம்” என வழங்கப்படும். அகரத்தில் நிலைக்கின்ற இறைவன் ஆகையால் ‘அகர நிலைப்பதி’ ஆயிற்று.

தகர மெய் ஞானம் நான் பெற்றவுடன் தனிப்பெரு வெளியாய் எனது அகரத்தில் நிலைக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

          தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
          அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி – 48

          “தத்துவம் என்பது சிவத்தின் தன்மை” சிவம் என்பது சச்சிதானந்தம். தன்மை என்பது குணம். எனவே சத்து சித்து ஆனந்தம் இவைகளின் குணங்களான எல்லாம் உள்ளதாய் விளங்குவது, எல்லாம் விளங்குவதாய் உள்ளது, இவை இரண்டினாலும் நிரம்பிய இன்பம் ஆகிய குணங்களுக்கும் மேற்பட்டதே தனிவெளி என்கின்ற திரு அம்பலத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆகும்.

இவ்வுலகில் வழங்கப்படும் எந்த ஒரு தத்துவப் பொருளுக்கும் அடங்காது அதனைக்கடந்து தனிப்பொருள் வெளியென்னும் அரங்கில் (அம்பலம் – அரங்கம் – சிற்சபை) விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

          சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
          அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி - 50

வள்ளற்பெருமானின் வழியில் சச்சிதானந்தம் என்றால்… “சிவம்” எனப் பொருளாகும். சத்து, சித்து மற்றும் ஆனந்தம் என்பதன் கூட்டு வாக்கியமே சச்சிதானந்தம்.

“சி” என்கின்ற சிகரம் “சத்து” – எல்லாம் உள்ளதாய் விளங்குவது.
“வ” என்கின்ற வகரம் சித்து – எல்லாம் விளங்குவதாய் உள்ளது.
“ம்” என்கின்ற மகரம் ஆனந்தம் – இவை இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.

சத்து என்கின்ற சுத்த சன்மார்க்கம் கடைபிடிப்பவர்களுக்கு சித்து என்கின்ற மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும். சுத்த சன்மார்க்கமும் அதன் மூலம் கிடைக்கின்ற பெருவாழ்வும் இணைவதே ஆனந்தம் ஆகும். இதுவே சிவம் என்கின்ற சச்சிதானந்தம் ஆகும்.

ஒரே வகையான எழுத்துருவை உருவாக்கி அதனை பலரும் பயன்படுத்தும் கலைக்கு “அச்சியல்” எனப்பெயர். இங்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் “சச்சிதானந்தம்” என்கின்ற இன்ப உருவை உருவாக்கி அதனை அச்சு அசலாய் நமது எல்லோரது அம்பலத்திலும் (சிற்சபையில்) பயன்படும்படி செய்வித்திருக்கின்றார். மனிதனின் புறத்தோற்றம் ஒவ்வொரு மனிதனிக்கும் மாறுபட்டிருக்க, அகத்தோற்றமான சிற்சபை அச்சியல் படி எல்லோருக்கும் ஒரே அரங்கமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை குறிப்பதே “அச்சியல் அம்பலம்” என்பதாகும்.


          நம் ஒவ்வொருவருக்குள்ளும், அச்சு போல் தன்மையில் மாறாமல் உள்ள அரங்கத்தில் (சிற்சபையில்) சச்சிதானந்தமாம் தனிப்பர வெளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.  
                                         --- தி.ம.இராமலிங்கம்.

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றிகள் பல .

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.