Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 4

இந்துமதம் எங்கே போகிறது? - 4
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்... முதன்மையான திட்டம் காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவதுதான்.

திட்டப்படி... காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது... நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக் கொடிகளை பிடித்துக் கொண்டோம்.

'தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள்... சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்...' என்று நாங்கள் பல கோஷங்கள் போட்டோம்.

காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாக கோஷங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கிறேன். காந்தி பந்தலு அய்யரை தன் அருகில் அழைத்தார். என்ன விவகாரம்?... எனக் கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக் காட்டி...

'உங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன். 'why are you demonstrate young men?' என கேட்டார்.

நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

'நான் தீண்டாமை முற்றாக வேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைப்படுத்துவதை விட்டு விடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்ய வந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா?... மநுவில் பஞசமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏன் என்பதயும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது... தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக் கூடிய அளவுக்கு சூத்ரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இத்தகைய காலகட்டத்தில்... பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்ரர்கள் மீது பரிதாபம், அனுதாபம், ஏன் ப்ரியம் கூட ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்?... கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள்.

சூத்ரர்களை கடுமையாக நடத்தி வந்த பிராமணர்கள்... தங்கள் வீட்டுப் பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரிகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கி வைத்தனர்.

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே 'சண்டாளார்கள்' என்றுதான் பெயர்.

அதனால்தான் சண்டாளர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்து... நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு... அபச்சாரம்... என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள். அவர்களின் தாயார், தகப்பனார் யார் என எண்ணிப்பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது நானாக சொல்லவில்லை...'

என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசி முடித்தார் காந்தியடிகள்.

முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக் கொண்டேன்.

என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை கேட்டீர்களா?...

நீங்கள் இப்போது கேட்டதை... நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.

காந்தி தன்பாட்டுக்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்க... நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். 'சண்டாளர்கள்' என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்ரர்களோடு ப்ரியப்பட்டார்கள் அல்லவா?... அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்?...

ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள். 'நாளைய சந்ததியில் இவர்கள் 'தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது'... சிந்தித்தார்கள்... 'a stable society' அதாவது நிலையான சமூக கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. அதற்காக?...

பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

சூத்ரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்ரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். சத்ரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் சத்ரியன்தான்.

இதுதான் அவர்கள் வகுத்த stable society. மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.

சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும்... சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல...

சத்ரிய ஸ்தீரிகள்... இந்த புத்ரர்கள்
வைசிய ஸ்தீரிகள்... இந்த புத்ரர்கள்
மேலும்
சூத்ர ஸ்தீர்கள்... பிராமண, சத்ரிய, வைசிய புத்ரர்கள்.

இப்படி காதல் தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காம தேவனும் கூட்டணி வைத்து இஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த 'stable society' அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு... அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.

என்ன மாற்றுச் சட்டம்?...

முறைகேடான... சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார் மநு.

ஒன்று... அனுலோம சங்கரம்...
இரண்டு... ப்ரதிலோம சங்கரம்.

அனுலோம, பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் 'சங்கரம்' என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்மந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்'.

சரி... அனுலோம சங்கரம் என்றால்? இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே... சொன்னதுபோல 'சங்கர' உறவை எல்லா ஜாதிக்காரர்களும் மறைமுகமாக நடத்திக் கொண்டுதான் வந்தார்கள்.

இந்த உறவில்...

ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்து...
பெண் கீழ்ஜாதிக்காரியாக இருந்தால்
இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல்ஜாதி ஆண் அல்லவா... கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக்கொண்டிருக்கிறான்.

நமது இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது.. உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்மந்தத்துக்குப் பெயர்தான் அனுலோம சங்கரம். இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக்காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.

இந்த சம்மந்தத்தில்...

ஆண் மேல்ஜாதிக்காரனாகவும், பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.

'உலகத்துக்கே அமைதியை தருவது பெண்களின் அழகுதான்.. என்றது வேதம். மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல்ஜாதி ஆண்களை கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டு கொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாவம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் 'ப்ரதிலோம சங்கரம்' பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது...

மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்து, பறித்து, நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.

அடேய்... அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள். நாம் வாழும் தெருவில் அவர்களின் பாதத்தடங்கள் படக்கூடாது. அவர்களின் சுவாசக்காற்று... நமது தெருக்காற்றை உரசக்கூடாது.

அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள்தான் என சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக 'பிரதிலோம சங்கர' கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?...

ஆனால்... 'அனுலோம சங்கர' கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து... தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு.

மநுவின் 'சண்டாளன்' என்ற பதத்துக்கு... சமஸ்கிருத மொழியில் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் என சொல்லியிருக்கிறார்.

நாம் மேலும் வரலாற்றை தேடுவோம்.

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள் பிராமணர்கள் என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

"வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்கு பிறந்தவன் வணிகன்தான். சூத்திரனுக்கு பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். சத்திரியனுக்கு பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் சத்திரியன்தான்"

என Stable Society-க்கு மநு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளை படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னதுதான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லி இருக்கிறதா...?
பெரும் வியாபாரிகள்
என்ற கேள்விதா அது.

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்குமுன்... ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'படம் பார்த்து தெரிந்து கொள்' என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

'என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே... இந்த ஆள்' என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்துதான் பதிலை ஆரம்பிக்க வேண்டும்.

சொல்லிக் கொடுத்தவுடனேயே 'பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல்', 'பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல' கிரகித்துக் கொள்ளும் சின்னக்குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது அந்தப் புத்தகத்தில்?

சத்திரியன் (ராஜாபோல் படம்) நாட்டை ஆள்பவன், வைசியன் (ஒரு வியாபாரி படம்) வியாபாரம் செய்பவன், சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்) விவசாயம் செய்பவன், அய்யர் (ஒரு பிராமணன் படம்) நல்லவர்.

இந்த ஒன்றாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால்... அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக 'நல்லவர்' என எழுதப்பட்டிருக்கிறது, ஏன்?

'ப்ராமணியம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. ப்ராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.

பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான், கொலை செய்யமாட்டான், லோகசாந்திக்காக வாழ்வான்... இவனால்தான் அரசர்கள் முதற்கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள்.'


என வேத நூல் நீட்டி முழக்கி சொன்னதைதான் நமது பாட நூல் அய்யர்-நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

                                        to be continue.... 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.