திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – 1
“உ” – உரை
“உ” என்ற எழுத்தை
வள்ளற்பெருமான் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதத்துவங்குகையில் முதலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவ்வெழுத்தின் பொருள்,
தமது
திருவுடம்பில் செயல்படுகின்ற திருஉயிரைக்குறித்துதான் அவ்வாறு “உ” என்கிற குறியீடாக
எழுதியுள்ளார்கள். எல்லா உயிர்களின் பொருட்டும் எமது உயிரானது திரு அருட்பெருஞ்ஜோதி
அகவலை எழுதுகின்றது என்று பொருள்.
சுத்த
சன்மார்க்கம் என்றாலே அது உயிர் சம்பந்தமுடையது. நமது உயிர் உடலைவிட்டு ஏகக்கூடாது.
அதுபோல எவ்வுயிரும் துன்பபடக்கூடாது என்கின்ற உயர்ந்த நோக்கமுடையது சுத்த சன்மார்க்கம்.
தமிழில் உள்ள எண்களை சொல்லும்போது அவ்வெண்கள் எல்லாம் ‘உ’கரத்தில் முடிவதாய் அமைந்திருக்கும்.
வேறு எந்த மொழி எண்களுக்கும் இச்சிறப்பு கிடையாது. அதாவது ‘ஒன்று’, ‘இரண்டு’ என்று
தமிழ் எண்களை தொடர்ந்து உச்சரிக்கும்போது ‘உ’, ‘உ’ என்ற சப்தத்துடன் முடிவதைப் பார்க்கலாம்.
எவ்வாறு எண்களுக்கு ஒரு முடிவென்பது இல்லையோ, அவ்வாறே உயிர்களின் எண்ணிக்கைக்கும் முடிவென்பதே
கிடையாது என்பதைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே நமது தமிழ் எண்களின் ஒலிகள்.
அப்படிப்பட்ட உயிர்களுக்கிடையே உள்ள ஆன்ம நேயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்ததே
‘உ’ என்கின்ற தொடக்கம்.
“திருச்சிற்றம்பலம்” – உரை
அடுத்ததாக
“திருச்சிற்றம்பலம்” என்ற சொல்லினை எழுதியிருப்பார். இச்சொல்லின் பொருள், திரு+சித்+அம்பலம்
என்று பிரியும். ‘திரு’ என்பது இறைவனைக்குறிக்கும். ‘சித்’ என்பது அறிவைக்குறிக்கும்.
‘அம்பலம்’ என்பது வெளியைக்குறிக்கும். இறைவன் அறிவே வடிவாக வெளியில் இருக்கின்றான்.
வெளி என்பது அண்டம். நமது உடம்பில் கழுத்துக்கு
மேல் உள்ள முகம் முழுதும் அண்டத்தைக்குறிக்கும்.
அந்த முகம் என்னும் அண்டத்தில் அறிவே வடிவமாக புருவ மத்தியில் இறைவன் விளங்குகின்றான்.
இதனைக் குறிப்பதுதான் ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் சொல்.
இப்படி அறிவே
வடிவமான இறைவனுடன் எனது “உ” என்கிற உயிரானது அம்பலத்தில் கலந்ததால், திரு அருட்பெருஞ்ஜோதி
அகவலை இறை அறிவே எழுதுகின்றது என்பதை குறிப்பதற்காக ‘உ’ என்றும் ‘திருச்சிற்றம்பலம்’
என்றும் வள்ளற்பெருமான் அருளியிருக்கின்றார்.
அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி -2
உரை:
1. அருட்பெருஞ்ஜோதி:-
ஜோதியே இறைவன்
என்பது வள்ளல் வாக்கு. அந்த ஜோதி என்பது சாதாரணமாக இல்லாமல் மிகப்பெரிய உருவம் உடையதாக
உள்ளது. அதனால் அதனை ‘பெருஞ்ஜோதி’ என்கிறார். ஜோதி என்றால் அது நம் ஊண கண்களுக்குத்
தெரிந்துதானே ஆகவேண்டும். பெரிய ஜோதி என்கிறார்! ஆனால் நம்மால் அதனை கண்டு களிக்க முடியவில்லையே!
ஒரு வேளை பொய் சொல்கின்றாரோ?
நம்மால் அளக்க
முடியாத நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திர ஒளியைக்கூட நமது கண்கள் பார்த்துவிடுகின்றன.
ஆச்சரியம்தான்! சூரிய ஒளி, சந்திர ஒளி, நாம் உருவாக்கிய மின் ஒளி, தீப ஒளி போன்றவைகளை
நமது கண்கள் பார்த்துவிடுகின்றன. இவைகளைவிட பெரிய ஜோதியாக விளங்கும் இறைவனை ஏன் நமது
கண்களால் பார்க்க முடியவில்லை?
வீறும் பெருவெளி
ஜோதி – மேலும்
வெட்ட வெளியில்
விளங்கிய ஜோதி. – 4566
‘வீறும்’ என்றால் ‘பிரகாசம்’ எனப்பொருள்.
பெரிய வெளி என்பது, கோள்கள், நட்சத்திரங்கள், வாயுக்கள், கற்கள் இவைகள் போன்ற பொருட்களை
உடைய மிகப்பெரிய வெளியை பெருவெளி என்கிறோம். இப்படிப்பட்ட பெருவெளி எங்கும் அருட்பெருஞ்ஜோதி
பிரகாசம் நிறைந்துள்ளது. மேலும் அவைகளையும் கடந்த ஏதுமற்ற வெட்ட வெளியில்கூட அருட்பெருஞ்ஜொதியின்
மயம்தான் என்கிறார்.
ஆனால் உண்மையில்
அவ்வாறு இருக்கின்றதா? நாம் பூமியிலிருந்து வானத்தை (அண்டத்தை) பார்க்கிறோம். வெளியானது
நீல நிறமாகக் காட்சியளிக்கின்றது. இரவில் இருளாக காட்சியளிக்கின்றது. சூரிய ஒளி நமது
காற்று மண்டலத்தில் பட்டு சிதறுகின்றது. அந்த வெள்ளொளியை காற்றானது சிதறியடிக்கும்போது நீல நிறத்தை மட்டும் நமக்கு காட்சியாகக் கொடுக்கின்றது.
அதுபோல் இரவில் சூரியன் மறைந்துவிடுவதால் நமக்கு
வெளியானது இருளாகத் தெரிகின்றது.
பெரிய ஜோதியானது
மகா பிரகாசமாக அண்டம் முழுதும் பரவி யிருப்பதாக வள்ளலார் உரைக்கின்றார். அது உண்மையானால் நமது பூமிக்கு இரவு பகலே வரக்கூடாது. என்றும் பகலாக
அல்லவா இருக்க வேண்டும்! அண்டம் முழுதும் வெளிச்சமாகத்தானே இருக்கவேண்டும்! நமது காற்று
மண்டலத்தை விட்டு வெளியில் சென்று நாம் அண்டத்தை நோக்கினால் நீல நிறம் மறைந்து எல்லாம் இருளாகவே
தெரியும். எங்கும் ஜோதி மயம் என்பதை பொய்யாக்கி, எங்கும் இருள் மயமே நிறைந்திருப்பதை
காணலாம். ஆகவே உண்மையில் வெளிகளெல்லாம் இருள் மயமாகத்தான் இருக்கின்றது.
அதனால்தான்
“அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். அரு+இருள்=அருள், என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும்.
இறைவன் என்கிற பெருஞ்ஜோதியானது தம்மை மறைத்துக்கொண்டு மாயா உருவமாக அதாவது அருவமாக / இருளாகவே எங்கும் காட்சியளிக்கிறார்.
நாம் நமது மூன்றாவது கண்ணை திறந்து பார்க்கும்போதுதான்
அந்த இருள் என்கிற மாயை விலகி எல்லாம் பட்டப்பகல் போலத் தெரியவரும். நமது இரண்டு கண்களால், இந்த விண்வெளியில் எத்தனை கோடி
ஒளி ஆண்டுகள் தூரம் கடந்து சென்று பார்த்தாலும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருவமாகவே/இருளாகவே
தெரியும். இதனைத்தான் வள்ளலார் ‘பெருஞ்ஜோதி’ அருவமாக இருக்கின்றது என்று தமது முதல்
‘அருட்பெருஞ்ஜோதி’யில் குறிப்பிடுகின்றார்.
இருளும் ஒளியும்
ஒன்றாகவே கலந்து இருக்கின்றன. இப்படி கலந்து இருக்கும் இவைகளை நாம், அன்னப்பறவை எவ்வாறு
பாலில் கலந்துள்ள நீரினை விடுத்து பாலை மட்டும் அருந்துகின்றதோ! அவ்வாறு நாம் இருளிலிருந்து
ஒளியினை மட்டும் காணவேண்டும். இதனை ‘விகங்க நியாயம்’ என்பார் வள்ளலார். ஒளியினை கண்டுவிட்டால்
அங்கு இருள் இருக்காது. நாம் இருளினை பார்ப்பதால்
அங்கு ஒளி தென்படவில்லை. இருள் என்பது ஒளியின் அருவமாகும். ஒளி என்பது இருளின் அருவமாகும்.
மருட்பெரு
மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந்
தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. –
5306
நம்மை ஏமாற்றுகின்ற மாயை நம்மளவில் முற்றும்
அழியவேண்டும். நமது வினைகள் ஓட வேண்டும். அப்போதுதான் இருளான பெருந் தடையை நீக்கி அருட்பெருஞ்ஜோதி
பிரகாசம் எனும் சூரியன் எழுவதை நாம் இவ்வண்டத்தும், பிண்டத்தும் காணலாம். இப்படிப்பட்ட
மாயையினைத்தான் திரைகளாக உருவகப்படுத்தியதை ஞானசபையில் நாம் காண்கின்றோம்.
2. அருட்பெருஞ்ஜோதி:-
முதலில்
சொல்லப்பட்ட ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் இயல்பை குறித்து வந்தது. இரண்டாவதாக
வருகின்ற ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் பெயரைக் குறித்து வந்தது. அதாவது
‘பெருஞ்ஜோதி’யாக உள்ள அவ்விறைவனுக்கு வள்ளலார் வைத்த பெயர் “அருள்” என்பதாகும். அருள்+பெருஞ்ஜோதி என்று பிரித்தறிய வேண்டும். அருள்
என்கிற பெயருடைய பெருஞ்ஜோதி என்று இதற்கு பொருள்.
நமக்கு அருவமான
இருளானது அருவுருவமான ஜோதியாகக் காட்சியளிக்கும்போது, அந்த பேரொளியின் பிரகாசத்தால்
நாம்பார்ப்பது செம்பொருளாகிய ‘சுத்த சிவம்’ ஆகும். ‘சுத்த சிவம்’ என்கின்ற இறைவனை நமக்குக்
காட்டிக்கொடுப்பது ‘பெருஞ்ஜோதி’ என்கிற பிரகாசம் ஆகும். பெருஞ்ஜோதியின் தயவன்றி சுத்த
சிவம் தோன்றாது. எனவே அந்த தயவிற்கு ‘அருள்’ என்று பெயர் வைத்து ‘அருட்பெருஞ்ஜோதி’
என்று வழங்குகின்றார். ‘அருள்’ என்பது பெருஞ்ஜோதிக்கு காரணப்பெயராக அமைந்துள்ளது. பெருஞ்ஜோதி
நமக்கு எதனை அருள்கின்றது? என்ற வினா எழுகின்றது. சுத்த சிவ சன்மார்க்க நிலையில் நம்மை
நிறுத்தி என்றும் இறவாத ஒளிதேகத்தை நமக்கு அருளுகின்றது. எனவேதான் அந்த பெருஞ்ஜோதிக்கு
‘அருள்’ என பெயர் வைத்தார் வள்ளலார். நமக்கு இறவா நிலையை கொடுக்கும் நிகழ்வுக்கு அருள்
எனப்பெயர். அந்த அருளை கொடுக்கும் பெருஞ்ஜோதிக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயர்.
‘சுத்த சிவம்’
என்பதே இறைவன். ‘பெருஞ்ஜோதி’ என்பது சுத்த சிவத்தின் பிரகாசம். அப்பிரகாசத்திற்கு வள்ளலார்
வைத்த பெயர் அருள் அல்லது கருணை. எனவே, சுத்த சன்மார்க்க சாதனமாம் ‘கருணையும் சிவமுமே
பொருளெனக் காணும் காட்சி’யே அருட்பெருஞ்ஜோதி காட்சியாகும்.
தவறாத வேதாந்த
சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ
சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால்
கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ
வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
– 4179
இங்கே நாம்
ஒன்றை கவனிக்கவேண்டும். ‘அரும்பெரும்ஜோதி’ என்பதும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பதும் ஒன்றல்ல.
‘அரும்பெரும்ஜோதி’ என்பது சைவ சமயக் கடவுளான ‘சிவன்’/’ஈசன்’ என்பவரைக் குறிக்கும்.
இந்த சிவபெருமானை குறித்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்றும் ‘அரும்பெரும்ஜோதி’ என்றும் வள்ளலாரும்
பாடியுள்ளார். அருமை + பெருமை + ஜோதி = ‘அரும்பெரும்ஜோதி என்றாயிற்று. அருமையும் பெருமையும் வாய்ந்த ஜோதி என்னும் இறைவன் என்பது பொருள். எனினும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது ‘சுத்த சிவம்’ என்றும் இதுவரை யாராலும்
அறிவிக்கப்படாத ‘தனிக்கடவுள்’ என்றும் தமது இறுதி அனுபவ முடிபாக வள்ளற்பெருமான் அருளியுள்ளார். அருள் + பெரும் + ஜோதி = அருள் நிறைந்த ஜோதி என்றாயிற்று. எனவே நாம் இவை இரண்டிற்கும் உள்ள பொருள் அறிந்து அதன்படி நடத்தல் வேண்டும்.
‘அருட்பெருஞ்
சோதிஎன் ஆண்டவ ரேதிரு
அம்பல வாணரே வாரீர்
அன்புடை யாளரே வாரீர். – 4354
‘ஆதிஅ னாதிஎன்
றாரணம் போற்றும்
அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர். - 4364
3.
அருட்பெருஞ்ஜோதி:-
முதலில் அருட்பெருஞ்ஜோதியின்
இயல்பையும், இரண்டாவதாக
அருட்பெருஞ்ஜோதியின்
பெயரையும் பார்த்தோம். மூன்றாவதாக வருகின்ற அருட்பெருஞ்ஜோதியினை அருட்டு+பெருஞ்ஜோதி
என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும். அருட்டு என்றால் எழுப்புதல் எனப்பொருள். பெருஞ்ஜோதியாம்
பிரகாசம் யாரை எழுப்புகின்றது? எவ்வுலகிலுமுள்ள செத்தாரை எல்லாம் எழுப்புகின்றது. செத்தாரை
எழுப்பும் சன்மார்க்க காலம் பிறந்துவிட்டதை இந்த மூன்றாவது அருட்பெருஞ்ஜோதி நமக்கு தெரிவிக்கின்றது.
செத்தாரை எழுப்புதல் என்பது அறிவில்லாதவனுக்கு அறிவூட்டும் செயல் என்பது போன்று சிலர் கருதுகின்றனர். ஆனால் வள்ளற்பெருமான்
அந்நோக்கில் சொல்லவில்லை. உயிர் பிரிந்து இறந்தவர்களை
எல்லாம் மீண்டும் உயிரோடு எழுப்புதல் பற்றியே
சொல்லியிருக்கின்றார்.
“சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும்
காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர்,
உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள்
என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த
சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கஞ் செய்யப்படாது. உண்மை.”
(திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-544)
இச்செய்தியினை உண்மை என நம்புதல் வேண்டும். இவ்விஷயத்தில் நாம்
எந்த ஒரு கேள்வியினையும் எழுப்ப வேண்டாம் என
அவரே தடைவிதித்துவிட்டார். இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எல்லாம் எழுவார்களா? என்றால்
இல்லை. வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்க அனுபவம் வந்த நாள்முதல், சுத்த சிவத்தை
கண்ட நாள்முதல் இவ்வுலகில் இறந்தார்களை எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாம் பிரகாசம் எழுப்பியருளும்.
இந்தச் செய்தியினைத்தான் மூன்றாவதாக அமைந்துள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ நமக்குத் தெரிவிக்கின்றது.
4. அருட்பெருஞ்ஜோதி:-
நான்காவதாக
அருளப்பட்டுள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது அணு ஆற்றலை எடுத்தியம்புகின்றது. ‘அரு+பெரு+ஜோதி’
என்று பிரிக்க வேண்டும். ‘அரு’ என்றால் ‘அணு’ எனப்பொருள். அணு என்றால் என்னவென்று நமக்கெல்லாம்
ஓரளவுக்குத் தெரியும். நமது ஊனக்கண்களால் காணமுடியாத மிகச்சிறிய துகளை அணு என்கின்றோம்.
இப்படிப்பட்ட இந்த அணுக்கள்தான் பொருட்களாகவும் பொருள் அற்றதாகவும் இருக்கின்ற நமது
உலகம் உட்பட இந்த விண்வெளியை ஆட்சி செய்துவருகின்றது.
அப்படிப்பட்ட
அணுவிற்குள் என்னதான் இருக்கின்றது. மிக மிகச்சிறிய துகளுள் அப்படி என்னதான் இருந்துவிட
முடியும்? என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த அணுக்குள் பல அண்டங்களை அடுக்கிவிடும்
அளவிற்கு இடம் இருக்கின்றது. அண்டம் எங்கே? அணு எங்கே? இது எப்படி சாத்தியமாகும்? ஆனால்
அதுதான் உண்மை. அவ்வணுவிற்குள் ‘பெருஞ்ஜோதி’யே இருக்கின்றது. ஊசிக்காதுக்குள் ஒட்டகத்தை
புகுத்த முடியும் என்பதை இயற்கை செய்துமுடித்திருக்கின்றது.
‘அன்பெனும்
அணுவில் அமைந்த பேரொளியே’ என்பார் வள்ளலார். நமது உடம்பும் நமது உடம்பை சுற்றியுள்ள
வெற்றிடங்களும் அணுக்களாலே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அணுக்கள் எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாகவே
இருக்கின்றன. இதனால்தான் ‘உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்?’ என்கிறார் வள்ளலார்.
அணுக்களுக்கு உள்ளும் அணுக்களுக்கு வெளியும் பெருஞ்ஜோதியே இருக்கின்றது. எனவே யாதொன்று
பற்றியும் வாட்டம் கொள்ளக்கூடாது என்கிறார் வள்ளலார்.
ஓர் அணுவை அண்டமாக்குவதும்,
ஓர் அண்டத்தை அணுவாக்குவதும் ‘பெருஞ்ஜோதி’யின் அனுபவமாகும். அணு முதல் அண்டம் வரை எல்லாம்
ஜோதி மயமே! ‘அரு’ என்ற அணுவையும் ‘பெரு’ என்ற அண்டத்தையும் ஆளுகின்றவன் ‘ஜோதி’ என்ற
இறைவனே ஆகும். இதனையே ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நான்காவது முறையாக எடுத்தியம்புகின்றார்
வள்ளற்பெருமான்.
நமது ஊனக்கண்களுக்கு
இருளாகவே காட்சியளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, அருள் என்கின்ற பெயரைத் தாங்கி நமக்கு இறவா
வரத்தை அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, இறந்தாரை எல்லாம் எழுப்புகின்ற அருட்பெருஞ்ஜோதி,
சிறிதினும் சிறிதாய் பெரிதினும் பெரிதாய் இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி என்று இந்த நான்கு
பொருள்களில் அடங்குகின்றன திரு அருட்பெருஞ்ஜோதி அகவலின் முதல் இரண்டு வரிகள்.
இதற்கு மேற்பட்டு
‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நாம் எங்கெங்கு படிக்கவோ, பிறர் ஓத கேட்கவோ நேர்ந்தாலும் அதற்கு
மேற்காணும் நான்கு பொருளையும் ஒருங்கே நினைத்து நாம் தியானித்து வந்தோமானால் நமக்கு
சுத்த சிவத்தின் பிரகாச காட்சியும், இறவா வரமும், செத்தாரை எழுப்புகின்ற திறமும், அவனன்றி
ஓர் அணுவும் அசையாது என்கிற உண்மையும் பெற்று சுத்த சன்மார்க்கியாக்கும் வல்லமை இந்த
‘அருட்பெருஞ்ஜோதி’ என்கின்ற சொல்லுக்கு உண்டு. - TMR