நியாயங்கள்
ஆன்ம லாபம் அடைவதற்கு நியாயம் இரண்டு.
என்னெனில்: பிபீலிகா நியாயம்; விகங்க நியாயம். இவற்றுள் சிறந்தது விகங்கம். பலவகை இம்சையால்
போகத் தடைபட்டுப் போவது பிபீலிகா மார்க்கம். - VALLALAR
பிபீலிகா – எறும்பு; விகங்கம் – அன்னப்பறவை.
பிபீலிகா நியாயம் / மார்க்கம் என்பது
எறும்பின் குணத்தை ஒத்து இருக்கும். எறும்புகள் தங்களது தேவைக்கும் அதிகமான அளவில்
தமது உணவுகளைத் தேடித் தேடி அங்கும் இங்கும் ஊர்ந்துக்கொண்டே இருக்கும். ஓய்வு என்பதே
அதற்குக் கிடையாது. மீண்டும் மீண்டும் வேண்டும் என்கிற ஆசை எறும்புகளை ஓய்வில்லாமல்
இயக்கிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட மேம்பட்டத் தேவைகள் எல்லா எறும்புகளுக்கும்
உண்டா? என்றால் இல்லை. ஒரு எறும்புக்கூட்டத்தை ஓரிரு எறும்புகளே வழிநடத்துகின்றன. மற்ற
எறும்புகள் எல்லாம் நாம் எங்குச் செல்கின்றோம்? எதற்காகச் செல்கின்றோம்? என்ற அறிவே
இல்லாமல் அந்த ஓரிரு எறும்புகள் பின்னே பின்தொடரும். அதன் கட்டளையினை செய்து முடிக்கும்.
இதுதான் எறும்புகளின் இயல்பு.
மனிதர்களுக்கான நமக்கும் ‘ஆன்ம லாபம்’
அடையவேண்டும் என்கின்ற ஆசை உண்டு. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் அந்த ஆசை உண்டா? எனில் இல்லை. ஏதோ ஓரிரு நபர்களுக்கு அந்த ஆசை இயல்பாக
வந்துவிடுகின்றது. அப்படிப்பட்ட ஆசை உள்ள நபரைத்தான் நாம் குரு / ஆசிரியர் என்கின்றோம்.
அவர் சொல்படி மற்ற மனிதர்களாகிய நாமெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செயலில் இறங்குகின்றோம்.
அப்படி பிறந்தது தான் உலகியலில் உள்ள மதங்கள் எல்லாம்.
இப்படி யாரோ ஒருவர் கூறுவதைக் கேட்டு,
மக்களாகிய நாம் அந்த எறும்புகளைப் போன்று அவர் சொல்வதையே எந்த ஒரு கேள்வியும் கேட்காமல்
பின்தொடர்கின்றோம். ஓயாமல் கோவில், குளம், குட்டை, மலை, குகை, பள்ளத்தாக்கு, சமாதி,
ஆசிரமம், கடல், நதி, தேவாலயம், மசூதி, பள்ளிவாசல், புனித இடங்கள் என்று எங்கெங்கோ அலைகின்றோம். ஆனால் யாருக்கும்
ஆன்ம இலாபம் கிடைத்தபாடில்லை. ஏனென்றால் நாம் அங்கெல்லாம் எதற்காகச் செல்லவேண்டும்
என்ற நோக்கமே நமக்கு இருப்பதில்லை. நமது நோக்கமே வேறு. வாழ்வியல் நோக்கத்திற்காக நாம்
அங்குச் சென்றால் ஆன்ம இலாபம் எவ்வாறு கிட்டும்? அங்கெல்லாம் சென்றால் ஆன்ம இலாபம்
கிடைக்குமா? என்பதெல்லாம் எறும்புகளாகிய நமக்குத் தெரியாது! நமது நோக்கத்தை மறைப்பது
எது? அந்த ஓரிரு எறும்புகள் போன்ற சில குருமார்கள் தான். அவர்கள் போதித்த தவறான பாதைகள்
தான். எறும்புக்கூட்டங்களாய் நாம் இருக்கும்வரை நமக்கு ஓய்வும் இல்லை. இலாபமும் இல்லை.
நமது பாதைகள் பல்வேறு இம்சையால், மேற்கொண்டு எங்குச் செல்வது என்று தெரியாமல் தடைபட்டு
மரணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் தொடரும்.
விகாங்க நியாயம் / மார்க்கம் என்பது
அன்னத்தின் குணத்தை ஒத்து இருக்கும். அன்னப்பறவை உண்மையிலேயே இப்பூமியில் வாழ்ந்ததா?
என்பது நமக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் குணம் என்ன? என்பது நாம் அனைவரும் அறிவோம்.
அதாவது பாலில் நீரினை கலந்து வைத்தால், இந்த அன்னப்பறவையானது நீரினை விடுத்து பாலினை
மட்டும் அருந்திவிடக்கூடிய ஆற்றல் பெற்றது.
“பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்”
என்பார் வள்ளலார். பாலோடு கலந்த நீரினை பிரிக்க முடியாது என்கிறார். உண்மைதான். ஆனால்
அதனையும் பிரிக்கும் ஆற்றல் அன்னப்பறவைக்கு இருக்கின்றது என்றால் அதன் குணம் எவ்வளவு
மேன்மையுடையது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இப்படி அன்னப்பறவையினை ஒத்த மனிதர்களை
காண்பது அரிது. நீர் என்பது இவ்வுலக மாயை. பால் என்பது இறை இன்பம். இறை இன்பமானது மாயையோடு
கலந்தே எங்கும் நிரம்பி இருக்கின்றது. அதனால்தான் நாமெல்லாம் மேற்காணும் எறும்புகளை
போல மாயையினையே உண்மை என நம்பி சாதிகளிலும் மதங்களிலும் அபிமானித்து இருக்கின்றோம்.
மாயையினை பிரித்து இறை இன்பத்தை மட்டும் அனுபவித்து, ஆன்ம லாபம் அடைவது விகாங்க நியாயமாகும்.
நீரினை விடுத்து பாலினை மட்டும் அருந்த
அன்னப்பறவைக்கு கற்றுக்கொடுத்தது யார்? இறைவனைத் தவிர இவ்வுலகில் உள்ள எந்த ஒரு குருவும்
இல்லை. அதைப்போலவே நாம் இறைவன் ஒருவனையே நம்பி இவ்வுலக மாயையினை விலக்க வேண்டும். அது
இயல்பாகவே ஒருவனுக்கு வருதல் வேண்டும். அவ்வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. அந்த
வாய்ப்பு வள்ளற்பெருமானுக்கு கிடைத்தது. இவ்வுலக மனிதர்கள் யாரும் அவருக்கு எதனையும்
கற்றுக்கொடுக்கவில்லை. ஓதாமல் அனைத்தையும் உணர வைத்தார் இறைவர். அதற்கு அவர் தமது முற்பிறவிகளில்
செய்த தவப்பலன் அவருக்கு கைகொடுத்தது. “அரி பிரமாதிக ளெத்துணையும் பெறுதற்கு அரியதாகிய
சிவ சம்பந்தத்தை முன் செய்த தவப்பயனாற் பெற்றனம்” என்று இரத்தின முதலியாருக்கு தாம்
எழுதிய கடிதத்தில் வள்ளலார் தெரிவிக்கின்றார்.
எனவே நாம் விகாங்க மார்க்கத்தையே கடைபிடித்து
மாயையினை விலக்க செயற்கையாக முயலுவோம். அந்த முயற்சியானது நம்மை இப்பிறவியில் இல்லை
என்றாலும் ஏதாவது ஒரு பிறவியில் அன்னப்பறவை போன்று வள்ளற்பிரானை போன்று நம்மை பிறப்பெடுக்கச்
செய்விக்கும்.
ஆகவே, நாம் பிரம சொரூபத்தை பார்க்கும்போது
அதன் நாம சொரூபம் மறைந்துவிடும். நாம சொரூபத்தை பார்க்கும்போது பிரம சொரூபம் நமக்கு
மறைந்துவிடும். நாம சொரூபம் என்பதே மாயை எனப்படும்.
நாம சொரூபத்தை விடுத்து பிரம சொரூபமாகிய பாலினை மட்டும் அருந்த நாம் முன்வரவேண்டும்.
இருளும் ஒளியும் என்றும் இணைந்தே இருக்கும். ஒளி என்பது இருளின் அருவம், இருள் என்பது
ஒளியின் அருவம். நமக்கு ஒளி காட்சி அளித்தால் அங்கு இருள் இருக்காது. இருள் காட்சியளித்தால்
அங்கு ஒளி இருக்காது. நாம் இருளான காட்சியினை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அந்த இருளில்தான் ஒளியும் இருக்கின்றது. அந்த ஒளியினை காண இருளினை விலக்க வேண்டும்.
இருளினை விலக்கும் மார்க்கம்தான் விகாங்க
நியாயம் ஆகும். ஒருவன் ஆன்ம லாபம் பெறுவதற்கு
பிபீலிகா நியாயத்தை விட விகாங்க நியாயமே மிகவும் ஏற்றது.
மேலும், வேத வழி மற்றும் ஆகம வழி என்ற
இரண்டு மார்க்கத்திலும் நாம் ஆன்ம லாபம் அடைய முடியும் என்று வள்ளற்பெருமான் கூறுவார்.
அது எப்படி என நாம் அடுத்த மாதம் பார்ப்போம். - TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.