Tuesday, December 6, 2016

வாமனா அவதாரம்

வாமனா அவதாரம்

காசிபர் என்பது மனம். இவரது பிள்ளையாகிய மாபலிச் சக்கரவர்த்தியாவது மனதின் மந்தம். அதில் உண்டாகிய சீதம் சாக்கிரத்திலும் சுழுத்தியிலும் நிறைந்து நின்றது. உலகளந்த பெருமாள் ஒருகால் மேலும் ஒருகால் கீழும் அளந்து ஓர் அடிக்கு இடமில்லா திருந்தது. - Vallalar


பிரகலாதனின் வம்ச்த்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. இவன் முற்பிறவியில் எலியாக இருந்தான். இந்த எலி, வேதாரண்யம் கோயில் கருவறையில் நுழைந்து அங்கு எரிந்துக்கொண்டிருந்த சர விளக்கில் உள்ள நெய்யை உண்பதற்காக மேல் நோக்கி ஏறியது. அவ்வமயம் அவ்விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளைவாக மறுபிறவியில் கேரள நாட்டின் சக்கரவர்த்தியாக மகாபலி என்ற பெயருடன் அசுர குலத்தில் பிறந்தது அந்த எலி.

பிரகலாதனனின் மகனான விரோசனனின் மகனே இந்த மகாபலி சக்கரவர்த்தி. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரகலாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் அவனிடம் கலந்து இருந்தது. அசுரர்களின் தலைவனான மகாபலி தேவர்களுடன் ஏற்பட்ட போரில் கொல்லப்படுகின்றான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்பெற்று, மீண்டும் தேவர்களுடன் போரிட்டு தேவர்களையும், இந்திரனையும் அடித்து உதைத்து தேவலோகத்தைக் கைப்பற்றுகின்றான்.


தெவர்களும் இந்திரனும் தேவலோகத்தை கைப்பற்ற விஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார்கள். விஷ்ணு மகாபலியை பலியிட வாமன அவதாரம் எடுக்க முடிவெடுக்கின்றார். (திருமால் அவதாரத்தில் வாமன அவதாரம் ஐந்தாம் அவதாரம்) இந்திரனின் தாயான அதிதிக்கும் தந்தையான காசிபருக்கும் மகனாக வாமனர் என்ற பெயரில் மகனாகப் பிறக்கின்றார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும்போது வாமனன் இப்பூமியில் பிறந்தார். இந்நாளை விஜய துவாதசி என்று பெரியோர்கள் பெயரிட்டனர். குள்ளமான உயரம், உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறுகுடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் மகாபலியை பலியிட கிளம்புகின்றார்.

அவ்வமயம் மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்துகொண்டிருக்கின்றார். வாமனர் நேராக அங்கே செல்கிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறையில் மகாபலி சக்கரவர்த்தி, மகாபலியை அழைத்து கால் கழுவி, மரியாதை செய்வித்து, தங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், தருகின்றேன் என்றான்.

அந்தக்கட்டத்தில் வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என சுக்கிராச்சாரியாருக்கு தெரியவர, மகாபலியை அழைத்து, அந்த குள்ளனை நம்பாதே, அவனுக்கு எதையும் தரவேண்டாம் என எச்சரித்தார். தனது குருவின் எச்சரிக்கையை ஏற்க மறுக்கின்றான்.  மகாபலி, தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய முனையும்போது, சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி கமண்டல ஓட்டையை அடைத்துக்கொள்கின்றார். வாமனர் தன் குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து, ஓட்டையைக் குத்த நீர் வருகின்றது. சுக்கிராச்சாரியாருக்கு அதனால் ஒரு கண் பார்வையும் போய்விட்டது.

இப்போது தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்றவுடன், வாமனரும் எனக்கு எனது காலால் மூன்றடி மண் வேண்டும் எனக்கூறுகின்றார். இவரது குள்ள உருவத்திற்கு மூன்றடி என்ன? எத்தனை அடிவேண்டுமானாலும் தரலாம் என நினைத்த மகாபலி… தருகின்றேன் என கமண்டலத்திலிருந்து நீரினை தெளித்து வாக்களிக்கின்றான்.

அவ்வளவுதான்… அந்த குள்ள வாமனன் விஷ்வரூபம் எடுத்து ஓரடியால் பூமியை அளைந்து, இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்கிறார். தனது வாக்கினை காப்பாற்றுவதற்காக, மூன்றாவது அடியினை எனது தலையில் வையுங்கள் என்று கூறுகிறான் மகாபலி.

மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அப்படியே அவனை பாதாளத்தில் அழுத்தி சம்ஹாரம் செய்கின்றார் வாமனான விஷ்ணு பகவான். அதுமுதல் விஷ்ணுவை ஓங்கி உலகலந்த உத்தமன் / திருவிக்ரமன் என்று போற்றுவர் மக்கள்.


பகவான் கால் பட்டதும் மகாபலியின் ஆணவம் நீங்கியது. அந்தச் சமயத்தில், “பகவானே, ஒரு வரம் வேண்டும்” என்றான் மகாபலி, ‘என்ன?’ என்று  பகவான் கேட்க, “பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத்தப்படும் இந்த நாள் போற்றப்படவேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வேண்டும்” என்றான். அந்த வரத்தை அருளி, ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக  இடம் பெறுவாய் என்ற வரத்தையும் தருகின்றார் பகவான் விஷ்ணு.

பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களைக் காண கேரள நாட்டிற்கு மகாபலி வருவதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆகவே அந்நாளின் கேரளாவில் ஓணம் பண்டிகையாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகின்றது.

என்ன… வாசகர்களே… படித்தீர்களா?... எப்படி இருந்தது?... அப்படியே உண்மையில் இவையெல்லாம் நடந்ததுபோன்று ஒரு கற்பனை உலகிற்கு சென்று வந்திருப்பீர்களே!...  பலருக்கு மெய் சிலிர்த்திருக்கும்!... ஆம் நமது புராணக்கதைகளின் சக்தி நம்மை வசீகரிக்கும் தன்மையுடையது. சாதாரணமாக தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்தே நாம் உணர்ச்சிவசப்பட்டு அழுவது உண்டு. இந்த அடிப்படை மனக்கவர்ச்சியால்தான் நாம் கடவுள் பெயரைச் சொல்லி வரும் புராணத்தையினை அப்படியே நம்பிவிடுகின்றோம்.

இந்த புராணக்கதையினைப் பற்றி நமது வள்ளற்பெருமான் என்ன கூறுகின்றார் என்பதனைப் பார்ப்போம்…
மேற்காணும் புராணக்கதைக்கும் வள்ளற்பெருமான் கூறுகின்ற செய்திக்கும் சற்று மாறுதலை நாம் முதலில் காணமுடிகின்றது. அதாவது காசிபர் என்பவர் மகாபலி சக்கரவர்த்தியின் தந்தை என வள்ளற்பிரான் கூறுகின்றார். ஆனால் இந்த காசிபர் என்பவர் இந்திரனின் தந்தை என புராணம் கூறுகின்றது. மற்றும்  இக்கதையின் படி வாமனனின் தந்தையாக காசிபர் விளங்குகின்றார். இப்புராணத்தின் படி விரோசன் என்பவனின் மகனே மகாபலி சக்கரவர்த்தியாவார். அந்த அளவில் மட்டும் சிறு வேறுபாட்டினை நாம் காண்கின்றோம்.

அதாவது இப்படி மாற்றி படிக்க வேண்டும் என எண்ணுகின்றேன், “காசிபர் என்பது மனம். இவரது பிள்ளையாகிய வாமனன் என்பது மனதின் மந்தம்…” இவ்வாறே நாம் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
எனினும் காசிபரின் உண்மை, மகாபலியின் உண்மை என்ன? என்பதை தெளிவாகவே கூறியிருக்கின்றார். நாம் அதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

காசிபர் – மனம்
வாமனர் – மனதின் மந்தம்
சீதம் – குளிர்ச்சி
சாக்கிரம் / மேல் – ஆன்மாவின் விழிப்பு நிலை
சுழுத்தி / கீழ்  – புலன்கள் செயலற்று உறங்கும் நிலை

வாமனாவதாரம் என்பது நமது மனதின் அழிவினைக் குறித்து நிற்கின்றது. மந்தம் என்றால் தென்றல் அல்லது காற்று எனப்பொருள்படும். “மந்தம் ஆர் பொழில்… மாந்துறை”, “மந்தம் வந்துலவு சீர் மாமழ பாடியே…” என்று தேவரம் பாடுகின்றது. இவ்விடத்தில் மந்தம் என்பது தென்றல் என்ற பொருளினைத் தரும். நாமும் ‘மனதின் மந்தம்’ என்பதை மனதில் ஏற்படும் தென்றலான மனஓட்டத்தை குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக மனதின் மந்தம் என்பதனை மனதில் ஏற்படும் சோர்வு என்ற நேரடியான பொருளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

நமது மனஓட்டம் என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் அடிவொட்டியே அமையும். அதாவது சீதம் என்ற குளிர்ச்சி நமது மனதிற்கு எப்போது ஏற்படுமென்றால்?, நமது மூச்சு இடபுறமாக ஓடும்போது ஏற்படும். இதனை சந்திர கலை என்பர். இந்த சந்திர கலையில் மூச்சு ஓடும்போது நமது மனம் நமது ஆன்மாவின் விழிப்பு நிலையிலும் செல்லும் அதே நேரத்தில் பாதாள நிலையான நமது ஐம்புலன்களும் செயலற்று உறங்கும் நிலையிலும் செல்லும். இதை விடுத்து அடுத்த நடு நிலைக்குச் செல்லத் தெரியாது. அப்படி செல்லமுடியாமல் தவிக்கும் நமது மனதைத்தான் வாமனனாக சித்தரித்தார்கள். இது ஜீவ அறிவினைக் குறிக்கும்.

கந்தகக் காற்று சுவாசம் ஏற்படும்போது அதாவது வலப்புற சுவாசமான சூரியக் கலை நிகழும்போது நமது மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இருக்கும். அப்போது நமக்கு ஆன்ம அறிவு ஏற்படும். அதனாலேயே வள்ளற்பெருமான் சூரிய கலையிலே எப்போதும் இருக்குமாறு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள சொல்வார்.

இவை இரண்டுமின்றி சுழுமுனை என்ற நடுக்காற்றும் உள்ளது. நமது நாசியில் இருபுறமும் சுவாசம் சென்று வரும். இந்நேரத்தில்தான் சமாதி கைகூடும். அந்நிலையில் கருணை முயற்சியினால் சமாதி கூடாமல் சகஜ நிலைக்கு நாம் திரும்ப வேண்டும் என்பார் வள்ளலார். அதாவது நமது மனம் அழியும் நிலை வரும். மனித மனம் எப்போது அழிவுறுகிறதோ அந்தக் கணமே அங்கு இறைவனின் மனம் செயல்படத்துவங்கும். அந்நிலையில் ஒரு மனிதன் உத்தமனாகின்றான். “உத்தமனாகுக… ஓங்குக…” என்று இறைவனே நம்மை வாழ்த்தும் நிலை ஏற்படும்.

அப்படிப்பட்ட நடு நாடியில் (சுழுமுனை சுவாசம்) நமது மனம் அடியெடுத்து வைப்பதுதான், வாமனன் மகாபலியின் தலையில் கால் வைத்த நிலை. இதனை உணர்த்த வந்தவர்கள் ஏதோ கடவுள் பெயரால் கதை கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். நாமும் அந்தக் கதைக்கடவுளே உண்மை என நம்பி நமது காலத்தை கடந்து மாண்டுபோகின்றோம். இனியும் நாம் அவ்வாறு இராமல் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை அறிந்து மேலேறுவோம். - TMR


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.