திரு.இராமானுஜர்
அநேகரை வைணவத்திற்கு மதமாற்றம் செய்து வைணவத்தைத் தழைக்கச்செய்தவர்
திரு.இராமனுஜர். திருவரங்கம் உட்படப் பெரும்பாலான வைணவத் திருக்கோயில்களில் திரு.இராமானுஜர்
வகுத்தளித்த நெறிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. இன்று திருமலை திருப்பதி பெருமாள் கோயிலாக
விளங்குவதற்குக் காரணம் திரு.இராமனுஜரே. தொடர்ந்து வந்த சர்ச்சைகளை நீக்கித் தமது சித்தாடல்
மூலம் பெருமாள் கோயிலாக நிலைபெறச் செய்தார். திருவரங்கம் கோயிலின் வளர்ச்சியும் அவரால்
மேம்பட்டது.
இப்படி வைணவ சமயத்தின் மிகப்பெரும் மகானாக விளங்கிய இராமானுஜர்
கி.பி.04-04-1017 ஆம் ஆண்டு ஆ.சூரிகேசவ சோமாயாஜி-காந்திமதி அம்மை ஆகியோருக்கு மகனாய்
திருபெரும்பதூரில் அவதரித்தார். பதினைந்து வயது வரை தமது தந்தையாரிடமே பாடம் கேட்டார்.
பதினாறாவது வயதில் இராமானுஜருக்குத் திருமணமாகியது.
இராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து அருகில் திருபுட்குழி என்ற
ஊரில் யாதவப்பிரகாசர் எனும் துறவியிடம் பாடம் கேட்டார். குருவிடம் பலமுறை மிகுந்த கருத்துவேறுபாடு
ஏற்பட்டது. கோபமுற்ற ஆசிரியர் காசியாத்திரை அழைத்துச்சென்று இராமானுஜரைக் கொல்லத் திட்டமிட்டார்.
தன் தம்பியின் மூலம் உண்மையுணர்ந்த இராமானுஜர் சதியிலிருந்து தப்பினார். இறைவன் அருளால்
ஒரே இரவில் இருப்பிடம் வந்து சேர்ந்தார். அதன்பின் வீட்டிலிருந்தபடியே படித்துவந்தார்.
ஆளவந்தாரின் ஆணைப்படி திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரை திருவரங்கத்திற்கு
அழைத்துவந்தார். இராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தமக்கு உபதேசம் செய்தருள வேண்டினார்.
பதினெட்டு முறை உபதேசம் செய்யாமல் இராமானுஜரைத் திருப்பியனுப்பினார். பின்னர், இராமானுஜரின்
திருவரங்கத் திருப்பணிகளையும் கோயில் பணியையும் கேள்விப்பட்டு மனநிறைவுற்ற திருகோஷ்டியூர்
நம்பி, இராமானுஜரை வரவழைத்து மந்திரத்தை உபதேசித்து “இம்மந்திரம் வைகுண்ட பதவியளிக்க
வல்லது. வேறு ஒருவருக்கும் இதை உபதேசிக்கக் கூடாது” என்று கூறினார்.
அரிய மந்தரோபதேசம் பெற்ற இராமானுஜர் மக்களை எல்லாம் தன்பின்னே
வருமாறு கூவியழைத்து திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்த
அஷ்டாங்க விமானத்தின் மீதேறி – முத்தி தரும் மூலமந்திரத்தை நான் தெரிந்துகொண்டேன்.
நீங்களும் அதை மும்முறை பக்தியோடு இறைவனின் நினைவில் நினைத்து உச்சரித்தால் முக்தி
கிடைக்கும் – என்று யாவரும் கேட்குமாறு உரக்கக்கூவி – ஓம் நமோ நாராயணாய… எனும் அஷ்டோத்திர
மந்திரத்தைக் கூறினார்.
இந்நிகழ்வினைக் கேள்விபட்டு வெகுண்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள்
‘நீ குருவின் ஆணையை மீறி நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் உனக்கு நரகமே கிட்டும்’
எனச் சாபமிட்டார். உடனே இராமானுஜர் ‘உங்கள் மந்திரத்தால் பல்லாயிரம் பேருக்கு முக்தி
கிடைக்குமாயின் நான் ஒருவன் மட்டும் நரகம் செல்வதை மகிழ்வுடன் ஏற்கிறேன்’ என்றார்.
தமிழ்நாட்டில் மட்டுமன்றி வடநாடு எங்கும் பயணம் செய்து பலரையும்
வைணவத்தை தழுவச் செய்தார். அறிவுக் கடலான இராமானுஜர் நூற்பணிகளும் சமுதாயப் பணிகளும்
நிறையச் செய்து… நிறைவுறச் செய்து தமது 120 ஆவது வயதில் 22-01-1138 ஆம் ஆண்டு உயிர்
அடக்கம் பெற்றார்.
மற்ற மகான்களைப் போல் இராமானுஜரின் ஸ்தூலத் திருமேனி குகை செய்விக்கப்பெற்று
சமாதி எழுப்பப்படவில்லை. திருவரங்கம் இரங்கநாதர் கோயிலுள் உடையவர் சன்னதி உள்ளது. அச்சன்னதியின்
கருவறையுடன் இராமானுஜரின் ஸ்தூலத் திருமேனி புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில்
நிட்டையில் இருப்பதுபோல அப்படியே உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.