மதங்களும்
ஜாதிகளும் ஏன் மக்களை ஒன்றிணைக்கவில்லை?
நமது
‘சன்மார்க்க விவேக விருத்தி’மின்னிதழை படித்துவிட்டு, சென்ற நவம்பர் மாதம் சென்னை சைதாப்பேட்டையிலிருந்து
திரு.எஸ்.ஆர்.சத்தியநாராயாணன் அவர்கள் எம்மை கைப்பேசியில் அழைத்தார். தமது எழுபதாவது
வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவ்விளைஞர் தமது அனுபவங்களை சில நாட்களாக தொடர்ந்து எம்மிடம் விவரித்தார். இவ்வுலக நாடுகளில் பல நாடுகளுக்கு
சென்று வேலை பார்த்த அனுபவம் அவருக்கு உண்டு. பலதர மக்களை சந்தித்து பழகும் வாய்ப்பு
அவருக்கு இதனால் கிட்டியுள்ளது. நமது ஒவ்வொரு
பயணமும் நமது அறிவினை விசாலமாக்கும் அனுபவமாகும். அவ்வகையில் அவரது உலக பயணங்கள் அவரது
எண்ணங்களை விசாலமாக்கியிருக்கின்றது. சுத்த சன்மார்க்க கருத்துக்களை உலக நாடுகளுக்கு
எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பல வழிமுறைகளை எம்மிடம் கலந்து ஆலோசனை வழங்கினார்.
நமது இந்த மின்னூலிலும் இன்னும் பல சன்மார்க்கம் சார்ந்த செய்திகளையும்,
உலக அளவில் சன்மார்க்கிகள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளவும் வழிவகை செய்யவேண்டும் என
கட்டளையிட்டார். இடையில் ‘மதங்களும் ஜாதிகளும் ஏன் மக்களை ஒன்றிணைக்கவில்லை? என்று
எழுதுங்கள். கலப்புத் திருமணங்களை ஆதரிக்கும்
வகையில் இந்நூலை மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள்!
என்றெல்லாம் உத்தரவிட்டார். அதன் விளைவாக மேற்காணும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கான
பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தில் சொல்லமுடியும்.
தத்துவ ஒழுக்கம் பற்றி சொல்வது
மதங்கள். தொழில் ஒழுக்கம் பற்றி சொல்வது ஜாதிகள். இவை இரண்டுமே தயவை விருத்தி செய்ய தடையாய் இருக்கின்றன
என்பார் வள்ளலார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-418) தத்துவ ஒழுக்கங்களையும் தொழில்
ஒழுக்கங்களையும் நீக்கிவிட்டு ஜீவ ஒழுக்கத்தை
கடைபிடித்தால் மட்டுமே மக்கள் எல்லாம் ஒன்றிணைய முடியும். தத்துவங்கள் பலவகை,
தொழில்கள் பலவகை அதுபோல் மக்களும் பலவகை எனில் எங்கிருந்து ஒன்றிணையமுடியும்?
ஆயிரம் வருடங்களாக வந்த சம்பிரதாயம்,
கட்டுக்கோப்பு, சமய மத நெறி, பெரியவர்களின் பல்வேறு போதனைகள், நல்லவர்களின் பேச்சும்
அவர்களின் நடையும், அன்பும் உறவும், சொந்தம்,
நட்பு, உதவி, ஒத்துழைப்பு, நன்னடத்தை, கோட்பாடுகளும், லட்சியங்களும் ஆகியவற்றை வேறுவழியில்லாமல்
கட்டாயமாக சர்க்கஸில் சிங்கம், யானை, புலி, குதிரை, குரங்குகளைப்போலச் சாட்டையடிக்கு
பயந்து ஒரு நெறியில் நடப்பது போல் இருக்கின்றது
மனித குலம். இப்படிப்பட்ட மதம் ஜாதி என்கின்ற சர்க்கஸை இன்னும் எத்தனை நாளுக்குத்தான்
நடத்த முடியும்? நாமும் எத்தனை நாளுக்குத்தான் சிங்கமாகவும், குரங்குகளாகவும் இருக்கப்போகின்றோம்?
வம்மின் உலகீர்! மரணமிலா வாழ்வில்
வாழ்ந்திடலாம்… கண்டீர்!! நான் மரணமிலா வாழ்வில் வாழ்வதை கண்டீர்கள். அதுபோல் நீங்களும்
வாழலாம் வம்மின்… வம்மின்… என்று மக்களை ஒன்றிணைக்கவே முயல்கின்றார் வள்ளலார். இவ்வுலகில்
உள்ள எத்தனை பேருக்கு இவ்வழைப்பு சென்று சேர்ந்துள்ளது?
அழைப்பு சென்றவர்களில் எத்தனை பேர் வந்தனர்?
வந்தவர்களில் எத்தனை பேர் மரணமிலா வாழ்வைப் பெற்றனர்? என்று பார்க்கும் போது விடை சூன்யமாகவே
உள்ளது. ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’என்கின்ற வார்த்தையே உண்மைபோல் உள்ளது. மத மார்க்கங்கள்
மக்களை ஒன்றிணைக்காது என்றே… “சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளாக இருப்பது
சமய மத மார்க்கங்கள்” என்றுரைத்தார் வள்ளலார்.
மதங்களிலும் ஜாதிகளிலும் சொல்லப்பட்டுள்ள
பல்வேறு சடங்குகள், சாத்திரங்கள், ஆசாரங்கள், கதைகள், கற்பனை கலைகள் இவைகள் எல்லாம்
மக்களை பிரிக்கவே செய்கின்றன. தயவில்லாமல் கண்மூடித்தனமாக அவைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனி சட்டங்கள், சடங்குகள், கற்பனைகள் உள்ளன. அவற்றை பின்பற்றும்
மக்கள் அவைகளே உண்மை என நம்பியோ அல்லது பொய்
என்று அறிந்தும் மதவாதிகளின் சாட்டையடிக்கு பயந்து அதனையே பின்பற்றுகின்றனர்.
‘சாத்திரங்களில்
சிறந்தது திருமூலரின் திருமந்திரம்’ என்று சொன்னவர் மற்றொரு இடத்தில் ‘சாத்திரக்குப்பை’
என்று சாத்திரத்தை குப்பை சாடுகின்றார். குப்பையில் சிறந்தது திருமந்திரம் என்றல்லவா சொல்லாமல் சொல்கின்றார்
வள்ளலார். இதனை படிக்கும்போது பலசன்மார்க்கிகளுக்கே கோபம் வருமே! இனிமேலாவது சாத்திரத்தை விடுவார்களா? அல்லது சன்மார்க்கத்தை
விடுவார்களா? என்றால் பலர் சன்மார்க்கத்தை விடவே தயாராக இருப்பார்கள். காரணம் ஆயிரம்
ஆண்டுகளாக நமது ஜீனில் கலந்து வந்துள்ள பழக்க வழக்கம். தங்களது மதங்களை விடுவது அவ்வளவு எளிதல்ல.
‘இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…’ (4654)
‘சாதியிலே மதங்களிலே சமயநெறி
களிலே
சாத்திரச்சந் தடிகளிலே
கோத்திரச்சண் டையிலே…’(5566)
‘சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப்
படிப்போ?’…(4955)
‘இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில்
திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்’(திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-385) ‘இந்த மார்க்க உண்மை’ என்பதை பலர்
‘சுத்த சன்மார்க்க உண்மை’ என்று பொருள் கொள்கின்றனர். அது தவறு. ‘இந்த மார்க்கம்’ என்றால்
‘சாத்திரத்தின் வழி’ என்றே பொருள் கொள்ள வேண்டும். அனைத்து சாத்திரங்களுக்கும் பொருள்
வேண்டுமானால், திருமந்திரத்தை மட்டும் கவனித்தால் போதும் என்கின்றார். என்னடா இவன்
திருமந்திரத்தையே குப்பை என்கின்றானே! என்று கோபம் கொள்ளாதீர்கள். சொல்வது நானனல்ல….
வள்ளற்பெருமான். சுத்த சன்மார்க்கம் என்று வரும்போது, நாம் கடந்த சில ஆயிரங்கணகான ஆண்டுகளாக
கற்றதெல்லாம் பொய் என்னும் குப்பைகள்தானே! ‘என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம்’ என்கின்றார்
வள்ளலார். எனவே வள்ளலாரின் மார்க்கம் சகத்தில் ஓர் புதிய மார்க்கம். வள்ளலார் தோற்றுவித்த
மார்க்க உண்மை விளங்கவேண்டுமானால், இதற்கு முன்னர் தோன்றிய திருமந்திர சாத்திர மார்க்கம்
எங்ஙனம் உதவிபுரியும்? தன் மார்க்கம் விளங்கத்தானே திருவருட்பாவை அருளியுள்ளார் வள்ளலார்.
இதுபோன்று இவ்வுலகில் அனைத்து
மதங்களும் பொய்யே. மதங்களையும் ஜாதிகளையும் விடுவது ஒன்றே மனிதர்களை ஒன்றிணைக்குமா?
எனில், இல்லை. சுத்த சன்மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிக்க மனிதர்கள்
ஒன்றிணைவார்கள். இதனை கடைபிடிப்பார் இவ்வுலகில் யாரும் இல்லை. எனவே மக்களாகிய நாமெல்லாம்
ஏதோ ஒரு வட்டத்திற்குள் புகுந்துக்கொண்டு, தமக்கு எதிரே உள்ள வட்டம் நம் வட்டத்தைவிட
சிறியது என்று தங்களைத் தாங்களே சிறிய பெரிய வட்டங்களாக பிரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
சுத்த சன்மார்க்கம் என்பதும் ஒரு வட்டம்தானே! என்பீர்கள். இல்லவே இல்லை. வட்டத்திற்குள்
இருப்பவர்களாகிய நாம் சற்று அதனை விட்டு வெளியில் வந்து நிற்போம். அப்போது நாம் ஒரு
பெரு வெளியைக் காண்போம். அவ்வெளிதான் சுத்த சன்மார்க்கம். இங்கே சடங்கு என்னும் வட்டம்
இல்லை. இங்கே சாத்திரம் என்கின்ற வட்டம் இல்லை. இங்கே குலாச்சாரம், மதாச்சார்ம் என்கின்ற
பற்பல ஆசாரம் என்கின்ற வட்டம் இல்லை. தயவு என்கின்ற பெருவெளிதான் உள்ளது. இவ்வெளி ஒன்றே
மக்களை ஒன்றிணைக்கக்கூடிய வல்லமை பெற்றது. இந்த வல்லமையை எல்லா மக்களும் பெறுவது இயலாத
ஒன்று. எனவே மக்கள் ஒன்றிணையாது பல்வேறுவகையில் பிரிந்து வாழவே அந்த பெருவெளி விரும்புகின்றது.
வள்ளற்பெருமானும் இவ்வுலக மக்களை அகஇனம், புறஇனம் என்று இருவேறு வட்டமாக பிரிக்கவே
செய்கின்றார். இந்த இருவேறு வட்டமும் ஒரே வட்டமாக பெருவெளியாக ஆவதும் இயலாத ஒன்று.
ஒரு காலத்தில் ஒரு வட்டம் சிறியதாகவும், ஒரு காலத்தில் மறு வட்டம் சிறியதாகவும் இருக்க
வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இவற்றில் ஒரு வட்டம் மட்டுமே இருக்கும் காலம் ஒருபோதும்
வரப்போவதில்லை.
‘மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே’
என்று வள்ளற்பெருமான் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. அவைகள் வள்ளற்பெருமான் வருவிக்கவுற்றபோதே
நோய்வாய்ப்பட்டுவிட்டன. வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்க அனுபவம் நேர்ந்தபோது அந்த
மதமார்க்கம் யாவும் இவ்வுலகில் இறந்துவிட்டன என்பது சத்தியம். ஆனால் நாம் அதனை புதைக்கவோ
அல்லது எரிக்கவோ விரும்பாமல் அப்பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டும் சிரித்துக்கொண்டும்
இருக்கின்றோம் என்பதே உண்மை.
இதனைப்பற்றி இன்னும் எழுதிக்கொண்டே
இருக்கவேண்டும்போல் உள்ளது. தற்போது எனக்கு நானே தாழிட்டுக்கொண்டு இத்தோடு இதனை முடிக்கின்றேன்.
பல்வேறு மதங்களில் உள்ள பல்வேறு தத்துவ ஒழுக்கங்களும் ஜாதிகளில் உள்ள பல்வேறு தொழில்
ஒழுக்கங்களும் மனித இயற்கை தயவினை தடைசெய்வித்துள்ளதால்தான் மக்களை இவைகளால் ஒன்றிணைக்க
முடியவில்லை. - TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.