பிரான்
‘பிரான்’
என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘பிரியான்’ என்று பொருள். நம்மை விட்டு என்றும் பிரியாது உடன்
இருப்பவன் என்று பொருள். ‘பிரான்’ என்ற வார்த்தையினை பயன்படுத்தி தன்னை யாராவது வணங்கிவர,
அவருக்கு எப்பொழுதாவது துயர் வந்துவிட்டால், உடனே அவரிடம் வந்து அருள் செய்து, என்ன?
என்று கேட்டு அவரது துயரை துடைப்பான் ஈசன், என காரைக்கால் அம்மையார் திருவிரட்டை மணிமாலையில்
அருளியுள்ளார்,
“பிரான்
என்று தன்னைப் பன்னாள்
பரவித்
தொழுவார் இடர்க்கண்டு
இரான்
என்ன நிற்கின்ற ஈசன் கண்டீர்”
பிரான்
என்ற சொல் கடவுளுக்கு மட்டுமே உரியது. அவர் ஒருவர்தான் நம்மை என்றும் பிரியாமல் இருப்பவர்.
அதனால்தான் அவருக்கு “தம்பிரான்” என்று பெயர். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறோம்
அல்லவா! சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு தம்பிரான்தோழன் எனப்பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகளும்
தாம் பாடிய பாடல்களில் இருவரை மட்டுமே ‘பிரான்’ என்ற வார்த்தையினை பயன்படுத்தி பாடியுள்ளார்.
ஒருவர் திருஞான சம்பந்தர், மற்றவர் திருமூலர்.
“எம்பிரான்
சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்” என்றும் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்”
என்றும் பாடியுள்ளார். எம்பிரான் என்று சம்பந்தரை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளும்,
நம்பிரான் என்று திருமூலரை யாவருக்கும் பொதுவாகவும் பாடிப்பணிந்துள்ளார்.
நமது
வள்ளற்பெருமானும் தாம் பாடிய திருவடிப்புகழ்ச்சியில் “சிவபிரான் எம்பிரான் தம்பிரான்
செம்பொற்பதம்” என்று பிரான் என்கிற சொல்லினை இறைவன் ஒருவனுக்கே சூட்டி மகிழ்கின்றார்.
எம்மைவிட்டு சிவம் என்றும் பிரியாது, அதனால் அவர் சிவபிரான். அவரே எம்போன்றவர்களுக்கு
எம்பிரான். அவரே தம்பிரான் என்னும் இறைவன் என்று போற்றி புகழ்கின்றார். - TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.