Tuesday, December 6, 2016

சோதிடம் தனை இகழ்

சோதிடம் தனை இகழ்

இந்தியர்களில் பெரும்பாண்மையினர் காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இன்றைய நாள் பலன் எப்படி உள்ளது என்றும் இன்று நமது ராசிக்கு என்ன பலன் சொல்கிறார்கள் என்றும் ஒரு சில சேனல்களை மாற்றி மாற்றி கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்குத் தக்கவாறு தமது செயல்பாட்டினை மேற்கொள்ளும் ஒரு மூடவழக்கத்தினைக் கொண்டுள்ளனர். செவ்வாய் கிழமை எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது என்பதுபோன்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நியதியினை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக பின்பற்றுகின்றனர்.

நாளைய தினம் இப்படித்தான் இருக்கும் என எவரும் கணித்து சொல்லிவிட முடியாது. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் நாளை வங்கிக்குச் சென்று பணத்திற்காக அலையப்போகின்றார்கள் என்று முன்கூட்டியே எந்த ஒரு ஜோதிடராலும் அறிவிக்க முடியவில்லை. அறிவித்திருந்தால் நாமெல்லாம் சென்ற மாதம்  நூறு ரூபாய் நோட்டிற்காக அலைந்திருக்கமாட்டோம். நாம் சோதிடம் பார்த்து வாங்குகின்ற இந்த ஐநூறு ரூபாய் இன்று இரவு தடைசெய்யப்படும் என்பதை எந்த சோதிடரும் அறிந்திருக்கவில்லை. பிறகென்ன எதிர்காலத்தை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் என்ன நிகழும் என்பதையே சொல்லத்தெரியவில்லை, இவர்கள் எப்படி நமது ஆயுளையே கணக்கிட்டு சொல்கிறார்கள்? எல்லாம் ஏமாற்றும் செயலன்றி வேறெதுவுமில்லை.

பிறந்தவுடன் சாதகம் கணிப்பது, திருமணம் முதல் கொண்டு அனைத்து சடங்குகளுக்கும் நல்ல நேரங்களையும் பொருத்தத்தையும் பார்ப்பது போன்ற இவைகளை சாதகம் என்கிறோம். இதற்காக தற்போது விண்குறியியல் (Astrology) என்கிற கலையே தனியாக உள்ளது. இக்கலை பழங்காலத்திலிருந்தே கிறுத்து பிறப்பிற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. வெறும் குறிப்புகளாய் இருந்தவை இன்று ஒரு கலையாக உருவெடுத்து மிகவும் வளர்ந்துவிட்டது.

குதிரை பூட்டிய ரதத்தில் சூரிய பகவான் கிளம்பும் படத்தை பார்த்திருப்பீர்கள். அப்படம் சோதிட ரீதியாக வரையப்பட்டப் படம். அன்றைய பழங்குடி மனிதர்கள் பூமி ஓரிடத்தில் இருப்பதாகவும், சூரியன் பூமியை சுற்றி வருவதாகவும் தங்களது சோதிடத்தால் கணித்தார்கள். சூரியனை சூரியபகவான் என்றும் அவன் பூமியை சுற்றிவர அவருக்கு ஒரு ரதத்தையும் ஏழு குதிரைகளையும் கொடுத்து கற்பனையாக அப்படி ஒரு சித்திரத்தை வரைந்துவிட்டார்கள். அது இப்போதும் மக்களிடையே சூரியக்கடவுள் என்று நம்பப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது.


சூரியன் நிலையாக இருப்பதை பின்னர் விஞ்ஞானம் கண்டறிந்தது. பூமிதான் சூரியனை சுற்றிவருகின்றது என்று விஞ்ஞானம் கூறியது. ஆனால் யாரும் தங்களது பழைய பழக்கத்தினை மாற்ற முன்வரவில்லை. உண்மை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, பொய் எனக்குள் பொருந்திவிட்டது, அது அப்படியே இருக்கட்டும் என்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில்கூட மனிதன் அந்த சூரிய பகவானை வணங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பூமி தட்டையான உருவம் கொண்டது என்று அன்றைய சோதிடம் சொன்னது. பூமி உருண்டை என்று சொன்ன பூருனோவை உயிருடன் எரித்தது அன்றைய சோதிடம்.  கோள்களையும் விண்மீன்களையும் வைத்துக்கொண்டு விளையாடும் சோதிடர்கள் உண்மைகளை பற்றி சிந்திப்பதே இல்லை. இவர்கள் எடுத்துக்கொள்ளும் கோள்களுள் இராகு, கேது என்பவை உண்மையில் கோள்களே இல்லை. அவை பூமி, சந்திரன் ஆகியவைகளின் நிழல்களாகும். அதே போன்று சூரியனையும் சந்திரனையும் கோள்கள் என்று சொல்லிவிடமுடியாது. சந்திரன் என்பது நமது பூமியின் துணைக்கொள். சூரியன் என்பது விண்மீனாகும். சந்திரனைப்போன்று சூரியனும் பூமியை சுற்றிவருகின்றது என்றே இன்றும் ஜோதிடம் கணிக்கப்படுகின்றது. இவர்கள் அறியாத சில கோள்களும் சூரிய குடும்பத்தில் உண்டு. அதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.


பாபிலோனியர்கள் கோள்களை எல்லாம் கடவுளர் என்றே கருதிவந்தனர். மக்களின் சிந்தனையையும் செயலையும் அவை அடக்கி ஆளுகின்றன என்று நம்பினர். வானத்தில் மிதந்து வரும் சந்திரன் பூமியில் உள்ள கடல் நீரை பொங்கி எழச்செய்கின்றது. கோள்கள் பல நேர்கோட்டில் வந்து நின்று, ஒன்றையொன்று மறைத்து மக்கள் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கோள்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகின்றன! இத்தகைய எண்ணமே ஆதி மனிதனின் உள்ளத்தில் இடம் பெற்று வளர்ந்து மண்ணில் நிகழும் நோய், வறுமை, வெள்ளம், புயல் நிலநடுக்கம் ஆகிய எல்லா நிகழ்ச்சிகட்கும் விண்ணிலே தொடர்பு காணத் தூண்டியது. வருகின்ற துன்பங்களைத் தடுக்க முடியாவிட்டாலும், முன்கூட்டியாவது அறிந்துகொள்ள முயல்வதிலே ஆர்வம் காட்டினான்! கோளும் விண்மீனும் காட்டிய அறிகுறிகளை வைத்துக்கொண்டு தனக்குத் தோன்றியதை எடுத்துக்கூறினான். கூறிய சொற்கள், பின்னர் நடந்த செய்திகளுடன் ஒன்றிரண்டு இடங்களில் பொருந்திவிடவே தான் கண்ட குறுக்கு வழியிலே மேலும் மேலும் நம்பிக்கை கொண்டதுடன், மனநிறைவும் கொண்டான்.

இயங்கியப்படி இருக்கும் கோள்களின் நிலையை எதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிடுவது? கடிகாரத்தின் முகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் முள்ளைப் பார்க்கின்றோம்; ‘இரண்டில் இருக்கின்றது’, ‘எட்டில் இருக்கின்றது’ என்றெல்லாம் சொல்கின்றோம். ஆனால் இந்த எண்கள் இல்லாவிட்டால் முள் இருக்கும் இடத்தின் அடையாளம் என்னவென்று சொல்வது? இது போன்றே வானத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக் குறிப்பிடுவதற்கு வான வட்டத்திலேயே நமது சோதிடர்கள் “எண்களை’ அமைத்துக்கொண்டார்கள். இத்தகைய எண்களை அமைப்பதற்கு வான வட்டத்திலே நிலையாகத் தோன்றும் விண்மீன்களையே அவர்கள் துணையாகக் கொண்டனர்.

கடிகார வட்டத்தைப் பன்னிரண்டு எண்களாகப் பிரித்தது போல, இந்த வான வட்டத்தையும் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கின்றனர். அந்தப் பகுதிகளில் அடங்கிய விண்மீன் கூட்டங்கள் சோதிடர்களின் உள்ளத்தில் எழுப்பிய கற்பனைகளையொட்டி ஆடு முதல் மீன் வரை பெயர் வைத்தனர். இக்குறிகளை ஓரை என்றும், இராசி என்றும், வீடு என்றும், மடம் என்றும் பல பெயர்களில் வழங்கினர். குறிப்பிட்ட ஒரு காலத்தில் எந்தெந்தெந்தக் கோள் எந்தெந்த வீட்டில் இருக்கின்றது என்று எளிதில் கூறி விடலாம்.


விண்ணறிவு பெற்றவர்கள் எவரும் கோள்கள் வெவ்வேறு வீடுகளில் தங்குகின்றன என்ற கருத்தினைக் கேட்டால் நகைக்கவே செய்வர். சனிக்கோல் இன்று துலாம் வீட்டில் இருக்கின்றது என்று சொல்கின்றோம். அப்படித்தான் நம் கண் பார்வைக்கும் அது தெரியும். ஆனால் அது அவ்வீட்டில் இல்லை. சற்று அண்மையில் நிற்கும் கம்பம் ஒன்று தொலைவில் இருக்கும் மரங்களைப் பின்னணியாகக் கொண்டு தோன்றுகின்றது! உடனே, அதைப் பார்த்த நாம், கம்பம் மரங்களின் இடையே இருக்கின்றது என்று சொல்லிவிட முடியாதல்லவா! பழங்காலத்தில் விண்மீன்களெல்லாம் “வான் கூரையில்” பதிக்கப்பட்டுள்ளன என்று நம்பினர். எனவே எல்லா விண்மீன்களும் ஒரே தொலைவில் இருப்பதாக அவர்கள் எண்ணினர். உண்மையில் கோள்களெல்லாம் மிகவும் அன்மையில் இருக்கின்றன. விண்மீன்களோ, நமது நினைவையும் கடந்த நெடுந்தொலைவிற்கு அப்பால் நிலை பெற்றுள்ளன! மிகவும் அன்மையில் இருக்கும் விண்மீனிலிருந்து (Sirius Star) ஒளி நம்மை வந்தடைய ஐந்து ஆண்டு காலம் பிடிக்கின்றது. அதாவது நாம் அந்த விண்மீனை இப்போது பார்க்கின்றோம் என்றால், அது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம் எனப்பொருள். இன்றைய விண்மீனின் தோற்றத்தை நாம் காணவேண்டுமானால் இன்னும் ஐந்து ஆண்டு காலம் கழித்துதான் அதனை பார்க்க முடியும். எனவே கோள்கள் விண்மீன்களுடன் கூடுகின்றது என்பதெல்லாம் அறிவுக்கு பொருந்தாதது ஆகும். இன்னும் இதன் விளக்கம் பெருகும்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை விண்மீன்களைப் பார்த்து,

“வான்கா டதனில் வறிதே சுழலும்
 மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்
மதியிலா மாக்கள் விதியென நும்மேல்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரும் வாதமும்
யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்
ஒன்றையும் நீவிர் உணரீர்!

என்று கேட்டுக் கருத்திழக்கும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றார்.


உலகமே மாயை என்று ஊர்தோறும் சொற்பொழிவு செய்கின்றவர்கள் கூட ஏனோ வானத்தில் கல்லாலும், மண்ணாலும், ஆவியாலும் காணும் மீன்களையும் கோள்களையும் கடவுளர்களாகக் கொண்டு சோதிடத்தில் உண்மை இருப்பதாக நம்புகின்றார்கள். இது சுரைக்காய் உண்ணக்கூடாது என்று ஊர்தோறும் பேசிவிட்டு வந்து வீட்டில் நுழைந்தவுடன் “சுரைக்காய் சாம்பார் இருக்கிறதா?” என்று மனைவியைக் கேட்டு அவள் இல்லை என்றதும் ‘உபதேசம் ஊருக்குத்தான்; உனக்கில்லை!’ என்று பேசிய மெய்யன்பர் கதையைத்தான் நினைவுப்படுத்துகின்றது. நாளும் கோளும் நம்மை என் செய்யும்? என்பதே உண்மை அறிவாகும்.
ஆனால், சோதிடமே விஞ்ஞானம் என்று இன்றைக்கு மாநாடுகள் எல்லாம் நடக்கின்றது. சோதிடம் ஒரு அறிவியல் என்று அதனை கல்லூரி பாடங்களில் வைக்க முயல்கின்றோம். நமது முதல் பாரத பிரதமரான நேரு அவர்களை ஜோதிட மாநாட்டிற்கு தலைமையேற்க அழைத்தபோது, “இந்திய நாட்டின் விடுதலையைப் போராடிப் பெற்றவர்கள் மக்களே! வானத்தில் சுழலும் கோள்கள் அல்ல!” என்று கூறிப் பங்கேற்க மறுத்துவிட்டார். அவர்தம் கூற்று அவரை உலக அறிவாளிகளில் ஒருவராக உயர்த்தியது. தமிழகத்தில் தந்தை பெரியார், பாரதியார் மற்றும் பல அறிஞர்களின் அறிவானது ஜோதிடத்தை மறுக்கின்றது. சம்பந்தர் தேவாரம்,

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
 சனி பாம்பி ரண்டும்… “

என்று பாடுகின்றது. இவையெல்லாம் சிவனை வணங்குபவர்களுக்கு ‘நல்லன’ என்று ஆன்மிக நோக்கில் பாடிவிட்டார். இதன் கருத்து இவற்றினால் மனிதனுக்கு எதுவும் நடந்துவிடாது என்பதாகும். நமது வள்ளற்பிரான்கூட “காலம் கடந்த கடவுளை வணங்க காலம் கருதுவதேன்?” என்று சோதிடத்தை இகழ்கின்றார்.


சுத்த சன்மார்க்கிகள் வழியில் நடைபயிலும் நாமெல்லாம் இந்த சாதகத்தை அறவே புறந்தள்ள வேண்டும். இதனை படிக்கும் பொது மக்களும் புத்தறிவு பெற்று சாதக மோசடியினை எதிர்த்து முழங்க வேண்டும். “கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும்”. - TMR

1 comment:

  1. மிகச் சரியான கருத்துகள்.
    வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான யுகம், மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுத்த சில காலம் ஆகும்.
    பொறுத்திருப்போம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.