ஒளி தெரிந்தது
1823 ஆம் ஆண்டு, அக்டோபர்
– 05-ஆம் தேதி அருட்பெருஞ்ஜோதி அருளால் நமது வள்ளலார் இவ்வுலகில்
வருவிக்கப்பட்டார். அன்று தான் உண்மை ஒளி இப்பூமியில் பட்டு உயிர்களுக்கெல்லாம்
காட்சி எனத் தெரிந்தது. அக்காட்சி என்றும் மறையாமல் என்றும் ஒளிவீசிக்கொண்டே இருக்கின்றது.
நடைபெறுகின்ற 2016-ஆம் ஆண்டோடு 193 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் இம்மனித குலம்
உண்மையினை தெரிந்துகொள்ளவில்லை. தெரிந்தும் உண்மைதனை தொடர
தயாராக இல்லை. உண்மை ஒளியை மக்கள் பார்க்கத் தயங்கினாலும் அவ்வொளி தன்னை வெளிப்படுத்திக்கொண்டே
உள்ளது. விரைவில் யாவரும் அந்த உண்மை ஒளியை உண்மை வெளியை அடைவார்கள்.
விரைவில் தம்முடைய பழக்கவழக்கங்களையும், மத சமய சாதி குல வழிபாட்டுக்கடவுள்களையும், பூஜை,
அபிஷேகம், அலங்காரம் என்கிற சடங்குகளையும்
மூடநம்பிக்கைகளையும் விட்டு உண்மை ஒளியோடு ஒன்றுவார்கள்.
மூடங்களை எல்லாம்
விடுவதற்கான தகுதியினை நம்போன்றவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளிக்க வேண்டும்.
அதற்கு நாமெல்லாம் இறைவனிடம், அவனது அருளைப் பெறுவதற்காக வேண்டுவதை விட, நாம் நம்மிடமிருக்கும்
பல்வேறு சாதனங்களை விடவேண்டுமென வேண்டிக்கொள்ள வேண்டும். பெறுவதை விட விடுவதே மிக மிகக்
கடினம்.
வள்ளற்பெருமான்
தாம் விடுவித்த எதையும் நாம் கொண்டிருக்கக்கூடாது. வள்ளற்பெருமான் கைகொண்ட எதையும்
நாம் இழந்திருக்கக்கூடாது. இவ்வாறு நாம் வள்ளற்பெருமானின் கையினை இறுகப் பிடித்துக்கொண்டே
சென்றோமானால் நாமும் அவரைப்போல இறைவனாகலாம். வள்ளலார் வருவிக்க உற்ற நாளில் நாம் இச்சிந்தனையினை
செயல்வடிவம் கொடுக்க உறுதி ஏற்போம். சிதம்பரம் இராமலிங்கம் ஐயாவிற்கு நாமெல்லாம் பிறந்தநாள்
வாழ்த்துக்களை கூறுவோம். முடிந்தால் சித்திவளாகம் சென்று அவரிடம் வாழ்த்துக்களை கூறி
வழிபடுவோம். அருட்பெருஞ்ஜோதி.-TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.