Tuesday, December 6, 2016

ஆண்டியும் தோண்டியும்

ஆண்டியும் தோண்டியும்

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.”

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போன்று தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

மனித ஜீவனை ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமையாக கூறப்பட்டுள்ளது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

ஜீவன் என்கின்ற ஆண்டி, படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நான்கு+ஆறு (பத்து) மாதமாய் வேண்டிக் கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் அந்த ஆண்டியிடம் உடல் என்கின்ற தோண்டியை ஒப்படைக்கின்றான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கின்றான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குயவன் செய்து கொடுத்தான்.

தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான். தோண்டியை போட்டும் உடைத்தான். ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகின்றான் ஆண்டி.


ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கின்றது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகின்றார்களே! என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவெளி சித்தர் இந்தப்பாடலில்… 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.