Tuesday, December 6, 2016

புல்லான் சுவாமிகள்

புல்லான் சுவாமிகள்


தம்முடைய ஸ்தூலத் திருமேனியை மறைத்து சூக்குமத்தில் அருள் பாலிக்கும் பேராற்றல் மிக்க சித்த புருஷரே நம் புல்லான் சுவாமிகள்!

          காட்சிக்கு எளியவராய் கற்பனைக் கெட்டா ஆற்றலுடன் விளங்கிய சுவாமிகள் கி.பி.1936-ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் புல்லான் அம்பலம் ராமாயி தம்பதியர்க்குத் தலை மகனாய் அவதரித்தார்கள்.
         
          மூன்றாம் வகுப்பு வரையே பள்ளியில் படித்து ஓதாதுணர்ந்த சுவாமிகளின் அறிவாற்றல் வியப்பூட்டுவதாக அமைந்தது. இளமை முதலே புலாலை வெறுத்தார். இறையாற்றல் மிக்கவராய் தனிமையையும் மெளனத்தையும் நாடினார்.

          சுவாமிகளுக்கு இருபது வயது நடக்கும்பொழுது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க ஆண்டிச்சி அம்மையாரை மணமுடித்தார். அவ்வப்போது சுவாமிகளின் மனம் தவத்தையே நாடியது. உடுத்திய உடையுடன் துறவு மேற்கொள்ள வீட்டைவிட்டு வெளியேறினார்.

          வீட்டைவிட்டு வெளியேறிய சுவாமிகள் கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள வெள்ளி மலைக்குச் சென்று அங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை மனமுருக வேண்டி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அருகிலுள்ள நல்லகண்டம் ஒடுவன்பட்டி மலைமீது உள்ள கூனக்கல் பாறை என்ற குகையில் கடும்தவத்தை மேற்கொண்டார். சுவாமிகளின் முன்பு ஜோதிப்பிழம்பாகக் காட்சி தந்த இறைவன் அவரது திருமேனிக்குள் ஐக்கியமானார்.

          சொந்த ஊரான பனையப்பட்டியிலிருந்து குழிபிறை செல்லும் வழியில் சிறிது தூரத்திலுள்ள ஆயிரம் பிள்ளை ஐயனார் திருக்கோவிலுள் இடப்புறத்தில் தவக்குடில் ஒன்று அமைத்து இரவு பகல் பாராமல் கடுந்தவமிருந்தார்கள்.

          உடம்பைத் தனித்தனியாகப் பிரித்துக்காட்டும் நவகண்ட யோகம் முதலான யோக நெறிகளிலும் அட்டமா சித்துக்களிலும் வல்லவராக விளங்கினார்கள். சுவாமிகளின் உணவுமுறை வியப்பானது. எப்பொழுதும் மதியம் ஒரு வேளை மட்டும் வறுத்த கடலைப்பருப்பினை ஒரு கைப்பிடியளவு உண்பார்கள். உடனிருந்த நண்பர் ஒருவர் இந்தக் கடலைப்பருப்பு முளைக்குமா? என்று கேட்டார். சுவாமிகள் சிரித்துக்கொண்டே ஒரு கை வறுத்த கடலைப்பருப்பை நிலத்தில் வீசி “கருத்த மனம் வெளுக்கும். தவத்தால் வறுத்த கடலை முளைக்கும்” என்று கூறிச்சென்றார்கள். சரியாக ஐந்து நாட்கள் கழித்து அங்குச்சென்று பார்த்தபோது அந்த கடலையெல்லாம் முளைத்திருப்பதைக் கண்ட நண்பர், சுவாமிகளை வணங்கி தம்செயலுக்கு வருந்தினார்.

          ஒருமுறை சுவாமிகள் தங்கியிருந்த ஆயிரம் பிள்ளை ஐயனார் கோயிலின் குடமுழுக்கின்போது அன்னதானம் நடைபெற்றது. எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக வந்தது. உணவு போதாமல் போய்விடுமே என்றஞ்சிய சமையற்காரர்கள் சுவாமிகளிடம் முறையிட்டனர். சுவாமிகள் சிறிதும் பதட்டமின்றி “ஆட்களை அனுப்பிய இறைவன் அன்னத்தையும் அனுப்புவார். நீ உன் வேலையைச் செய்” என்று கூறிவிட்டு, அருகிலுள்ள காட்டுக்குள் சென்றார். சமையலறையில் பாத்திரங்கள் அன்னத்தால் நிறைவதைக் கண்டு சமையற்காரர்கள் வியந்து, காட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் சுவாமிகளிடம் கூறினர். சுவாமிகளோ “ஆட்கள் வரும்வரை அன்னமும் வந்துக்கொண்டிருக்கும். இதை யாரிடமும் கூறாதீர்கள்” என்று கூறியனுப்பினார்கள்.

          சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு நிகழ்வுகள் தம்மை அண்டியவர் நலம் பேணி வந்த யாவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிய சுவாமிகள் 1998-ஆம் ஆண்டு வெகுதான்ய வருடம் வைகாசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய வேளையில் பரிபூரணமடைந்தார்கள். 20-05-1998 அன்று சுவாமிகளின் திருமேனி சித்தர்கள் முறைப்படி குகை செய்விக்கப்பெற்றது. புல்லான் சுவாமிகளின் திருவுருவச் சிலை சமாதி பீடத்தில் நிறுவப்பட்டது. சுவாமிகளின் அதிஷ்டான பீடத்தில் அற்புதங்கள் இன்றும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. வைகாசி சதயத்தில் குருபூஜை செய்யப்படுகின்றது.


          புதுக்கோட்டையிலிருந்து குழிப்பிறை வழியாகப் பொன்னமராவதி செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள சாலையில் 2 கி.மீ. தெற்கே ஆயிரம் பிள்ளையார் கோயில் வளாகத்திற்கத்  தெற்கே ஸ்ரீ சாது புல்லான் சுவாமிகளின் அதிஷ்டானக் கோயில் உள்ளது.

2 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.