Tuesday, December 6, 2016

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை.” உதாரணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது, “கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி” யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்.-VALLALAR

சன்மார்க்க சாதனம்

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகின்றவன். அவனே ஆண்டவனு மாவான்.-VALLALAR

இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு இயக்க சக்திகளும் தான் இயங்குவதற்கு என ஏதேனும் ஒரு சாதனத்தைக் கொண்டுதான் செயல்படுகின்றன. சாதனங்கள் ஏதுமின்றி சாதிப்பவை என்று எதுவும் இருக்க முடியாது. சூரியனை சாதனமாகக் கொண்டுதான் பூமி உட்பட மற்ற கிரகங்கள் இயங்கிக்கொண்டுள்ளன. ஏதேனும் ஒரு உடம்பினை சாதனமாகக்கொண்டுதான் உயிர்கள் இயங்கிக்கொண்டுள்ளன. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானவர், அருளை சாதனமாகக் கொண்டு இயங்குகின்றார்.

“……………………… நீ மறந்தாய் எனினும்
                    அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன்….”
                                                                   (திருவருட்பா-3806)

அகிலமெலாம் அளித்திடும் இறைவனது அருளாலே, இறைவனது இயக்கம் நடைபெறுவதை வள்ளற்பெருமான் மேற்காணும் பாடலில் எடுத்துரைக்கின்றார். இறைவனான நீ என்னை மறந்தாலும் உனது பேரருள் என்னும் சாதனம் என்னை மறவாது என்று களிப்படைகின்றார்.

நாம் நமது உடலை திடப்படுத்த பல்வேறுபட்ட உடற்பயிற்சி சாதனங்களை  கையாளுகின்றோம். அதுபோல் நாம் ஓரிடத்திலிருந்து வேறோர் இடம் செல்ல பல்வேறுபட்ட போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துகின்றோம். இப்படியாக நாம் வாழ்வதற்கும் நமது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு சாதனம் தேவைப்படுவதை மறுக்கமுடியாது. இவ்வாறு ஆன்மிகத்தில் நாம் இறைவனை அடைய நமது முன்னோர்கள் பல்வேறுபட்ட சாதனங்களை சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். தியானம், தவம், யோகம், மூச்சுப்பயிற்சி, சமாதி, மந்திரங்கள், உருவ வழிபாடுகள், அருவுருவ வழிபாடுகள், அருவ வழிபாடுகள், கோயில், பள்ளிவாசல், சர்ச் இவைகள் தவிர சாதிகள், மதங்கள், சமயங்கள் அவைகளில் உள்ள சடங்குகள், ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகிய இவையாவும் நாம் இறைவனை அடைய சாதனமாக இருக்கும் என நமது முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரால் “இந்து சாதனம்” என்ற மாத இதழானது 1889-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரையில் இலங்கை நாட்டில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றது. இவ்விதழில் இந்து மதம், சைவ சமய நெறிகள், கோவிற் கிரியைகள், கலைகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் முதலான இந்து சாதங்களை வெளிப்படுத்துவதாக இவ்விதழ் நடைபயின்று வருகின்றது. சைவம் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்களின் மருமகரான கைலாசபிள்ளை அவர்கள் இதன் ஆசிரியர்களில் ஒருவராக இருந்துள்ளார்.


இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், “சாதனங்கள் ஒன்றும் வேண்டாம்” என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டதற்கு எதிராக “இந்து சாதனம்” என்ற ஒரு மாத இதழையே துவங்கிவிட்டார்களோ? என்று நினைக்கத்தோன்றுகின்றது. அந்த அளவிற்கு மக்களாகிய நமக்கு சாதனங்கள் மேல் கண்மூடித்தனமான பற்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த ஆன்மிக சாதனங்களைக் கையாண்ட நமது பெரியோர்கள் கண்டதெல்லாம் மரணமே!!! வள்ளற்பெருமான் ஒருவர்தான் இச்சாதனங்களை எல்லாம் துனிச்சலுடன் உண்மையறிந்து அதனைக் கைவிட்டு மேலேறினார். அதன்பிறகுதான் இவ்வுலகம் “மரணமிலா பெருவாழ்வு” பற்றி பேசத்துவங்கியது. இன்றும் நாம் அதனைப்பற்றி எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகின்றோம். வள்ளலாருக்கு முன்பு இப்பெருவாழ்வைப்பற்றி பேசியவர்கள் யாரும் இல்லை. பெருவாழ்வை அடைந்தவர்களும் யாருமில்லை. காரணம் அவர்களெல்லாம் ஏதேனும் ஒரு சாதனத்தையோ அல்லது பல சாதனங்களையோ கையாண்டு மாண்டுபோயினர்.

“சாதனங்கள் ஒன்றும் வேண்டாம்” என்று வள்ளற்பெருமான் சொன்னது யாது கருதி என்றால்? சாதி, சமய, மதங்களில் உள்ள சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் என்ற பொருள் கருதியே அவர் அவ்வாறு சொல்லியிருக்கின்றார். முற்றிலுமாக சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் என்று நாம் அதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. “சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால்…” என்று தமது உபதேச துவக்கத்திலேயே சுத்த சன்மார்க்கத்துக்கும் சாதனம் உண்டு என்பதை வலியுறுத்துகின்றார். அது என்ன சாதனம்? “எல்லா உயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளுதல்” என்ற இந்த குணத்தைப் பெறுதலும் அதன்படி நடத்தலுமே சுத்த சன்மார்க்க சாதனமாகும். இந்த ஒரே ஒரு சாதனத்தைக்கொண்டு நடைபயில்பவனே இறைவன் என்கின்றார். இந்த சாதனத்தை கையாள்பவனே ஆண்டவன். எனவே அந்த ஆண்டவன் யார் என அறிந்து அவரிடம் அன்பு வைக்க வேண்டும். அதுவே “ஆண்டவனிடத்தில் அன்பு வைத்தல்” என்பதாகும். இங்கே வள்ளற்பிரானைத்தவிர அந்த சாதனத்தை முழுமையாக கையாண்டு வருபவர்கள் இதுகாரும் யாருமில்லை. எனவே அச்சாதனத்தை கையாளும் வள்ளற்பெருமான் என்பவர்தான் நமக்கெல்லாம் ஆண்டவர் என்பதை அறிய வேண்டும். நாமும் அவரைப்போன்று ஆண்டவர் என்னும் பதத்தினைப் பெற முயல வேண்டும். அதற்கு சுத்த சன்மார்க்க சாதனம் ஒன்று மட்டுமே நமக்கு உதவிபுரியும்.

இதற்கு முன்னர் புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளும் இதே சுத்த சன்மார்க்க சாதனத்தைத்தானே கையாண்டனர். அவர்கள் ஏன் மரணம் எய்தினர்? என்ற கேள்வியும் இங்கே உங்களுக்கு எழுகின்றது. இவர்களின் உயிர் நேசத்திற்கும் வள்ளற்பெருமானின் உயிர் நேசத்திற்கும் ஒரு சிறிய அளவில் வேற்றுமை உண்டு. அந்த வேற்றுமை என்ன? அதாவது என்னைப் போன்ற ஓர் உயிரினம்தான் மற்ற உயிரினங்களும் என்ற ஆன்ம உணர்வினை அவர்கள் பெற்றிருந்தார்கள். அதனால்தான் பிற உயிர்களை கொல்லாதீர்கள், கொன்று தின்னாதீர்கள் என்று அவர்களால் உபதேசம் செய்ய முடிந்தது. ஆனால் வள்ளலார் அவர்களின் உயிர் நேசம் என்பது இதனையும் கடந்தது. எவ்வாறெனில், என்னைப்போன்று அதுவும் ஒரு உயிர் என்பதைக்காட்டிலும் அந்த உயிரும் நான்தான் என்று உணர்வது. அதுதான் ஆன்ம நேயம். ஒரு உயிர் துன்பப்பட்டால் தானும் துன்பப்படுதல். ஒரு உயிர் இன்பப்பட்டால் தானும் இன்பமடைதல். இந்த உணர்வுதான் சுத்த சன்மார்க்க சாதனமாகும். ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என இன்பத்திலும் ‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று துன்பத்திலும் இருப்பவர் வள்ளற்பெருமான். ‘உயிருள் யாம் எம்முள் உயிர்’ என்ற உணர்வே சுத்த சன்மார்க்க சாதனமாகும். புத்தபிரானும் மகாவீரரும் மற்ற ஞானிகளும் இப்படிப்பட்ட உயிர் நேயத்தைச் சொல்லவில்லை. நானும் ஒரு உயிர், அதுவும் ஒரு உயிர் என்று பார்த்தார்களே தவிர, தன்னை அடுத்த அந்த உயிரே நான்தான் என்று அவர்களால் அறிய முடியவில்லை.   

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளலார் ஒருவருக்கு மட்டுமே அந்த உணர்வை அளிக்கின்றார். வள்ளலார் அவ்வுணர்வை நமக்கெல்லாம் அளிக்கின்றார். ‘கருணையுஞ் சிவமே பொருளெனக்காணும் காட்சியும் பெறுக, மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்.’ என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே “நீ” என்று ஒருமையில் பேசுகிறார் வள்ளலார். ஜீவர்களிடத்து தயவு  என்பது ‘கருணை’, ஆண்டவரிடத்து அன்பு என்பது ‘சிவம்’ இதுவே சுத்த சன்மார்க்க சாதனம். இதுவே எவ்வுலகிலும் நாம் காணும் சத்தியப் பொருள் என உணரவேண்டும். அவ்வாறு உணர்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் வேண்டுதலாக இருக்கின்றது. எனவே அவ்வாறே உணருங்கள். இந்த ஒரு சாதனத்தையே கைகொள்ளுங்கள். இறந்தவரை எழுப்புங்கள். ஆண்டவராகுங்கள். - TMR

          எல்லா உலகமும் என்வசம் ஆயின
                   எல்லா உயிர்களும் என்னுயிர் ஆயின
          எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
                   எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
          எல்லா போகமும் என்போகம் ஆயின
                   எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
          எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
                   எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

                                                (திருவருட்பா-5451)

2 comments:

  1. மிக சரியான புரிதலை கொண்டு தீர்கமாக உணர்த்தியவண்ணம் எங்களுக்கு கொடுத்தமைக்காக நன்றிகள் ஐயா 🙏

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.