Tuesday, December 6, 2016

சமண இருப்பிடம்

சமண இருப்பிடம்

ஒரு காலத்தில் தமிழகத்தில் சமண சமயம் சிறப்புற்று விளங்கியது. இதனை சமண சமய காப்பியமான சிலப்பதிகாரம் நமக்கு நன்கு உணர்த்தும். இக்காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் ஆவார். இந்து மதத்தை வளர்க்க வால்மீகி எவ்வாறு கற்பனையான இராமாயணத்தை தோற்றுவித்து அதில் இராமன், இராவணன் போன்ற காதாபாத்திரங்களை கற்பனையாக சித்தரித்தாரோ அது போன்று ஒரு காப்பியத்தை சமண மதத்தை வளர்க்க சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் தோற்றுவித்தார். இதில் வரும் கற்பனை பாத்திரங்களே கோவலனும் கண்ணகியும் ஆவார்கள். இவர்களுடன் கவுந்தியடிகள், அறவாணர் போன்ற பெயர்களுடன் சமண சமயத்தின் கருத்துக்களை இக்காப்பியத்தில் இளங்கோவடிகள் பிழிந்து தந்திருக்கின்றார். அக்காலத்தில் சமண சமயம் புகழ்பெற்று விளங்கிய தமிழக ஊர்கள், நகரங்கள் மற்றும் மன்னர்கள்  ஊடே அக்கதாபாத்திரங்களை நுழைத்து சிலப்பதிகாரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் இளங்கோவடிகள்.

இந்த சிலப்பதிகாரத்திலிருந்து பூம்புகார் என்ற நகரில் (புகார் நகரம்)சமணம் சிறந்து விளங்கியுள்ளது என்பதை நாம் அறிய முடிகின்றது. இந்நகரில் சமணர்களின் இருப்பிடங்களாக அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் ஆகிய மூன்றுவகையினை இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.

அருகத்தானம் என்பது ஸ்ரீகோயில் என்றும் வழங்கப்பட்டது. இது சமணர்களின் வழிபாட்டு இடமாகும். இவ்விடத்தில் புலால் உண்ணாதவர்கள், பொய் கூறாதவர்கள், துன்பத்தில் இருந்து வெற்றிபெற்றவர்கள் ஆகிய குணங்களை ஒருங்கே கொண்ட உயர்ந்தவர்கள் மட்டும் வசிப்பார்கள்.

பெருமன்றம் என்பது பஞ்ச பரமேட்டிகள் என்றழைக்கப்படும் அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற ஐவகைச் சான்றோர்களும் ஒன்று சேர்ந்து இம்மன்றத்தின் மூலம் சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் வருவர். இந்த ஐந்து சந்திகளும் சந்திக்கும் இருப்பிடமாக பெருமன்றம் இருந்தது.

சிலாவட்டம் என்பது பத்துப்பாட்டில் சந்தனம் அரைக்கும் இடம் என்று பொருள். அதுபோன்ற குளிர்ச்சியும், மணமும் கொண்ட இடமாக இவ்விடம் இருந்ததால் இதற்கும் சிலாவட்டம் என்று பெயர். மேற்கண்ட ஸ்ரீகோயிலில் பல்வேறுபட்ட விழாக்கள் நடந்தேறும். அருகப்பெருமானின் உருவத்திற்கு அபிஷேகங்கள், தேர்த்திருவிழாக்கள் போன்ற விழாக்களின் போது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து சமணர்கள் இங்கு ஒன்று கூடுவார்கள். இவர்கள் தங்குவதற்கும், அறக்கருத்துக்களை உணர்வதற்கும் ஏற்ற இடமாக அமைக்கப்பட்ட மேடை போன்ற இடமே இந்த சிலாவட்டம் ஆகும்.

கோயில், மன்றம், மேடை போன்ற அமைப்புகள் அன்றைய புகார் நகரில் இருந்ததை நாம் இதன்மூலம் அறிகிறோம். ஒருவகையில் வள்ளலார் அமைத்த ஞானசபை, சங்கம், தருமச்சாலை ஆகிய மூன்றினையும் இது நினைவுபடுத்துவதாகவும் உள்ளது. 





 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.